மாலையில் மகன் வந்துவிடுவான் தான். ஆனால், மகன் மட்டும் தானே வருவான்!
மீண்டும் ஓடிப்போய்ப் பால்கனியில் நின்றுகொண்டாள்.
என் பிள்ளை கொடுத்துவைத்தவன். பாசமான அப்பா கிடைத்திருக்கிறார். அவனுக்கு இனி அப்பாவின் பாசம் தங்கு தடையின்றிக் கிடைக்கும் என்று எண்ணியவளுக்கு, தன் இழப்பை எண்ணிக் கண்ணீரும் மகனின் மகிழ்வை நினைத்து புன்னகையும் ஒருங்கே தோன்றியது.
சந்துவை காரின் பின் சீட்டில் இருத்தி பெல்ட் போட்டுவிட்டு நிமிர்ந்த கீர்த்தனன் ஏதோ ஒரு உந்துதலில் பால்கனியை நிமிர்ந்து பார்த்தான்.
விழிகளை நிறைத்துவிட்ட நீரை உள்ளுக்கு இழுத்தபடி, இதழ்களில் புன்னகையோடு நின்றவள் ஏதோ ஒரு விதத்தில் அவனைத் தாக்க, தன்னையும் மீறி என்ன என்று விழிகளால் கேட்டான்.
அந்தக் கேள்வியில் உடைந்த மித்ரா, கீழுதட்டை பற்களால் பற்றியபடி, ஒன்றுமில்லை என்பதாக இடமும் வலமுமாகத் தலையை அசைத்துப் புன்னகைத்தாள்.
ஒருகணம் அவளையே பார்த்துவிட்டு வேகமாகக் காரில் ஏறியமர்ந்து அதை இயக்கிக்கொண்டு சென்றுவிட்டான்.
அவனோடு எல்லாமே போய்விட்டது! இன்றல்ல என்றோ!
ஓடிச்சென்று கட்டிலில் விழுந்தவள் ஆற்றுவார் தேற்றுவார் இன்றிக் கண்ணீர் வடித்தாள்.
இந்தத் தனிமையும், அடர்ந்த கானகத்தில் திக்குத் தெரியாமல் நிற்கும் நிலையும் அவளுக்கு இன்று அமைந்தது அல்லவே!
அவளுடைய பன்னிரண்டு வயதிலேயே அனுபவித்தது அல்லவோ!
என்றுமே அதை நினைத்துப் பார்க்கக் கூடாது என்று நினைக்கும் அந்தத் தருணம் மீண்டும் அவள் நெஞ்சில் மிதந்தது.
அப்போது மித்ராவுக்குப் பன்னிரண்டு வயது. அன்று பள்ளிக்கூடம் முடிந்து வந்தவளை பெரும் கலோபரத்துடன் நின்ற வீடே வரவேற்றது.
வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாம் அலங்கோலமாகக் கிடக்க, தம்பியும் தங்கையும் ஒருமூலையில் பயத்தில் நடுங்கிக்கொண்டு நிற்க, சண்முகலிங்கம் மனைவியின் முடியை கொத்தாகப் பற்றியிருந்தார்.
“கட்டின புருசனிடமே கணக்கு கேட்பியா நீ? எவ்வளவு துணிச்சலடி உனக்கு.” என்றபடி, அவரின் கன்னத்தில் அறைந்தார்.
ஏற்கனவே பல அடிகள் வாங்கிவிட்ட ஈஸ்வறியோ, “அம்மா..!” என்றபடி, சுவரோடு மோதுண்டு நின்றார்.
“இல்லையப்பா. சிலவுக்குக் காசில்லை என்றுதான் கேட்டேன். இனி கேட்கமாட்டேன். அடிக்காதீர்கள். நான் கேட்டது பிழைதான்.” அடியின் வலி தாங்கமாட்டாமல் கதறியவரின் பேச்சை அவரின் கணவன் காதில் விழுத்தவே இல்லை.
ஏறிய போதை மிருகமாக மாற்றியிருக்க, “எதிர்த்தாடி பேசுகிறாய்?” என்று கேட்டுக்கொண்டே மீண்டும் ஓங்கி அறைந்தார். வீறிட்டாள் வித்யா!
சத்யன் அவளின் வாயை கையால் இறுக்கிப் பொத்தி, “சத்தம் போடதே..” என்றான் காதுக்குள். தாயின் உதடு கிழிந்து இரத்தம் வடிந்தது. நடப்பவற்றைக் கிரகிக்கும் சக்தியற்று உறைந்து நின்றாள் மித்ரா.
“என்னடி சொன்னாய்? நான் குடிகாரனா? குடித்துக் குடித்தே காசை நாசமாக்கிறேனா? நான் அப்படித்தான்டி. என் காசை நான் நாசமாக்குவேன். அதை நீ என்ன கேட்பது?” என்றபடி, ஈஸ்வரியின் தலைமுடியை அவர் மீண்டும் பற்ற, அதுவரை அதிர்ச்சியோடு நின்ற மித்ரா, பள்ளிக்கூடப் பாக்கை அந்த இடத்திலேயே போட்டுவிட்டுத் தந்தையிடம் ஓடினாள்.
“அம்மாவை அடிக்காதீர்கள் அப்பா. வலிக்கும். அம்மா பாவம்…” என்றவாறே அவரிடமிருந்து தாயை விடுவிக்க முயன்றாள்.
எப்போதுமே சண்முகலிங்கத்துக்கு அவள் அப்பா என்று அழைத்தால் பிடிக்கவே பிடிக்காது. இன்று அவருக்குள் இருந்த மதுவும், மனைவியோடு பிடித்த சண்டையினால் உண்டாகியிருந்த மூர்க்கமும், மித்ரா மீதிருந்த வெறுப்பும் ஒன்றாகச் சேர்ந்துகொள்ள, “யாரடி உனக்கு அப்பா? எவனோ பெற்றுப்போட என்னை அப்பா என்று கூப்பிடுவாயா? என்னை இனி அப்பா என்று கூப்பிட்டாயனால் கொன்று விடுவேன்.” என்றபடி, அந்தப் பிஞ்சின் கன்னத்திலும் ஓங்கி அறைந்தார்.
சுழன்றுபோய் ஒரு மூலையில் விழுந்தாள் மித்ரா. மூச்சுப் பேச்சற்று, அசைவின்றிக் கிடந்தவளைக் கண்டதும் பயந்துபோய், “அக்கா…” என்று கதறியபடி தமக்கையிடம் ஓடினாள் வித்யா.
சத்யனும் ஓடிப்போய்த் தமக்கையைத் தூக்க, விழிகளைத் திறந்து தம்பியை பார்த்தவளின் பார்வையிலும் தெளிவில்லை, காதும் கேட்கவில்லை. கன்னம் மட்டுமல்ல அந்தப் பிஞ்சின் தேகம் முழுவதும் வலித்தது.
ஆனாலும், தந்தையின் கைகளில் சிக்குண்டு அடிவாங்கும் அன்னையின் கதறலைக் கேட்க முடியாமல், மீண்டும் தகப்பனிடம் ஓடினாள். “அப்பா ப்ளீஸ்பா. அம்மாவை அடிக்காதீர்கள். அம்மா பாவம் பா.” என்று அவரின் கைகளில் இருந்த அன்னையை விடுவிக்கப் போராடினாள்.
அது அவருக்கு இன்னும் வெறியேற்ற, “என் மனைவியை நான் அடிப்பேன், கொல்லுவேன். அதை என்னடி நீ கேட்பது?” என்றவர், மூர்க்கத்தோடு அவளைப் பிடித்துத் தள்ளிவிட்டார்.
சுழற்றி எறிந்த பந்தாகச் சுவரில் சென்று மோதுண்டு மீண்டும் நிலத்தில் விழுந்தாள் மித்ரா.
அதைப்பார்த்துப் பயந்து, “அக்கா…” என்று வீறிட்டாள் வித்யா.
அந்த வீறிடல் அயல் வீடுகளுக்குக் கேட்டுவிடுமே என்று சினம்கொண்ட சண்முகலிங்கம், “கத்தி ஊரையா கூட்டுகிறாய்!” என்றபடி வித்தியை நோக்கிவர, நடுங்கியே போனாள் அவள். “இல்லைப்பா.. நான் கத்தமாட்டேன். அடிக்காதீர்கள்..” என்று தன்னை மீறிய பயத்தில் கத்தியபடியே அவரிடம் அகப்படாமல் அந்த வீட்டுக்குள்ளேயே சுற்றிச் சுற்றி ஓடத்தொடங்கினாள்.
அது அவருக்கு இன்னும் ஆவேசத்தைக் கொடுக்க, “எங்கேடி ஓடுகிறாய்.. என்னிடம் பிடிபட்டாய் என்று வை. உன்னைத் தொலைத்துவிடுவேன்..” என்றபடி, அவளைப் பிடிக்க முயன்றார்.
அதைக்கண்ட மித்ரா நடுநடுங்கிப் போனாள். அவளாலேயே அவரின் அடியை தாங்க முடியவில்லை. சின்னவள் அகப்பட்டால்?
கடவுளே.. அவரிடம் அவள் மாட்டிவிடக் கூடாது! அவளைக் காப்பாற்றவேண்டும். எப்படி? எப்படி? என்று தவித்தவளுக்கு அன்று பாடசாலையில் நடந்த விசேச வகுப்பு நினைவில் மின்னலாய் உதித்தது.
அன்று அவளின் வகுப்புக்கு வருகை தந்திருந்த ஜேர்மன் நாட்டின் காவலர்கள், “உங்களுக்கு எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் எங்களிடம் உதவிக்கு வரலாம். நாங்கள் எப்போதும் எந்த நேரத்திலும் உங்களுக்கு உதவி செய்ய ஆவலோடு காத்திருக்கிறோம். அது இரவாக இருந்தாலும் சரிதான். பகலாக இருந்தாலும் சரிதான்.” என்று புன்னகை முகத்தோடு சொன்னது நினைவில் வந்தது.
“ஆசிரியரோடு பிரச்சனையா? நண்பர்களோடு மனக்கசப்பா? இல்லை அம்மா அப்பாவால் ஏதுமா? யாரோடு என்ன என்றாலும் நீங்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். யாரும் உங்களை அடித்தாலோ, மன ரீதியாகவோ உடல் ரீதியாகவோ துன்புறுத்தினாலோ கட்டாயம் நீங்கள் எங்களுக்குச் சொல்லவேண்டும். உங்களுக்கு உதவி செய்வதற்காகவே நாங்கள் காத்துக்கொண்டு இருக்கிறோம். நீங்கள் எங்களுக்கு அழைக்கவேண்டிய இலக்கம் நூற்றிப் பத்து.” என்றவர்கள்,
“இலக்கம் ஒன்றில் இருந்து இலக்கம் ஒன்றை கழித்தால் வருவது பூச்சியம்.(1-1=0). இப்படி எங்கள் தொலைபேசி இலக்கத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அதேபோல, எங்களுக்கு அழைக்கும் நீங்கள் முக்கியமாகச் சொல்லவேண்டிய விஷயங்கள் மூன்று. ஒன்று உங்களின் பெயர். இரண்டாவது நீங்கள் எங்கே நின்று அழைக்கிறீர்கள் என்பது. அப்போதுதான் எங்களால் விரைந்து உங்களிடம் வரமுடியும். அடுத்தது யாருக்கும் காயங்கள் ஏதுமா என்பதையும் சொல்லவேண்டும். அப்போதுதான் அதற்கான முதலுதவியையும் உடனடியாகச் செய்யமுடியும்.” என்றும் இன்முகமாகச் சொல்லியிருந்தார்கள்.
தங்கையைக் காக்க காவலர்களால் மட்டுமே முடியும் என்று எண்ணியவள், புள்ளிமானாய் துள்ளி எழுந்து ஓடிச்சென்று வீட்டு தொலைபேசியை எடுத்து ஒன்று ஒன்று பூச்சியம் என்கிற இலக்கத்துக்கு அழைத்தாள்.
அழைத்தவள், தன் பெயரை சொல்லி, வீட்டு விலாசத்தைச் சொல்லி, “என் அப்பா அம்மாவுக்கும் எனக்கும் அடித்துவிட்டார். என் தங்கைக்கும் அடி விழப் போகிறது. அவளைக் காப்பாற்றுங்கள்.” என்று கதறிவிடவும், அதுவரை நேரமும் மூர்க்கத்தனத்தோடு முழங்கிக்கொண்டிருந்த சண்முகலிங்கத்தின் நடை சடாரென்று நின்றது.
நடை மட்டுமல்ல அவருக்குள் ஏறியிருந்த மது போதை கூட முற்றாக வடிந்தது!
“சனியனே! என்ன வேலையடி பார்த்தாய்?” என்று உறுமியவர் வித்தியை விட்டுவிட்டு மித்ராவிடம் பாய்ந்தார்.
பின்னே, இவ்வளவு காலமாக ஜெர்மனியில் வசிப்பவருக்குத் தெரியாதா இனி என்ன நடக்கும் என்று?!


