அவளிடம் நெருங்கி, அவளைத் தன்னோடு சாய்த்துக்கொண்டான்.
“சும்மா சும்மா தொட்டதுக்கும் கலங்கிக் கண்ணீர் வடிக்கிறேல்ல. உன்ன யாருக்காவது பிடிக்காமப் போகுமா? அதுவும் அவன் சின்னப்பிள்ள. அவன் சின்னதா மறுப்பக் காட்டியிருந்தா இன்னொரு கல்யாணம் எண்டு நான் இங்க வந்தே இருக்க மாட்டன். கட்டாயம் எனக்கு உன்னப் பிடிச்ச மாதிரி அவனுக்கும் பிடிக்கும்.” என்றான் தேறுதலாக.
அதன் பிறகே மனம் அமைதியானது அவளுக்கு. ஆனாலும், திருமணத்துக்கான நாள் குறித்து, டெனிஷ் விரும்பியது போலவே அவன் வந்திறங்கியதும் யாமினிக்குச் சற்றே உதறல்தான்.
அன்று அசோக்கும் விக்ரமும் கொழும்புக்கு டெனிசை அழைத்துவரச் சென்றிருந்தனர். மரகதம் அம்மா அங்கேயே சமைக்கலாம் என்றதும் அவருக்கு உதவியாக அங்கு வந்து நின்றுகொண்டாள் யாமினி. சமையல் வேலை தன் பாட்டுக்கு நடந்தாலும் இவளுக்குள் மெல்லிய பரபரப்புத்தான்.
வீடு கிட்ட நெருங்கியதுமே அன்னைக்கு அழைத்து, “சாப்பாட்டப் போட்டு வைங்கம்மா. வந்தோன்ன சாப்பிடோணும். எல்லாருக்கும் நல்ல பசி” என்று சொல்லியிருந்தான் அசோக்.
‘அவன் என்னை ஏற்றுக்கொள்வானா? என்னைப் பிடிக்குமா? அல்லது ஏதும் ஏடாகூடமாகச் சொல்லிவிடுவானோ’ என்று பல யோசனைகள் ஓட, வந்து நின்ற காரிலிருந்து இறங்கிய அவனையே பார்த்தாள் யாமினி.
அவன் சின்னதாய் முகம் சுளித்தால் கூடக் காயப்பட்டுப்போகும் நிலையில்தான் பயந்துகொண்டிருந்தாள். அப்படி எதுவுமில்லாது, அருகில் நின்ற தகப்பனை ஒரு பார்வை பார்த்துவிட்டு இவளிடம் வந்து, “ஹாய்! நான் டெனிஷ்!” என்று முறையாகத் தன்னை அறிமுகப்படுத்தி, அவளை அன்போடு அணைத்துக்கொண்டான் அவன்.
அதுவரை இருந்த கலக்கங்கள் அத்தனையும் அகல, அதன் பிறகுதான் மூச்சையே இழுத்துவிட்டாள். அவன் மீது வாஞ்சைதான் மேலோங்கியது.
“வாப்பு வாவா! நல்ல வெயிலுக்கதான் வந்து இறங்கி இருக்கிறான் பிள்ள. அசோக் அந்த இளநிய வெட்டு.” என்று மரகதம்மா அவனைக் கைப்பிடித்து அழைத்துச் சென்று மாமர நிழலின் கீழே இருந்த கதிரையில் அமர வைத்தார்.
வெட்டிய இளநியில் ஸ்ட்ரோ ஒன்றைப் போட்டுக்கொண்டு வந்து கொடுத்தான் அசோக்.
அதை ஒருவாய் அருந்திப் பார்த்துவிட்டு, “ம்ம் நல்லாருக்கே!” என்றபடி அருந்தினான் அவன்.
ஒன்பது வயதுப் பாலகன் என்று கற்பூரம் அணைத்துச் சத்தியம் செய்தாலும் நம்பமாட்டார்கள். அந்தளவுக்கு உயரமாகவும் தோற்றமாகவும் இருந்தான். வெளிநாட்டவர் நிறம். நம்மூரில் போலிஸ் கட் என்று சொல்லும் கட்டிங். சிகை மட்டும் தகப்பனைக் கொண்டு கரிய நிறத்தில் பளபளத்தது. கருவண்டு விழிகளில் அத்தனை பளபளப்பு. தாயின் கண்கள் என்று பறை சாற்றிற்று! தகப்பனின் கூர் நாசி. சிரித்த முகமாக இருந்தாலும் அதற்குள் ஒளிந்திருக்கும் பிடிவாதம். அதுவும் அப்பாவை மாதிரியே! அப்பாவையும் அம்மாவையும் சரி விகிதத்தில் கலந்திருந்தான் அவன்.
இதற்கிடையில் சந்தனாவோ, காலையிலிருந்து காணாத தகப்பனிடம் ஓடிப்போய் அவன் கால்களைக் கட்டிக்கொண்டாள்.
“செல்லம்மா! வாங்க வாங்க!” என்று மகளைத் தூக்கிக்கொண்டு அவனும் போய் மகனின் அருகில் அமர்ந்துகொண்டான்.
தகப்பனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு இருந்த சந்தனாவைக் குறு குறு என்று பார்த்தான் டெனிஷ். யாமினிக்கு இங்கே இதயம் திரும்பப் படக்கு படக்கு என்று அடிக்க ஆரம்பித்தது.
குழந்தைகளுக்குத் தங்களின் அப்பா அம்மாவை இன்னொருவர் சொந்தம் கொண்டாடினால் பிடிக்காதே! தவிப்போடு அவள் நிற்க, “ஹேய் பார்பி! உங்கட பெயர் என்ன?” என்று கேட்டு அவள் புறமாகக் கையை நீட்டினான் டெனிஷ்.
“என்ர பெயர் சந்தனா எண்டு அண்ணாட்டச் சொல்லுங்கோ.” என்றபடி அவளின் கையைப் பிடித்து டெனிசின் கையில் வைத்தான் விக்ரம்.
அந்த மென் கரத்தைப் பற்றி டெனிஷ் மென்மையாகக் குலுக்கினான். கூச்சத்துடன் சந்தனா சிரிக்கவும், அழகான கவிதையாக இருந்தது அந்தக் காட்சி. கூடப் பிறக்காத இரு சிறு மொட்டுக்களை அவர்களே அறியாமல் பிணைத்துவிட்டிருந்தான் விக்ரம்.
யாமினியின் விழிகளில் கண்ணீரும் இதழ்களில் அழகான புன்னகையும் ஒன்றாக மலர்ந்து மணம் வீசிற்று. ‘எல்லாத்தையுமே அவர் சொன்ன மாதிரி ஜுஜுபியாவே நடத்துறார்.’ விக்ரமுக்குச் சர்டிபிகேட் குடுக்கவும் தவறவில்லை.
தன்னைச் சுத்தம் செய்துகொண்டு வந்த அசோக், “அம்மா சாப்பாடு ரெடியா?” என்று கேட்டுக்கொண்டே வந்தான்.
டெனிஷ் இளநீர் குடித்ததில் பசியில்லை என்றுவிடவும், சுடு சோற்றுக்குக் கோழிக்கறி போட்டு, நடுவே அவித்த முட்டை வைத்து, கத்தரிக்காய்ப் பால்கறியோடு கோழிக்கால் பொரியலுமாக உணவுத் தட்டைப் பெண்கள் இருவரும் கொண்டுவந்து கொடுத்தனர். ஆண்கள் இருவரும் வீசிய காற்றுக்கு இதமாக அங்கேயே அமர்ந்து, தட்டைக் கைகளில் ஏந்தி உண்டனர்.
அதற்குள்ளேயே வியர்க்கத் துவங்கியிருந்தது டெனிஷ்க்கு.
“பாப்ஸ், எப்பிடித்தான் இவ்வளவு நாளும் இங்க இருந்தீங்களோ தெரியாது.” முகத்தில் வியர்த்து வடிந்ததைத் துடைத்துக்கொண்டே சொன்னான்.
அந்தச் செல்லத் தமிழ் உண்மையிலேயே அவனின் அப்பாவைத் தவிர வேற யாருக்குமே விளங்கவில்லை. கேட்டிருந்த அனைவர் முகத்திலும் சிரிப்பு. யாமினி அவன் தமிழை விளங்கிக்கொள்ளத் தனக்குள்ளேயே முயன்றுகொண்டிருந்தாள்.
“இங்க இருக்கிற ஆட்களும் மனுசர்தான் டெனிஷ். நீ சொன்னதக் கேட்டு மரகதம் அம்மம்மா உன்னோட சண்டைக்கு வரப்போறா.” என்றான் விக்ரம் சிரித்துக்கொண்டு.
‘உண்மையாவா?’ நம்பாத பாவனையில் அவரைத் திரும்பிப் பார்த்தான் அவன். அவரின் புன்னகையே இல்லவே இல்லை என்று சொல்ல, “ஆனா நான் இங்க இருந்தவன் இல்லையே. நீங்களும் இங்க இருந்தவர் இல்லையே.” என்று சொல்ல, அருகில் இருந்த காத்தாடியை எடுத்து மகனுக்கு விசிறிவிட்டான் விக்ரம்.
“என்னட்ட தந்திட்டு நீங்க சாப்பிடுங்க பாப்ஸ்.” என்று வாங்கித் தானே அவன் விசுக்க, யாமினி இருவரின் தட்டிலேயே கவனமாக இருந்தாள்.
சின்னக் கிண்ணங்களில் கறிகளைத் தயாராக வைத்திருந்தவள் யார் தட்டில் எது முடிகிறது என்று பார்த்து பார்த்துப் பரிமாறினாள்.
“நீயும் கொஞ்சமா சாப்பிடேன் டெனிஷ். உறைப்பு இல்லாமல் இறைச்சியைக் கழுவி தாறன்.” என்று கேட்டுப் பார்த்தாள்.
“இல்லல்ல. எனக்கு வேண்டாம். கொழும்புல மாக் டொனல்ட்ஸ்ல நான் சாப்பிட்டன்.” என்று அவசரமாக மறுத்தான் அவன்.
விக்ரம் தண்ணீருக்காகப் பார்வையை வீசத் தொடங்கும்போதே, கழுவிய செம்பில் சில்லென்று நிறைத்து வைத்திருந்த தண்ணீரை ஓடிப்போய் எடுத்து வந்து நீட்டினாள். புன்னகையோடு வாங்கி அருந்தினான் விக்ரம்.
பார்த்திருந்த மரகதம் அம்மாவுக்கு அத்தனை நிறைவாக இருந்தது. எல்லோரையும் அனுசரித்து, பார்த்து பார்த்துக் கவனிக்கும் அவள் அவனோடு நன்றாக வாழ்ந்துவிடுவாள் என்கிற நம்பிக்கை உண்டாயிற்று!
இதற்கிடையில் அயலட்டையில் இருக்கிற ஒரு சிலரும் அங்கே கூடி இருந்தனர். பார்க்கிறவர்கள் எல்லோருக்குமே, இத்தனை அழகான மகனை விட்டுவிட்டுப் போனாளா அந்தப் பெண் என்றுதான் தோன்றியது.
அத்தனை துடிப்பும் அழகும் மிகுந்த சிறுவனாக எல்லோர் மனதையும் கவர்ந்தான் டெனிஷ். ஆனால், தாய் கைவிட்ட பிள்ளையின் அந்தச் சோகம் சிறிதுமின்றித் தந்தையோடும் புதிதாகக் கிடைத்த தங்கையோடும் அவன் ஐக்கியமாகிச் சிரித்து விளையாடியது, அவனைப் பரிதாபத்தோடு நோக்கிய அனைவரின் பார்வையையும் மாற்றியது.
துக்கமும் துயரமும் அறியா ராஜா வீட்டு இளவரசனாகத்தான் தெரிந்தான். அப்படித்தான் விக்ரம் வளர்த்திருந்தான். அத்தனை அருமையான பிள்ளை மீது யாமினிக்குப் பாசம் இயல்பாகவே ஒட்டிக்கொண்டது.