அவளை விட மூன்று வயது பெரியவனான அவனை அச்சத்தோடு அவள் நோக்க, “உன் பெயர் என்ன?” என்று கேட்டான் அவன்.
“மித்ரா….”
“மிட்..டுரா….?” பெரும் சிரமப் பட்டுச் சொன்னான் அவன்.
அதிலே மெல்லிய புன்னகை அரும்ப, மறுப்பாகத் தலையை அசைத்து, “மி..த்..ரா..” என்றாள் ஒவ்வொரு எழுத்துக்கும் இடைவெளி விட்டுவிட்டு.
“மிட்..துரா..” அப்போதும் அவன் தப்பாகவே சொல்ல, அவள் புன்னகை அகன்றது.
“இல்லை மித்ரா..”
அவனோ, அவள் சொன்னதை மிக உன்னிப்பாகக் கேட்டுவிட்டு, “மிட்ரா..” என்றவன், “இப்போது சரியாகச் சொன்னேனா?” என்று ஆவலில் விழிகள் மின்னக் கேட்டான்.
முகம் புன்னகையால் மலர, “ம்ஹூம்! இப்போதும் நீ பிழையாகத்தான் சொன்னாய்.” என்றாள் அவள்.
“சரி விடு. உன் பெயர் என் வாயில் வரமாட்டேன் என்கிறது. உன்னை நான் இனி ஏஞ்சல் என்று கூப்பிடட்டுமா? நீயும் ஏஞ்சல் மாதிரியே இருக்கிறாய்.” என்றான் அவன்.
ஏஞ்சலா? அவளா?
விழிகள் மின்ன, “ஓ…! தாரளமாகக் கூப்பிடேன். எனக்கும் அந்தப் பெயர் பிடித்திருக்கிறது.” என்று துள்ளலோடு சொன்னவள், தன் கலக்கங்களை மறந்து அவனோடு இயல்பாக உரையாடத் தொடங்கியிருந்தாள்.
இதையெல்லாம் ஒரு புன்னகையோடு திருமதி லீசாவும் நீக்கோவின் அன்னை மரியாவும் பார்த்தும் பார்க்காததுபோல் கவனித்துக் கொண்டிருந்தனர்.
நீக்கோ அவளை அழைத்துச் சென்று அவர்களின் வீட்டை சுற்றிக் காட்டினான். அவனது அறையை அவன் காட்டியபோது, “இந்த அறை உனக்கு… உனக்கு மட்டுமேவா?” என்று வாயை பிளந்தாள் மித்ரா.
“ஆமாம்! எனக்கு மட்டுமேயான என் அறை.” என்றவன், அடுத்ததாக இருந்த இன்னொரு அறையைக் காட்டி, “இது உன் அறை.” என்று சொன்னபோது, விழிகள் இரண்டும் பெரு வட்டங்களாக விரிய, “என் அறையா?” என்றாள் வியப்போடு.
அதுநாள் வரை அவளின் வீட்டில் அவளுக்கு என்று அறை கொடுக்கப் பட்டதில்லை. அறை என்ன, இருந்து படிப்பதற்கு அவளுக்கே அவளுக்கென்று ஒரு இடம் கூட இல்லை. இங்கேயானால், அவளுக்கு என்று ஒரு அறை. அதுவும் ரோஸ் நிறத்தில் வண்ணம் பூசப்பட்டு, திரைச் சீலைகளில் பார்பி சிரித்துக் கொண்டிருக்க, நடுவே இளவரசியின் கிரீடம் போன்று தலைப்பக்கம் வடிவமைக்கப்பட்ட ரோஸ் நிறக் கட்டில் போடப்பட்டு, அந்தக் கட்டிலில் பெரிய பார்பி பொம்மை வேறு அமர்ந்திருந்து அவளைப் பார்த்துச் சிரித்தது. படிப்பதற்கு மேசை நாற்காலி போடப்பட்டு, நடுக்கதவு கண்ணாடியால் அமைக்கப்பட்ட மூன்று கதவுகள் கொண்ட அலமாரி வேறு.
“இந்த அறை எனக்கு மட்டுமேயா?” வியப்பு அடங்காமல் அவள் கேட்க, “ஆமாம். உனக்குத்தான். பிடித்திருக்கிறதா?” என்று கேட்டான் நீக்கோ.
“ஓ.. மிகவும்.”
“அப்போ என்னோடு நீயும் எங்கள் வீட்டில் இருக்கிறாயா? எனக்குத் தனியாகவே இருந்து அலுப்படிக்கிறது. நீயும் இருந்தால் நானும் நீயும் பாட்மிண்டன் விளையாடலாம். சைக்கிள் ஓடலாம். பள்ளிக்கூடத்துக்கு ஒன்றாகவே போகலாம்.” என்று கேட்டான் நீக்கோ.
பாவம்! இவ்வளவு நாட்களும் விளையாடுவதற்கு ஒருவரும் இல்லாமல் தனியாக இருந்திருக்கிறான் போலும். அவன்மேல் இரக்கம் சுரக்க, “ஓ.. இருக்கிறேனே.” என்றாள் மித்ரா.
முதலும் அவளைப் போன்ற ஒருத்தி அவர்களோடு வளர்ந்ததில், இப்படி வருபவர்களோடு எப்படிப் பழகவேண்டும் என்று அறிந்திருந்த நீக்கோ காட்டிய நட்பிலும், அன்பிலும் தன்னையும், தன் அநாதரவான நிலையையும் மறந்து அவனுக்காகப் பரிதாபப்பட்டு அங்கே இருக்கச் சம்மதித்தது அந்தப் பிஞ்சு.
அதன்பிறகு அந்த ஊரிலேயே இருக்கும் பள்ளியிலும் சேர்க்கப்பட்டாள். தொடர்ந்து வந்த நாட்களில் தாய் வீட்டுக்காக, அம்மாவுக்காக, தம்பி தங்கைகளுக்காக ஏங்கும் மித்ரா நீக்கோவின் நட்பில் மெல்ல மெல்ல தேறினாள். அவனுடைய உதவியோடு படிப்பிலும் கெட்டிக்காரியாக மாறினாள்.
இப்படியே இரண்டு வருடங்கள் ஓடிவிட, ஒருநாள், “எனக்கு அம்மாவையும் தம்பி தங்கையையும் பார்க்க ஆசையாக இருக்கிறது நீக்கோ..” என்றாள் நீக்கோவிடம்.
“ஏன்? எங்கள் வீட்டில் இருக்க உனக்குப் பிடிக்கவில்லையா ஏஞ்சல்?” அன்று பதினேழு வயதான நீக்கோ கேட்டபோது, ஓடிவந்து அவன் கைகள் இரண்டையும் பற்றிக்கொண்ட மித்ரா, “அப்படியெல்லாம் சொல்லாதே நீக்கோ. நீயும் மரியாவும் இல்லை என்றால் நான் என்னாகி இருப்பேனோ தெரியாது.” என்று விழிகள் கலங்கச் சொன்னாள்.
“ஆனாலும்.. அம்மாவையும் தம்பி தங்கையையும் பார்க்கவேண்டும் போல் இருக்கிறது.”
அவளின் ஏக்கம் உணர்ந்து, “சரி வா! அம்மாவிடம் சொல்லிப் பார்ப்போம்.” என்று அவளைத் தாயிடம் அழைத்துச் சென்றான்.
திடீரென்று எங்கிருந்தோ அவளது கைபேசி அலறியது. கன்னங்களில் கண்ணீரின் கறை காய்ந்து கிடக்க, எங்கேயோ வெறித்தபடி கட்டிலில் படுத்திருந்தவள், திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள்.
ப்ச்! இதையெல்லாம் நினைக்கவே கூடாது என்று நினைத்தாலும் முடிவதில்லை என்று விரக்தியோடு எண்ணியபடி அழைப்பது யார் என்று பார்த்தாள்.
அது சத்யன். இப்போது அவனோடு கதைத்தால் அழுததைக் கண்டுகொள்வான். எனவே அழைப்பை ஏற்காமல் வேகமாகக் குளியலறைக்குள் நுழைந்து கண்களுக்கு நன்றாகக் குளிர்நீர் அடித்துக் கழுவிவிட்டு வேகமாகக் குளித்துவிட்டு வந்தாள்.
அழுத தடம் தெரியாமல் முகத்துக்குக் கிரீமை பூசிக்கொண்டு சமையல் வேலையை அவள் தொடங்கவும், “நான் அத்தனை தரம் அழைத்தும் எடுக்காமல் என்னக்கா செய்துகொண்டு இருக்கிறாய்?” என்று கேட்டுக்கொண்டு வந்தான் சத்யன்.
அவன் முகம் பார்த்துப் பொய்யுரைக்க முடியாமல், “குளித்துக்கொண்டு இருந்ததில் கேட்கவில்லை போல. ஏன் அழைத்தாய்?” என்று நறுக்கிக்கொண்டிருந்த வெங்காயத்தில் பார்வையைப் பதித்துக் கேட்டாள் மித்ரா.
“அது.. சும்மாதான். எங்கே சந்து? அவன் சத்தத்தையே காணோம்?”
வீடு அமைதியாக இருப்பதிலேயே சந்து அங்கே இல்லை என்பது தெரிந்தது. எங்கே போயிருப்பான் என்கிற அனுமானமும் இருந்தது. ஆனாலும் கேட்டான்.
அன்று கீர்த்தனனை சந்தித்ததையோ, அவனிடம் கோபப் பட்டதையோ மித்ரவிடம் சொல்லவில்லை அவன். ஆனாலும், அன்றைய அவனின் பேச்சுக்கு ஏதாவது பலன் இருக்கிறதா? கீர்த்தனன் சொன்னது போல மெய்யாகவே சந்துவின் மேல் பாசமாக இருக்கிறானா, அப்படி இருந்தால் அக்கா கொடுத்துவிடா விட்டாலும் மகனை பார்க்க வந்திருப்பானே என்பதை அவனுக்கு அறியவேண்டி இருந்தது.
அதைத் தமக்கையிடம் நேரடியாகக் கேட்க முடியாதே.
அப்படி அவன் கேட்கும் தேவையே இல்லாமல், அதுவரை அவளுக்குள் இருந்த சோர்வு மறைய விழிகள் பளிச்சிட, “சந்துதான் அவன் அப்பாவோடு போய்விட்டானே.” என்று துள்ளல் குரலில் சொன்னாள் மித்ரா.
ஓ.. அப்போ அவருக்கு மகன் மேல் கொஞ்சம் பாசம் இருக்கிறதுதான் போலும்.
“நீ சந்துவை இனி அங்கே அனுப்பமாட்டேன் என்று சொன்னாயேக்கா.”
விஷயத்தை அவள் வாயிலிருந்து பிடுங்க முயன்றான்.
“நான் அனுப்பவில்லை. ஆனால், அவரே வந்து கூட்டிக்கொண்டு போனார். இனியும் நான் அவனை அனுப்பாமல் இருக்கக் கூடாதாம். அதற்கு எனக்கு உரிமை இல்லையாம் என்று வேறு என்னிடம் கத்திவிட்டுப் போகிறார்.” என்று, அவன் கோபப்பட்டதைக் கூட மகிழ்ச்சியோடு சொன்னவளை நெஞ்சம் கனக்கப் பார்த்தான் சத்யன்.
சந்துவின் நிலை ஓரளவுக்குச் சீராகிவிட்டது. அவனுடைய தமக்கையின் நிலை?


