அன்னையின் தேகத்தின் கதகதப்பை, அவரின் அருகாமையை இரண்டு வருடங்கள் கழித்து அனுபவித்தவளின் தேகத்தில் சிலிர்ப்பு ஓடிமறைய, கண்களில் நீர் தளும்பியது. எவ்வளவு நாட்களாயிற்று இப்படி அம்மாவின் வாசம் பிடித்து?!
தன்னால் இயன்றவரை இறுக்கியணைத்துக் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் பதித்துவிட்டு அவரைப் பார்த்துச் சிரித்தாள். அவளைப்போன்று மகிழ்ச்சியோடு வரவேற்க முடியாமல் சங்கடத்தில் நெளிந்தார் ஈஸ்வரி. பார்வை வேறு அங்கே முகம் இறுக அமர்ந்திருந்த கணவரிடம் பயத்தோடு பாய்ந்து மீண்டது.
தன் வரவை அம்மாவும் அப்பாவும் விரும்பவில்லை என்பதை அறியாதவளோ ஆசையோடு அவர் முகத்தையே பார்த்து, “என்னம்மா இப்படி மெலிந்து போனீர்களே? சாப்பிடவே மாட்டீர்களா?” என்று அக்கறையும் பாசமுமாக அவரின் கன்னம் வருடிக் கேட்டாள்.
இந்த இரண்டு வருடங்களில் தன்னளவு உயரத்துக்கு வளர்ந்துவிட்ட மகளை மெல்லத் தன்னிடம் இருந்து பிரித்தபடி, “நான் நன்றாகத்தான் இருக்கிறேன்.” என்றவர், திருமதி லீசாவை, “உள்ளே வாருங்கள்.” என்கிறார் சம்பிரதாயமாக.
மித்ராவின் மகிழ்ச்சியை ரசித்தபடி உள்ளே வந்தவரும், “ஏற்கனவே சொன்னதுபோல இரண்டு வாரங்களுக்கு இங்கே இருப்பாள் மித்ரா. பிறகு நானே வந்து அழைத்துப் போகிறேன்.” என்று சொன்னார்.
அப்போதும், வேகமாகக் கணவரிடம் பார்வை சென்றுமீள,“ம்.. சரி.” என்றார் ஈஸ்வரி.
“இப்போது உனக்குச் சந்தோசம் தானே மித்ரா?” என்று கேட்டவரிடம், “மகவும் சந்தோசமாக இருக்கிறேன். அதற்கு நீங்கள் தான் காரணம். மிகவும் நன்றி திருமதி லீசா.”என்றாள் மகிழ்ச்சி பொங்க.
“சரி. அப்போ நான் கிளம்பட்டுமா?” என்று விடைபெற்றார் அவர்.
சண்முகலிங்கத்தின் முக இறுக்கம் ஒரு தயக்கத்தைத் தந்த போதிலும், அவரைப் பார்த்து, “நன்றாக இருக்கிறீர்களா அ..” என்று கேட்டாள் மித்ரா.
அவரோ அவள் முகத்தையும் பாராது சடாரென்று எழுந்து அறைக்குள் சென்று மறைந்தார். சற்றே மனம் சுணங்கிப் போனாலும் இரண்டு வருடம் கழித்து வந்தவளின் உற்சாகம் குறையவில்லை.
“எங்கேம்மா சத்தியும் வித்தியும்? நான் வருவேன் என்று அவர்களுக்குத் தெரியாதா?” என்று, கண்களால் வீட்டை அலசிக்கொண்டே கேட்டாள்.
அப்படித் தெரிந்திருக்க அவள் வந்து இவ்வளவு நேரமாகியும் எந்தச் சத்தமும் இல்லாமல் இருக்கமாட்டார்களே.
“உள்ளே படித்துக்கொண்டு இருக்கிறார்கள்.” என்று மெல்ல முணுமுணுத்தார் ஈஸ்வரி.
“இப்போது அவர்களுக்கும் விடுமுறை தானே. பிறகும் ஏன் படிக்கிறார்கள்?” என்று கேட்டவள், அன்னையின் பதிலுக்காகக் காத்திராமல் தம்பி தங்கையின் அறைக்குச் சென்றாள்.
அங்கே, மேசையில் புத்தகம் பெயருக்கு விரிக்கப்பட்டிருக்க, அதன் முன்னால் அமர்ந்திருந்த இருவரும் வாசலை பார்ப்பதும் பிறகு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதுமாக இருந்தனர்.
உள்ளே நுழைந்த மித்ராவை கண்ட நொடியில் தந்தை கண்டிப்புடன் பலதடவைகள் சொன்ன அனைத்தும் மறக்க, “அக்கா!” என்று கூவியபடி, வில்லிருந்து புறப்பட்ட அம்பாய் ஓடிவந்து அவளைக் கட்டிக்கொண்டனர் இருவரும்.
“வித்திக்குட்டி..! எப்படி இருக்கிறாய்? நன்றாக வளர்ந்துவிட்டாயே. சத்தி நீயும் தான்டா.” என்றபடி தானும் அவர்களை அணைத்துக்கொண்டாள்.
“நீயும் உயரமாக வளர்ந்துவிட்டாயே அக்கா..” என்றும், “நீயும் தான் வித்தி. சத்தியும் உயர்ந்துவிட்டான். நீயும் மெலிந்து உயர்ந்துவிட்டாய்.” என்றும், அந்த இரண்டு வருடத்தில் அவர்களின் வளர்ச்சியை ஆச்சரியத்தோடு பரிமாறிக்கொண்டனர் மூவரும்.
அப்படியே சற்று நேரம் கழிந்துவிட, சத்யனையும் வித்யாவையும் தன் இருபக்கமும் இருத்திக்கொண்டு கட்டிலில் அமர்ந்திருந்தாள் மித்ரா. அவர்கள் மூவரின் முகத்திலும் பெரும் மகிழ்ச்சி.
“அக்கா, ஏன்கா நீங்கள் இவ்வளவு நாளும் இங்கே வரவே இல்லை?” என வித்தி கேட்க,
“கொஞ்சம் மெல்லக் கதை வித்தி. அப்பாவின் காதில் கேட்டுவிடப் போகிறது.” என்று கண்டித்தான் சத்யன்.
“கேட்டால் என்ன?” என்று புரியாமல் புருவம் சுருக்கியவளிடம், “நீ வந்தால் உன்னோடு கதைக்கக் கூடாது, விளையாடக் கூடாது என்று கோபமாகச் சொன்னாரக்கா அப்பா. இல்லாவிட்டால் அடிப்பாராம். அம்மாவுக்கும் சொன்னார்.” என்றாள் சின்னவள்.
அதைக் கேட்டவளின் பூமுகம் வாடியது. அவ்வளவு நேரமும் அவர்களைக் கண்ட மகிழ்ச்சியில் திளைத்தவள் அப்போதுதான் தான் வந்ததில் இருந்து நடந்தவைகளை அசைபோட்டுப் பார்த்தாள். தாயின் முகத்தில் தெரியாத மலர்ச்சியும், தந்தையின் இறுக்கமும், வாசலுக்கு ஓடிவந்து வரவேற்காத தம்பி தங்கையும் என்று மனக்கண்ணில் அனைத்தும் வலம் வந்துபோக, அந்த வீட்டுக்கு தான் அழையா விருந்தாளி என்பது அப்போதுதான் புரிந்தது அந்தச் சின்ன மலருக்கு.
புரிந்த நொடியில் அதுவரை இருந்த துள்ளல், அவளுக்குள் குமிழியிட்டுக் கொண்டிருந்த மலர்ச்சி அனைத்தும் கருக அழுகை வரும்போல் இருந்தது.
‘இல்லை! நான் பெரிய பெண். அழக்கூடாது!’ என்று தன்னைத் தேற்றிக்கொண்டு, “நா…ன் வந்தது உ..ங்களுக்கும் பி..டிக்கவில்லையா?” என்று சகோதரர்களிடம் திணறலோடு கேட்டாள்.
அதை அவள் கேட்டு முடிக்க முதலே,”அப்படி சொல்லாதேக்கா.” என்று இருவரும் அவளைப் பாய்ந்து கட்டிக்கொண்டனர். புண்பட்ட நெஞ்சுக்கு அவர்களின் பாசம் மருந்து தடவ, சோகத்தோடு புன்னகைத்தாள் மித்ரா.
“நீ இல்லாமல் இங்கே ஒன்றுமே எனக்குப் பிடிக்கவில்லை அக்கா. அம்மா எங்களைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிவிட்டு வேலைக்குப் போய்விடுவார். பின்னேரம் நானும் அண்ணாவும் தனியாகத்தான் வீட்டுக்கு வருவோம். இரவு வரைக்கும் தனியாகத்தான் இருப்போம். எனக்குப் பயம்மா இருக்கும். அதைச் சொன்னால் அண்ணா திட்டுவான் அக்கா. சில நேரங்களில் சாப்பிடாமலேயே நான் தூங்கிவிடுவேன்.” என்று, அந்த இரண்டு வருட காலக் கதைகளை எல்லாம் சொன்னாள் வித்யா.
தானாக எதையும் வாயை திறந்து சொல்லாதபோதும் வித்தியின் பேச்சுக்கு மறுப்போ, அப்படியில்லை என்றோ சத்யனும் சொல்லவில்லை.
அவர்கள் இருவரினதும் முகத்தில் தெரிந்த வாடலும், உடலில் தெரிந்த மெலிவும் கூட உண்மையைப் பறைசாற்ற, அப்படியே அதிர்ந்துபோயிருந்தாள் மித்ரா.
இரண்டு வருடங்கள் கழித்து வந்திருப்பவளிடம், இவ்வளவு நாளும் எப்படி இருந்தாய்? என்ன செய்கிறாய்? என்று ஒரு வரத்தை அம்மா கேட்கவில்லையே. அந்தச் சின்ன இதயத்துக்குள் சுருக்கென்று வலித்தது.


