தன்னை நோக்கிவந்த தந்தையின் முகத்தில் ஜொலித்த கோபத்திலும், அவர் விழிகளில் தெரிந்த ஆத்திரத்திலும் நடுங்கிப்போனாள் மித்ரா. கையிலிருந்த தொலைபேசி தன்பாட்டுக்கு நழுவ, பயத்தில் வேகமாகப் பின்னால் நகர்ந்தவள், “அம்மா…!” என்றபடி அன்னையிடம் பாய்ந்தாள்.
அவரோ அவளைக் காப்பாற்றும் வலு அற்றவராக நிலத்தில் விழுந்து கிடந்தார்.
“உன்னை என்ன செய்கிறேன் பார்..!” என்றவரிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, “என்னை அடித்தீர்கள் என்றால் உங்களைப் போலீசிடம் சொல்லிக்கொடுப்பேன்..” என்றாள் மித்ரா தைரியத்தைத் திரட்டிக்கொண்டு.
அவள் அதைச் சொல்லி முடிக்க முதலே, அவசரமாய் வரும் போலிசின் வாகன ஒலி அவளின் செவிகளை எட்டியது.
அவளைக் காப்பாற்ற கடவுளே வந்ததாய் எண்ணி மின்னலென வெளி வாசலுக்குப் பாய்ந்து, “இங்கே..! இங்கே வாருங்கள். நான்தான் அழைத்தேன்!” என்று கையசைத்து காவலர்களுக்கு அவர்களின் வீட்டை அடையாளம் காட்டினாள்.
இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் கொண்ட காவலர் குழு மிக வேகமாக அவளிடம் விரைந்து வந்தது. வந்தவர்களின் பார்வையில் அவள் நெற்றியில் இருந்த காயமும், அடிவாங்கியதில் சிவந்துகிடந்த கன்னமும், அந்தப் பிஞ்சின் விழிகளில் தெரிந்த பயமும், என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்கிற மன்றாடலும் பட, அவர்களின் முகங்கள் இறுகின.
“எங்கே உன் அப்பா?” என்று கேட்டார் ஒருவர்.
அவள் வீட்டுக்குள் அழைத்துச் செல்ல, அந்த வீடே நடந்ததைச் சொன்னது. உதடு கிழிந்து, முகம் கண்டபடி வீங்கிக்கிடக்க, நிமிர்ந்து நிற்க கூட முடியாமல் நின்ற ஈஸ்வரியையும், அவரின் அருகில் கண்ணீரோடு நின்ற சத்யன் வித்தியையும் ஒரு பார்வையால் அளந்தவர்கள், எந்தப் பேச்சுக்களும் விளக்கங்களும் இன்றிச் சண்முகலிங்கத்தை அந்த வீட்டில் இருந்து அந்த நொடியே வெளியேற்றினார்கள்.
“வெளியே போய் நான் எங்கே தங்குவது?” என்றவரிடம்,
“உன் மனைவி பிள்ளைகளை அடித்துத் துன்புறுத்த முதலில் அதை நீ சிந்தித்து இருக்கவேண்டும்!” என்று கடுமையான குரலில் சொன்னவர்கள், அந்த வீட்டிலிருந்து எந்தப் பொருளையும் அவர் எடுத்துச் செல்லவும் அனுமதிக்கவில்லை.
அந்தக் கணமே நின்ற கோலத்திலேயே வெளியேற்றப்பட்டார்!
“என்ன நடந்தது என்று விசாரித்து, நாங்கள் ஒரு முடிவு சொல்லும் வரையில் நீ இந்த வீட்டுக்கு வரக்கூடாது! அதோடு, உன் மனைவியோடோ பிள்ளைகளோடோ எந்த வகையிலும் தொடர்பு கொள்ளக் கூடாது. அவர்களுக்கு உன்னால் எந்தத் தொந்தரவும் வரக்கூடாது. அப்படி ஏதாவது செய்வாயாக இருந்தால் உனக்கான தண்டனை இன்னும் அதிகமாகும்!” என்று கடுமையாக எச்சரித்தனர்.
மனைவி பிள்ளைகளிடம் சிங்கமாய் உறுமிய அந்த அசிங்கம் பிடித்த மனிதப்பிறவி பெட்டிப்பாம்பாய் அடங்கி, அவமானக் கன்றலோடு மித்ராவின் மீதான வன்மத்தோடு வெளியேறியது.
உடனடியாக அவசர வைத்திய சேவைக்கு அழைத்து மித்ராவுக்கும் ஈஸ்வரிக்கும் வைத்தியம் பார்க்கவைத்தனர். தங்களால் இயன்றவரை பொருட்களைச் சற்றே ஒழுங்கு படுத்தியவர்கள் முதலில் தனியாக அழைத்துச்சென்று விசாரித்தது அந்த வீட்டின் கடைக்குட்டி வித்யாவை தான். பிறகு சத்யன். பிறகு மித்ரா.
அடிவாங்கி, உடல்நொந்து, மகளின் செய்கையால் அதிர்ச்சியிலும் ஆழ்ந்திருந்த ஈஸ்வரியையும் விசாரித்து நடந்தவைகளைத் தெரிந்துகொண்டார்கள்.
அன்றைக்கு நன்றாக உறங்கி ஓய்வெடுக்கச் சொல்லி ஈஸ்வரியிடம் சொன்னவர்கள், நாளை வருவதாகச் சொல்லி மித்ராவையும் அழைத்துக்கொண்டு புறப்பட, அப்போதுதான் நடந்துகொண்டிருக்கும் நிகழ்வின் தீவிரம் மெல்ல மெல்லப் புலப்படப் பதறிப்போனார் ஈஸ்வரி. “ஏன்.. ஏன் அவளை அழைத்துச் செல்கிறீர்கள்?”
“இனி அவள் இந்த வீட்டில் இருக்க முடியாது. அவளுக்கு இங்கே பாதுகாப்பு இல்லை.” என்று அறிவித்தாள் அங்கே நின்ற பெண் போலிஸ்.
“இல்லையில்லை. அப்படியில்லை. இன்றுதான் அவர் கொஞ்சம் குடித்துவிட்டு வந்து அடித்துவிட்டார். மற்றும்படி ஒரு பிரச்சனையும் இல்லை.” என்று அவசரமாகச் சொன்னார் ஈஸ்வரி.
“போலீசிடம் பொய் சொல்லக் கூடாது. உங்கள் கணவருக்கு மித்ராவை பிடிக்காது என்றும், இப்படிப் பல தடவைகள் அவர் அவளுக்கு அடித்திருக்கிறார் என்றும் உங்களின் சின்ன மகள் சொல்லிவிட்டாள்.” என்றவர்கள், ஈஸ்வரி எவ்வளவோ சொல்லியும், அழுதும், மன்றாடியும் காதிலேயே விழுத்தாமல் மித்ராவை அழைத்துக்கொண்டே சென்றார்கள்.
நடப்பின் ஆழம் தெரியாமல், பயத்தில் உறைந்து நின்றவளும் அவர்களுடன் செல்ல, அன்றைய நாள் சிறுவர்களுக்கான இல்லத்தில் தங்கவைக்கப்பட்டாள்.
வீட்டிலிருந்து காவலரால் வெளியேற்றப்பட்ட சண்முகலிங்கமோ, நடுத்தெருவுக்குத்தான் வந்துநின்றார். கையில் பணமில்லை. உடுக்க உடையில்லை. தங்க ஒரு இடமில்லை. உண்ண உணவுகூட இல்லை. ஏன், குளிருக்கு அணிய ஒரு கோர்ட் கூட இல்லை.
என்ன செய்வது ஏது செய்வது என்று தெரியாமல் அன்று முழுவதும் தெருவிலேயே கழித்தவர், இரவானதும் தன்னுடைய நண்பர் பரந்தாமனின் வீட்டுக்கு வேறு வழியின்றிச் சென்றார்.
வீட்டின் அழைப்புமணி ஓசை கேட்டுக் கதவைத் திறந்த பரந்தாமன், கசங்கி அழுக்குப் படிந்த உடையும், மதுவின் கோரத்துக்குள் ஆட்பட்டதற்கு அடையாளமாகச் சிவந்த விழிகளும், அகோரமான முகமுமாக நின்றவரைக் கண்டு திகைத்துப் போனார்.
“என்னடா இந்த நேரத்தில்…?”
ஏன் வந்தாய் என்று நேரடியாகக் கேட்காமல் கேட்கப்பட்ட கேள்வியில் அவமானத்தில் முகம் சிறுத்துப் போனது சண்முகலிங்கத்துக்கு.
வேறு வழியின்றி, “இன்று… உன்.. வீட்டில் நான் தங்கலாமா?” என்று கேட்டார்.
பரந்தாமனுக்கோ என்ன சொல்வது என்றே புரியாத நிலை. இந்த நேரத்தில் இந்தக் கோலத்தில் நிற்பவரை உள்ளுக்கு எடுத்தால் மனைவி அவரைப் பந்தாடி விடுவாளே என்று பயந்து, “ஏன்.. உன் வீட்டில் என்ன பிரச்சனை?” என்று விசாரித்தார்.
அதை நினைக்கையிலேயே அவமானமும் ஆத்திரமும் அவரைப் பிடுங்கித் தின்றாலும், தான் கேவலப்பட்ட விஷயத்தை வெளியே சொல்லக் கூசினாலும் வேறு வழியின்றி நடந்ததைச் சொன்னார் சண்முகலிங்கம்.
அப்போதும், உள்ளுக்கு வா என்று அழைக்காத நண்பரின் செயல் வேறு இன்னும் அவமானப் படுத்தியது.
சற்று யோசித்த பரந்தாமன், “இங்கேயே நில். இதோ வருகிறேன்.” என்றுவிட்டு உள்ளே சென்றவர், சிறிது நேரத்திலேயே திரும்பி வந்தார்.
“என்னோடு வா..” என்று அவர் அழைத்துச் சென்றது, அந்த வீட்டின் ‘கெல்லர்’ என்று சொல்லப்படும் நிலக்கீழ் அறைக்கு.
அங்கே போடப்பட்டிருந்த தட்டுமுட்டுச் சாமான்களை ஒதுக்கிவிட்டு, “இங்கே படுடா. வீட்டுக்குள் என் மனைவி விடமாட்டாள். அவளை மீறி உன்னைக் கூட்டிக்கொண்டு போனால் பிறகு எனக்கும் உன் நிலைதான்.” என்றார்.
“இதுவே போதும்..” என்று வாய் சொன்னாலும், உள்ளுக்குள் கூனிக்குறுகி, கூசிப்போனார் சண்முகலிங்கம்.
ஹீற்றர் இல்லாமல் குளிருக்குள் நடுங்கியபடி, ஒழுங்கான படுக்கையின்றி அன்றைய இரவை கழித்தார்.
அடுத்தடுத்த நாட்களிலோ அவர் மனைவி பிள்ளைகளுக்கு அடித்ததும், மகள் போலிசுக்கு அழைத்ததும், போலிஸ் அவரை வீட்டைவிட்டு வெளியேற்றியதும் அந்த ஊரில் இருந்த அனைத்து தமிழருக்கும் காட்டுத்தீ போல் பரவியதில் வெளியே தலை காட்டவே முடியவில்லை.
வேலைக்குக் கூடப் பரந்தாமனின் உடையணிந்து சென்றவரை தமிழர்களின் கேவலமான பார்வையும், குத்தல் பேச்சும் விடாமல் தொடர்ந்தது. யாரின் முகம் பார்த்தும் பேசமுடியாமல் தவித்தவரின் மனதில் மித்ரா மீதான வன்மம் வளர்ந்துகொண்டே போயிற்று!


