“என்னடா? என்னையே ஏன் பார்க்கிறாய்?” என்று கேட்டாள் மித்ரா.
மனதிலிருப்பதைக் காட்டிக்கொள்ளாமல், “இல்லை.. வெங்காயம் வெங்காயமாக வெட்டுகிறாயே. வெங்காயத்தில் கறி ஏதும் வைக்கப் போகிறாயா என்று பார்த்தேன்.” என்றான் சத்யன் கேலியாக.
அப்போதுதான் நாலைந்து பெரிய வெங்காயங்களை நறுக்கிவிட்டது தெரிய, “அச்சோ..!” என்று நாக்கை கடித்தாள் அவள். “சரி விடு! நாளைக்கு வெங்காயம் வெட்டும் வேலை மிச்சம்.” என்றுவிட்டு, அதிகமாக இருந்ததை எடுத்துப் பிரிட்ஜில் வைத்தாள்.
மீதம் இருந்த வெங்காயத்தோடு ஏற்கனவே அவித்து, தோல் உரித்துச் சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்திருந்த உருளைக்கிழங்கை சேர்த்து அதற்கான சாஸ் விட்டுக் கலந்துவைத்தாள். அதற்குள் அவித்த முட்டையையும் சிறிது சிறிதாக வெட்டிப் போட்டு உருளைக்கிழங்கு சாலட் செய்வதைப் பார்த்திருந்த சத்யன், “பார்க்கவே நாக்கில் நீர் ஊறுது அக்கா..” என்றபடி, சாலட்டை ஒரு கரண்டியால் அள்ளி வாயில் போட்டான்.
அவன் கையிலேயே ஒரு அடியை போட்டாள் அவள். “இப்படிச் சாப்பிட்டுப் பழகாதே என்று எத்தனை தரமடா சொல்வது!” என்றவள், ஒரு கிண்ணத்தில் அவனுக்குச் சாலட்டை போட்டு, இரண்டு துண்டு ரொட்டிகளையும் சேர்த்துக் கொடுத்தாள்.
அதை உண்டபடியே, “நான் சிலநேரம் பெர்லின் போகவேண்டி வரும்போல் இருக்கிறதுக்கா.” என்றான் அவன்.
பாவித்த பாத்திரங்களைக் கழுவிக்கொண்டு இருந்தவள், “என்னடா திடீர் என்று?” என்று கேட்டாள்.
“திடீரென்று இல்லைக்கா. இந்த ப்ராஜெக்ட் சரியாக வந்தால் போகவேண்டும் என்று முதலே சொன்னார்கள் தான். நாங்கள்தான் எத்தனையோ கம்பனிகள் பெர்லினிலேயே இருக்க ‘பொன்’னில் இருக்கும் எங்கள் கம்பனிக்குத் தருவார்கள் என்று நம்பவில்லை. ஆனால், தந்துவிட்டார்கள். இப்போது என் தலைமையில் தான் எங்கள் கம்பனியில் இருந்து இருவது பேர் கொண்ட குழு போகப்போகிறோம்.”
சட்டென முகம் மலர்ந்து போயிற்று அவளுக்கு! “ஹேய்! என்னடா நீ. இவ்வளவு சந்தோசமான விஷயத்தை இப்படி உப்புச் சப்பில்லாமல் சொல்கிறாயே. கைகுடு கைகுடு!” என்று அவன் கையைப் பிடித்து வாழ்த்தினாள்.
பின்னே, இரண்டு வருடங்களுக்கு முதல் படிப்பை முடித்த கையோடு குளிர்காலத்துக்குத் தேவையான ஹீட்டர்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயிற்சி ஊழியனாக, அதுவும் பகுதிநேர வேலையாளாகச் சேர்ந்தவன், இன்று ஒரு குழுவுக்குத் தலைமை தாங்கி வேலை செய்யப் போகிறான் என்றால் சும்மாவா?
கிட்டத்தட்ட பதவி உயர்வு போன்றது! இதை வெற்றிகரமாக முடித்தால் சம்பளத்தில் இருந்து அவனுக்கான சலுகைகள் அனைத்துமே உயரும்.
“எனக்குத் தெரியும் என் தம்பி கெட்டிக்காரன் என்று. நீ இன்னுமின்னும் பெரியாளாக வருவாய் பாரேன்.” என்றவளின் சந்தோஷத்துக்கு அளவேயில்லாமல் போயிற்று!
“நான் போனால் வர ஆறேழு மாதம் ஆகுமக்கா. எப்படியும் இடையிடையே வந்து போவேன்தான். என்றாலும் உறுதியாகச் சொல்ல முடியாது. அதுவரை நீ இங்கே தனியாக எப்படிச் சமாளிப்பாய்? அங்கே வித்தி என்ன செய்வாளோ தெரியவில்லை.” என்றான் பொறுப்புள்ள சகோதரனாக.
அவன் சொல்வது உண்மைதான் என்றாலும் அவனுடைய எதிர்காலத்துக்கு அவள் இடைஞ்சலாக நிற்பதா?
“அதற்கு என்னடா. வித்தியை பார்த்துக்கொள்ள அம்மாவும் அப்பாவும் இருக்கிறார்கள். நானும் இருக்கிறேன். பிறகு என்ன? நீ கவலைப் படாமல் போ.” என்றாள் மித்ரா.
“உன்னை யார் பார்த்துக்கொள்வார்கள்?”
“நான் என்ன சின்னக் குழந்தையாடா?” என்று கேட்டாள் சிரிப்போடு.
“இல்லைதான் என்றாலும் நீயும் கவனமாக இரு.” என்றவன், சற்றுநேரம் அவளோடு கதைத்துக்கொண்டு இருந்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பினான்.
நாட்கள் அதன்பாட்டுக்கு நகர, மித்ராவும் ஓரளவுக்கு வழமைக்குத் திரும்பியிருந்தாள். அதற்குக் காரணம், கீர்த்தனன் அன்று சொன்னதுபோலவே வாரா வாரம் மகனை தானே வந்து அழைத்துச் சென்றதே!
அதோடு, அவனோடான அவள் வாழ்க்கை முடிந்துபோன ஒன்று. இனி அவன் அவளுக்கு இல்லை. சந்தோஷுக்கு மட்டும் அப்பாவாக இருந்தாலே போதும் என்று தனக்குள் சொல்லிச் சொல்லியே மனதில் பதிய வைத்திருந்தாள்.
இன்னொருத்தியை மணக்கப் போகிறான் என்பதை என்றைக்குமே தாங்க முடியாதுதான் என்றாலும், அவள் செய்வதற்கும் ஒன்றும் இல்லையே. அதனால், அவனாவது சந்தோசமாக வாழட்டும் என்றெண்ணி தன்னைத் தேற்றிக்கொண்டாள். அதோடு, வாரத்தில் ஒருநாள் அவன் முகத்தைப் பார்க்கிறாளே! அது போதுமே அவளின் காலம் முழுமைக்கும்!
அன்று சனிக்கிழமை.
கீர்த்தனன் வந்து சந்துவை அழைத்துக்கொண்டு சென்றதும், தனியே இருக்க அலுப்புத் தட்டியது அவளுக்கு. சத்தி பெர்லின் சென்றிருந்தான். வித்தியும், அன்று தன் தோழி ஒருத்திக்கு பிறந்தநாள் என்று வரமாட்டேன் என்றிருந்தாள்.
தன் ஒருத்திக்காகச் சமைப்பதா என்றெண்ணி அன்றைய சமையலையும் செய்யாமல் விட்டுவிட்டாள் மித்ரா. எதைச் செய்யவும் பிடிக்காமல் மனம் சோம்பிக்கொண்டு இருந்தது. ஒரு கட்டத்தில் இப்படியே இருந்தால் வேலைக்கு ஆகாது என்றெண்ணியவள் அடுத்த வாரத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு, அப்படியே வெளியே மதிய உணவையும் முடித்துக்கொள்வோம் என்றெண்ணி தயாராகிக் கடைக்குச் சென்றாள்.
அவசரம் ஏதும் இல்லாததில் மெதுவாகவே ஒவ்வொரு பொருளாகப் பார்த்துப்பார்த்து எடுத்துக்கொண்டு இருக்கையில் கைபேசி அலறியது.
யார் என்று பார்க்க, கீர்த்தனன்! சட்டென மனதில் மகிழ்ச்சி நீரூற்றாகப் பொங்கியது.
உடனேயே சும்மா அழைக்கமாட்டானே.. மகனுக்கு ஏதுமோ என்று எண்ணிய நொடியில், அவசரமாக அழைப்பை ஏற்றுக் காதுக்குக் கொடுத்து, “சந்தோஷுக்கு என்ன?” என்று கேட்டாள்.
அவளின் அந்தப் பதட்டம் கீர்த்தனனை தாக்கிற்று! அன்றொருநாள் ‘மகன் மீது பாசமாக இருக்கிறவள் போல் நடிக்கிறாள்’ என்று சத்யனிடம் சொன்னது நினைவில் வந்து குன்ற வைத்தது.


