அவனை அனுப்பிவிட்டு அவள் வீட்டுக்குள் வந்தபோது, மனம் விட்டே போயிற்று விக்ரமுக்கு!
இன்னொருவனின் தோள் சாய்ந்தவளை வெறுப்போடு பார்த்தான்.
அவன் முன்னால் அவள் தயங்கி நின்றாள்.
“உனக்கு எதில குறை வச்சனான் எண்டு இப்படி நடந்தாய் யாஸ்மின்? காதல்லையா? உன்மேல வச்ச அன்பிலா? நம்பிக்கையிலா? பணத்திலா, வசதியான வாழ்க்கையிலா? எதில குறை வச்சனான்?” கிட்டத்தட்ட கர்ஜித்தான்.
விக்ரமின் உக்கிரத்தில் அவள் தேகம் நடுங்கிற்று! “இந்தக் காசும் பணமும் எனக்கு வேணும் எண்டு என்றைக்காவது நான் சொன்னேனா விக்கி? எப்போதுமே வேலை வேலை எண்டு நீ போனா நான் யாரோட கதைக்கிறது? சிரிக்கிறது?”
“அப்படி என்ன வருசக் கணக்கிலா உன்னவிட்டுப் பிரிஞ்சனான்? எங்க போனாலும் கடைசியா இங்கே தானே வந்தேன். நீயும் பிள்ளையும்தானே என்ர உலகமே. உலகம் பூராச் சுத்தினாலும் என் உலகம் உன் காலடிதானே. அது உனக்கும் தெரியும். பிறகும் ஏன்… ஏன் இப்படியெல்லாம்… என்ர வாழ்க்கையைத் திரும்பிப் பாத்தா எந்த இடத்திலையும் நீயில்லாம எதுவும் இல்லையே யாஸ்மின். இனி… இனி மட்டும் எப்படி?” தொண்டை அடைத்தது அவனுக்கு.
“என்னைக் கொஞ்சம் விளங்கிக்கொள் விக்கி.” அவள் தவிப்போடு சொல்ல, அவனோ எரிமலையென வெடித்தான்.
“இனியும் உன்ன விளங்கி நான் என்ன செய்ய? என்ர மனுசி பிள்ளையையும் நல்லபடியா பாத்துக்கொண்டு எனக்காகக் காத்திருப்பாள் எண்டு நம்பித்தானே ஒவ்வொரு முறையும் இந்த வீட்ட விட்டு வெளியே போவன். அந்த நம்பிக்கைக்கு நல்ல பதில் சொல்லிட்ட! இனியும் உன்ன விளங்கிக்கொள்ள என்ன இருக்கு?”
அவனுக்குத் தன் மனதைப் புரிய வைக்கவே முடியாது என்று தெரிந்துபோக, “நான் அவனத்தான் கட்டப்போறன் விக்கி. எனக்கு விவாகரத்து வேணும்.” என்றாள் யாஸ்மின் முடிவாக.
தன் மனதை அறிந்தும், அதில் எவ்வளவு தூரத்துக்கு அவள் உயிரோட்டமாகக் கலந்திருக்கிறாள் என்று தெரிந்தும் அப்படிச் சொன்னவளை வெறித்தான்.
“நான் தரமறுத்தா?”
“நீ என்னட்ட கேக்காத விளக்கத்தை எல்லாம் கோர்ட்ல சொல்லி விவாகரத்து வாங்குவன்.”
முற்றிலுமாக உடைந்து போனான் விக்ரம். கோர்ட்டுக்குப் போனால் இதையெல்லாம் பார்க்கும் மகனின் மனநிலை என்னாகும்?
அன்றுவரை அவள் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்தவன், அவளின் மனம் கோண நடக்காதவன் தன் மனதைக் கல்லாக்கிக்கொண்டு அதையும் கொடுத்தான்.
வேறு என்னதான் செய்வதும்?
அவனை வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டு, தனக்கான அடுத்த துணையாக இன்னொருவனைத் தேர்வும் செய்துவிட்டு, அவனைத் தன்னிடமே அவள் அறிமுகப் படுத்தியபோது அவனால் என்ன செய்துவிட முடியும்? அப்படிச் செய்தாலுமே அதில் ஏது பலன்?
காதலித்துக் கட்டிய கணவனைப் பற்றி அவள் சிந்திக்கவில்லை. பத்துமாதம் சுமந்து பெற்ற மகனைப் பற்றி யோசிக்கவில்லை. அவர்கள் மூவரினதும் எதிர்காலம் பற்றிக் கவலைப்படவில்லை. அவள் இல்லாமல் அவனும் மகனும் என்னாவார்கள் என்றுகூடச் சிந்திக்கவே இல்லையே.
“மகன் என்னட்ட இருக்கட்டும்.” அவளின் முகம் பாராது அவன் சொன்னபோது, கலங்கிய விழிகளை மூடித்திறந்து சம்மதித்துவிட்டு அவனைப் பிரிந்து சென்றாள் யாஸ்மின்.
இதெல்லாம் நடந்து நான்கு வருடங்கள் ஓடியிருந்தன. இருபத்திமூன்று வயதில் நடந்த திருமணம் இருபத்தியெட்டு வயதில் முறிந்தே போயிற்று! ஆனாலும், அன்றைய நினைவுகள் இன்றும் மனதில் ரணமாய்க் கிடந்தன. கண்களை இறுக மூடிக்கொண்டு சிலையென அப்படியே நின்றான் விக்ரம்!
அன்று அவள் என்ன சொல்ல வந்தாள் என்பது இன்று அவள் சொல்லாமலே புரிந்தது அவனுக்கு.
முகம் பார்த்துச் சிரிக்க ஒருவரின்றி, மனதிலிருப்பதைக் கொட்ட ஒரு துணையின்றி, தலை சாய ஒரு மடியின்றி, சிகை கோத இரு கரங்களின்றி அவன் வாழ்க்கையே மரத்துப்போயிற்று!
அந்தத் தனிமையை அது தரும் வலியை இன்று அவன் உணர்கிறான்தான். ஒரு பெண்ணாக, மனைவியாக அவளின் உணர்வுகளையும் விளங்கிக்கொள்ள முடிகிறதுதான். ஆனால், ஒரு தாயாக? தன்னைப் பற்றி மட்டுமே யோசித்து, மகனை முற்றிலுமாக மறந்து இன்னொரு வாழ்க்கையைத் தேடிப்போக எப்படி முடிந்தது?
எந்தக் கோணத்திலிருந்து சிந்தித்தாலும் இந்தக் கேள்விக்கு மட்டும் அவனிடம் நியாயமான பதில் இல்லவே இல்லை. நியாயப்படுத்தவும் விரும்பவில்லை!
அன்று தாய்க்காக ஏங்கிய குழந்தையை வைத்துக்கொண்டு எவ்வளவு கஷ்டப்பட்டான்? தன்னோடு வைத்துக்கொண்டது பெரும் தவறோ? தாயிடமிருந்து பிள்ளையைப் பிரித்துவிட்டேனோ என்று எப்படியெல்லாம் துடித்துப்போனான்.
ஆயினும், பிள்ளையைப் பற்றிச் சிந்தியாது தன் வாழ்க்கையைத் தேடிப் போனவளிடம் அவனை விடவும் விருப்பமில்லை. பிள்ளைமீது பாசம் இருந்திருக்க அவளால் இப்படியொரு காரியத்தைச் செய்திருக்க முடியாதே! பிறகும் ஏன் மகனை அவளிடம் கொடுக்க வேண்டும்?
ஆனால், அந்த மகனைத் தாயின் ஏக்கத்திலிருந்து வெளியே கொண்டுவர ஆறு மாதத்துக்கும் மேலாகிப் போனது விக்ரமுக்கு. அத்தனை வேலைகளையும் பொறுப்பையும் நண்பனிடம் கொடுத்துவிட்டு வீட்டோடு இருந்துகொண்டான். எந்தக் காரணத்துக்காகவும் மகனையும் இழக்க அவன் தயாரில்லை. ஒருமுறை பட்ட காயமே போதும்!
உண்ணும் உணவு முதல்கொண்டு, குளியலுக்கு, விளையாட்டுக்கு, டிவி பார்ப்பதற்கு, உறங்குவதற்கு என்று அத்தனைக்கும் அன்னைக்காக ஏங்கிய மகனை ஒரு நிலைக்குக் கொண்டுவருவதற்குள் அவன் பட்டுவிட்ட பாடு சொல்லி மாளாது.
அவளை மறக்க முயலும் ஒவ்வொரு நொடியிலும் அம்மாவுக்காக உதடு பிதுக்கி அழுது பிள்ளை நினைவு படுத்தும்போது, தன் வலி ஒரு பக்கம், மகனின் வலி ஒரு பக்கம் என்று அந்த நாட்கள் நரகத்திலும் நரகம்தான்.
தாயுமானவனாகவே மாறி ஒரு வழியாக மகனை அந்தத் தவிப்பிலிருந்து வெளியே கொணர்ந்துவிட்டான். இன்று வரையிலும் தாய் என்கிற ஒருத்திக்காக மகன் ஏங்கிவிடக் கூடாது என்பதில் மிகவுமே கவனமாக இருக்கிறான். அந்தளவில் அவனுக்கு வெற்றியே! அந்தளவில் மட்டும்தான்! இதோ இன்றுவரை நெஞ்சைத் திண்ணும் அந்த ரணத்திலிருந்து அவனால் வெளியே வரவே முடியவில்லை.
அப்போது அவனது கைபேசி அழைத்தது. சலிப்புடன் பொக்கெட்டுக்குள் கையை விட்டு எடுத்துக் காதுக்குக் கொடுத்து, “சொல்லடா…” என்றான், அழைப்பது நண்பன் அசோக் என்றறிந்து.
“என்ன மச்சான்? ஏன் ஒருமாதிரிக் கதைக்கிறாய்?”
“தெரியேல்லடா. என்னவோ எல்லாமே மனம் விட்டுப்போன மாதிரி இருக்கு.” எல்லையற்ற வலியும் விரக்தியும் அவனிடத்தில்.
விக்ரமைப் பற்றி முழுவதும் அறிந்தவன் அசோக். இன்னொரு திருமணம் செய்துகொள் என்று எத்தனையோ தடவைகள் சொல்லிவிட்டான். கேட்ட பாடே இல்லை.
“தனிமை இவ்வளவு கொடுமையா இருக்கும் எண்டு நான் நினச்சே பாக்கேல்ல அசோக். சிலநேரம் வாழ்க்கையே வெறுத்துப்போகுது. ஆறுதலுக்குக் கூடப் பக்கத்தில ஒருத்தர் இல்ல மச்சான்.” சொல்லிக்கொண்டு போனவனுக்குக் குரல் அடைத்துக்கொண்டது.
இன்று அவன் எப்படித் தாயாகத் தாரமாக அவனைத் தாங்க ஒரு உயிரைத் தேடுகிறானோ, அன்று அவளும் அப்படித்தான் தன் அருகண்மையைத் தேடி இருப்பாளோ என்று தோன்றவும், காலம் கடந்து உரைத்த உண்மையின் கசப்பைத் தாங்க முடியாமல் நின்றான் விக்ரம். பிள்ளையை அவன் தாங்குவான். அவனை?
அசோக்குக்கும் பேச்சே வரவில்லை. இப்படியெல்லாம் மனத்தைத் தளர விடுகிறவன் அல்லன் விக்ரம். அதோடு, எதையும் இலேசில் வெளியில் சொல்லவும் மாட்டான். அப்படியானவன் இப்படிப் புலம்புகிறான் என்றால்?
“இதுக்குத்தான் சொன்னனான் இன்னொரு கல்…” என்று ஆத்திரத்தோடு ஆரம்பித்துவிட்டு, இதை இப்போது கதைப்பது உசிதமல்ல என்றுணர்ந்து அதை நிறுத்தினான்.
ஏற்கனவே நொந்துகொண்டு நிற்பவனிடம் கத்தி என்ன பிரயோசனம்?
“நேரம் ஆகிட்டுது, ஒபீஸ்க்கு உன்னை இன்னும் காணேல்லையே எண்டுதான் எடுத்தனான். இண்டைக்கு நீ வராத. நானே எல்லாத்தையும் பாக்கிறன். நீ ஒண்டையும் யோசிக்காம நிம்மதியா இரு.” என்றுவிட்டுக் கைப்பேசியை அணைத்தான்.
விக்ரமுக்கு ஏனோ யாஸ்மினைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. அவள் எப்படியிருக்கிறாள், அவள் வாழ்க்கை எப்படிப் போகிறது, இப்போது எப்படியிருப்பாள் என்று தெரிய வேண்டும் போலிருந்தது.
உடனேயே சொல்லாமல் கொள்ளாமல் அவள் வீட்டுக்கே போனான்.