“அவள் பாவமப்பு. இவ்வளவு நாளும் நல்லா கஷ்டப்பட்டுட்டாள். இனி நீதான் சந்தோசமா பாத்துக்கொள்ள வேணும். அந்தக் குழந்த… அவளுக்கும் நல்ல வாழ்க்கைய அமைச்சுக் குடுக்கோணும். டெனிசையும் கலங்க விட்டுடாத.” என்றார் விக்ரமின் கையைப் பற்றி.
“கட்டாயம் ஆன்ட்டி. நீங்க ஒண்டுக்கும் கவலைப்படாதீங்கோ.” என்று நம்பிக்கை கொடுத்தான். “அவள் என்ர மனுசி. இது என்ர குடும்பம். கடைசி வரைக்கும் சந்தோசமா வச்சிருப்பன்.” மனதிலிருந்து சொன்னான் விக்ரம்.
“உன்னப்பற்றி எனக்குத் தெரியும். நீ அருமையான பிள்ள. நீங்க ரெண்டு பேரும் நல்லா இருப்பியல்! எண்டாலும், என்ர நிம்மதிக்கு நானும் ஒருக்கா சொல்லி இருக்கிறன்.” என்று நிம்மதியோடு கண்களைச் சேலைத் தலைப்பால் துடைத்துக்கொண்டார் அவர்.
“உங்கட மகளையும் என்னைச் சந்தோசமா வச்சிருக்கச் சொல்லுங்கோ. இல்லாட்டி உங்களிட்டத்தான் நான் வந்து நிப்பன்.” என்று சொல்லி எல்லோர் முகத்திலும் சின்னப் புன்னகையை மலரவிட்டான் விக்ரம்.
“டேய் டேய்! ஆகத்தான் அலட்டாம வா!” என்று நண்பனிடம் காய்ந்துவிட்டு, “அம்மா! நீங்க பெத்த மகன், நான் வெளிக்கிடப்போறன், என்னைப் பற்றி ஒரு கவலை இல்ல உங்களுக்கு. அவனச் செல்லம் கொஞ்சிக்கொண்டு இருக்கிறீங்க.” என்று தாயிடமும் முறுக்கிக்கொண்டான் அசோக்.
மகனும் போகிறானே என்று அவர் திரும்பக் கலங்க, “மரகதம் பேபி. நோ அழுகாச்சி. சிரிச்ச முகமா நீங்க எங்கள அனுப்பி வைக்கோணும். வெகு கெதியில உங்கட பெறா மகளுக்குப் பிரவசம் பாக்க நீங்க அங்க வரவேண்டி இருக்கும்.” என்று விக்ரமைப் பார்த்து அவன் கண்ணடிக்க, யாமினி வெட்கிப்போய் விக்ரம் பின்னால் ஒழிந்துகொண்டாள்.
அதைக் கண்ட மரகதம் அம்மா தன் கவலை மறந்து புன்னகைத்தார். “இதுதான் என்ர அம்மா!” என்று அவர் கன்னங்களைப் பற்றிச் செல்லம் கொஞ்சிவிட்டு விடைபெற்றுக்கொண்டான் அசோக்.
டெனிஸையும் உச்சி முகர்ந்து அனுப்பி வைத்தார் மரகதம் அம்மா.
அந்த இரவுப் பொழுதில், வீதியில் ஒளியைப் பாய்ச்சியபடி அவர்களின் கார் மிதமான வேகத்தில் கொழும்பை நோக்கி விரைந்துகொண்டிருந்தது.
நெடுந்தூரப் பயணமாகையால் காருக்கு ஓட்டுனர் ஒருவரைப் பிடித்திருந்தனர். அவர் அருகில் அசோக் அமர்ந்துகொண்டான். அசோக்குக்கு அன்னையைத் தனியாக விட்டுவந்த வேதனை மனதை அரித்துக்கொண்டிருந்தது.
‘இனி அம்மாவ கூப்பிட்டு என்னோடயே வச்சிருக்க வேண்டியதுதான். அவவுக்கும் நல்லா வயது போய்ட்டுது.’ என்று எண்ணிக்கொண்டான்.
எப்போதும் போல டெனிஷ் தன் கேமில் ஆழ்ந்துவிட,
விக்ரம் கொழும்பில் பார்க்கவேண்டிய வேலைகளை மனதில் வரிசைப்படுத்திக்கொண்டிருந்தான்.
யாமினி, மகள் மடியில் உறங்கியிருக்க, தன் வாழ்வில் திடீரென்று நடந்துவிட்ட மாற்றங்களை மீட்டிப் பார்த்துக்கொண்டிருந்தாள். திடீரெனத் தன் வாழ்வில் இப்படியொரு திருப்பம் வருமென அவள் கிஞ்சித்தும் சிந்தித்ததில்லை!
அனுராதபுரத்தில் அந்த இரவு நேரத்திலும் திறந்திருந்த ஒரு ரெஸ்டாரண்டின் முன்னால் வண்டியை நிறுத்தினார் ஓட்டுனர். ஆண்கள் எல்லோரும் இறங்க, உறங்கிவிட்ட மகளோடு காரிலேயே அமர்ந்துகொண்டாள் யாமினி.
அவள் இருந்த பக்கமாக வந்து, “உனக்கு என்ன வாங்க?” என்று கேட்டான் விக்ரம்.
“சீனி குறைவாப் போட்டு ஒரு ப்ளேன் டீ போதும்.”
“செல்லம்மாக்கு?”
“அவவுக்கு எல்லாம் கொண்டு வந்திருக்கிறன்.” அதன் பிறகே போனான் விக்ரம்.
கையோடு மகனையும் கூட்டிக்கொண்டு அவனோடு என்னவோ கதைத்தபடி போகிறவனையே பார்த்தாள் யாமினி. எங்கு என்ன வேலையாக நின்றாலும் மகன் மீது ஒரு கண்ணை வைத்திருப்பதும், அவனின் தேவைகளைத் தந்தையாக நின்று கவனித்துச் செய்வதும் என்று மகனின் மீதான அவனின் அக்கறையும் பாசமும் ஒவ்வொரு செயலிலும் வெளிப்பட்டன. அதற்காக அவனைக் கைக்குள் வைத்திருக்கவும் இல்லை.
அதே அக்கறையும் பாசமும்தான் அவள் மீதும் சந்தனா மீதும். இப்படிப் பார்த்தும் கேட்டும் செய்ய ஒருவர் அவளுக்கு இருக்கிறார் என்கிற நினைவே சுகமாயிருந்தது. கொஞ்ச நாட்களுக்கு முன்னர் இத்தனை இதமானதாக வாழ்க்கை அமையும் என்று சொல்லியிருந்தால் நம்பியே இருக்கமாட்டாள். இன்றோ எல்லாம் தலைகீழ் மாற்றம்!
திருமணத்துக்கு அவள் சம்மதித்ததுமே வேலைக்குப் போவதை நிறுத்திவிட்டான்.
ஒவ்வொரு நாட்களும் பகலில், “நீ குளி. நான் செல்லம்மாவோட இருக்கிறன்” என்று இருந்துகொண்டான்.
ஜன்னலை அவனே திறந்துவிட்டு, “எவன் எட்டிப் பார்க்கிறான் எண்டு நான் பாக்கிறன். நீ நிம்மதியாப் படு!” என்றான்.
“இங்கேயே வந்து இருந்துடுவன், அது உனக்குச் சங்கடமா இருக்கும். ஆனாலும் பரவாயில்ல, பக்கத்திலதானே இருக்கிறன்.” என்று அவளின் மனதை அறிந்தவனாக, அவளுக்கு ஒரு ஃபோனை வாங்கிக் கொடுத்தான்.
திருமணத்துக்கு எடுத்த சேலை தொடங்கி அனைத்திலும் அவளுக்குப் பார்த்து பார்த்துச் செய்தான்.
சின்ன சின்னக் காரியங்கள்தான். ஆனால், அவள் மனதுக்குள் பெரும் மாற்றங்களை உருவாக்கிக் கொண்டிருந்தன! எனக்காக ஒருவர் இருக்கிறார் என்கிற நம்பிக்கையை அவளுக்குள் விதைத்துக்கொண்டிருந்தன.
இனி இதுதான் என் வாழ்க்கை. எனக்கு மகள் மட்டும்தான். மனதைத் தளர விடக் கூடாது என்று தனக்குத்தானே தைரியம் ஊட்டிக்கொண்டு, ஒரு இரும்பு மனுசியாக மாறிக்கொண்டு இருந்தவளைத் துணையாக நின்று மெல்ல மெல்ல தளர்த்திக் கொண்டிருந்தான் விக்ரம்!
“என்ன, யோசனை பலமா இருக்கு!” கையில் இரண்டு கப்புகளுடன் வந்து அமர்ந்தபடி கேட்டான் விக்ரம்.
“திடீர் எண்டு வந்தீங்க. கண்ணை மூடித் திறக்கிறதுக்குள்ள என்ர வாழ்க்கைல எல்லாமே தலைகீழா மாறீட்டுது. இப்படியெல்லாம் நடக்கும் எண்டு கனவுல கூட நினைச்சுப் பாக்கேல்ல.” அவன் நீட்டிய கப்பை வாங்கிப் பருகியபடி சொன்னாள்.
இரவு நேரத்துக் குளிர் காற்றுக்கு இதமான சூட்டில் தொண்டைக்குள் பதமாக இறங்கியது தேநீர்.
“ஓ! அப்ப இந்த மாற்றம் பிடிச்சிருக்கா?” விழிகளால் அவளைப் பருகிக்கொண்டே கேட்டான்.
காற்று வந்து கலைத்த கேசத்தைக் காதோரமாய் ஒதுக்கியபடி, “ம்ம்.” என்று அவள் சொல்ல, “அப்ப என்னை?” என்று இலகுவாகக் கேள்வியை வீசினான் அவன்.
அவனது கெட்டித்தனம் விளங்க இதழ்களுக்குள் புன்னகை அரும்பியது!
“பிடிக்கேல்ல எண்டு சொன்னா என்ன செய்வீங்க?” என்று அவளும் கேட்டாள்.
‘அதென்ன எப்ப பாத்தாலும் என்ர வாயை அவர் அடைக்கிறது. இந்த முறை நானும் அடைக்கிறன்’ என்று வேறு நினைத்துக்கொண்டாள்.
‘இப்ப என்ன சொல்லுவீங்க?’ கண்களால் அவள் கேள்வியை வீச, “பிடிக்க வைப்பன்!” என்றான் அவன் அசராமல்.
‘அச்சோ!’ என்றானது அவளுக்கு.
“என்ன வைக்கவா?” விசமத்துடன் அவள் மீதே பார்வையை வைத்துக் கேட்டவனை இனிமையாக அதிர்ந்துபோய்ப் பார்த்தாள் யாமினி.
“ஐயோ சாமி. ஆளை விடுங்க! உங்களிட்ட வாயைக் குடுத்து எப்பவும் வாங்கிக் கட்டுறது தானே வேலையே.” பொய்யாகச் சலித்தாள்.
ஆனால், அவன் பார்வையை, குறும்புப் பேச்சை, அவளிடம் வம்பு வளர்க்கையில் அவனிடம் தெறிக்கும் உற்சாகத்தை எல்லாம் மனம் ரசித்தது!