நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் 11 – 1

அன்று மதியம்போல், அசோக்கின் மாமி வீட்டில் யாமினி பிள்ளைகளை விட்டுவிட்டு அசோக்குடன் சென்று வீட்டை விக்ரம் பார்த்து வந்தான். மூன்றுமாடிக் கட்டிடத்தில் இரண்டாவது மாடியில் ஒரு அறை, ஹால், கிச்சன், பாத்ரூம் என்று கச்சிதமான வீடு. சின்னதாய் பால்கனி வேறு!

அங்கிருந்த பெரும்பாலானோர் இவளைப் போலவே, கணவன் வெளிநாட்டில் இருக்க அங்கே தங்கி இருந்தார்கள். பக்கத்திலும் குடிமனைகள். பாதுகாப்பான இடம். மிகத் திருப்தியாக இருந்தது. சற்றுத் தூரத்தில் கடற்கரை வேறு! சுற்று வட்டாரத்தைச் சுற்றி பார்த்தார்கள். கடைகள், சின்னதாகப் பார்க், கோவில் என்று எல்லாமே வசதியாகவும் இருந்தன.

வீட்டுக்காரரிடம் திறப்பை வாங்கி, கொண்டுவந்த பொருட்களை அந்த வீட்டில் இறக்கிவிட்டு, அன்றிரவு பிளைட் என்பதால் அசோக்கையும் டெனிஷையும் வழியனுப்ப எல்லோருமாகப் புறப்பட்டுச் சென்றனர்.

விமானநிலையத்தில், “பாப்ஸ் பாய்!” என்று எப்படி அவனை அணைத்து விடுவித்தானோ, அப்படியே, “யாம்ஸ் பாய்!” என்று அவளையும் அணைத்து விடைபெற்றான் டெனிஷ்.
சந்தனாவிடம் மட்டும், “ஹேய் பார்பி! கெதியா அங்க வா. உனக்கு அண்ணா ஒரு ரூம் ‘பார்பி ரூம்’ மாதிரியே ரெடி பண்ணி வைக்கிறன்.” என்று பெரிய மனிதனாகச் சொல்லிச் சென்றான்.

அவளைத் தங்கையாக ஏற்றவன் என்னை அன்னையாக ஏற்க வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டாள் யாமினி.
அசோக்கும் நண்பனை அணைத்து விடைபெற்று விட்டு, “சும்மா சும்மா எல்லாத்துக்கும் அதட்டுவான், நீ பயப்படாத. ஏதாவது சேட்டை விட்டான் எண்டா என்னட்ட சொல்லு. இவன ஒரு கை நான் பாக்கிறன்.” என்று பெரிதாக யாமினியிடம் அளந்தான்.

“நீ பாக்கிற நேரம் பார். இப்ப போடா! ப்ளைட் அங்க எடுக்கப் போறான்.” என்று அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டான் விக்ரம்.
அவர்கள் புறப்பட்டதும் இரவு உணவையும் கடையில் முடித்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றனர். யாமினிக்குள் ஒருவிதத் தடுமாற்றம்!

திருமணம் ஆனதிலிருந்து எல்லோருடனும் கூட இருந்துவிட்டு, இப்போது அவனும் அவளுமாக மட்டும் என்கையில்… மகள் கூடவே இருக்கிறாள்தான் என்றாலும் ஒருவிதமாகப் படபடப்பாக உணர்ந்தாள்.

அப்படி எதுவும் விக்ரமுக்கு இல்லை போலும். உடை மாற்றிக் கொண்டவன் உறக்கத்துக்கு அழுத மகளை, “நான் பாக்கிறன்.” என்று வாங்கிக்கொண்டு அறைக்குள் சென்றான்.
அதன் பிறகுதான் வீட்டை இன்னுமே நன்றாகச் சுற்றிப் பார்த்தாள் யாமினி.

“என்னென்ன வாங்கோணும் எண்டு லிஸ்ட் போட்டுவை, நாளைக்குப் போகலாம்.” என்று விக்ரம் சொல்லி இருந்தான்.
எனவே ஆறுமாதத்துக்குத் தேவையானதாக என்ன வாங்கலாம், அதை எங்கே வைக்கலாம் என்று வீட்டை ஆராய்ந்தாள். ஓரளவுக்குத் தனக்குத் தெரிந்தது, தேவை என்று பட்டவைகளைக் குறித்துக்கொண்டாள்.

‘எல்லாம் சரியா எண்டு அவரையும் கேட்டுட்டு வாங்கோணும்.’ இதை மனதில் குறித்துக்கொண்டாள்.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிக்கிட்டதிலிருந்து ஒழுங்கான நித்திரை இல்லாததாலோ என்னவோ, அவள் கண்களையும் உறக்கம் மெல்லத் தழுவமுயல, போனவர்கள் என்ன செய்கிறார்கள் என்று மெல்லச் சென்று எட்டிப் பார்த்தாள்.

பார்த்தவளால் அவர்களிடமிருந்து விழிகளை அகற்றவே முடியவில்லை. முதுகுக்கு ஒரு தலையணையைக் கொடுத்துக் கால்களை நீட்டி விக்ரம் சாய்ந்து இருக்க, அவன் மடியில் சந்தனா இரு பக்கமும் கால்களைப் போட்டு, அவனைத் தன் பிஞ்சுக் கரங்களால் கட்டி அணைத்தபடி மார்பில் தலை சாய்த்து உறங்கி இருந்தாள். இவனும் அவளை இரு கைகளாலும் அணைத்தபடி கண் மூடிச் சாய்ந்திருந்தான்.
இமைக்கவும் மறந்து பார்த்தாள். ஒரு ராணியைப் போன்று மகள் துயிலும் அழகில் மனம் தொலைந்துபோனது!

அவளைக் கட்டிலில் போடுவோமோ என்று யோசித்தாலும் அந்த அழகிய கவிதையைக் கலைக்க மனம் வராமல் அவள் வெளியே செல்லத் திரும்பவும்தான் கண்டாள், விக்ரம் கண்களைத் திறந்து அவளையே பார்த்திருப்பதை.

இதயம் படபடக்கத் தொடங்கியது. இப்போதெல்லாம் அடிக்கடி இதுதான் நடக்கிறது. அவன் கண்களைச் சந்தித்தாலே இவளால் இயல்பாக இருக்க முடிவதில்லை.

அவள் வெளியே செல்லத் திரும்பவும், நேரத்தைத் திரும்பிப் பார்த்துவிட்டு, “நீயும் வந்து படு!” என்றான் அவன்.

மெல்ல நடந்து சென்று மற்றப் பக்கமாக அமர்ந்தாள். உள்ளுக்குள் சின்னதாய் நடுக்கம். பார்வை மகளிடம் சென்றது. அதைக் கண்டு அவனும் சந்தனாவைப் பார்த்தான். ஆழ்ந்த உறக்கம் நிம்மதியாக அவளைத் தழுவி இருந்தது. மென்மையான புன்னகை ஒன்று இதழ்களில் ஜனிக்க, மகளின் முடிக் கற்றைகளைக் கோதிவிட்டான் விக்ரம்.

“ரெண்டு நாளா அலைஞ்சதில களைச்சே போய்ட்டா!” என்றான் தன் செல்லம்மாவிடமிருந்து விழிகளை அகற்றாமல்.

“ம்ம், நேற்றும் ஏனோ ஒழுங்கா படுக்கேல்ல. சிணுங்கிக்கொண்டே இருந்தவள்.”

மகளைப் பற்றிய பேச்சு இருவருக்கும் இயல்பாகவே வந்தது. நடுவில் அவள் தலையணையை வைக்க, அவளைக் கிடத்தினான் விக்ரம்.

போர்வையை எடுத்து அவள் போர்த்திவிட, அவன் தன் தலையணையை ஒழுங்காக எடுத்துப் போட்டுவிட்டுச் சரிந்தான். அதன்பிறகுதான் மூச்சே வந்தது அவளுக்கு.
அவனறியாமல் மூச்சை இழுத்துவிட்டாள்.

“காட்டுமிராண்டி மாதிரி ஒரேயடியா பாஞ்சிருவன் எண்டு நினைச்சியோ?”

திடீரென வந்த குரலில் சற்றே திடுக்கிட்டுத்தான் போனாள் யாமினி. ‘ஐயோ, எத நினச்சாலும் கண்டு பிடிக்கிறாரே.’ என்று பரிதாபமாக அவள் பார்க்க, “கொஞ்ச நாள் போகட்டும். எல்லாம் தானா நடக்கும். நமக்கு ஒண்டும் இது புதுசு இல்லையே.” என்றான் அவளையே பார்த்தவாறு.

அதுவே போதுமாக இருந்தது யாமினிக்கு. மனதின் பதட்டம் அடங்க ஒரு பக்கமாகச் சரிந்து தலைக்குக் கைகளைக் கொடுத்தபடி படுத்தாள். சற்றுமுன் அவன் சொன்னதே காதில் எதிரொலித்துக் கொண்டிருந்தது!

சற்று நேரத்திலேயே யாமினி நன்றாக உறங்கி இருந்தாள். அவளிடமிருந்து வந்த சீரான சுவாசம் அதை உணர்த்திற்று. மீண்டும் தலையணையை முதுகுக்குக் கொடுத்தபடி எழுந்து கால்களை நீட்டிக்கொண்டு அமர்ந்தான் விக்ரம். உறக்கம் வருவேனா என்று நின்றது. அவர்கள் இருவரையும் திரும்பிப் பார்த்தான். இனி தங்களைப் பார்த்துக்கொள்ள அவன் இருக்கிறான் என்கிற நினைப்புடன் நிம்மதியாக உறங்குவது போலிருந்தது.

அதுவும் யாமினி யாரையும் தன் வாழ்வில் அனுமதித்து விடாமல் தனியாக இருந்தவள். அவனை நம்பித் தன்னையும் மகளையும் தந்திருக்கிறாள்.

அன்றொருநாள், ‘என்னைக் கைவிட்டாலும் பரவாயில்ல, சந்தனாவ கை விட்டுடாதிங்கோ.’ என்று அவள் அழுதது நினைவலைகளில் மிதந்து வந்து மனதைக் கசிய வைக்க, அவள்மீது தன் விழிகளை ஓட்டினான்.

மேலே சுழன்ற காற்றாடியின் பலனாகக் கேசச் சுருள்கள் பறந்தவண்ணம் இருக்க, கையை நீட்டி அவள் தலையை வருடிக் கொடுத்தான். ‘செல்லம்மாவை மட்டுமில்ல உன்னையும் நல்லா பாப்பன். உனக்குத் தெரியுமா, இனி இதுதான் வாழ்க்க எண்டு மரத்துப்போய் இருந்த எனக்குள்ள உயிர்ப்பா வந்தவள் நீ! வாழ்க்கைல திரும்பவும் ஒரு பிடிப்ப எனக்குத் தந்தவள். உன்னக் கலங்க விடுவனா நான்?’ மனதால் அவளிடம் கதைதான்.

அவனின் வருடலாலோ என்னவோ அவள் புரண்டு படுக்க, கையை எடுத்துக்கொண்டான். கண்கள் மட்டும் அவளிடமே இருந்தன. யாஸ்மின் கூட அவனருகில் தன்னை மறந்துதான் உறங்குவாள். அவன் அருகில் இல்லாமல் நிம்மதியான உறக்கம் வராது என்பாள் என்று எண்ணியதுமே கசந்த புன்னகை அவன் இதழ்களில் வழிந்தது. இன்றானால்… என்று எதையெதையோ எண்ணி தறிகெட்டு ஓடிய நினைவைத் தடுத்து அடக்கினான்.

அதோடு, கணவன் இல்லாமல் குழந்தைக்காகத் தன் இளமை, எதிர்காலம், சந்தோசம் என்று அத்தனையையும் ஒதுக்கி வைத்தவளோடு தன் சந்தோசத்துக்காக மகனின் எதிர்காலத்தைக் கூட அலட்சியம் செய்தவளை ஒப்பிடுவது மகா தவறாகவே பட்டது!

‘இனியும் கூடாது! அவளின் நினைவுகளை அடியோடு மறக்க வேண்டும்! என் மனைவி என்னருகில் இருக்கிறாள். என் மகன் என்னிடம்தான் இருக்கிறான். என் மகள் என்னோடு இருக்கிறாள். என் குடும்பம் இதுதான்!’ என்று எண்ணியவனின் விழிகள் இப்போது சந்தனாவிடம் சென்றன.

யாஸ்மினின் நினைவுகளால் கிளறிவிடப்பட்ட காயத்துக்கு மருந்தாக அப்பா என்றபடி தாவும் சின்னவளின் அணைப்பு வேண்டும் போலிருந்தது. சாய்ந்து படுத்துச் சந்தனாவை மெல்லத் தூக்கி தன் மார்பில் போட்டுக்கொண்டான்.
உண்மையிலேயே பெரும் மருந்தாகித்தான் போனாள் அவனுக்கு! அவளை வருடிக் கொடுத்தான். மனம் மெல்ல மெல்ல அமைதியின் வசம் செல்ல, அவனை உறக்கமும் வந்து தழுவியது!

அடுத்தநாள் நல்லபடியாக அங்குப் போய்ச் சேர்ந்துவிட்டதாக அசோக் அழைத்துச் சொன்னான். டெனியும் தகப்பனோடு கதைத்தது மாத்திரமல்லாமல், யாமினியிடம் போனை கொடுக்கச் சொல்லிக் கதைத்தது வேறு யாமினிக்குச் சந்தோசமாக இருந்தது. அதன்பிறகு தயாராகி மூவருமாகக் கடைக்குச் சென்று, வீட்டுக்குத் தேவையான பொருட்களைப் பார்த்து பார்த்து வாங்கினர்.

ஹாலுக்குப் பொருத்தமாய்ப் பிரம்பு நாற்காலி செட், அறைக்குச் சின்னதாய் ஒரு கப்போர்ட், கிச்சனுக்குத் தேவையான பொருட்கள் என்று கச்சிதமாய் அவள் தெரிவு செய்ததைப் பார்க்கையில் மனதுக்கு நிறைவாய் உணர்ந்தான் விக்ரம்.

அன்று மதிய உணவைக் கடையில் முடித்துவிட்டு வரும்போது, “போகேக்க காய்கறி வாங்கிக்கொண்டு போனா இரவுக்கு நானே சமைச்சிடுவன்.” என்றாள் அவள்.

சரியென்று சென்று அன்றைய இரவுக்காக ரொட்டிக்கு மாவும், தேங்காய், செத்தல் மிளகாய் என்று மரக்கறியோடு சேர்த்து வாங்கிக்கொண்டாள்.

வீடு வந்ததுமே, அதற்காகவே காத்திருந்தவன்போல் அசோக் அழைத்தான்.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock