ஏன் இப்படி எல்லோரும் அவளை வெறுத்து ஒதுக்குகிறார்கள்? அவள் செய்த பாவம் தான் என்ன? பிறப்பிலேயே சாபத்தையும் பாவத்தையும் பரிசாக வாங்கி வந்தாளோ என்று நினைத்தவளுக்கு, அன்று தன்னுடைய பதின்நான்காவது வயதில் ஆசையோடு தாய் வீட்டுக்குச் சென்றதும் அங்கு நடந்தவைகளும் அழையா விருந்தாளியாக நினைவுகளில் வலம் வந்தன.
அன்று மரியாவிடம் கேட்டு, அவர் மூலம் திருமதி லீசாவோடு கதைத்து, அவர் அவளின் பெற்றவர்களோடு பேசி சம்மதம் வாங்கி இலையுதிர் காலத்துக்கான இரண்டு வாரங்களையும் தாய் வீட்டில் நீ கழிக்கலாம் என்று சொன்னபோது அவள் துள்ளிய துள்ளலுக்கு அளவே இல்லை.
ஜெர்மனியில் பதின்மூன்று வயதில் இருந்து, பிள்ளைகள் பள்ளிக்கூட விடுமுறைகளின் போது அவர்களின் கைச்செலவுகளுக்காக வேலை செய்வதற்கு அனுமதி உண்டு. தொழிற்சாலைகளும், நிறுவனங்களும் கூட விடுமுறைகளின் போது மாணவ மாணவியருக்கே முன்னுரிமை வழங்கும்.
அப்படிக் கடந்த ஒரு வருடமாக விடுமுறைகளின்போது வேலை செய்ததில் கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு நீக்கோவோடு கடைவீதிகளுக்குச் சென்றவள் அங்கிருந்த அத்தனை கடைகளுக்கும் ஏறி இறங்கினாள்.
“ஏதாவது வாங்க வந்தாயா? இல்லை இப்படி எல்லாக் கடைகளையும் அளக்க வந்தாயா?” என்று கேலியோடு பலமுறை நீக்கோ கேட்டும், சளைக்காது கடைகளை அலசி ஆராய்ந்தவளுக்குத் தம்பிக்கும் தங்கைக்கும் பொருத்தமான பொருள்தான் கிடைக்க மாட்டேன் என்றது.
பின்னே, ஒன்றிரண்டு நூறுகளில் பணத்தைக் கையில் வைத்துக்கொண்டு ‘பிஎஸ்பி’ அல்லது ‘ப்ளே ஸ்டேஷன்’ போன்றவைகளை வாங்க ஆசைப்பட்டாள் முடியுமா? அடுத்தவருடம் உழைத்து இதில் ஒவ்வொன்றாக வாங்கிக் கொடுக்கவேண்டும் என்று நினைத்தவள் கடைசியாக, “கூலிங்கிளாஸ் சத்திக்கு பிடிக்கும் நீக்கோ.” என்று, அவனுக்கு அதை வாங்கினாள்.
“வித்தி அம்மாவின் ‘ஹான்ட் பாக்’கை பார்த்து ஆசைப்படுவாள்.” என்று அவளுக்கு ரோசா வண்ணத்திலான ‘ஹெலோ கிட்டி’ கைப்பை ஒன்றையும் வாங்கிக்கொண்டாள். மீதியாக இருந்த பணத்தில், “இது உனக்கு.” என்று சொல்லி ஒரு கைக்கடிகாரத்தை நீக்கோவுக்காக வாங்கினாள்.
தனக்காக அவள் எதையும் வாங்கிக் கொள்ளவில்லையே என்று உள்ளூர வியந்தபோதும், “எனக்கு எதுக்கு ஏஞ்சல்? என்னிடம்தான் இருக்கிறதே.” என்றான் நீக்கோ.
“ஏன்.. இது உன்னிடம் இருப்பதை விட விலை குறைவானது என்று பிடிக்கவில்லையா நீக்கோ? என்னிடம் இருந்த காசுக்கு இதைத்தான் வாங்க முடிந்தது. பிறகு.. நான் நன்றாக உழைக்கும் காலத்தில் உனக்கு நல்ல மணிக்கூடு வாங்கித் தருகிறேன். இப்போது இதை வைத்துக்கொள்கிறாயா?” என்று தலையைச் சரித்துக் கெஞ்சலாகக் கேட்டாள் மித்ரா.
“ஹேய் ஏஞ்சல்! இதை விலைகுறைவு என்றோ பிடிக்கவில்லை என்றோ நான் சொன்னேனா? உனக்கு எதுவும் வாங்காமல் எனக்கு வாங்குகிறாயே என்றுதான் சொன்னேன். மற்றும்படி எனக்கு இது பிடித்திருக்கிறது.” என்றவன் அன்போடு அவளை அணைத்துக்கொண்டான்.
“எனக்கு எதுவும் தேவையில்லை நீக்கோ.” என்றவள், “உனக்குப் பிடித்திருக்கிறது என்றால் இதை நீ இப்போதே கட்டிக்கொள்ளேன்.” என்றாள் ஆவலோடு.
“ம்.. தா!” புன்னகையோடு அதை வாங்க கையை நீட்டினான் அவன்.
“நீ கையைக் காட்டு நானே கட்டிவிடுகிறேன்.” என்றவள், அவளே அவனதை கழட்டிவிட்டு தன்னதைக் கட்டிவிட்டாள்.
அவன் கையைச் சற்றே தள்ளிப் பிடித்துப் பார்த்து, “உன் வெள்ளை நிறக் கைக்குக் கறுப்பு பார் மணிக்கூடு மிகவும் எடுப்பாக இருக்கிறது நீக்கோ.” என்றாள் குதூகலமான குரலில்.
“ம்ம்.. எனக்கும் என் தோழி தந்த பரிசை மிகவும் பிடித்திருக்கிறது.” என்றான் அவன் அவள் தோளை சுற்றிக் கையைப் போட்டுக்கொண்டு.
“மெய்யாகவா?” என்று கேட்டவளுக்கு மிகுந்த சந்தோசம்.
“சத்திக்கும் வித்திக்கும் கூட இதெல்லாம் பிடிக்கும்.” என்று கையில் இருந்தவைகளைக் காட்டி சொன்னவள், “அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தான் ஒன்றும் வாங்கவில்லை. அடுத்தமுறை காசு சேர்த்து அவர்களுக்கும் ஏதாவது வாங்கவேண்டும்.” என்றாள் அவனிடம் தன்பாட்டுக்கு.
அவளை ஆச்சரியமாகப் பார்த்தான் நீக்கோ. “உனக்கு உன் அப்பா மீது கோபம் இல்லையா ஏஞ்சல்? அவர் உனக்கு அடித்தாரே..”
“இல்லையே! எனக்கு அவர்மீது எந்தக் கோபமும் இல்லை. அவர்களோடு இருக்க முடியவில்லையே என்கிற கவலைதான் இருக்கிறது.” என்றவளை புரிந்துகொள்ள முடியாமல் பார்த்தான் நீக்கோ.
“இனி அந்தக் கவலையும் இல்லை. அதுதான் அவர்களைப் பார்க்கப் போகிறேனே..”
“அப்போ என்னைவிட்டுப் போவதில் சந்தோசமாக இருக்கிறாய் போல..”
“ப்ச்! அது ஒன்றுதான் இப்போது என் கவலை. பேசாமல் நீயும் என்னோடு வாயேன். நாம் ஒன்றாகவே போய்விட்டு ஒன்றாகவே வரலாம்.” என்று குவளைமலர் விழிகளில் ஆர்வம் மின்னக் கேட்டாள் அவள்.
“பொய் சொல்லாதே ஏஞ்சல். இப்போது நான் அப்படிக் கேட்டதும் தானே இப்படிச் சொல்கிறாய்.” என்று மேலும் சீண்டினான் அவன்.
“இல்லை. மெய்…” என்று தீவிரமாகச் சொல்லிக்கொண்டு வந்தவள், அவனது நீலக் கருமணிகள் கொண்ட விழிகளில் தெரிந்த குறும்பைக் கண்டுவிட்டு, கலீரென நகைத்தாள்
“டேய் உருளைக்கிழங்கு வாயா! உன்னால் என்னைக் கேலி செய்யாமல் இருக்க முடியாதா?” என்றவள், அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் இருந்தவனின் தலையில் எம்பிக் குதித்துக் குட்டிவிட்டு அங்கிருந்து ஓடினாள்.
தமிழர்களுக்கு அரிசி எப்படிப் பிரதான உணவோ அப்படி ஜெர்மனியருக்கு உருளைக்கிழங்கு பிரதான உணவு. அவனுக்கு உருளைக்கிழங்கு களி மிகவும் பிடிக்கும் என்பதால் அப்படிச் சொல்லி கேலி செய்வாள் மித்ரா.
இன்றும் அதையே செய்ய, “ஹேய்! அப்படி என்னைக் கூப்பிடாதே என்று எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்.” என்றவன் அவளைத் துரத்தத் தொடங்கினான்.
இருவரும் வீடு வந்துதான் தங்களின் ஓட்டத்தை நிறுத்தினர். ஓடிவந்ததில் முடியாமல் முழங்கால்களில் கைகளை ஊன்றியபடி மித்ரா நிமிர்ந்து பார்க்க, இடுப்பில் கைகள் இரண்டையும் கொடுத்து மூச்சு வாங்கியபடி நின்றுகொண்டிருந்தான் அவன். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க நின்ற இருவருக்கும் மற்றவரைப் பார்க்கச் சிரிப்புத்தான் வந்தது. வாய்விட்டுச் சிரித்தவர்களுக்கு எதற்காக இப்படி ஓடிவந்தார்கள் என்பதே மறந்து போயிற்று!
அடுத்தநாள் காலை, திருமதி லீசாவோடு தாய் வீட்டுக்கு பெரும் ஆவல் பொங்க புறப்பட்டுச் சென்றாள் மித்ரா. அங்கே அழைப்பு மணியை அழுத்திவிட்டுக் காத்திருந்தவள், வீட்டின் கதவைத் திறந்த அன்னையைக் கண்டதும் முகம் பூவாய் மலர, “அம்மா..!” என்று பாய்ந்து கட்டிக்கொண்டாள்.


