தனிமைத் துயர் தீராதோ 53 – 6

அவளது அழுகை அவனைக் கொல்கிறது என்று தெரிந்த பிறகு இனியும் அழுவாளா மித்ரா? அதுவுமில்லாமல், அவன் அவளைப் புரிந்துகொண்டான்.. அதுபோதும் அவளுக்கு! வேறு யாரைப் பற்றியும் கவலையில்லை! யார் என்ன சொன்னாலும் அதைக் கொஞ்சமும் பொருட்படுத்தப் போவதில்லை அவள்!

 

கணவனின் நெஞ்சில் சாய்ந்து அழுது தீர்த்தது வேறு அதுநாள் வரை நெஞ்சில் குத்திக்கொண்டே இருந்த முள்ளை பிடுங்கி எறிந்த உணர்வைக் கொடுத்ததில், தெளிந்த முகத்தோடு தன் கண்களை துடைத்துக்கொண்டாள்.

 

கீர்த்தனனை பார்த்து மலர்ந்து சிரித்து, “இல்லை.. இனி அழமாட்டேன் கீதன்.” என்றாள் அவனிடம்.

 

“இதுதான் என் மித்துக்கு அழகு!” என்றபடி அவளை அரவணைத்துக்கொண்டு, இதமாக பேசினான் கீர்த்தனன்.

 

“மித்தும்மா, அன்று நான் செய்த அந்தச் செயலை என்றைக்குமே என்னால் நியாயப்படுத்தவே முடியாதுடா. அது தப்புத்தான்! பெரும் தப்புத்தான்! ஆனால், என் நிலையையும் நீ விளங்கிக்கொள்ள வேண்டும். நான் ஒன்றும் கடவுளோ பரந்த மனம் உள்ளவனோ சத்தியமாகக் கிடையாது. உன் மேல் உயிரையே வைத்த கணவன். என்னவள் எனக்கு மட்டுமே சொந்தமானவள் என்று நினைக்கும் சுயநலமிக்கவன்! அப்படியான என்னிடம் உனக்கு நடந்தது என்னவோவாக இருக்க அந்த விஸ்வா சொன்னதோ முற்றிலும் வேறு விதமாக இருந்தது. அது உன்னை மிகவும் கேவலமானவளாக சித்தரித்தது. அப்போதும் நான் துளியும் அவன் பேச்சை நம்பவேயில்லை. சின்னதாகத் தன்னும் ஏதும் உண்மை இருக்குமா என்றும் நினைக்கவேயில்லை. அந்த நம்பிக்கை கொடுத்த ஆத்திரத்தில் தான் அவனை அடித்துத் துவைத்தேன். வீட்டுக்கு வந்த பிறகும் அதை உன்னிடம் கேட்கும் எண்ணம் எனக்கு சற்றுமில்லை. நீயாக தூண்டித் துருவவும் தான் நடந்ததை சொன்னேன். அப்போது நீயும் இதுதான் நடந்தது என்று சொல்லவில்லை; அவன் சொன்னது உண்மை என்றுதான் சொன்னாய். என் தலையில் இடியே இறங்கியது அன்று.

 

“என் மித்து சுத்தமானவள். எனக்காகவே அந்தக் கடவுளால் படைக்கப்பட்ட என் தேவதை. பாலை விடவும் பரிசுத்தமானவள் என்கிற நம்பிக்கை உன் ஒரு சொல்லில் உடைந்தபோது, அது எனக்கு மரண அடி மித்து. அங்கே இடி விழுந்தது என் நம்பிக்கையில் மட்டுமில்லை மொத்த வாழ்க்கையிலும் தான். அப்போது விசாவுக்காக என்று உன்னை மணந்தாலும், குடும்பத்துக்காக உழைத்துப்போடும் ஒரு மிஷினாக இருந்த என் வாழ்க்கையில் வந்த வசந்தம் நீ. நீ வந்த பிறகுதான் நானும் எனக்காக என்று வாழ்ந்ததே. அந்த நாட்கள் தான் என் வாழ்விலும் பொன்னான நாட்கள். என் மொத்த உலகமும் உன்னைச் சுற்றித்தான் இயங்கியது. இன்னும் இயங்குகிறது. அப்படியான நீ பொய்த்துவிட்டாய் என்பது.. அன்று என் உலகமே இரண்டாகப் பிளந்தது மித்து. நீ சொன்ன அந்த ஒரு வார்த்தை என் சந்தோசத்தை, மகிழ்ச்சியை, என் மிகுதி வாழ்க்கையை மொத்தமாக பிடுங்கிக்கொண்டது.

 

நான் நிதானமாக கொஞ்சம் யோசித்து இருந்தாலே உண்மை புலப்பட்டிருக்கும். ஆனால்.. மின்னாமல் முழங்காமல் இடி விழுந்தால் எப்படி நிதானமாக இருக்க முடியும் மித்து? அன்றைய நிலையில்.. நீயே உன் வாயால் அதை உண்மை என்று ஒப்புக்கொண்ட பிறகு அதை தாண்டி என்னால் சிந்திக்கவே முடியவில்லை. அந்தக் கோபம், என் நம்பிக்கை சிதைந்த விதம், நீயா இப்படி என்று நம்ப முடியாமல் நான் தவித்த தவிப்புத்தான் அதற்குப் பிறகான என் நடத்தைகளுக்குக் காரணம். ஆனால், எது எப்படி இருந்தாலும் உன்னோடு மனமொத்து வாழ்ந்த பிறகு, உன்னைப்பற்றி அறிந்த பிறகு நான் அப்படி நடந்து கொண்டது தவறுதான். அதுதான் பெரும் தவறு என்றால் சந்துவை பார்த்து நான் சொன்னது.. எந்தத் தகப்பனும் செய்யவே கூடாத மிக கேவலமான விஷயம்! இந்த உலகில் நான் உயிர்வாழும் கடைசி நிமிடம் வரைக்கும் என் நெஞ்சை கொல்லப் போகும் வேதனை அது!” என்றவனுக்கு தொடர்ந்து பேச முடியாமல் தொண்டை அடைத்துக்கொண்டது.

 

கரகரத்த குரலில், “எதைக்கொண்டும் சீர் செய்ய முடியாத தவறிது. அப்பா அப்படிச் சொன்னார் என்றறிந்தால் என்றைக்குமே என் மகன் என்னை மன்னிக்க மாட்டான்!” என்றபோது அவன் விழியோரங்கள் கசிந்தன. வார்த்தைகள் தடைப்பட்டது.

 

தொண்டையை செருமிச் சீர் செய்தவன், “தயவு செய்து நீயாவது என்னை ம…” என்றவன் சொல்லி முடிக்க முதலே அவளின் தளிர் விரல்கள் அவன் இதழ்களை மூடின.

 

தலையை மறுப்பாக அசைத்து, “உங்கள் மனம் அன்று என்ன பாடு பட்டிருக்கும் என்று விளங்குகிறது கீதன். அதனால் வீணாக வேதனைப்படாதீர்கள். அதோடு, நம் மகன் இனி என்றைக்கும் நம் செல்லக் கண்ணனாக வளர்வான் தானே. நடந்தது எல்லாம் அவன் விவரமறியாத வயதில் நடந்தவைகள். அதனால் அவனுக்கு எதுவும் தெரியப் போவதில்லை. சற்று முன் நீங்கள் சொன்னதுபோல் நாம் இனி எதைப் பற்றியுமே கதைக்கக் கூடாது. சரியா?” என்று மென்மையான குரலில் தேற்றியவளை காதலோடு அணைத்துக்கொண்டான் கீர்த்தனன்.

 

“உன் இந்த நல்ல மனதை அறியாமல் உன்னை எவ்வளவோ கஷ்டப்படுத்திவிட்டேன், இல்லையா? தம்பி பிறந்த நேரத்திலாவது நான் உன்னோடு நின்றிருக்க வேண்டும் மித்து..” என்று அப்போதும் சொன்னவனை பார்த்து செல்லமாக முறைத்தாள் அவனது மித்து!

 

error: Alert: Content selection is disabled!!