இங்கே ஈஸ்வரியோ அடுத்தடுத்து வந்த நாட்களில் தன் வாழ்க்கையில் பெரும் பிரளயமே நடப்பதாக உணர்ந்தார்.
காரணம், பெண்கள் மையத்திலிருந்து இரண்டு பெண்கள் வந்தனர். இப்படியான ஒரு கணவன் உனக்குத் தேவையில்லை, உன் வாழ்வாதாரத்துக்கு இந்த நாடு மாதாமாதம் பணம் தரும் என்றனர். வீடு முதல்கொண்டு உணவு, உடை தொடங்கிப் பிள்ளைகளின் படிப்பு வரை அனைத்துக்கும் அவர்கள் பொறுப்பு என்றனர். உன்னையும் பிள்ளைகளையும் பார்த்துக்கொள்ள நாங்கள் உதவுவோம், குழந்தைகள் பள்ளிக்குப் போகும் நேரத்தில் உனக்கு வேலை வாங்கித் தருவோம், நீ சுயமாக நிமிர்ந்து வாழலாம் என்று, கணவனால் கைவிடப்படும் பெண்களுக்குக் கிடைக்கும் சகல வசதிகளையும் எடுத்துரைத்தனர். தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாகப் பேசினார்.
நடுங்கிப் போனார் ஈஸ்வரி.
அடுத்ததாக, பெண்கள் விடுதலை சங்கத்திலிருந்து வந்தனர் சில பெண்கள். உன் கணவன் உனக்குச் செய்ததற்கு எதிராக நீ வழக்குப் பதிவு செய்தால் அவருக்குத் தண்டனை வாங்கிக்கொடுக்கலாம் என்றும், காலம் முழுக்க உனக்கு அவர் வேலை செய்து பணம் தரவேண்டும் என்றும், உன்னைத் துன்புருத்தியவருக்குத் தண்டனை நீ நிச்சயம் வாங்கிக்கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
அதுமட்டும் அன்றி, அவரின் மனதுக்குத் தேவையான ஆலோசனைகளையும், உடலுக்குத் தேவையான உடற்பயிர்ச்சிகளையும் வழங்கி அவரைத் தன்னம்பிக்கை உள்ள பெண்ணாக மாற்ற முயன்றனர்.
ஆனாலும்.. அவரைச் சிறைக்கு அனுப்பிவிட்டு நான் வாழ்வதா என்று பதைபதைத்துப் போனார் ஈஸ்வரி.
அடுத்து, குழந்தைகள் மையத்திலிருந்து வந்தனர். வந்தவர்கள் உன் கணவர் இருந்தால் உன் மகளை உன்னிடம் தரமாட்டோம், அவளுக்கு இந்த வீட்டில் வசதியோ, பாதுகாப்போ இல்லை என்றனர். அடுத்து இருக்கும் இரண்டு குழந்தைகளுக்கும் கூடப் பாதுகாப்பு இல்லை என்றனர். உன்னையும் உன் பிள்ளைகளையும் துன்புறுத்தும் கணவர் இனியும் உனக்குத் தேவையா என்று கேட்டனர். நன்றாக யோசித்து முடிவெடுக்கச் சொல்லி இரண்டு வார அவகாசம் கொடுத்தனர்.
இவ்வளவு நடந்தபிறகும், எவ்வளவோ ஆலோசனைகளைப் பலரும் வழங்கியும் கணவரைப் பிரிந்து வாழவோ, விவாக ரத்து செய்யவோ துணியவில்லை ஈஸ்வரி.
குடும்பம் என்றால் சண்டை சச்சரவும், கணவன் அடிப்பதும் பிறகு ஒற்றுமையாவதும் வழமை தானே. இப்படிக் குடும்பப் பிரச்சனையை வீதிக்கு கொண்டுவந்து விட்டாளே என்று மகள் மீது தான் பெரும் கோபம் எழுந்தது.
ஊரார் வேறு, பரிதாபம் காட்டுவதுபோல், நடந்ததை விசாரிப்பது போல், அனுதாபம் கொண்டவர் போல் என்று அதையே பேசிப்பேசி ஒருவழியாக்கினர். மொத்தத்தில் ஊர் வாய்க்கு உலையாகிப்போனது அவர் குடும்பம்.
அதோடு, பெண்களுக்காக இருக்கும் அத்தனை அமைப்புக்களும் ஈஸ்வரியை கூப்பிட்டு கேள்விக்கு மேல் கேள்வி.. விசாரணைக்கு மேல் விசாரணை என்று அவரை ஒரு வழியாக்கியது. கணவரை மீண்டும் வீட்டுக்குள் விடமுடியாது என்றது.
ஒரு கட்டத்தில், எப்படியாவது கணவரை வீட்டுக்கு கூட்டிவந்து, எல்லோரினதும் வாயை அடைத்துக் குடும்பத்தைப் பழைய நிலைக்குக் கொண்டுவந்தால் போதும் என்றானது. ஏற்கனவே முதல் கணவன் இறந்ததில் ராசியற்றவள் என்கிற பெயரை வாங்கியவருக்கு இந்தக் கணவனையும் பிரிந்தால் எல்லோரும் திட்டி ஒதுக்கிவிடுவார்கள் என்கிற பயம்.
இரண்டு வாரங்கள் கழித்து வந்தவர்களிடம், “மித்ராவினால் என்னுடைய இரண்டாவது கணவரை அப்பாவாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதோடு, அவள் செய்யும் பிரச்சனைகளால் தான் அவர் நிம்மதியிழந்து குடிக்கிறார். மதுபோதையில் அடித்தும் விடுகிறார். அவரை மன்னித்து என்னோடு சேர்த்துவையுங்கள்.” என்று கண்ணீரோடு ஈஸ்வரி கேட்டபோது, இவ்வளவு நடந்தபிறகும் கணவரை காப்பாற்ற நினைக்கிறாரே இந்தப் பெண்மணி என்று வந்தவர்கள்தான் அவர் மீது வெறுப்பும் கோபமும் கொண்டனர்.
போதாக்குறைக்குச் சகோதரர்களையும் அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றவர், அதனால் தான் பிரச்சினை வந்தது என்றும், அவள் இல்லாததால் இனி பிரச்சினை வராது என்றும் சொல்லிவிடப் பெண்கள் மையம் தான் திண்டாடிப் போனது.
என்னதான் சண்முகலிங்கம் குற்றவாளி என்று அவர்களுக்குத் தெரிந்தாலும், ஈஸ்வரியின் ஆதரவு இல்லாமல் அவர்களாலும் ஒரு அளவுக்குமேல் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாதே!
ஆனாலும், முடிந்தவரை ஈஸ்வறியோடு போராடினர். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி எடுத்துரைத்தனர். எதற்கும் அசையவில்லை ஈஸ்வரி. கணவர் வேண்டும் என்றே நின்றார்.
அவரின் மன்றாடளுக்காகவும், மற்ற பிள்ளைகளின் நிலையையும் கருத்தில் கொண்டு, வேறு வழியின்றிச் சண்முகலிங்கத்தை வீட்டுக்கு வர அனுமதித்தது காவல் துறையும் பெண்கள் மையமும்.
அதன் பிறகே மித்ரா பற்றி விசாரித்தார் ஈஸ்வரி. ஆனால், எல்லாவிதமான உதவிகளையும் செய்யத் தயாராக இருந்த பெண்கள் மையம், மித்ரா பற்றிய தகவல்களை மட்டும் ஈஸ்வரிக்கு வழங்க மறுத்தது. அவள் எங்கே இருக்கிறாள், என்ன செய்கிறாள் போன்ற விபரங்களைச் சொல்லவே இல்லை.
இதற்குள் கிட்டத்தட்ட ஒருமாதம் ஓடியிருந்தது.
இனியும் இப்படி நடந்துகொண்டால் மனைவி பிள்ளைகளைப் பெண்களுக்கான ‘ஹோம்’ல் சேர்த்துவிடுவோம் என்று மிரட்டி, எப்போதும் நாங்கள் உங்கள் குடும்பத்தையும் உங்களையும் கண்காணிப்போம் என்று சண்முகலிங்கத்திடம் சொன்னவர்கள், போலிஸ் வந்து போனதில் இருந்து, அதுநாள் வரை அவர்கள் அலைந்த அலைச்சல் முதல்கொண்டு அனைத்துக்கும் பெரும் தொகையைக் கண்டனத் தொகையாக அவரிடமிருந்து அறவிடவும் தவறவில்லை!
சொன்னதுபோல, தொடர்ந்து வந்த நாட்களில் அந்தக் குடும்பத்தை ஆங்காங்கே நின்று கண்காணிக்கவும் தவறவில்லை அவர்கள். ஈஸ்வரிக்கோ பெருத்த நிம்மதி. ஒருவழியாக அவர்கள் குடும்பத்தை ஆட்டிப்படைத்த பெரும் பிரச்னையைத் தீர்த்தாயிற்றே!
ஆனால், சண்முகலிங்கமோ மனைவியிடம் முகம் கொடுத்துப் பேசாமல், “உன் மகளால் என் மரியாதையே போய்விட்டது, யார் முகத்திலும் முழிக்க முடியவில்லை..” என்று கோபத்தோடு இருந்ததில் அவரை நெருங்கவே அஞ்சினார் ஈஸ்வரி.
மித்ராவினாலும், வீட்டுச் செலவுக்குப் பணம் கேட்பதாலும் தானே பிரச்சனைகள் எழுந்தது. இப்போது மித்ரா இல்லை. வீட்டுத் தேவைக்கு ஒரு வேலையைத் தேடிக்கொண்டால் குடும்பம் அமைதியாக ஓடும் என்று எண்ணி, அருகில் இருந்த வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு உணவு பரிமாறும் முழுநாள் வேலையில் சேர்ந்துகொண்டார் ஈஸ்வரி. அதோடு, கணவர் இலங்கையில் இருக்கும் அவர் வீட்டை பார்ப்பதற்கும் ஒன்றும் சொல்வதில்லை.
தன் சம்பளப் பணத்தைக் கேட்காததிலும், வீட்டுச்செலவு போகத் தன் சம்பளத்தின் மீதியையும் மனைவி தன்னிடம் தந்து விடுவதிலும், முன்னைப்போலக் குடிப்பதற்கு அவர் சண்டை பிடிக்காமல் இருப்பதிலும் மெல்ல மெல்ல வழமைக்குத் திரும்பினார் சண்முகலிங்கம்.
அதோடு, இனி ஒரு பிரச்சினை வந்து, மற்ற பிள்ளைகள் மித்ராவைப்போலவே போலிசுக்கு சொல்லிவிட்டால் தன் நிலை பயங்கரமாகப் போய்விடும் என்று தெரிந்தவரும் அடக்கி வசிக்க, எல்லாமே சுமூகமாகச் சென்றது.
போலிஸ் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கான மையங்களும் அவ்வப்போது முன்னறிவிப்பு இன்றி அவர்கள் வீட்டுக்கு வந்து போனது வேறு அவரை அடக்கி வாசிக்க வைத்தது.
ஆக, குடும்பத்தில் என்றுமில்லாத வகையில் அமைதி நிலவியது. ஒரு கட்டத்தில் மித்ரா அந்த வீட்டில் இல்லாமல் போனபிறகு தான் இந்த நிம்மதியோ என்று தோன்ற ஆரம்பித்ததில், நடந்தது கூட நல்லதுக்குத்தான் என்று எண்ணிக்கொண்டார் ஈஸ்வரி.
ஆனால், முழு நேர வேலைக்குப் போகும் அவர் சத்யனையும் வித்தியையும் கவனிக்க மறந்தார்.
இங்கே சிறுவர் இல்லத்தில் ஒருவாரம் தங்க வைக்கப்பட்ட மித்ரா, அடுத்துவந்த நாட்களில் ஒரு பராமரிக்கும் குடும்பத்தில் சேர்க்கப்பட்டாள். கண்களில் கண்ணீரோடு, பெண்கள் மையத்தின் செயலாளர் திருமதி லீசா வாங்கிக்கொடுத்த பொம்மையை அணைத்தபடி வந்தவளை, “உள்ளே வா..” என்று நட்போடு கைப்பற்றி அழைத்தான் அந்த வீட்டின் ஒரே மகனான நீக்கோ.


