“அதுதான் ஆன்ட்டி, இண்டைக்கே கொழும்புக்குப் போவம் எண்டு இருக்கிறன்.” என்று சொல்லிக்கொண்டிருந்த விக்ரமின் குரலில் நினைவுகள் கலைய, ‘இண்டைக்கேவா’ என்று யாமினி அதிர்ந்தாள்.
கொழும்பில்தான் இனி வாசம் என்று சொல்லி இருந்தான்தான். ஆனால், அதை இன்றைக்கே எதிர்பார்க்கவில்லை.
‘வீடு இன்னும் ஒதுக்கேல்ல. சந்தனாவுக்கு உடுப்பு எடுத்து வைக்கோணும். இப்பவே மாலை ஆகுது. சட்டி பானைகளை என்ன செய்றது? தேவை இல்லாத சாமான்களை என்ன செய்றது?’ என்று ஒருபக்கம் ஆயத்தமாவதற்கு யோசனை ஓடினாலும், பிறந்து வளர்ந்த அந்த ஊரைவிட்டுப் போகப் போகிறோம் என்பதும் மனதில் பாரமாகத் தாக்கியது.
“ரெண்டு நாள் நிண்டுட்டுப் போகலாமே விக்ரம்? இண்டைக்குத்தான் கல்யாணமே நடந்தது. அவசரம் அவசரமா ஏன் ஓட?” என்று கேட்டார் மரகதம் அம்மா.
“நிக்கத்தான் எனக்கும் ஆசையம்மா. ஆனா, இப்பவே போனாத்தான் அசோக்கையும் டெனிசையும் அனுப்பிப்போட்டு, பாத்திருக்கிற வீட்டுக்குத் தேவையான சாமான்கள் வாங்கிப் போட்டுட்டு, யாமினிய டொச் கிளாசுக்கு சேத்திட்டு நானும் வெளிக்கிட சரியா இருக்கும்.” என்றான் விக்ரம்.
“அதையெல்லாம் அங்க வந்த பிறகு படிக்கட்டும். நீ போகேக்க கையோட அவளையும் கூட்டிக்கொண்டு போ. இனியும் தனியா இருந்து அவள் கஷ்டப்பட வேண்டாம்.” தாயின் இடத்தில் நின்று கதைத்தவரின் பாசம் யாமினியை அசைத்துப் பார்த்தது.
கண்ணோரம் கசிய நின்றவளைத் திரும்பிப் பார்த்துவிட்டு,
“அது இப்ப சட்டம் அம்மா. இங்க கட்டாயம் படிச்சுப் பாசானாத்தான் அங்க வாறதுக்கு விசாவே தருவாங்கள்.” என்று விளக்கினான் அவன்.
ஏற்கனவே அசோக்கின் சொந்தக்காரர்கள் மூலம் கொழும்பில் வீடு பாத்ததுதான். என்றாலும் இன்றைக்கே பயணம் என்பதை மற்றவர்களும் எதிர்பார்க்கவில்லை.
‘இனியாவது மனுசனோட குடும்பம் குழந்தை எண்டு சந்தோசமா இருப்பாள் எண்டு நினச்சா என்ன இது?’ என்றபடி பார்வையை ஓட்டிய மரகதம் அம்மாவின் கண்களில் அவள் வீடு பட்டது. யாமினியிடம் திரும்பி, “நீ கொழும்புக்குப் போனபிறகு காணியையும் வீட்டையும் என்னம்மா செய்யப் போறாய்?” என்று கேட்டார்.
அவளும் அந்த வீட்டைத்தான் பார்த்தாள். முதலில் இருந்தது பெரிய கல்வீடு. அம்மா, அப்பா, அண்ணா, அவள் என்று அழகான குடும்பத்துக்கு அளவான வீடு. நாட்டுப் பிரச்சனையில் முற்றாக அழிந்து போனபிறகு அவள் தனக்காக அமைத்துக்கொண்டது கொட்டில் வீடுதான். என்றாலுமே அம்மா அப்பாவோடு வாழ்ந்த காணியில், அவர்களோடு சிரித்து, விளையாடி, அழுது, அடிவாங்கிய நிலத்தில் நடக்கையில் ஒரு சுகம். அவர்களோடு வாழ்வது போன்ற ஒரு மாயை!
சில நேரங்களில் சில இடங்கள் அன்றைய காட்சிகளைக் கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்திவிடும். அப்படியான நேரங்களில் தன்னை மறந்து அந்த நாட்களுகே சென்றுவிடுவாள். இனி அந்த நாட்கள் திரும்பி வராதே என்கிற நிஜம் உறைக்கிறபோது கண்களில் கண்ணீர் வழியும். ஆனாலும், அவள் அவர்களோடு வாழாமல் வாழ்வது அந்தக் காணியில்தான். அவர்களின் சார்பாகக் கொஞ்சமேனும் அவளுக்கு ஆறுதலைத் தந்ததும் அதுதான். இனி?
எழுந்த வேதனையை அடக்கி, “என்னை மாதிரி இருக்கிற யாருக்காவது இருக்கக் குடுப்பம் எண்டு நினைக்கிறன் ஆன்ட்டி. யாராவது நல்லவையாப் பாத்து நீங்களே குடுங்கோ.” என்று அந்தப் பொறுப்பை அவரிடமே ஒப்படைத்தாள்.
“வாடகை ஒண்டும் வேண்டாம். காணியை மட்டும் காடாகாம துப்பரவா வச்சிருக்கச் சொல்லுங்கோ. அது போதும்.”
“ம்ம்.” என்று கேட்டுக் கொண்டவர் அன்றைக்கான அவர்களின் இரவைப் பற்றியும் யோசித்தார். அசோக்கைத் தனியாகக் கூப்பிட்டு அவன் காதைக் கடிக்க, அசோக் அதை விக்ரமிடம் கொண்டு போனான்.
“அதுக்கு என்ன அவசரம்?”
“டேய்! கல்யாணம் நடந்த இரவு நடக்கிறதுக்குப் பெயர்தான்டா முதலிரவு. அதுக்கு என்ன அவசரம் எண்டு கேக்கிறாய்.” என்றான் கேலியாக.
சிரிப்பு வந்தது விக்ரமுக்கு. “இப்ப அதெல்லாம் வேண்டாம் அசோக். முதல் அவள் அங்க வரட்டும். அவளையும் பிள்ளையையும் தனியா விட்டுட்டுப் போகவேணும் எண்டு நினைக்கவே கஷ்டமா இருக்கு. இதுல நீ வேற.”
“ஆறுமாத கோர்ஸ் எண்டு நினைக்கிறன். முதல் தரமே பாசாகாட்டி இன்னும் நிக்கோணும். கைக்குழந்தையோட எப்படிச் சமாளிக்கப் போறாளோ எண்டு எனக்கு யோசனையா இருக்கு. இதுல வேற சிக்கலுகள் எண்டா இன்னும் பிரச்சனையாப் போய்டும்டா.” என்றான் அவன்.
‘பிள்ளை ஏதும் உருவாகிவிட்டால் சிரமம்’ என்று நினைக்கிறான் என்று எண்ணிக்கொண்டான் அசோக்.
“ஓ! நீ அந்தளவு தூரத்துக்கு யோசிச்சிருக்கிறாய்.” என்றான் விச மத்தோடு.
“ஏனடா, முதலிரவு நடந்தா அதெல்லாம் நடக்கும் தானே.” என்றான் விக்ரம் அசோக்குக்கு மேலாக.
நீண்ட நாட்களுக்குப் பிறகு இலகுவாகக் கேலி பேசிய நண்பனைக் கண்டு மனம் துள்ளினான் அசோக்.
“என்ன மச்சி, அந்தப் பிள்ளையப் பிடிச்சிருக்கா?” அன்று கேட்ட அதே கேள்வியை இன்றும் கேட்டான்.
அவளின் வெட்கமும் அதன் ஜொலிப்பும் கண்முன்னால் வந்து போக, ரசனையான புன்னகை அரும்ப, “ம்ம்… பிடிச்சிருக்கு.” என்றான் விக்ரம்.
“ஹப்…பா! இப்பதான் நிம்மதியா இருக்கு!” என்று அவனை அணைத்துத் தன் சந்தோசத்தைக் காட்டினான் அசோக்.
“நல்ல பிள்ளையடா. நீ சொன்னமாதிரி நானும் யோசிக்காம பிழையா நினைச்சிட்டன்.” உண்மையான வருத்தத்தோடு சொன்னான்.
“விடு! வெளில விறைப்பா திரிஞ்சாலும் உள்ளுக்க ஒவ்வொரு நாளும் பயந்து நடுங்கிக்கொண்டு இருந்திருக்கிறாள்.” சொல்லும்போதே பாசத்தில் கனிந்தது அவன் குரல்.
“அதுதான் சொல்றன், கொஞ்ச நாளைக்கு நீயும் அந்தப் பிள்ளையோட சந்தோசமா இருந்திட்டு வா. யாமினிக்கும் கொஞ்சம் தைரியமா இருக்கும். உனக்கும் சந்தோசமா இருக்கும். நான் அங்க எல்லாம் பாக்கிறன்.” என்றான் அக்கறையாக.
“இல்ல மச்சான். அது இப்ப சரியா வராது.” என்று உடனேயே மறுத்தான் விக்ரம்.
அசோக் அங்கே எல்லாம் பார்ப்பான்தான். ஆனால், இப்போதே ஒரு மாதமாக இவனுக்காக மனைவி மகளைப் பிரிந்து இங்கே இருக்கிறான். அதோடு அங்கே விக்ரமும் இல்லையானால் கழுத்தை முறிக்கும் வேலை இருக்கும் அசோக்குக்கு. அப்படி அவனைத் தனக்காகத் தொடர்ந்து வாட்டுவதில் இஷ்டமில்லை விக்ரமுக்கு. அதோடு டெனிஷ் இருக்கிறானே!
எந்தக் காரணத்துக்காகவும் மகனைத் தனியாக விட்டு, அவன் தன்னை மிஸ் பண்ணிவிடக் கூடாது என்பதில் மிகவுமே கவனமாக இருந்தான்.
“உன்ர வீட்டுலையா இருந்தாலும் டெனிஸ இப்படி நிறைய நாள் தனியா விட விருப்பம் இல்லையடா. அதோட எங்களுக்கும் கொஞ்ச நாள் வேணும். அதுக்கு இந்த இடைவெளியும் வர்றது நல்லதுதான். கொஞ்சம் கஷ்டம் தான். ஆனா, வாழ்க்கை என்ன நாளையோட முடியுதா என்ன. முடிஞ்சவரை எல்லாம் கெதியா செய்யப் பாக்கிறன். அதோட, அதுக்கெல்லாம் ஒரு அவசரமும் இல்ல. ஆறுதலாவே நடக்கட்டும்.” என்று சொல்லி முடித்தான் அவன்.
“இரவே வெளிக்கிடுறன் எண்டு சொல்லிப்போட்டு அங்க என்ன செய்றீங்கள் ரெண்டுபேரும்? அசோக் நீ இங்க வா.” என்று மகனை அழைத்தார் மரகதம்.
“நீங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் ஓய்வா இருங்கோ போங்கோ.” என்று விக்ரமின் அறைக்கு அவர்களுக்குத் தனிமை கொடுத்து அனுப்பி வைத்தார்.
விக்ரம் யாமினியோடு அறைக்குச் செல்ல, அவர்கள் போவதைக் கண்ட சந்தனா டெனிஸின் கையிலிருந்தபடி, “ப்பா… ப்பா…” என்று விக்ரமைக் காட்டிச் சிணுங்கினாள்.
“நோ பார்பி! அழக் கூடாது!” என்றபடி அவளோடு அறைக்கு வந்தான் டெனிஷ்.