“அதனால் தான்.. நீங்கள் ஏமாந்துவிடக் கூடாது.. என்னைப்போல் ஏங்கிவிடக்கூடாது என்றுதான் சம்மதித்தேன். அன்று நீங்கள் எனக்கு யாரோ தான். உலகத்தில் இருக்கிற எல்லோரின் ஏக்கத்துக்கும் நான் பொறுப்பாக முடியாதுதான். ஆனால், கண்முன்னால் ஒருவர் என்னிடம் உதவி கேட்டு நிற்கையில், அதை என்னால் செய்ய முடியும் என்கையில் மறுக்க முடியவில்லை. அதோடு, சத்தி வித்தியை தவிர வேறு யாருக்கும் எந்தப் பிரயோசனமும் இல்லாமல் இருந்தது என் வாழ்க்கை. மனதில் ஒருவித வறட்சியோடும், விரக்தியோடும் அவர்களுக்காக மட்டுமே வாழ்ந்த என்னால் உங்களுக்கு ஒரு பலன் கிடைக்கும் என்றால் அதையேன் மறுப்பான் என்று தோன்றியது. அதுதான் சம்மதித்தேன்!” என்று அவள் சொன்னபோது கீர்த்தனனிடம் வார்த்தைகளே அற்றுப் போனது.
அன்று அவன் தவித்த தவிப்பு அவனுக்கும் தெரியும் தானே. அவனது மீதி எதிர்காலமே அவளது கையில் என்ற நிலையல்லவா. அவள் சம்மதித்துவிட வேண்டும் என்று அவன் வேண்டாத தெய்வம் இல்லையே! அதை உணர்ந்திருக்கிறாள். அவனுக்காகவே திருமணத்துக்கு சம்மதித்திருக்கிறாள்.. அப்படியானவளை..
தவித்துப்போனான் கீர்த்தனன்.
“திருமணத்துக்கு சம்மதித்தாலும் அதன் பிறகான மணவாழ்க்கை பற்றி நான் யோசிக்கவே இல்லை. அது திருமணம் என்பதை விட என் மனதில் இருந்ததெல்லாம் உங்களுக்கு ஒரு உதவி.. என்னாலானது. அவ்வளவுதான்..” என்று அவள் சொன்னபோதுதான், மணமான ஆரம்ப காலங்களில் அவன் காலை உணவை செய்தால் அவள் மாலை உணவை செய்ததும், நேரம் செல்ல வருவதை அவனிடம் தெரிவிக்காமல் இருந்ததும் ஏன் என்று விளங்கியது.
அவளளவில் இருவர் ஒரு வீட்டில் தங்கியிருந்ததாக நினைத்திருக்கிறாள். அதனால் தான் ஒருவருக்கு மற்றவர் உதவி என்றவகையில் சமையல் செய்திருக்கிறாள். அன்று புரியாத புதிர்கள் இன்று மெல்லப் புரியலாயின!
“திருமணத்துக்கு பிறகும் நீக்கோ சம்மந்தப்பட்டவைகளை பற்றி யோசிக்கவேயில்லை நான். அதையெல்லாம் மறந்துவிட்டேன் என்பதை விட உள்ளத்தின் அடியாழத்தில் போட்டுப் புதைத்திருந்தேன் என்பதுதான் மெய். நிஜத்தில் தினம் தினம் அனுபவிக்கும் வேதனைகளே போதும் போதுமென்றிருக்க, நடந்தவைகளை வேறு நினைத்து நோவதா என்று நான் எப்போதுமே பழையதுகளை நினைத்துப் பார்ப்பதேயில்லை. அதோடு உங்களை மணக்கையில் அது நடந்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆகியிருந்தது. அந்தப் பாதிப்பிலிருந்து நான் வெளியேயும் வந்திருந்தேன். எச்சமாய் இருந்தது வெறுப்பு மட்டும் தான். அதோடு, கணவனாக வருகிறவரிடம் இது கட்டாயம் சொல்லவேண்டிய விஷயம் என்று எனக்குத் தெரியாது. அதோடு, அது நமக்குள் இப்படி ஒரு பாரிய பிளவைக் கொண்டுவரும் என்றும் நான் கனவிலும் நினைக்கவில்லை. ஒரு அழகான குடும்பச் சூழலிலோ, அல்லது அன்பான அன்னையின் வளர்ப்பின் கீழோ, நல்லது கெட்டதை சொல்லிக் கொடுக்கப்பட்டோ நான் வளர்ந்ததில்லை கீதன். அப்படி யாராவது சொல்லித் தந்திருக்க நிச்சயம் அனைத்தையும் சொல்லியிருப்பேன்.” என்றாள் நிமிர்ந்து நின்று அவனை நேராகப் பார்த்து.
அந்த நிமிர்வில், நேரான பார்வையில், அவளின் தெளிவான பேச்சில் மலைத்துப்போய் நின்றான் கீர்த்தனன்.
“பிறகோ.. அதுநாள் வரை எனக்குக் கிடைக்காத நேசம், பாசம், அன்பு, அக்கறை, கவனிப்பு எல்லாம் உங்களிடமிருந்து கிடைத்தபோது நான் சொர்க்கத்தில் தான் மிதந்தேன். பழைய அழுக்குகள் எதுவுமே என் நினைவிலேயே இல்லை. அதை நினைத்துப்பார்த்து மருகும் நிலையில் நீங்களும் என்னை வைக்கவில்லை. அவ்வளவு சந்தோசமாக உங்களை மட்டுமே மனதில் சுமந்து வாழ்ந்தேன். என் வாழ்வின் பொன்னான நாட்கள் அவை!” என்றவளின் குரல் அவ்வளவு நேரமும் இருந்த தெளிவை இழந்து அடைத்துக்கொண்டது.
‘எனக்கும் தான் மித்து..’ என்று மனதில் சொல்லிக்கொண்டான் கீர்த்தனன்.
“கருத்தொருமித்த காதல் வாழ்க்கையை உங்களோடு வாழத் தொடங்கிய பிறகுதான், வாழ்க்கை என்றால் என்ன.. ஒவ்வொருவரும் அதை எப்படி வாழவேண்டும் என்பதையே கற்றுக்கொண்டேன். ஒருவனுக்கு ஒருத்தி என்பதைக் கூட நீங்கள் தான் உங்களின் அன்பால் எனக்கு உணர்த்தினீர்கள். ஆடைகள் அணியும் விதம் கூட நீங்கள் தான் சொல்லித் தந்தீர்கள். பிறகு எப்படி நான் நடந்துகொண்டது தப்பென்று எனக்கு தெரியும்? தெரிந்திருக்க கட்டாயம் சொல்லியிருப்பேன்!” என்று அவள் சொன்னபோது, வாயடைத்துப்போய் நின்றான் கீர்த்தனன்.
அதோடு, அன்றைய தன்னுடைய பேச்சு அவளது மனதை ஆழமாக காயப்படுத்தியிருப்பதையும் உணர்ந்தான் அவன்!
“நீங்களாக அன்று விஸ்வா பற்றிச் சொல்லும் வரை என் நினைவிலேயே அதெல்லாம் இல்லை. அந்தளவு தூரத்துக்கு எல்லாவற்றையும் மறந்து சந்தோசமாக உண்மையாகத்தான் உங்களோடு வாழ்ந்தேன்.” என்றவளுக்கு, அந்த சந்தோசத்தில் இடிவிழுந்த விதம் நினைவில் வந்து நெஞ்சை அறுத்தது!
அது மட்டுமா? அதன் பிறகு நடந்தவைகள்?
அது நேரம்வரை மற்றவர்கள் எல்லோரும் செய்தவைகளையும், அதனால் தான் பட்டவைகளையும் எந்த உணர்வுகளும் இல்லாமல் சொன்னவளால் இப்போது அது முடியவில்லை. நெஞ்சடைத்தது! தொண்டைக்குழிக்குள் வார்த்தைகள் சிக்கிக்கொண்டது! கரித்துக்கொண்டு வந்த கண்களை, இமைகளை சிமிட்டி சமாளித்துக்கொண்டு அவன் புறமாகத் திரும்பினாள்.
“நீங்கள் பிரிந்துவிடலாம் என்று சொன்னபோது உயிரையே பிரிகிற வலியை கொடுத்தாலும் தாங்கிக்கொண்டேன். காரணம், தப்புச் செய்தவள் நான். எனக்கு தண்டனை வேண்டும் தான். ஆனாலும், கடைசி வரையிலும் ஒரு நப்பாசை. என் மீது நீங்கள் வைத்த நேசமும் பாசமும் உங்கள் மனதை மாற்றும், நம் பிள்ளை மீதான உங்களின் பாசம் திரும்பவும் உங்களை என்னிடம் கொண்டுவந்து சேர்க்கும் என்று உறுதியாக நம்பினேன். வயிற்று வலி வந்தபோதும் கடைசி நிமிடம் வரைக்கும் பல்லைக் கடித்துக்கொண்டு வலி பொறுத்தபடி ஆம்புலன்சுக்கு அழைக்காமல் உங்களுக்குத்தான் அழைத்தேன். என்னதான் கோபம் இருந்தாலும் வயிற்றில் குழந்தையோடு இருக்கிறவள் கூப்பிட்டால் வருவீர்கள் என்று நம்பினேன். அப்போதும் நீங்கள் இரங்கவேயில்லை. மனைவியாக என்னை பார்க்காவிட்டாலும் நிறைமாதக் கர்ப்பிணி எதற்காக கூப்பிடுகிறாளோ என்றுகூட நீங்கள் என்னை பார்க்க வரவில்லை என்றதும்தான் என் நிலை எனக்கே விளங்கியது.” என்று துயரோடு சொன்னவளிடம்,

