தனிமைத் துயர் தீராதோ 6 – 1

கீர்த்தனனின் பெயரைச் சொல்லி அலைக்கும் கைபேசியைக் கையிலேயே பிடித்தபடி அமர்ந்திருந்தாள் மித்ரா. அவனோடு கதைக்கவும், அவன் குரலைக் கேட்கவும் நெஞ்சில் பெரும் ஆவலே எழுந்தாலும், அதைச் செய்யாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.

 

இந்த நிலையில் தன்னை நிறுத்திவிட்டு கடவுளை எண்ணி நொந்தாள்.

 

“என்றைக்காவது ஒருநாள் என்னையும் நம் பிள்ளையையும் தேடி வருவீர்கள். நாம் மீண்டும் சந்தோசமாக வாழலாம் என்று நம்பிக்கொண்டு இருந்த போதெல்லாம் அழைக்காமல் இருந்துவிட்டு, நாங்கள் உங்களுக்கு வேண்டாம் என்று நான் முடிவெடுத்தபிறகு அழைக்கிறீர்களே கீர்த்தனன்..” கைபேசியில் தெரிந்தவரிடம் துயர் தாங்க மாட்டாமல் வாய்விட்டே மருகினாள்.

 

கைபேசிக்குள் இருந்தவனை நெஞ்சோடு இறுக்கி அணைத்துக்கொண்டாள். அப்போதாவது மனம் கொஞ்சமாவது ஆறுமா என்கிற நப்பாசையுடன்!

 

திடீரென்று அவள் வீட்டின் அழைப்புமணி ஒலித்தது. திடுக்கிட்டு நிமிர்ந்தாள். யாராக இருக்கும் என்கிற யோசனையுடன், கலங்கிய விழிகளை வேகவேகமாகத் துடைத்துக்கொண்டு சென்று கதவை திறந்தாள்.

 

திறந்தவள் வெளியே நின்ற கீர்த்தனனைக் கண்டதும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் தாங்கமாட்டாமல் அப்படியே நின்றுவிட்டாள்.

 

அவனோ சினத்தோடு அவளை நோக்கி, “எங்கே சந்தோஷ்? இன்றைக்கு அவன் என்னிடம்தானே இருக்கவேண்டும்!” என்றான் எரிச்சல் மிகுந்த குரலில்.

 

அவளுடைய கீர்த்தனன் அவளோடு கதைக்கிறான்!

 

நெஞ்சம் துள்ள, “அது.. அது அவன் உறங்குகிறான்..” என்று அவள் சொல்லி முடிக்க முதலே, “ஏன்? அவனுக்கு என்ன? இந்த நேரத்தில் உறங்கமாட்டானே..” பதட்டத்தோடு கேட்டான் கீர்த்தனன்.

 

“இல்லையில்லை. சதோஷ்க்கு ஒன்றுமில்லை. நன்றாகத்தான் இருக்கிறான். இரவு ஏனோ உறங்காமல் சிணுங்கிக்கொண்டே இருந்தான். காலையிலும் சற்றே சோர்வாக இருந்தான் என்று நான்தான் உறங்க வைத்தேன்.”

 

“ஏன் நீ இன்று அவனைக் கொடுத்துவிடவில்லை?”

 

மகனுக்கு ஒன்றுமில்லை என்றதும் கோபத்தோடு கேட்டான் கீர்த்தனன்.

 

“அது இனி அவன் என்.. முதலில் நீங்கள் உள்ளே வாருங்களேன் கீர்த்தனன்.” என்று ஆவலோடு அழைத்தாள்.

 

அவன் மறுக்கத் தொடங்கவும், “ப்ளீஸ் கீதன்.” என்றாள் கெஞ்சலாக.

 

அந்தக் கெஞ்சலில் ஒருகணம் தயங்கியவன், அப்படித் தயங்கியதற்காகவே தன்னை வெறுத்து, ஆத்திரத்தோடு அவளைப் பார்த்தான்.

 

“உன்னைத் தேடியோ உன் வீட்டுக்கோ நான் வரவில்லை. எனக்கு என் மகன் வேண்டும்! அவனுக்காகத்தான் வந்தேன்!” என்றான் அழுத்தம் திருத்தமாக.

 

சுள்ளென்று பாய்ந்தவனின் பேச்சில் மனம் சுருக்கென்று தைத்துவிட, அவள் முகமோ சுருங்கிப் போனது.

 

“அது.. உங்கள் அம்மா…” என்றவளை கைநீட்டித் தடுத்தான் அவன்.

 

“இங்கே பார்! அவன் என் மகன். அவனை என்னிடம் அனுப்பக் கூடாது என்று சொல்ல அம்மாவுக்கோ, அதைக்கேட்டு அனுப்பாமல் இருக்க உனக்கோ உரிமை கிடையாது. என் மகன் எப்போதும்போல என் வீட்டுக்கு வரவேண்டும்! இப்படி அவனை அனுப்பாமல் இருப்பது இதுதான் கடைசியும் முதலுமாக இருக்கவேண்டும் சொல்லிவிட்டேன்!” என்று எச்சரித்தான்.

 

சட்டென அவள் முகம் தாமரையாக மலர்ந்து போயிற்று! அவளுக்கு அவன் இல்லை என்றாலும் மகனுக்காவது தந்தை கிடைக்கிறானே! ‘நன்றி.. நன்றி கீர்த்தனன். இது போதும் எனக்கு..’ என்று அவனைக் கட்டிக்கொண்டு சொல்லவேண்டும் போலிருந்தது!

 

அது முடியாதே! எனவே மலர்ந்த விழிகளால் நெஞ்சில் இருந்த நேசம் முழுவதையும் நிரப்பி அவனிடம் நன்றி சொன்னாள்.

 

கீர்த்தனன் ஒருகணம் தடுமாறி, சட்டென்று பார்வையைத் திருப்பிக்கொண்டான்.

 

“சந்தோஷ் எழும்பும் வரை உள்ளே வந்து இருங்களேன்..” என்று நெகிழ்ந்த குரலில் ஆவலோடு மீண்டும் அழைத்தாள் மித்ரா.

 

“தேவையில்லை. நான் காரில் இருக்கிறேன். அவன் எழுந்ததும் ஒரு மெசேஜ் அனுப்பு..”

 

“அல்லது கொஞ்சம் பொறுங்கள். அவனைத் தூக்கிக்கொண்டு வருகிறேன்.” என்றுவிட்டு அவள் உள்ளே நடக்க எத்தனிக்க,

 

“வேண்டாம் விடு! அவன் நன்றாக உறங்கி எழட்டும். அதன்பிறகு கூட்டிக்கொண்டு போகிறேன். ” என்றவன், அத்தோடு பேச்சு முடிந்தது என்பதுபோல் அங்கிருந்து நகர்ந்தான்.

 

வாசல் வரை வந்தவன் உள்ளே வராமல் போகிறானே என்கிற தவிப்போடு அவள் நிற்க அவன் நடையும் நின்றது.

 

திரும்பி அவளைப் பார்த்து, “அன்று கடையில் வைத்து சந்துவைப்பற்றி அம்மா சொன்னவைகளுக்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன்..” என்றான்.

 

ஆச்சர்யத்துடன் பார்த்தாள் மித்ரா. நடப்பவை அனைத்தும் அதிசயமாகத் தோன்றின. அதுநாள் வரை, அவளைத் தேடி வராதவன் தேடி வந்திருக்கிறான். அவள் முகம் பார்த்துப் பேசாதவன் பேசுகிறான். இது போதாது என்று அன்னைக்காக மன்னிப்பும் கேட்கிறானே..!

 

அன்றுவரை உள்ளூர வெந்துகொண்டிருந்த மனம் பெரும் ஆறுதலடைந்தது.

 

அவனோ, “நன்றாகக் கவனி! என் மகன் பற்றிய பேச்சுக்கு மட்டும் தான் மன்னிப்புக் கேட்டேன்!” என்றுவிட்டு, தன் வேகநடையில் அங்கிருந்து அகன்றான்.

 

அறை வாங்கிய குழந்தையாய் விக்கித்துப்போய் நின்றாள் மித்ரா.

 

அன்று அவனுடைய அன்னை அவளைக் கேவலமாகப் பேசியபோது வலித்ததை விட இன்று அதிகமாக வலித்தது!

 

உடலும் உள்ளமும் துடிதுடித்துவிட வாசல் கதவை இறுக்கிப் பற்றிக்கொண்டவள், வேதனை தாங்க மாட்டாமல் கதவு நிலையிலேயே சாய்ந்துகொண்டாள்.

 

வாழ்க்கை முழுவதும் இந்தப் பேச்சு என்னைத் துரத்திக்கொண்டே இருக்கப் போகிறதா?

 

தாயை மன்னிக்கச் சொல்கிறவன் அவளை மன்னிக்க மாட்டேன் என்கிறானே!

 

பால்கனியில் இருந்து பார்த்தால் அவர்கள் வீட்டின் பார்க்கிங் தெரியும் என்று தோன்றியதும், அங்கே ஓடினாள்.

 

அங்கே, காரின் சீட்டை நன்றாகப் பின்னுக்குச் சாய்த்துவிட்டு, முழங்கையைக் கார் கதவில் ஊன்றி அந்தக் கையால் நெற்றியை பற்றியபடி விழிமூடி சாய்ந்திருந்தான் கீர்த்தனன்.

 

அவனையே பார்த்தபடி நின்றிருந்தாள் மித்ரா.

 

அப்படியே எவ்வளவு நேரம் கழிந்ததோ, ஒருவழியாகச் சந்தோஷ் எழுந்ததும், அவனுக்கு முகம் கழுவி, உடை மாற்றி, குடிக்க ஜூசும் கொடுத்துவிட்டு, ‘மெசேஜ் அனுப்பு’ என்று அவன் சொன்னதைச் செய்யாமல் அவனோடு கதைக்கும் ஆசையில் அழைத்தாள்.

 

எடுக்கமாட்டான் என்று தெரியும். ஆனாலும், எடுத்துவிட மாட்டானா என்கிற நப்பாசை!

 

வீட்டின் அழைப்பு மணிதான் மீண்டும் அலறியது.

 

அவளோடு கதைக்கப் பிடிக்கவில்லை என்று சொல்லாமல் சொல்கிறான்!

 

அதுசரி, வித்தியின் கைபேசியில் கூட அவளின் இலக்கத்தைப் பதியாமல் ஒத்துக்கியவன் தானே! நெஞ்சை அழுத்திய வேதனையை அடக்கிக்கொண்டு மகனோடு சென்று கதவை திறந்தாள்.

 

அங்கே கீர்த்தனனைக் கண்ட சந்து, உற்சாகத் துள்ளலோடு, “பப்பா..” என்று கத்தியபடியே அவனிடம் ஓடினான்.

 

“ஹேய் சந்துக்குட்டி…” என்றபடி, அவனை வாரி அணைத்துக்கொண்டவனை ஏக்கமும் ஆச்சர்யமுமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் மித்ரா.

 

அப்பாவையும் மகனையும் அவர்களுக்கிடையிலான அந்தப் பாசப் பிணைப்பையும் முதன் முதலாக நேரில் காண்கிறாள். எவ்வளவு ஆசையும் பாசமுமாக மகனை அணைக்கிறான். இந்தச் சந்தோஷ் குட்டியும் தகப்பனைக் கண்டதும் என்னமாய்த் துள்ளுகிறான்.

 

அன்று அவள் பட்ட கஷ்டத்துக்கு இன்று மகனுக்கு எவ்வளவு பெரிய பலன் கிடைத்திருக்கிறது. இதுதானே அவளுக்கு வேண்டும்! இதற்காகத்தான் அன்று என்னவெல்லாமோ செய்தாள்.

 

தந்தைக்கும் மகனுக்கும் மட்டுமேயான உலகத்தில் திளைத்துப் போயிருந்த அவர்கள் இருவரையும் ஆனந்தமாகப் பார்த்து ரசித்தாள். அதைக் கவனித்த கீர்த்தனனின் முகம் இறுகியது.

 

உடனேயே மகனோடு அங்கிருந்து அகன்றான். அவளிடம் போய்வருகிறேன் என்று ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல், ஏன், மித்ரா என்கிற ஜீவன் அங்கே நிற்கிறாள் என்கிற எண்ணமே இல்லாமல் நடந்தான்.

 

தூங்கி எழுந்ததும் தந்தையைக் கண்ட மகனும், அன்னையை விட்டுவிட்டு அப்பாவோடு போகிறோம் என்பதை அறியாததில் அவளுக்கு ஒரு டாட்டாவைக் கூடக் காட்டவில்லை. தந்தையின் கழுத்தைக் கட்டிக்கொண்டு என்னவோ கதை பேசிக் கொண்டிருந்தான்.

 

அவர்கள் சென்றதும் தனிமை அவளைக் கொன்று தின்றது!

 

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock