ஆனால், அது அவள் கையில் மட்டும் இல்லையே! திருமதி லீசாவை கேட்கவேண்டும். அவர் சம்மதித்தால் அம்மா அப்பா சம்மதிக்க வேண்டும். அவர்கள் சம்மதிப்பார்களா? இல்லை என்றே மனம் சொன்னது.
“தெரியவில்லை சத்தி. திருமதி லீசவிடம் கேட்டுத்தான் பார்க்கவேண்டும்.”
“கேட்கிறாயா?” விழிகளில் ஆர்வம் மின்ன கேட்டவனின் தலையைக் கோதி விட்டவள், “ம்.. கேட்கிறேன்.” என்றாள்.
அவள் மாடியிலிருந்து துள்ளி எழுந்து, “இப்போதே கேட்போமா?” என்று ஆர்வத்தோடு கேட்டாள் வித்யா.
“ஷ்! மெல்லப் பேசு! வெளியே அம்மாவும் அப்பாவும் இருக்கிறார்கள். நாளைக்கு அவர்கள் வேலைக்குப் போனதும் கேட்போம்.” என்று அவளை அடக்கினாள் மித்ரா.
பெற்றவர்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டாலும், அவள் தொடர்ந்து அங்கேயே இருப்பதில் அவர்களுக்குப் பிடிப்பில்லை என்பதை அறிந்துகொண்டாலும் தாய் கோழியின் சிறகுக்குள் புகுந்துகொள்ளவே அந்தச் சின்னப் பறவையின் மனதும் ஆசை கொண்டது.
அடுத்தநாள் அவர்கள் இருவரும் வேலைக்குச் சென்ற பிறகு திருமதி லீசாவுக்கு அழைத்து, தன் விருப்பத்தைச் சொன்னாள் மித்ரா. அதைக் கேட்டுக்கொண்டவர், “உன் அம்மாவும் அப்பாவும் இதற்கு உடன்படுவார்களா?” என்று கேட்டார்.
“அதை நீங்கள் தான் கேட்டுச் சொல்லவேண்டும்.”
அந்தப் பதிலே அவள் அவர்களோடு இதைப்பற்றி இன்னும் பேசவில்லை என்பதையும், அவர்களும் அங்கேயே தங்கிவிடும்படி அவளிடம் கேட்கவில்லை என்பதையும் அவருக்கு உணர்த்தியது.
ஒரு சிறு பெண்ணாக அவளின் பிறந்தவீட்டுப் பாசத்தை, ஏக்கத்தைப் புரிந்துகொண்டவருக்கு, அதே பாசம் அவளின் தாய்க்கு இல்லையே என்று எண்ணிக் சற்றுக் கோபம் கூட வந்தது.
அது இருந்திருக்க அவளுக்கு முதல் அவர் அல்லவா அவருக்கு அழைத்து என் மகளை என்னோடு இருக்க விடுங்களேன் என்று கேட்டிருக்க வேண்டும்! அவர் மறுத்தாலும் கெஞ்சியிருக்க வேண்டும்!
பெற்றவர்களின் விருப்பமின்மையை உணராது கேட்பவளிடம் இதையெல்லாம் உரைக்க மனமில்லாது, “நான் எதற்கும் இங்கே மற்றவர்களிடம் கலந்து பேசிவிட்டு உன்னிடம் சொல்கிறேன்.” என்றவர், அவள் என்ன செய்தாள்? வீட்டில் என்னவெல்லாம் நடந்தது என்று மேலோட்டமாக விசாரித்து, பிரச்சனைகள் எதுவுமில்லை என்பதை அறிந்துகொண்டு வைத்தார்.
“என்னவாம் அக்கா?” அவள் கதைத்து முடிக்கும்வரை காத்துக்கொண்டு இருந்த இருவரும் ஆர்வத்தோடு கேட்க, அவர் சொன்னதைச் சொன்னாள்.
“எப்போக்கா பதில் சொல்வார்?”
“எனக்குத் தெரியாதே சத்தி.”
“ப்ச்!என்னக்கா நீ. அதைத்தானே முதலில் கேட்டு இருக்கவேண்டும்.” என்று சலித்தான் சத்யன்.
தெரிந்துவிட்டால் இப்போதே சந்தோசமாக இருக்கலாமே என்பது அவனுக்கு.
“சரிடா விடு. விடுமுறை முடிய இன்னும் மூன்று நாட்கள் தானே இருக்கிறது. எப்படியும் அதற்கிடையில் சொல்வார்.” என்று அவர்களைச் சமாளித்தாள் மித்ரா.
மனமோ அதற்கிடையில் இரண்டு வாரம் ஓடிவிட்டதே என்று எண்ணிக் கலங்கியது. அடுத்துவந்த இரண்டு நாட்களும் எதிர்பார்ப்போடு கழிந்ததே தவிர அவர்கள் எதிர்பார்த்த அழைப்பு வரவே இல்லை.
மூன்றாவது நாளும் அந்தப் பிஞ்சுகளின் மனதில் கலக்கத்தை விதைத்தபடி விடிந்தது. தன் உடமைகளை மீண்டும் பெட்டியில் அடுக்கக் கூடப் பிடிக்காமல் மித்ரா காத்திருக்க, அழைத்தார் திருமதி லீசா.
“ஹாய் மித்ரா. எப்படி இருக்கிறாய்?”
“நன்றாக இருக்கிறேன்.” என்றவள், “நான் இங்கேயே இருக்கலாமா?” என்று ஆவல் தாங்கமாட்டாமல் கேட்டாள்.
“அது… இப்போதைக்கு முடியும்போல் தோன்றவில்லை மித்ரா.” என்று அவர் சொல்லி முடிக்க முதலே, “எனக்கு இங்கே ஒரு பிரச்சனையும் இல்லை. என்னை அம்மாவும் அப்பாவும் மிக நன்றாகப் பார்த்துக் கொள்கிறார்கள். அதனால் நீங்கள் பயப்படத் தேவையில்லை. நான் இங்கேயே இருக்கிறேனே. தயவுசெய்து மறுக்காதீர்கள் திருமதி லீசா. எனக்கு என் அம்மா அப்பா, தம்பி தங்கையோடு இருக்கத்தான் பிடித்திருக்கிறது.” என்று அவசரமாகக் கெஞ்சலாகச் சொன்னாள் மித்ரா.
உணர்வுகளை மறைத்து எல்லோரோடும் உத்தியோக பூர்வக் குரலில் பேசிப் பழகிய, அனுபவம் வாய்ந்த அந்தப் பெண்மணிக்குக் கூடத் தொண்டை அடைத்தது. ஒருவாறாகத் தன்னைச் சமாளித்துக் கொண்டு, “நான் சொல்வதை நீ கவனமாகக் கேட்கவேண்டும் மித்ரா.” என்றுவிட்டுத் தொடர்ந்தார்.
“எனக்கோ, குழந்தைகள் மையத்துக்கோ நீ உன் வீட்டில் இருப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், உன் அம்மாதான் நீ அங்கே இருந்தால் திரும்பவும் பிரச்சனை வந்துவிடுமோ என்று பயப்படுகிறார். அவருக்குத்தான் இதில் விருப்பம் இல்லை. அதனால் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு நீ மரியா வீட்டில் இரு. விடுமுறைகளின்போது, இப்போது வந்ததுபோலத் திரும்பவும் வீட்டுக்கு வரலாம். பிறகு உன் அம்மாவின் மனதும் மாறிவிடும்.” என்று அவர் சொன்னபோது, அதற்கு என்ன சொல்லவேண்டும் என்பதுகூடத் தெரியாமல் அந்தப் பிஞ்சு நெஞ்சு துடிக்க உறைந்துபோய் நின்றது.
“மித்ரா..?! லைனில் இருக்கிறாயா?”
“ம்ம்.. இருக்கிறேன்.”
“அப்போ நீ தயாராக இரு. இன்று மாலை உன் பெற்றவர்கள் வந்தபிறகு உன்னை அழைத்துப்போக நான் வருகிறேன்.” என்றவர், அவள் பதிலின்றி நிற்கவும், “இது அக்டோபர் மாதம். இன்னும் இரண்டு மாதங்களில் திரும்பவும் கிறிஸ்மஸ் விடுமுறை வரும். அப்போது நீ திரும்ப உன் வீட்டுக்கு வரலாம். அதனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தயாராக இரு.” என்றுவிட்டு வைத்தார்.
அதை அறிந்த சத்யனும் வித்யாவும் கூட, “திரும்பவும் போகப் போகிறாயா அக்கா.” என்று கேட்டுக் கண்ணீர் சொரிந்தனர்.
அவளால் என்ன பதிலை சொல்ல முடியும்? கண்ணீரை உள்ளுக்கு இழுத்துக்கொண்டு, “மீண்டும் கிறிஸ்மஸ் லீவுக்கு வருவேன் தானே.” என்று புன்னகைத்தாள்.
“அதுவரை எங்களுக்கு யார் கதை சொல்வது? எங்களோடு விளையாடுவது? எனக்குத் தனியாக இருக்கப் பயம் அக்கா. எங்களோடு கதைக்கக்கூட ஒருவரும் இல்லை.” என்று அழுதாள் வித்யா.
வாய்விட்டுச் சொல்லாதபோதும் தமக்கையின் கையைப் பிடித்தபடி அவள் அருகிலேயே அமர்ந்திருந்தான் சத்யன். பொத்துக்கொண்டு வந்த அழுகையை அடக்க முடியாமல் தவித்தாள் மித்ரா. தான் அழுதால் அவர்கள் இருவரும் இன்னும் அழுவார்கள் என்றெண்ணி, தன்னைப் பெரும் பாடுபட்டு அடக்கினாள்.
“சத்தி, நீ நன்றாகப் படிக்கவேண்டும். நன்றாகச் சாப்பிட வேண்டும். நான் இல்லாதபோது வித்தியை நீதான் கவனிக்க வேண்டும். அம்மாவும் பாவம். வேலைக்குப் போய்வந்த களை அவருக்கும் இருக்கும் தானே. அதனால் அவரை விட்டுவிட்டு நீ வித்தியையும் உன்னையும் பார்த்துக்கொள்.” என்றாள்.
வித்யாவிடம் திரும்பி, “அண்ணா சொல்வதைக் கேட்கப் பழகவேண்டும் வித்தி. அவன் எது சொன்னாலும் அது உன் நல்லதுக்குத்தான். புரிகிறதா?” என்றாள்.
ஏழு வயது வித்திக்கு என்ன விளங்கியதோ, கண்ணீரோடு தலையை மட்டும் ஆட்டினாள். மாலை திருமதி லீசா வரவும், அவரின் காரின் பின் சீட்டில் ஏறி அமர்ந்தவள், நெஞ்சை அடைத்த அழுகையோடும் கண்களை நிறைத்த கண்ணீரோடும் தம்பிக்கும் தங்கைக்கும் கையாட்டி விடைகொடுத்து, தனிமை வாழ்க்கைக்கு மீண்டும் புறப்பட்டுச் சென்றாள்.

