நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் 8 – 1

ஏதும் வைரசோ என்று அவள் பயப்பட அப்படி எதுவும் இல்லை என்று வைத்தியசாலையில் வைத்தியர் சொன்னதில் ஆறுதல் கொண்டாள் யாமினி. ஓரளவுக்குக் காய்ச்சல் இறங்கியதும் பயப்பட ஒன்றுமில்லை என்று அன்று மாலையே வீட்டுக்கு விட்டனர்.

சந்தனாவோ விக்ரமின் கையை விட்டு இறங்கவே இல்லை. யாமினி கண்களில் கசிவோடு அவர்களைப் பார்ப்பதோடு நிறுத்திக்கொண்டாள். தனக்கு என்ன வேண்டும் என்பதை மகள் தெளிவாகச் சொல்லிவிட்டது போலிருந்தது!

மருந்து மாத்திரைகளை வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தனர். குழந்தைக்கு இளம் சூட்டில் உடம்பு துடைத்து, நெஞ்சு, முதுகு என்று ஆடிக்கலோன் தடவி, மருந்து கொடுத்து அவளை உறங்க வைக்கும் வரையிலும் அங்கேயே இருந்தான் விக்ரம்.

யாமினியால் அவனை நிமிர்ந்தே பார்க்க முடியவில்லை. ‘இங்க வராதீங்கோ, எங்கள எங்கட பாட்டுக்கு இருக்க விடுங்கோ, நீங்க எங்களுக்குத் தேவையில்லை.’ என்றுவிட்டு அவன் தோளில் சாய்ந்து அழுததும், அவன் துணையோடு அனைத்தையும் செய்ததும் அவளுக்குள்ளேயே பெரும் அதிர்வை உண்டாக்கி விட்டிருந்தது.

வைத்தியசாலையில் கூட அவளை அம்மா என்றும் தன்னை அப்பா என்றும் அவன் சொன்னது வேறு நினைவலைகளில் மிதந்து வந்து திகிலூட்டிக் கொண்டிருந்தது. அதோடு, அவள் சொன்ன எந்தச் சமாதானங்களும் எடுபடாமல் குழந்தை இரவிரவாக அழுததும், தான் மடியிலும் மார்பிலும் போட்டுச் செல்லம் கொஞ்சியும் அவள் அழுகையை நிறுத்தாததும், அவளுக்குள் அப்பாவாக அவன் எந்தளவு தூரத்துக்குப் பதிந்துவிட்டான் என்பதை உணர்த்தியே விட்டது.

தான் எடுக்கவேண்டிய முடிவு தன் கையில் இல்லை என்பதை நன்றாகவே உணர்ந்தாள்.

உறங்கிவிட்ட மகளின் அருகிலேயே அவள் இருக்க, இவனும் ஒரு மூச்சோடு எழுந்து அவளருகில் அமரப் போகவும், வேகமாக அங்கிருந்த கதிரையை இழுத்து அவனுக்காகப் போட்டாள்.

அதுவரை நேரமும் இருந்த இறுக்கமான சூழ்நிலை மாற, அவன் இதழ்களில் மென் முறுவல் மலர்ந்தது.

“ஏன், அண்டைக்கு மாதிரி நீ தூக்கிவிட மாட்டீயா?” என்று கேட்டுக்கொண்டே கதிரையில் அமர்ந்தான்.

அவனது காலடியில் அமர்ந்திருந்தவள் கலக்கத்தோடு நிமிர்ந்து பார்த்தாள்.

அந்தக் கண்களில் தெரிந்த துயர் அவனை என்னவோ செய்தது.

“சும்மா எல்லாத்துக்கும் பயந்து நடுங்கிறேல்ல யாமினி. இவ்வளவு நாளும் யாரும் இல்லாம தனியா இருந்து குழந்தைய நல்லா வளர்த்தவளுக்கு என்னைப் பாத்து என்ன பயம்?” சின்ன அதட்டல் விழுந்தது அவளுக்கு.

அவள் தலையைக் குனிந்துகொள்ளவும், “நிமிந்து என்னப்பார் யாமினி.” என்றான் விக்ரம்.

அவள் நிமிரவில்லை. ஏனோ அவனைப் பார்த்தால் அழுது விடுவோம் போலிருந்தது. கோர்த்திருந்த கரங்களிலேயே பார்வையைப் பதித்திருந்தாள்.

இது சரி வராது என்பதாகத் தலையை அசைத்துவிட்டு, “நீ கீழயும் நான் மேலயும் இருந்தா உன்ர முகத்த ஒழுங்கா பாக்க ஏலாது. நீயும் நிமிர மாட்ட.” என்றபடி அவள் முன்னால் தரையில் அவனும் அமர்ந்துகொண்டான்.

அவளின் ஒரு கையைப் பற்றினான். பற்றியிருந்த அவளின் புறங்கைக்கு மேலே மற்ற கையை வைத்து, மென்மையாக வருடிக் கொடுத்து, “என்னைப்பார் யாமினி.” என்றான்.

தயக்கத்துடன் அவள் பார்க்க, அந்தக் கண்களையே பார்த்து, “நான் சொல்றதக் கொஞ்சம் கேள். அதுக்குப் பிறகு உன்ர முடிவச் சொல்லு.” என்றான் தன்மையாக.

“இங்க வந்த நாள்ல இருந்து காருக்குப் பின்னால ஓடிவாற செல்லம்மாவ பாக்கப்பாக்க ஆசை எனக்கு. ஏனோ அவாவில என்னை அறியாமலேயே பாசம் வந்தது. அதுக்குக் காரணம் சாரா.”

யார் என்பதாக அவள் கண்ணால் கேட்க, “என்ர முதல் மனுசின்ர மகள்.” என்றான் அவன்.

சற்றே ஆச்சரியமாகப் போயிற்று அவளுக்கு. அவனை வேண்டாம் என்றுவிட்டுப் போனவளின் மகள் மீது பாசமா?

“அவள் அச்சு அசலா டெனிஷ் மாதிரியே இருப்பாள். அவளைச் சந்தனா நினைவு படுத்தினவா. சந்தனாவால தான் உன்னப்பற்றி விசாரிச்சனான். அப்பதான், சந்தனாவின்ர அப்பா இறந்திட்டதா நீ சொன்னதாவும், அத நம்பாததால இந்த ஊர் உன்னப் பிழையா பாக்கிறதையும் அசோக் சொன்னவன்.”

அதை அவன் சொன்னபோது அவள் முகம் வாடிப்போனது. ஆறுதலாகப் பற்றியிருந்த கரத்தை அழுத்திக் கொடுத்தான்.

“அதுக்குப் பிறகுதான் உன்னக் கவனிச்சனான். அப்பவும் கவனிக்கோணும் எண்டு கவனிக்கேல்ல. தானா கண்ணுல விழுந்ததுதான். உன்ர எந்த நடவடிக்கையும் நீ பிழையானவள் எண்டு எனக்குச் சொல்லேல. இன்னும் சொல்லப் போனா நீ உனக்குள்ள சுருங்கி சுருங்கி இருக்கிறதப் பார்க்க, எனக்கும் உனக்கும் ஏதோ ஒரு ஒற்றுமை இருக்கிற மாதிரித்தான் மனதுல பட்டது. அதாலதான் கல்யாணத்துக்குக் கேட்டனான்.”

“நீ மறுக்க மறுக்க, உன்ர மறுப்பு, அதுல இருந்த நியாயம், குழந்தைக்காக மட்டுமே யோசிச்சது, அது ஒண்டே குறிக்கோளா நிக்கிற உன்ர அந்தப் பாசம் இதெல்லாம்தான் நீதான் வேணும் எண்டு என்னை நினைக்க வச்சது. சந்தனா வேற அப்பா எண்டு பாசம் வச்சிருக்கிறா.” என்றவும் இவள் முகம் கன்றியது.

“அதுக்கு எதுக்கு நீ முகம் சுருங்கோணும்? அவா தானா என்னை அப்பிடி நினைச்சதுக்கு நீ என்ன செய்வாய்? எனக்கு என்னவோ எனக்கும் உனக்குமான முடிச்ச அவாதான் போட்டிருக்கிறா எண்டு விளங்குது. உன்னையும் என்னையும் விடு. இந்தக் குழந்தையை யோசி. டெனிஸும் இவவ மாதிரித்தான். வயதாலதான் அவன் வளர்ந்த பிள்ள. அவனுக்கும் உன்ன மாதிரி ஒரு பாசமான அம்மா கிடச்சா எவ்வளவு நல்லம். எனக்காக இல்லாட்டியும் இந்தப் பிள்ளைகளுக்காக நீ இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிக்கக் கூடாதா?” என்று கேட்டான்.

சற்று நேரம் ஒன்றுமே சொல்லவில்லை அவள். பின் நிமிர்ந்து பார்த்து, “உங்களை நம்பலாமா?” என்று கேட்டாள். கேட்கும் போதே கண்களில் நீர் கோர்த்தது.

என்ன சொல்வது? தலையில் அடித்துச் சத்தியம் செய்வதா? மீற நினைப்பவனுக்குச் சத்தியம் எந்த மூலைக்கு? அவளாகத்தான் நம்ப வேண்டும். ஒன்றுமே சொல்லாமல் இருந்தான் விக்ரம்.

“எனக்கு என்ர வாழ்க்கைய விட இவளின்ர சந்தோசம்தான் முக்கியம். அவள் நல்லா இருக்கோணும். அவள நல்லா பாப்பீங்க எண்டு உங்கள நம்பி வாறன். ஏமாத்தி போடாதீங்கோ. என்னைக் கைவிட்டாலும் பரவாயில்லை. அவளைக் கைவிட்டுடாதீங்கோ.” என்றாள் கண்ணீரோடு.

அந்தக் கண்ணீர் அவன் நெஞ்சைப் பிசைய ஒருமுறை கண்களை மூடித் திறந்தான்.

பற்றிய கரத்தை விடாது, “உன்னையும் விடமாட்டன். அவவையும் விடமாட்டன். நீயா போக நினச்சா கூட விடமாட்டன். சாகும் வரைக்கும் நீயும் அவவும் என்ர சொந்தம்.” என்றான் உறுதியான குரலில்.

ஏனோ முகத்தில் செம்மை படர்ந்தது அவளுக்கு. தலையைக் குனிந்துகொண்டாள். அவன் முகத்தில் மென் முறுவல் அழகாய் அரும்பியது.

“அதே மாதிரி இந்த முடிவ எடுத்ததுக்காக ஒவ்வொரு நிமிசமும் சந்தோசப் படுற மாதிரித்தான் உன்னையும் வாழ வைப்பன்.” உறுதியான குரலில் சொன்னான்.

மளுக் என்று சூடான கண்ணீர் கன்னங்களில் இறங்கியது அவளுக்கு. ஒற்றை விரல் கொண்டு அந்தக் கண்ணீரைத் துடைத்துவிட்டான் விக்ரம்.

அவள் நெளிய, குறுகுறு என்று அவளையே பார்த்தான்.

‘என்ன இது? என்னையே பாக்கிறார்.’ அவள் தடுமாற, அவளைச் சோதித்தது போதும் என்று எண்ணியவனோ, “அப்ப கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யவா?” என்று அவள் கரத்தை அழுத்திக் கேட்டான்.

தலை மட்டுமே சம்மதமாக ஆடியது.

“பெண்ணுக்குப் பேசத் தெரியுமா?”

‘என்னது?’ குழம்பிப்போய் அவள் நிமிர்ந்து பாக்க, “பெண் பாக்க மாப்பிள்ள வந்திருக்கிறன். கொஞ்சம் நிமிர்ந்து பாக்கிறது. அப்பதானே பிடிச்சிருக்கா இல்லையா எண்டு சொல்லலாம்.” என்று, கண்களில் குறும்பு மின்னச் சொன்னான் அவன்.

அவள் இதழ்களில் கூச்சத்துடன் கூடிய புன்னகை அரும்பிற்று.

“இயல்பா இரு யாமினி. எல்லாம் அதுபாட்டுக்குத் தானா நடக்கும். ஓகே?” என்றான் இதமாக.

அவளும் முகம் தெளிய தலையசைத்துப் புன்னகைத்தாள்.

“கல்யாணத்தக் கோவில்ல வைப்பம். அசோக் குடும்பம்தான் எனக்குத் தெரிஞ்சவே. உனக்கு யாருக்காவது சொல்லோணும் எண்டா சொல்லு.”

“இல்ல. எனக்கு யாரும் இல்ல.” என்றவள் அப்போதுதான் உணர்ந்தவளாய், “என்னைப்பற்றி உங்களுக்கு ஒண்டும் தெரியாதே…” என்றாள்.

“என்னைப் பற்றி மட்டும் உனக்கு என்ன தெரியும்?”

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock