“அதுகூட இப்படி நடந்துவிட்டதே, இனி வேறு ஒருவனை மணக்க முடியாதே என்றெல்லாம் எண்ணிக் கேட்கவில்லை. திருமணம் நடந்தால் மட்டுமே கடைசிவரை அவன் என்னோடு இருப்பான் என்று நினைத்தேன். அப்பாவின் கொடுமைகளையெல்லாம் சமாளித்து அம்மா இருந்ததற்கும், பெற்றமைகள் போனாலும் பரவாயில்லை கணவர் வேண்டும் என்று அம்மா நினைத்ததற்கும், என்னை வெறுத்தாலும் அம்மாவை கைவிடாமல் அப்பா இருந்ததற்கும் காரணம் அவர்களுக்கு நடந்த அந்தத் திருமணம் தான் என்று அந்த வயதில் ஒரு நினைப்பு. அதேபோல நீக்கோவுக்கும் எனக்கும் திருமணம் நடந்தால் அவன் என்னை விட்டுப் போகவே மாட்டான் என்று குருட்டுத் தனமான நம்பிக்கை. வாழ்க்கையை பற்றிய சரியான வழிகாட்டல் இல்லாமல் வளர்ந்ததாலோ என்னவோ அப்படித்தான் நம்பினேன்.” என்றவளின் குரலில் அத்தனை கசப்பு. எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறாள்!
எந்தத் துணையுமின்றி வாழ்ந்தவள் இறுக்கமாகப் பற்றிக்கொள்ள ஒரு பற்றுக்கோலை தேடியிருக்கிறாள்! நெஞ்சு கனத்தபோதும், எல்லாவற்றையும் அவள் கொட்டி முடிக்கட்டும் என்று பல்லைக் கடித்துக் காத்திருந்தான் கீர்த்தனன்.
“அவனோ திருமணத்துக்கு மறுத்தான். இருவருக்கும் பிடிக்கும்வரை சேர்ந்திருப்போம், பிறகு பிரிந்துவிடலாம் என்றான். நான் நினைத்திருந்தால் அப்போதும் அதற்கு சம்மதித்திருக்க முடியும். அப்போதும் என்னை தட்டிக்கேட்க யாருக்குமே உரிமையில்லை. அம்மா அப்பா உட்பட! ஆனால்.. நான் அப்படியான பெண்ணில்லை! நான் எதிர்பார்த்ததும் அதையில்லை. துணை என் மனதுக்குத்தான் தேவையாக இருந்தது. உடலுக்கில்லை.” என்று, தன்னை, அன்றைய தன் நிலையை உறுதியாக எடுத்துரைத்தாள்.
“அவன் விருப்பத்துக்கு நான் மறுத்ததும் வீட்டை விட்டு போகிறேன் என்றான். அப்போதும் இனி என் நிலை என்னாகும், ஒருவனிடம் என்னை இழந்துவிட்டேனே என்று நான் யோசிக்கவேயில்லை. யோசிக்கத் தெரியவில்லை. அவனும் என்னை தனியாக தவிக்க விட்டுவிட்டுப் போகிறானே என்றுதான் அழுதேன்.” என்று அவள் சொன்னபோது, அவள் சொன்ன விஷயம் அவனுக்குள் கசப்பை உண்டாக்கவேயில்லை.
மாறாக, எந்த சப்பைக்கட்டும் கட்டாமல், நான் நல்லவள் வல்லவள் அப்படி இப்படி என்று பொய்களை புனையாமல், அன்று என்ன நினைத்தேன் என் நிலை என்ன என்று எதையும் மறையாமல் சொல்லும் மனைவியை உள்ளூர வியப்போடுதான் பார்த்தான் கீர்த்தனன்.
“அதற்குப் பிறகு ஒரு விரக்தி. இனி எனக்கு யாருமே வேண்டாம் என்கிற பிடிவாதம்! எனக்கு நானே போதும் என்கிற வைராக்கியத்தோடு ஒரு இயந்திரமாகவே மாறிப்போனேன். தம்பி தங்கைக்காக மட்டும் தான் நான் என்று இருந்த நேரத்தில்தான் நீங்கள் வந்தீர்கள்.” என்றவளின் முகத்தில் ஒரு மலர்ச்சி!
“பாலைவனமாக இருந்த என் வாழ்க்கை பசுமையாக மாறியது அதன் பிறகுதான் கீதன்.”
ஒன்றுமே சொல்லாமல் அவளையே பார்த்திருந்தான் அவன்.
“ஒருநாள் அம்மா உங்களின் போட்டோவை தந்து, ‘இது அப்பா உனக்கு பேசியிருக்கும் மாப்பிள்ளை’ என்று சொன்னபோது, அப்பாவுக்கு என்மேல் பாசம் வந்துவிட்டதா என்று மகிழ்ந்தேனே தவிர, திருமணத்தை பற்றிய எந்த எண்ணமும் எனக்குள் இருக்கவில்லை.” என்றவள், “அன்று உங்களை ஏன் சந்திக்க வரச்சொன்னேன் தெரியுமா?” என்று அவனை பார்த்துக் கேட்டாள்.
இல்லை என்பதாக அவன் தலையை அசைக்க, “இந்தக் கல்யாணம் நடக்காது என்று சொல்லத்தான்.” என்று அவள் சொன்னபோது, அவன் முகத்தில் அந்தப் பதிலை எதிர்பாராத தன்மை தெரிந்தது.
“உங்களை ஹோட்டலில் சந்தித்தபோது, நீக்கோ என் நினைவிலேயே இல்லை. இருந்திருந்தாலும் சொல்லியிருக்க மாட்டேன் என்றுதான் நினைக்கிறேன். அதுநாள் வரை என் மனதை, அதிலிருக்கும் துயரங்களை நான் யாரிடமும் பகிர்ந்ததேயில்லை. அதோடு, சொல்லவேண்டும் என்றும் தெரியாது. ஆனால், நீக்கோவை பற்றிச் சொன்னால் அந்தத் திருமணம் நிற்கும் என்று தெரிந்திருந்தால் அன்று முதல் விசயமாக அதைத்தான் சொல்லியிருப்பேன். ஏனென்றால் எப்படி உங்களிடம் நாசுக்காக மறுப்பது என்று மண்டையை உடைத்துக்கொண்டிருந்தேன் நான்.” என்று சொல்லிவிட்டுச் சின்னதாய் சிரித்தவளை, இப்போது வியப்போடு பார்த்தான் கீர்த்தனன்.
“ஆனால்.. நீ சம்மதம் தானே சொன்னாய்?” வியப்பு அகலாமலேயே கேட்டான் அவன்.
“ஆமாம்! சம்மதித்தேன்! அதற்கு காரணம் நீங்கள்.” என்றாள் தெளிவாக.
“நானா?”
“ஆமாம்! நீங்கள் தான்! உங்கள் மனம் நோகாமல் எப்படிச் சொல்வது என்று தவித்துக்கொண்டிருந்த என் முடிவை மாற்றியது நீங்கள்தான்! என்னை மணந்துகொள் என்று வெளிப்படையாகக் கேட்காதபோதும், எதிர்பார்ப்பையும் ஆவலையும் அடக்கியபடி, இவள் சம்மதிக்க வேண்டுமே என்கிற தவிப்போடு நீங்கள் என்னைப் பார்த்த பார்வை.. என்றைக்குமே என்னால் அதை மறக்க முடியாது. அதுநாள் வரை நான்தான் எல்லோரையும் ஏக்கத்தோடு பார்த்திருக்கிறேன்.. அம்மாவின் கையை பிடித்துக்கொண்டு துள்ளித் துள்ளிப் போகும் குழந்தைகளை.. தந்தையோடு சிரித்துப் பேசியபடி போகும் என் வயதுப் பெண்களை.. எந்தக் கவலையுமின்றி கலகலத்துச் சிரிக்கும் இளவட்டங்களை என்று, சந்தோசமாக இருக்கும் யாரைப் பார்த்தாலும் இப்படி ஒரு வாழ்க்கை எனக்குக் கிட்டவில்லையே என்கிற ஏக்கத்தோடுதான் பார்ப்பேன். அதே ஏக்கத்தை தவிப்பை உங்கள் கண்ணில் கண்டபோது, என்னால் எப்படி மறுக்க முடியும்? நான் படும் துயரை ஒருவர் என் கண்முன்னால் படும்போது தினம் தினம் நான் அனுபவிக்கும் ஏமாற்றத்தை இன்னொருவருக்கு என்னால் எப்படிக் கொடுக்க முடியும்?” என்று, நேராக அவனிடமே அவள் கேட்டபோது வாயடைத்துப்போய் நின்றான் கீர்த்தனன்.
எவ்வளவு அற்புதமான பெண்ணிவள்!

