அங்கே தாயைக் கண்டதும், “ம்மா…” என்று அவள் தாயிடம் தாவ,
அதனாலோ என்னவோ, “பாப்ஸ், நான் இவாவை எப்பிடிக் கூப்பிட?” என்று திடீரென்று கேட்டான் டெனிஷ்.
யாமினிக்குள் திரும்பவும் ரயில் தடதடக்கத் தொடங்கிற்று!
‘சித்தி என்று சொல்லிவிடுவானோ…’
அதில் தப்பில்லை என்று விளங்கினாலும், ஏனோ தன்னையும் மகளையும் பார்த்துப் பார்த்துக் கவனிக்கும் கணவனின் மகனுக்கும் தான் தாயாகவே இருக்க வேண்டும் என்று மனம் சொல்லிற்று.
கலக்கமாக அவனிடம் அவள் விழிகள் பாய, ‘சும்மா பயப்பிடுறேல்ல!’ என்று கண்ணாலேயே அதட்டினான் விக்ரம்.
‘அவர் பாத்துக்கொள்ளுவார். அவருக்குத்தானே எல்லாம் ஜுஜுபி மேட்டர்.’ மனதுக்குள் நினைத்ததுமே சட்டெனக் கலக்கம் அகன்று சிரிப்பு வந்தது அவளுக்கு.
அதை வேகமாக இதழ்க்கடையில் மறைத்துக்கொண்டாள்.
“ஹேய் மேன், அவள் உன்ர பாப்ஸ் வைஃப். அப்ப நீ எப்பிடிக் கூப்பிடோணும்?” என்று லாவகமாக அவனிடமே திருப்பினான் விக்ரம்.
“ம்ம்…” என்று யோசித்துவிட்டு, “பாப்ஸ் வைப் யாம்ஸ்.” என்றுவிட்டுப் போனான் அவன்.
‘என்னது? யாம்ஸ்சா? என்ன பேருடா இது?’ என்றுதான் சட்டெனத் தோன்றியது அவளுக்கு. ஆனாலும், ‘சித்தி’க்கு ‘யாம்ஸ்’ எவ்வளவோ பரவாயில்லை என்று எண்ணிக்கொண்டாள்.
அவன் சென்றதும் அவளிடம் வந்தான் விக்ரம்.
‘இதென்ன கிட்ட வாறார்?’ பதட்டத்தோடு மகளைப் பார்க்க, அவள் இருந்த சுவடே இல்லை. தகப்பனின் ஃபோனோடு மாயமாகி இருந்தாள். இன்னுமே பதட்டமானாள் யாமினி.
‘என்ன?’ என்பதாக அவள் பார்க்க, அவளின் முன்னால் வெகு அருகில் வந்து நின்று, “அப்போத ஏன் சிரிச்சனி?” என்று கேட்டான் விக்ரம்.
‘ஐயோ! இவர் கவனிக்கேல்ல எண்டு நினைச்சேனே.’ பிடிபட்ட உணர்வில் அவனைப் பார்க்க முடியாமல் தடுமாறினாள்.
ஒற்றை விரல் கொண்டு அவள் முகம் நிமிர்த்தி, “சொல்லு!” என்றான் அவன்.
“இல்லையே… நான் சிரி…” விழிகளினூடாக நெஞ்சுக்குள் ஊடுருவிய பார்வையில் வார்த்தைகள் இடையிலேயே வேலை நிறுத்தம் செய்துகொண்டன!
‘பாக்க நல்ல மனுசன் மாதிரித் தெரிஞ்சாலும் பொல்லாத பிடிவாதம்.’ கணவனைப் பற்றிய முதல் புரிதல் அவளுக்கு வந்திருந்தது.
இதில் அவனது ஒற்றை விரல் வேறு நாடியில் பட்டு நரம்புகளை எல்லாம் மீட்டிக் கொண்டிருந்தது.
“அது… டெனிஷ் திடீரெண்டு கேக்கவும் எனக்குப் பதறிக்கொண்டு வந்திட்டுது. சித்தி எண்டு சொல்லிடுப்போடுவானோ எண்டு… நீங்க என்ன சொல்லப் போறீங்களோ எண்டு பயந்துபோய்ப் பாத்தா நீங்க கெட்டித்தனமா அத அவன்ர வாயாலேயே சொல்ல வச்சிட்டிங்க… அதான்… அதான்…” வேகமாகச் சொல்லிக்கொண்டு வந்தவள் பழைய டேப் ரெக்காடர் மாதிரி சட்டென்று திக்கினாள்.
அவனோ விடவில்லை.
“அதான்… ம்ம்?” என்று எடுத்துக்கொடுத்தான்.
“அது…” ஐயோ விடுங்கோவன் என்று அவள் பார்க்க, விடவே மாட்டேன் என்று அவன் நின்றான்.
‘பொல்லாத பிடிவாதம்!’ மனம் அப்போதும் சொல்ல, “உங்களுக்கு எல்லாமே ஜுஜுபி தானே எண்டு நினைச்சதும் சிரிப்பு வந்திட்டுது” என்றாள் வேகமாக.
சட்டென்று சத்தமாகச் சிரித்தான் விக்ரம்.
அவளுக்கு வெட்கமாகப் போய்விட்டது. “ஐயோ சிரிக்காதீங்கோ. யாராவது வந்திடப்போறீனம்.” என்று பதறினாள்.
அவனும் அவளும் மட்டும் தனியாக அங்கே நிற்கிறோம் என்பதையே குறுகுறுப்பாக உணர்ந்தாள். இதில் அவனது அருகாமை வேறு அவளைத் தடுமாற வைத்துக்கொண்டிருந்தது.
யாராவது பார்த்துவிட்டால்…
அவள் தவிக்க ஒரு வழியாகச் சிரித்து முடித்தவனின் விழிகள் மின்னின. உதட்டுக்குள் விசமச் சிரிப்பு வேறு!
‘என்னைத் திணற வைக்கிற மாதிரி என்னவோ சொல்லப்போறார்…’ மனம் சொல்ல, அவனை மேற்கொண்டு பார்க்கமுடியாமல் அவள் தடுமாற, “எனக்கு ஜுஜுபி இல்லாத மேட்டரும் இருக்கு. என்னைத் திணறடிக்கிற ஆளும் இருக்கு.” என்றான் மர்மமாக.
அவளின் இதயம் ஏனோ இனிமையாக அடித்துக்கொள்ளத் தொடங்கிற்று!
அப்போது சொன்னான்.
“அது நீ!” என்றான் ஒற்றை விரலை அவள் புறம் நீட்டி. “உன்னையும் வெல்லோணும். கட்டாயம் வெல்லுவன்!” என்றான் கண்களில் அவளைக் கொத்தும் பார்வையோடு.
தன்னைக் கொண்டுபோய் எங்கே ஒழிக்க என்றிருந்தது அவளுக்கு.
“என்ன… வெல்லவா?” என்றான் இன்னும் அவளை நெருங்கிக் காந்தக் குரலில்.
அந்தக் குரல்… அவன் கேட்ட அழகு… அந்த மயக்கும் புன்னகை… மனம் தடுமாறித் தடம் மாறப் பார்த்தது அவளுக்கு.
“சந்தனாவுக்கு உடம்பு கழுவோணும்.” என்று வாயில் அகப்பட்டதைச் சொல்லிக்கொண்டு அங்கிருந்து ஓடியே போனாள்.
போகிறவளையே ரசனையோடு பார்த்திருந்த விக்ரமின் உதடுகளில் மலர்ந்த முறுவல் வாடவே இல்லை. ஜன்னல் வழியாக இதமாக நுழைந்து, அவன் கேசம் கலைத்து, தேகத்தை மென்மையாகத் தழுவிய சுகமான தென்றல் போலவே அவள் தனக்குள் மெல்ல மெல்ல வந்துகொண்டிருப்பதை உணர்ந்து ரசித்துப் புன்னகைத்தான்.
அதேபோல அவளுக்குள்ளும் அவன் மென் நடை போட்டு முன்னேறிக் கொண்டிருப்பதை அவனது அருகாமையில் அவள் படும் பாடுகள் அவனுக்கு உணர்த்திக்கொண்டிருந்தன!
சொன்னது போலவே மனைவி மக்களுடன் அன்றே கொழும்புக்கு வெளிக்கிட்டான் விக்ரம்.
கையோடு கொண்டுபோகும் பொருட்களை விக்ரமும் அசோக்கும் காரில் ஏற்றத் தொடங்கினர்.
மகளோடு நின்ற யாமினி, ஒருமுறை அந்த வீடு, அங்கிருந்த மரங்கள், அவள் வாழ்ந்த பூமி எல்லாவற்றையும் கண்களில் நிரப்பி நெஞ்சுக்குள் நிறைத்துக்கொண்டாள்.
‘அம்மா அப்பா போயிட்டு வாறன். எங்கட வாழ்க்க நல்லாருக்கோணும். கடவுளா இருந்து நீங்கதான் எங்களைப் பாதுகாக்கோணும்.‘ என்று மனமார வேண்டிக்கொண்டாள்.
விக்ரமும் அசோக்கும் ஏற்றி முடித்ததும் விடைபெறும் முகமாக மரகதம்மாவைப் பார்த்துத் தலையசைத்தாள். வாயைத் திறக்க முடியவில்லை. அழுதுவிடுவோம் என்று தெரிய, நடுங்கிய இதழ்களை அழுத்தி மூடிக்கொண்டாள்.
வயதான பெண்மணி அவரோ உடைந்தே போனார். அவளைக் கட்டியணைத்து, “சந்தோசமா போயிட்டு வாடா. மனுசன் பிள்ளையளோட சந்தோசமா இரு.” கண்ணீர் வழிய மனமார வாழ்த்தினார்.
என்னவோ, தான் பெற்ற மகளைக் கணவன் வீட்டுக்கு அனுப்பும் நிலையில் இருந்தார் அவர். என்னதான் அவள் அவரோடு கதைக்காது இருந்தாலும் ஒரு துணைக்கு அவள் அருகில் இருக்கிறாள் என்கிற மனத்தெம்பு அதுநாள் வரை இருந்தது. இனி அவர் தனிதானே!