தன் மனதை அவர்களுக்குக் காட்டிக்கொள்ளாமல், அவள் வாங்கிவந்த பொருட்களை இருவரிடமும் கொடுத்துவிட்டு, “அம்மாவை பார்த்துவிட்டு வருகிறேன்.” என்றபடி எழுந்து தாயை தேடிச் சென்றாள்.
அங்கே, சமையலறையில் நின்ற தாயிடம் அடிக்குரலில் சீறும் தந்தையின் குரல் கேட்டது.
“என்னை வீட்டைவிட்டு துரத்தியவள் இப்போது எதற்கு என் வீட்டுக்கு வந்திருக்கிறாளாம்?” அவள் வரப்போகிறாள் என்று தெரிந்த நாளில் இருந்து இதே கேள்வியைக் கேட்டுக்கேட்டே ஈஸ்வரியை வார்த்தைகளால் கடித்துக் குதறிக்கொண்டு இருந்தார் சண்முகலிங்கம்.
“ரெண்டு வாரத்துக்குத் தானேப்பா. கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்களேன்.”
“நான் ஏனடி பொறுக்க வேண்டும்?”
இதற்கு என்ன பதிலைச் சொல்ல முடியும்? அமைதியாக அவர் நிற்க, “முதலில் நீ எதற்கு இவள் வருவதற்குச் சம்மதித்தாய்? முடியாது என்று சொல்லியிருக்க வேண்டியதுதானே.” என்று உறுமினார்.
“அந்த லீசா இரண்டு வாரத்துக்குத் தானே என்று கேட்டபோது மறுக்க முடியவில்லை. இல்லையானால் வேண்டாம் என்று சொல்லியிருப்பேன்.” என்று அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்த மித்ராவின் சின்ன உள்ளம் பயங்கரமாகக் காயப் பட்டது.
“சனியன் தொலைந்தது என்று நிம்மதியாக இருந்தால் திரும்பவும் வந்து நிற்கிறது. ஆனால், அவள் வந்திருக்கிறாள் என்று நீ துள்ளினாயோ உன்னை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவேன்! பிறகு மூன்று பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு நடுத்தெருவில் தான் நிற்பாய். நிற்க வைப்பேன்.” என்று சீறிவிட்டு அவர் வெளியே வரும் அரவம் கேட்கவும், அருகிலிருந்த குளியலறைக்குள் புகுந்துகொண்டவளின் விழிகளில் கண்ணீர்.
சமையலறை வாசலில் நின்று, “இங்கே இருக்கும் வரைக்கும் அவள் என் முன்னால் வரக்கூடாது! சொல்லிவை!” என்று உறுமிவிட்டே சென்றார் அவர்.
வெடிக்கும் போலிருந்த அழுகையை அடக்கி தன்னைச் சமனப் படுத்திக்கொள்ள அவளுக்குச் சற்று நேரம் தேவைப்பட்டது. விரல்கள் கொண்டு விழியோரங்களைத் துடைத்துக்கொண்டு திரும்பவும் தாயிடம் சென்றாள்.
“அம்மா…!”
அவளைத் திரும்பிப் பார்த்தவரின் விழிகளில் ஒரு எச்சரிக்கை உணர்வும் கவனமும் தோன்ற, விக்கித்து நின்றாள் மித்ரா.
“என்னை ஏன்மா நீங்கள் தேடி வரவில்லை? நீங்கள் வருவீர்கள் என்று பலநாட்கள் காத்து இருந்தேனே அம்மா..” என்று துக்கத்தோடு அவள் கேட்டபோது பதிலற்று சிலையாகி நின்றார் ஈஸ்வரி.
“என்னை மறந்தே போனீர்களாம்மா?”
அவ்வளவாக விவரம் தெரியாத சின்னப்பெண் இல்லையா, மறைக்கத் தெரியாமல் நேரடியாகக் கேட்டாள். வேகமாகத் தன்னைச் சமாளித்துக்கொண்டு, “அப்படி எதுவுமில்லை.” என்றார் ஈஸ்வரி சுருக்கமாக.
“பிறகு ஏனம்மா எப்படி இருக்கிறாய் என்று ஒருவார்த்தை நீங்கள் என்னிடம் கேட்கவில்லை?”
ஒருவித திகைப்போடு மகளைப் பார்த்தவர், “அதுதான் பார்த்தாலே தெரிகிறதே, நன்றாக வளர்ந்து இருக்கிறாய் என்று.” என்றார்.
வயதுக்கு ஏற்ற வளர்ச்சி என்பது உடலில் தானாக நிகழும் நிகழ்வு. அதை வைத்தே நன்றாக இருக்கிறாள் என்று கணிக்க இயலுமா? அவள் மனதில் இருக்கும் அம்மா பாசம் அவர் மனதில் மகள் மேல் இல்லையா? அவரைப் பார்க்கவேண்டும், அவரோடு கதைக்க வேண்டும், அவர் மடியில் உறங்க வேண்டும், ஏன் அம்மா சமைக்கும் காரமான சமையலை சாப்பிடவேண்டும் என்கிற ஏக்கம் எல்லாம் அவளுக்கு இருக்கிறதே.. இப்படியெல்லாம் அவருக்கு இல்லையா?
மனதில் வலி எழுந்தாலும், “நீங்கள் வேலைக்குப் போகிறீர்களாமே, ஏன் அம்மா?” என்று கேட்டாள்.
உயரத்தால் வளர்ந்த பெண்ணாய் நின்ற மகள் தன்னால் பதில் சொல்ல முடியாக் கேள்விகளைக் கேட்டு இன்னுமின்னும் சங்கடத்திலும் குற்ற உணர்ச்சியிலும் தள்ளுவதைத் தாங்க முடியாமல், “என்ன ஏனம்மா? நீ பாட்டுக்கு போலிசுக்கு சொல்லிவிட்டு போய்விட்டாய். அப்பாவையும் வீட்டுக்குள் விடமாட்டோம் என்றுவிட்டார்கள். அதன்பிறகு எங்களின் நிலை என்ன என்று யோசித்தாயா? உன் தம்பி தங்கைகளைப் பார்த்துக்கொள்வதற்குக் காசு வேண்டாமா?” என்று சிடுசிடுத்து அவள்மீதே தன் கோபத்தைக் காட்டினார் ஈஸ்வரி.
பதில் சொல்ல இயலாமல் திகைத்துப்போய் நின்றவளிடம், “உன்னைக் கையெடுத்து கும்பிட்டுக் கேட்கிறேன், இந்த இரண்டு வாரங்களும் எந்தப் பிரச்சனையும் செய்யாமல் இருந்துவிட்டு போ. இருக்கிற என் நிம்மதியை திரும்பவும் தொலைத்துக் காட்டிவிடாதே!” என்றார் ஈஸ்வரி.
மளுக்கென்று நிறைந்துவிட்ட கண்ணீரோடு பரிதாபமாகத் தாயை பார்த்து விழித்தாள் மித்ரா. அவரையும் அந்தப் பார்வை தாக்கியதோ என்னவோ, வேகமாக முகத்தைத் திருப்பிக்கொண்டார்.
அதற்குமேல் எதுவும் கேட்காமல் அறைக்குள் சென்றவளுக்கு, தம்பி தங்கையின் பேச்சுக்கள் காதில் விழவே இல்லை. தாயின் பேச்சே அவளுக்குள் நின்று வதைத்தது.
அதன் பிறகான நாட்களில் தந்தையின் முன்னால் அவள் செல்லவே இல்லை. தாயின் அருகாமைக்கும் அன்புக்கும், அவர்கையால் கிடைக்கும் ஒருபிடி சோற்றுக்கும் மனமும் உடலும் ஏங்கினாலும் அவரை நெருங்கவில்லை மித்ரா.
தனக்குள்ளேயே ஒடுங்கிப்போனவள் முடிந்தவரை தம்பி தங்கையை மட்டும் நன்றாகப் பார்த்துக்கொண்டாள். அது அவளுக்குச் சிரமமாகவும் இருக்கவில்லை.
அவள் வந்த அன்று, திருமதி லீசாவுக்குப் பதில் சொல்லவேண்டுமே என்று பயந்து விடுமுறை எடுத்துக்கொண்டு நின்ற சண்முகலிங்கமும் ஈஸ்வரியும் அடுத்த நாளில் இருந்து வேலைக்குச் சென்றுவிட, இவர்கள் மூவருமே வீட்டில் இருந்தனர்.
சமையல் தெரியாதபோதும், தனக்குத் தெரிந்த வகையில் எதையாவது செய்தோ, அல்லது அன்னை சமைத்துவைத்த உணவை கொடுத்தோ என்று சத்யனையும் வித்யாவையும் வயிறு வாடாமல் பார்த்துக்கொண்டாள். படிப்பிலும் அவர்கள் மிக மிக மோசமாக இருப்பதைக் கண்டு அதிர்ந்தவள், அதையும் சொல்லிக்கொடுத்தாள்.
இதெல்லாம் இந்த இரண்டு வாரத்துக்குத் தானே என்று மருகியவளுக்கு, அதன்பிறகு பழையபடி அவர்கள் பசியாலும் சரியான கவனிப்பும் இன்றி வாடுவார்களே என்று நினைக்க நினைக்க வேதனையாக இருந்தது.
போதாக்குறைக்கு, அன்று அவள் ஊட்டிவிட்ட உணவை உண்டுவிட்டு அவளின் மடியில் படுத்துக்கொண்ட வித்தி, “எங்களுடனேயே இருந்துவிடுங்களேன் அக்கா. இல்லை என்றால் திரும்பவும் நானும் அண்ணாவும் தனியாகத்தான் இருப்போம். இப்படிச் சாப்பாடு தரவும் யாரும் இருக்க மாட்டார்கள். அம்மா வீட்டில் நின்றாலும் எப்போது பார்த்தாலும் திட்டிக்கொண்டே இருப்பார். கேட்டால் வேலைக்குப் போய்வந்த களை என்பார்.” என்று சொன்னபோது அழுகை வரும்போல் இருந்தது அவளுக்கு.
கேள்வியோடு சத்யனைப் பார்த்தாள். விளையாட்டுக் குணம் எல்லாம் மறைந்து, உற்சாகம் என்பது மருந்துக்குமின்றி எப்போதும் அமைதியாக இருக்கும் அவன் வேறு அவள் மனதை பிசைய வைத்தான்.
தமக்கையின் பார்வை உணர்ந்து, “அப்படித் திரும்ப உன்னை இங்கேயே இருக்க விடுவார்களா அக்கா?” என்று சாதரணமாகக் கேட்க முயன்றவனின் குரலில் இருந்த ஏக்கம், அங்கேயே இருந்தால் என்ன என்று அவளை யோசிக்க வைத்தது.


