“என்னடா? ஒபீசுக்கு போனியா?”
“அதெல்லாம் போய்ப் பார்த்திட்டு வந்திட்டன். நீ முதல் ஃபேஸ்புக் பார்!” நக்கலாகச் சொல்லிவிட்டு வைத்துவிட்டான் அவன்.
‘என்ன இவன்… வேலையப் பற்றி ஒண்டும் சொல்லாம ஃபேஸ்புக் பாக்கச் சொல்றான்…’ யோசித்தபடி லாப்டாப்பில் முகப்புத்தகத்துக்குள் நுழைந்து, தன் சாவி கொண்டு திறந்தான்.
திறந்ததுமே வந்தது, “என்னுடைய மிகப் பெரிய கடமை சந்தோசமாக முடிந்தது!” என்கிற டெனிஸின் போஸ்டே!
முறுவல் அரும்ப பார்வையைக் கீழே ஓட்டினான்.
“என்ர பாப்ஸ் திருமணம்!” என்றதின் கீழே இவர்களின் திருமணப் புகைப்படம்!
அதுவும் சரியாக யாமினியின் கழுத்தில் இவன் தாலியைக் கட்டும்போது எடுத்தது!
அதைக்கண்டு ஒருகணம் இனிமையாக அதிர்ந்து, அடுத்தகணம் வாய்விட்டுச் சிரித்தான். கொஞ்சம் வெக்கமாகக் கூடப் போயிற்று!
யார் யாருக்குக் கல்யாணம் செய்து வைப்பது? வெள்ளை மனம் கொண்ட பிள்ளை அதைப் ஃபேஸ்புக்கில் வேறு போட்டுவிட்டான்!
புன்சிரிப்புடன் விழிகளை அந்தப் புகைப்படத்திலேயே நிறுத்திவைத்தான். அவனுக்கு நன்றாக நினைவிருக்கிறது, தாலியைக் கட்டுகையில் தலை குனிந்திருந்தாலும் ஆழ்கடல் போன்று அழகிய விழிகளை மட்டுமே உயர்த்தி அவள் அவனைப் பார்த்ததும், அந்த விழிகள் அவனிடம் வீசிய சாரலையும்!
அந்தச் சாரல் இப்போதும் நெஞ்சுக்குள் வீச, படத்தையே பார்த்திருந்தான். கையிலிருந்த மவுஸ் அவளின் முகத்தைச் சுற்றிச் சுற்றியே வட்டமடிக்க, சின்னதாகச் சிரித்துக்கொண்டான்.
படத்துக்குக் கீழே கொஞ்சம் சிரிக்கும் ஸ்மைலிகள், வாழ்த்துகளைச் சொல்லும் ஸ்மைலிகள், ஆணும் பெண்ணுமாய் நிற்கும் ஸ்மைலிகள் பரவிக் கிடக்க அதற்குப் பிறகு கண்ணை ஓட்டியவனின் முகம் உண்மையிலேயே சிவந்து போனது.
“பாப்ஸ், எனக்கு இன்னொரு தங்கை வேணும். கெதியா பெத்துக்குடு. அவளை நானே வளக்கோணும்.” என்று போட்டிருந்தான் அவன் மகன்.
“கடவுளே மானத்தை வாங்கிட்டானே.” என்றபடி தலையைக் கோதிக்கொடுத்தான் விக்ரம்! இதழ்களில் அடக்கமாட்டாத சிரிப்பு!
சமையலை முடித்து, சந்தனாவுக்கு உணவை ஊட்டி, உடம்பு கழுவி, வேறு உடை மாற்றிக்கொண்டு வந்த யாமினி, ‘யாரோட கதைக்கிறார்?’ என்பதாக அவனைப் பார்த்தாள்.
“அது இங்க!” என்றான் லாப்டப்பை காட்டி.
அவளும் அங்கே கண்ணை ஓட்ட, இவர்களின் திருமணப் படம்.
‘யார் போட்டது?’ என்று கிட்ட வந்து பார்த்தாள்.
டெனிஷ். அவன் மேலே எழுதியிருந்ததைப் படித்ததும் அவள் இதழ்களிலும் சின்னப் புன்னகை ஒட்டிக்கொண்டது. விக்ரமைத் திரும்பிப் பார்த்தாள்.
‘நான் நினச்சதுபோல அப்பாவும் மகனும் நல்ல க்ளோஸ்தான்.’ எண்ணிக்கொண்டே கீழே பார்வையை ஓட்டியவள் முகம் குப்பென்று சிவந்துபோனது.
வேகமாக அவனைத்தான் பார்த்தாள். அவன், சிவந்து கிடந்த இவள் முகத்தைக் கண்களில் சிரிப்போடு ரசித்துக்கொண்டிருந்தான்.
ஐயோ! வெட்கத்தில் சிரிப்புப் பொங்க அதை அடக்கிக்கொண்டு அங்கிருந்து ஓடியே போனாள் யாமினி.
இவனோ திரும்பி லாப்டாப்பை பார்த்தான். தலைகுனிந்து தாலியை வாங்கும் அவள் கண்ணில் பட்டாலும், முகம் முழுக்கச் சிரிப்பும் வெட்கமுமாக இப்போது ஓடியவள்தான் கண்ணுக்குள்ளேயே நின்றாள்.
யாமினியிடம் தன் மனம் மெல்ல மெல்ல இலயிப்பதை உணராமலில்லை விக்ரம். இப்படியே யாஸ்மினின் நினைவுகளும் தன்னை விட்டுத் தூரமாய்ப் போய்விட வேண்டும் என்று அவன் நினைக்கையில், அவர்கள் வீட்டுக் கோலிங் பெல் அழைத்தது!
போய்க் கதவைத் திறந்தான். மதியம் அவர்கள் வாங்கிய பொருட்கள் லாரியில் வந்திறங்கின. கொண்டுவந்தவர்களின் உதவியுடன் அனைத்தையும் ஒழுங்கு படுத்தி வைத்துவிட்டு, கேட்டதற்கு மேலே போட்டுக் கொடுக்கவும் அவர்களும் சந்தோசமாகவே வாங்கிக்கொண்டு சென்றனர்.
“இனி எல்லாத்தையும் எடுத்து வை.” என்றான் யாமினியிடம்.
அவளும் அதுவரை சூட்கேசுக்குள்ளேயே கிடந்த உடைகளை எடுத்து கப்போர்ட்டுக்குள் வைக்கவும், இவன் அசோக்குக்கு அழைத்தான்.
அவனிடம் வேலை விசயங்களைக் கேட்டுத் தெரிந்துவிட்டு வைத்தவனுக்கு விரைவிலேயே தான் அங்குப் போவதுதான் நல்லது என்று பட்டது.
‘அதுக்கு முதல் யாமினிய நாளைக்கு டொச் கிளாசுக்கு சேர்த்து விடவேணும். இவள் கிளாசுக்கு போனா செல்லம்மாவ என்ன செய்றது?’
அசோக்கின் மாமிக்கு அழைத்தான்.
“என்னப்பா வீடெல்லாம் வசதியா இருக்கா?” அவர் விசாரித்தார்.
“எல்லாம் நல்லாருக்கு அம்மா. பாதுகாப்பான இடம். தெரியாத ஊர்ல தனியா இருக்கப்போறா. இடம் எப்பிடியோ எண்டு பயந்தனான். ஆனா, மக்கள் புழங்குற இடமா பாத்துத் தந்திருக்கிறீங்க.” என்றான் நன்றியோடு.
“அதுக்கு என்னப்பா. சொந்தம் எண்டு இருக்கிறது இதுக்குத்தானே!” என்று பெருந்தன்மையோடு அவர் சொல்ல,
“இன்னுமொரு உதவி வேணுமே அம்மா.” என்று விசயத்தைச் சொன்னான்.
“அதுக்கு என்ன? எனக்கு நம்பிக்கையான ஒரு அம்மா இங்க இருக்கிறா. அவவ அனுப்பி வைக்கிறன்.” என்று அதற்கும் இலகுவாகத் தீர்வு சொன்னார் அவர்.
நன்றி சொல்லி இவன் அழைப்பைத் துண்டிக்க, “சந்து! அம்மாவ வேலை செய்ய விடு. அங்கால போ!” என்று யாமினி மகளோடு மல்லுக்கட்டுவது கேட்டது.
இதழ்களில் புன்னகை அரும்ப, “செல்லம்மா, என்ன செய்றீங்க?” என்று கேட்டுக்கொண்டே அறைக்கு நடந்தான்.
அங்கு அவன் மகளோ, சூட்கேசுக்குள் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தாள். அதோடு உடைகளை எடுத்துத் தன் மேலே போட்டுக்கொள்வதும், தூக்கி எறிவதுமாகத் தாயை வேலை செய்யவிடாமல் செய்துகொண்டிருந்தாள்.
அவளின் சேட்டைகளை ரசித்துச் சிரித்தவாறே, “அம்மாக்கு ஹெல் பண்றாளா என்ர செல்லம்! நீங்க வாங்க நாங்க டிவி பாப்பம்.” என்று அவளைத் தூக்கிக்கொண்டு ஹோலுக்குள் சென்று அமர்ந்துகொண்டான்.
வீட்டோடு இருந்த டிவியில் ‘டெலிடபீஸ்’ போட்டுவிட, அவனின் செல்லப் பெண்ணோ அவன் மடியில் இருந்தவாறே பார்த்திருந்தவள், சற்று நேரத்திலேயே உறங்கி இருந்தாள்.
“இதுக்குத்தான் அம்மாவப் போட்டு அந்தப் பாடு படுத்தினீங்களா செல்லம்.” என்றவாறு அவளைத் தூக்கிக்கொண்டுபோய்க் கட்டிலில் கிடத்தினான்.
வெளியே செல்ல எழுந்தவன், திறந்திருந்த கப்போர்ட்டை அப்போதுதான் பார்த்தான். சீராக உடைகளை அவள் அடுக்கிக்கொண்டு இருந்தாலும், உடைகள் இருந்த தட்டுகளை விட வெறுமையாக இருந்த தட்டுகளே அதிகமாக இருந்தன.
அடுத்தநாள் காலையிலேயே மனைவி மகளைக் கூட்டிக்கொண்டு போய் உடைகள் எடுத்துக் கொடுத்தான். மகளுக்கு டையப்பர் வாங்கினான். செலவு என்று அவள் இவ்வளவு நாட்களும் துணிதான் பாவித்தாள். சந்தனாவுக்கோ டையப்பர் வெகு இலகுவாக இருக்க, அவளின் உற்சாகம் இன்னொரு படி மேலேறியது. வெயில் பட்டுத் தன் பெண் கறுத்துவிடக் கூடாது என்று குடையோடு கிண்டர் வண்டில் ஒன்று வாங்கினான்.
விதம் விதமான தொப்பிகள். கூலிங் கிளாஸ். விளையாட்டு கிட்சென் செட், பார்பி பொம்மைகள், அது இது என்று சந்தனா அதுவரை பார்த்தே அறியாத பொருட்களை எல்லாம் வாங்கினான்.
சில நேரங்களில் இவளுக்கே தோன்றிவிடும், எப்படி இவனால் இந்தளவு பாசத்தை வைக்க முடிகிறது என்று. அந்தளவுக்குச் சந்தனா செல்லப்பெண்ணாகிப் போனாள் அவனுக்கு. ஏன் சந்தனா என்றுகூட அவன் சொன்னது கிடையாது. செல்லம்மா தான். இல்லையோ செல்லம். அவளும் “ப்பா ப்பா.” என்று இப்போதெல்லாம் எல்லாத்துக்கும் அப்பாதான். அம்மா என்று ஒருத்தி இருப்பதே நினைவில்லை.
பாலுக்கு அப்பா, சாப்பாட்டுக்கு அப்பா, உறங்க அப்பா, ஏன் விழித்ததும் அவள் தேடுவதும் அப்பாவைத்தான்! சில நேரங்களில் டயப்பர் மாத்துவது கூட அப்பாதான்!
இவள் தான் பதறிப்போய், “ஐயோ, இதெல்லாம் நீங்க ஏன் செய்றீங்க?” என்று வந்தாலும், “என்ர மகளுக்கு நான் செய்றன். நீ இதுல தலையிடாத” என்றுவிடுவான்.
அவளையும் விட்டு வைக்கவில்லை அவன். தோட்ட வேலையில் காய்ந்திருந்த கைகளை, கால்களைக் கண்டுவிட்டு மெனிக்கியூர் பெடிக்கியூர் என்று கூட்டிப் போனான்.
முகத்துக்கும் பேஷியல் அது இது என்று யாமினிக்கும் தான் என்னவோ புதிதாகப் பிறந்துவிட்ட உணர்வு. வறண்டு கிடந்த பாலைவனத்தில் சடசடவென்று பூக்களும் காய்களும் கனிகளும் காய்த்துவிட்டால் எப்படி இருக்கும்? அப்படியிருந்தாள் அவள்!
அப்படியே டொச் வகுப்புக்கும் சேர்த்துவிட்டான். சரளமாக அவன் டொச் பேசிச் சேர்த்துவிட்டதில் அவளுக்குச் சற்றே நிம்மதியும் கூட.
“எனக்கு ஒண்டும் தெரியாது. வடிவாச் சொல்லித் தரச் சொல்லிச் சொல்லுங்கோ.” என்று அவன் காதைக் கடித்தாள் யாமினி.
“தெரியாட்டித்தானே இங்க வருவீனம். தெரிஞ்சவே ஏன் வர?” விசமச் சிரிப்போடு சொன்னான் விக்ரம்.
‘என்ன சொன்னாலும் ஒரு நொள்ள சொல்லிடுவார். இவரோட மனுசர் படுற பாடு…’ என்று அவனை முறைத்தாள் அவள்.
“படிக்காட்டி திட்டக் கூடாது எண்டும் சொல்லுங்கோ. பிறகு நான் இங்க வரமாட்டன். நீங்கதான் வந்து எனக்காக டெஸ்ட் எழுதுவீங்க, சொல்லீட்டன்.” என்றாள் மிரட்டலாக.
அவள் பேச்சில் எழுந்த முறுவலோடு அவளைச் சுற்றிக் கையைப் போட்டபடி, “ஒழுங்கா படிக்காட்டி நாலு போட்டுப் படிக்க வைங்கோ. நான் ஏன் எண்டும் கேக்கமாட்டன்.” என்றான் ஆசிரியை பெண்மணியிடம்.
திடுக்கிட்டுப்போய் இவள் அவனை முறைக்க, அவரோ சிரித்துவிட்டு, “அப்படியெல்லாம் நாங்க நடக்கமாட்டோம். இதுவும் கஷ்டம் இல்லை மிசஸ் விக்ரம். ஆரம்ப அறிவு இருக்கா எண்டுதான் டெஸ்ட்டிலும் பாப்பீனம்.” என்றார் அவளிடம்.
அப்பாடி! அவ்வளவுதானா என்றிருந்தது யாமினிக்கு!