அழகான முன்மாலைப் பொழுது! கண்ணாடி முன் நின்றிருந்தாள் யாமினி. தன்னைத்தானே ரசித்தபடி. ஆமாம்! தன்னைத்தானே ரசித்தபடிதான்! அதுநாள் வரை அவளுக்கு அப்படி ரசிக்க என்ன, நன்றாக இருக்கிறேனா என்று பார்க்கக்கூடத் தோன்றியதில்லை. இன்றோ ஆசையாசையாக ரசித்தாள்!
தலைக்குக் குளித்து, ட்ரையரில் முடியைக் காயவைத்ததில், விரிந்து நின்ற கருங்கூந்தலில் வட்டமுகம் மலர்ந்து நின்றது. கனவுகளைச் சுமந்த விழிகள். அழகான நாசி. எப்போதும் நிரந்தரமாகத் தங்கிவிட்ட இதழோரச் சிரிப்பு.
‘நான் இவ்வளவு வடிவா?’ அவளால் நம்பவே முடியவில்லை!
இன்னுமே ஊன்றிப் பார்த்தாள். அழகாகத்தான் தெரிந்தாள். மனதுக்குச் சந்தோசமாயிருந்தது!
சங்குக் கழுத்தில் தொங்கிய தாலி தன்னை இப்படியெல்லாம் மாற்றிப்போட்டது யார் என்று சொல்லிற்று! மனமெங்கும் பூரிப்பு! கண்ணாடியில் தன்னையே பார்த்துப் புன்னகைத்தாள்.
ஆர்வத்தோடு, முதுகெங்கும் பரவிக்கிடந்த கூந்தலை கொஞ்சமாக எடுத்து கிளிப் போட்டு விரித்துவிட்டாள். கண்ணுக்கு மெலிதாக மையிட்டு இமைகளுக்கும் சற்றே காஜலைத் தடவிக்கொடுத்தாள். சிவந்த இதழ்களுக்கு லிப் க்ளோஸ் மட்டுமே போதுமாயிருந்தது! நெற்றியில் அழகாக வட்டமாகத் திலகத்தை வைத்துக்கொண்டு, கண்ணாடியில் தன்னை அப்படியும் இப்படியுமாகத் திரும்பிப் பார்த்தவளுக்குத் தன் உருவத்தில் அத்தனை திருப்தி!
“யாமினி! போவமா?” கேட்டுக்கொண்டே வந்த விக்ரம், அவளைப் பார்த்ததுமே அப்படியே நின்றுவிட்டான்.
சும்மா காற்றாட நடக்க என்று அணிந்துகொண்ட பாவாடை சட்டைதான். ரோஜா வண்ணப் பாவாடைக்கு வெள்ளை நிறத்தில் சட்டை. கழுத்தில் அவன் அணிவித்துவிட்ட தாலியோடு கூடவே கழுத்தைச் சுற்றி பூக்கள் பூத்தது போன்ற குட்டி நெக்லசும், அதற்குப் பொறுத்தமாய் அதே பூ வடிவ காதணியும் அணிந்து நின்றவளைக் கண்டவனின் கண்களில் ரசனை படர்ந்தது.
எப்போதும் அவனுக்குச் சொந்தமான அந்தப் புன்சிரிப்புடன், அவளை நோக்கிப் புருவங்களை ஒருமுறை ஏற்றி இறக்கினான் ‘சூப்பர்!’ என்பதாக!
உள்ளம் துள்ளிற்று அவளுக்கு! இது போதும்! இந்த ஒற்றைப் பாராட்டு பார்வைக்காகத்தானே அவள் பார்த்துப் பார்த்துத் தயாரானதே!
உற்சாகத்தோடு, “நான் ரெடி! வாங்கோ போவம்..” என்றபடி அவனோடு நடந்தாள்.
சந்தனாவைக் கிண்டர் வண்டிலில் அமர்த்தினான் விக்ரம். அவளுக்குக் குடிக்கத் தேவையான ஜூஸ், துடைக்கப் பேப்பர், டயப்பர், விளையாடப் பந்து சகிதம் அடங்கிய பாக் வண்டிலுக்குக் கீழே குடிபுகுந்தது! மெல்லியதாய் வீசிக்கிக்கொண்டிருந்த வெயில் அவளுக்குப் படாமலிருக்க, குட்டிக் குடையை விரித்துவிட்டான் விக்ரம்!
அவள் வண்டிலைத் தள்ள, “இங்க தா” என்று தான் வாங்கிக்கொண்டான்.
மாலைப்பொழுது. இளம் வெயில், கேசம் கலைத்து விளையாடிய காற்று. மகள் கணவன் என்று குடும்பத்தோடு நடக்கையில்தான் உணர்ந்தாள், வாழ்க்கை இத்தனை ரம்யமானதா?
நினைத்தே பார்த்ததில்லை அவள்!
பார்க்கும் இடமெல்லாம் ரம்யமாய்த் தோன்றிற்று!
வாழ்க்கை இப்படியெல்லாம் வண்ணமயமிக்கது என்பதெல்லாம் அவள் அறியாதது!!
“கோயிலுக்குப் போயிட்டு போவமா?”
என்னவோ இந்தச் சந்தோசமான வாழ்க்கையைத் தந்த கடவுளுக்கு நன்றி சொல்லவேண்டும் போலிருந்தது.
அவள் ஆசையாகக் கேட்டபிறகு மறுப்பானா விக்ரம்?
கூட்டிக்கொண்டு போனான். அந்தத் தெய்வத்திடம் கணவனோடு நின்று கை கூப்பியபோது மனம் நிறைந்தே போயிற்று!!
கோவிலால் அப்படியே கடற்கரைக்குப் போனார்கள்.
கடலைக் கண்டதும் அதன் அலைகளை விட உற்சாகமாகத் துள்ள தொடங்கினாள் சின்னவள்.
விளையாடக் கொண்டுவந்த பந்தை எடுத்துப் போட்டதுமே அதைப் பிடிக்க ஓடினாள் அவள்.
அவளருகே சென்று, “குட்டிம்மா.. அம்மாக்கு போடுங்க..” என்றாள் யாமினி.
சின்னவளும் தன் பிஞ்சுக் கரங்களால் தூக்கிப் போட, இவள் பிடிக்க முதல் நடுவில் பாய்ந்து அதனைக் கைப்பற்றினான் விக்ரம்.
யாமினி அவனை முறைக்க, விளையாட்டுக்குள் நடந்துவிட்ட இந்தக் குட்டி விளையாட்டில் சின்னவளுக்குக் குதூகலமோ குதூகலம்!! ‘கிக்கிக்கிஈ’ என்று பச்சரிசிப் பற்களைக் காட்டித் துள்ளினாள்.
“சரி..! நீங்க எனக்குப் போடுங்க நான் குட்டிக்கு போடுறன்” என்று அவனையும் ஆட்டத்தில் சேர்த்தாள் யாமினி.
தன் குறும்புச் சிரிப்பால் அவளைச் சீண்டிக்கொண்டே, “செல்லம்மாக்கு வேணுமா பந்து இல்ல அம்மாக்கு குடுக்கவா?” என்று பந்தைக் கையில் வைத்துக்கொண்டு இருவர் பக்கமும் ஆட்டம் காட்டினான் விக்ரம்.
சின்னவள் விடுவாளா?
“எனக்கு.. எனக்கு!” என்று துள்ள, இவளிடம் திரும்பி பார்வையால் சீண்டிவிட்டு மகளுக்குப் பந்தைப் போட்டான் விக்ரம்.
இடுப்பில் கைகளை ஊன்றி இவள் முறைக்க, அவள் மகளுக்கோ தாயைக் கழட்டிவிட்டு தகப்பன் தன்னோடு கூட்டணி வைத்துக்கொண்டதில் அத்தனை ஆனந்தம்.
துள்ளிக்கொண்டு ஓடிப்போய்த் தகப்பன் போட்ட பந்தை எடுத்துவந்து அவனுக்கு வீச, ‘துர்ர்ர்ரோகி!’ என்று மகளையும் முறைத்தாள் யாமினி.
பாசம் இருக்க வேண்டியதுதான். அதற்காக அம்மாவையே கழட்டிவிடும் அளவுக்கா பாசம் இருப்பது?
நோ! கூடாது! விடக்கூடாது!
விக்ரம் மகளுக்குப் பந்தை எறிய, அதை அவனைப்போலவே நடுவில் பாய்ந்து பிடிக்க எண்ணி இவள் பாய, அதை எதிர்பார்த்தவனோ அவள் இடுப்பில் கைகளைப் போட்டு ஒரே தூக்காக இவளைத் தூக்கி அந்தப் பக்கம் வைத்துவிட்டான்!