தன்னைச் சமாளித்துக்கொண்டு, “அவனுக்கு ஒன்றுமில்லை. இங்கே விளையாடிக்கொண்டு இருக்கிறான்.” என்றான்.
அப்போதுதான் சற்றே ஆசுவாசமாக உணர்ந்தாள் மித்ரா.
பிறகு எதற்கு அழைத்தான்? அவனுக்கு ஏதுமோ? கேட்டால் திட்டுவானோ? கேட்கலாமா வேண்டாமா என்று தவித்தவள், மனதை அடக்க முடியாமல், “உங்… உங்களுக்கு..?” என்று இழுத்தாள்.
அந்தப் பக்கம் ஒரு வேகமூச்சை உள்ளுக்கு இழுத்தவன், “என்னை அவசரமாக வேலைக்கு வரசொல்லி அழைத்தார்கள். அதுதான்… நீ சந்துவை வாங்கிக் கொள்கிறாயா என்று கேட்கத்தான் அழைத்தேன்.” என்றான் உணர்சிகளற்ற குரலில்.
அவனுக்கும் ஒன்றுமில்லை என்பது ஆறுதலை தர, “நான் இங்கே டவுனில் நிற்கிறேன். ஒரு.. இருபது நிமிடத்தில் அங்கே வந்துவிடுவேன். பரவாயில்லையா?” என்று கேட்டாள்.
“பரவாயில்லை. வா!” என்றுவிட்டு அழைப்பை துண்டித்தான் அவன்.
கீர்த்தனனின் வீட்டை நோக்கிச் சென்ற மித்ராவை பழைய நினைவுகள் படையெடுத்து வந்து தாக்கின. அந்த வீதியால் எத்தனையோ நாட்கள் அவர்கள் இருவருமாகக் கைகோர்த்து நடந்திருக்கிறார்கள். சைக்கிளில் சென்றிருக்கிறார்கள், ஏன்.. ஒருநாள் நட்ட நாடு வீதியில் வைத்து இருளின் போர்வையில் அவளை அணைத்து முத்தம் கூடப் பதித்திருக்கிறான்.
அன்றைய நாட்களில் சொர்க்கமாய் இருந்த நிகழ்வுகள் அத்தனையும் இன்று சோகங்கள் நிறைந்த சுகமாய் மாறி அவளை வதைத்தது.
இந்த வீதிக்கு வந்ததற்கே மனம் இந்தப் பாடு படுகிறதே. வீட்டுக்குள் போகவேண்டி வருமோ? அப்படிப் போனால் சாதரணமாக அவன் முகத்தைப் பார்க்க இயலுமா என்கிற தவிப்போடு அவன் வீட்டை நோக்கி காரைச் செலுத்தினாள்.
அங்கே கீர்த்தனனோ, வேலைக்குச் செல்வதற்குத் தயாராகிக் கார் பார்க்கிங்கில் மகனோடு நின்றுகொண்டிருந்தான்.
ஹப்பாடி..! வீட்டின் உள்ளே போகத் தேவையில்லை என்று எண்ணிய அதே நேரத்தில், அவனும் அவளுமாகச் சேர்ந்து வாழ்ந்த அந்த வீட்டை பார்க்கமுடியாமல் போய்விட்டதே என்றும் ஏங்கிப்போனாள்.
தன்னைச் சமாளித்துக்கொண்டு காரை நிறுத்திவிட்டு இறங்க முயல, வேண்டாம் என்று சைகையால் காட்டிக்கொண்டே மகனோடு வந்தான் அவன். அவளது காரின் பின் கதவை திறந்து அங்கே இருந்த சந்துவின் ‘பேபி சிட்டிங்’ல் அவனை இருத்தி பெல்டை மாட்டியும் விட்டான்.
“ஒரு.. இரண்டு மணிநேரம் தான். பிறகு நானே வந்து கூட்டிப் போகிறேன்.” அவளின் முகம் பாராமல் சொல்லிவிட்டு, தன் காரை நோக்கி நடந்தான்.
அவனது கார் மறையும் வரைக்கும் அவனையே பார்த்துக்கொண்டு நின்றாள் அவள். போய்வருகிறேன் என்று சொன்னால் என்னவாம்? ஒருமுறை அவள் கண்களைப் பார்த்துக் கதைத்திருக்கலாம் தானே? கலங்கிவிட்ட விழிகளோடு அந்த வீட்டை நிமிர்ந்து பார்த்தாள். அவனும் அவளுமாகச் சேர்ந்து வாங்கிய வீடு. அதிலே இன்று அவளுக்கு இடமில்லை!
இல்லை.. அவன் அப்படிச் சொல்லவில்லை. தான் வெளியேறுகிறேன் என்றான், அவள்தான் முந்திக்கொண்டு வெளியே வந்துவிட்டாள். பாரமேறிய மனதோடு மகனையும் கூட்டிக்கொண்டு திரும்பவும் டவுனுக்குச் சென்றாள் மித்ரா.
அவசர வேலைகள் எதுவும் இல்லாததிலும், வீட்டுக்குள் சென்று புகுந்துகொண்டால் மனம் அலைபாயத் தொடங்கும் என்கிற பயத்திலும் வாங்கவேண்டிய பொருட்களை மகனோடு சேர்ந்து ஆற அமர பார்த்துப்பார்த்து வாங்கிக்கொண்டாள்.
வயிற்றில் இலேசாகப் பசி தெரியத் தொடங்க, மகனுக்கு மக் டோனல்ஸ் உணவு பிடிக்கும் என்று அங்கே காரை விட்டாள். சதோஷ்க்கு ‘சிக்கன் நகெட்ஸ்’ மற்றும் உருளைக்கிழங்கு பொரியலும் அவளுக்கு ஒரு ‘பிக் மக்’உம் வாங்கிக்கொண்டு ஒரு மேசையில் அமர்ந்துகொண்டாள்.
சுற்றவர கண்ணாடியால் ஆன அந்தக் கட்டிடத்துக்கு வெளியே குழந்தைகளுக்கு என்றே பிரத்தியோகமாக அமைக்கப்பட்டிருந்த சறுக்கியை காட்டி அங்கே போகத் துடித்தான் சந்தோஷ். “முதலில் சாப்பிட்டுவிட்டு பிறகு போய் விளையாடலாம் குட்டி.” என்றபடி, சிக்கன் நகெட்டில் ஒன்றை சாஸில் தொட்டு அவனுக்கு ஊட்டினாள்.
விளையாடும் ஆசையில் வேகமாக உண்டுகொண்டிருந்த சந்தோஷ் திடீரென்று “பப்பா.. பப்பா..” என்று கையை ஒரு பக்கமாகக் காட்டி ஆர்பரித்தான்.
“பப்பாவா? எங்கேடா?” என்று கேட்டபடி விழிகளைச் சுழற்றினாள் அவள்.
அங்கே கீர்த்தனனும் மகனின் சத்தத்தில் அவனைக் கண்டுவிட்டு, முகம் மலர அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான். விழிகளை அகற்றமுடியாமல் அவனையே பார்த்தாள் மித்ரா.
இனி அவளைப் பார்த்து என்றைக்குமே அவன் இதுபோல் புன்னகைக்கப் போவதில்லை. அதைப் பார்த்து ரசிக்கும் பாக்கியமும் அவளுக்குக் கிடைக்கப் போவதில்லை! எனவே கிடைத்த சந்தர்ப்பத்தில் அவன் சிரிப்பை, அந்தக் கண்களும் சேர்ந்து சிரிக்கும் அழகை, அந்தச் சிரிப்பு அவன் முகத்துக்குக் கொடுக்கும் களையை, தன் மனதுக்குள் பொக்கிசமாய்ப் பத்திரப்படுத்திக் கொண்டாள் மித்ரா.
அலையலையாய் அசைந்தாடிய அடர்ந்த கேசமும், அகன்ற நெற்றியும், மகனை கண்டதில் கனிவை சொட்டிய கூர்விழிகளும், நேரான நாசியும், கம்பீரமாய்ப் புன்னகைத்த உதடுகளும், அந்த உதடுகளுக்கு அழகுசேர்த்த அடர்ந்த மீசையும் என்று.. ஒருகாலத்தில் ஆசையோடு அவள் வருடிக்கொடுத்த அந்த முகத்திலிருந்து விழிகளை அகற்ற முடியவில்லை அவளால்.
“பப்பா! தூக்குங்கோ!” என்று கைகளை மேலே தூக்கிக்கொண்டு குதித்த மகனின் குரலில், தன் மயக்கத்தில் இருந்து சட்டென விடுபட்டாள் மித்ரா.
நீள்சதுர மேசையில் அந்தப்பக்கம் இரண்டு, இந்தப்பக்கம் இரண்டு என்று போடப்பட்டிருந்த நாற்காலிகளில் ஒரு பக்கத்தில் மகனை உள்ளே விட்டுக் கரையோரமாக மித்ரா அமர்ந்திருந்தாள்.
சந்துவை தூக்க வந்த கீர்த்தனன், மித்ராவின் அருகில் நன்றாக நெருங்கினால் மட்டுமே அது முடியும் என்று தெரிந்ததில், அவளை நெருங்கப் பிடிக்காமல் தேங்கி நின்றான்.
அப்போதும் தகப்பனை தூக்கச் சொல்லி சந்து கேட்க, இன்னும் இவன் ஏன் தூக்காமல் நிற்கிறான் என்று கீர்த்தனனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு நொடியில் விஷயம் விளங்கியது.
அவள் அருகே வரக்கூடப் பிடிக்கவில்லையாமா? முகமும் மனமும் சுருண்டுவிட, மகனைத் தூக்கி அவனிடம் கொடுத்தாள்.
“சந்துகுட்டி சாப்பிட வந்தாங்களா? என்ன சாப்பிட்டாங்க?” அவளிடமிருந்து வாங்கிக்கொண்ட மகனிடம் கொஞ்சத் துவங்க, அந்த அழகை பார்த்து ரசிக்க மனம் ஏங்கினாலும், பசியில் சாப்பிடத்தானே அவனும் அங்கே வந்திருப்பான் என்று உணவு வாங்கச் சென்றாள்.


