‘இப்ப என்ன நடந்தது இங்க?’ மலங்க மலங்க விழித்தாள் யாமினி!
தகப்பனின் வீரதீரச் செயலில் அவள் பெண் உருண்டு பிரண்டு சிரிக்க, ஆத்திரம் ஆத்திரமாக வந்தது அவளுக்கு!
“இண்டைக்கு விடுறேல்ல!” வீராவேசமாக விக்ரமை நெருங்கி, அவனிடமிருந்து பந்தைத் தட்டிப் பறிக்க முயல, அவனோ மகளுக்கும் போடாமல் அந்தக் கை மாற்றி இந்தக் கை என்று அவளுக்கு விளையாட்டுக் காட்டினான்.
இவளும் அந்தக் கைக்கு மாறி இந்தக் கைக்கு என்று தொங்கித் தொங்கிப் பிடிக்க முனைந்துகொண்டிருந்தாள்.
எங்க பிடிக்கிறது? அவன்தான் லைட் போஸ்ட்டருக்கு வைக்கும் ஏணி மாதிரி வளர்ந்து நின்றானே!
இதில் பந்தை வேறு தலைக்கு மேலே தூக்கிப் பிடித்தால்?
“இண்டைக்குப் பறிக்காம விடமாட்டன்!!”
“ஓ! எங்க பிடி பாப்பம்?” அவன் பெரிதாக ஒன்றுமே செய்யவில்லை. கைக்குக் கை பந்தை மாற்றுவது மட்டும் தான்!
வெகு மும்முரமாக அங்குமிங்கும் துள்ளித் துள்ளி பந்தைப் பிடிக்க முனைந்தவளையே சிரிப்போடு ரசித்துக்கொண்டிருந்தான்.
“மரியாதையா தாங்கோ..!” விரல் நீட்டி எச்சரித்தாள்.
“சரி தாறன்! அதுக்கு முதல் நான் உன்னக் காதலிக்கிறன் எண்டு டொச்சுல சொல்லு, அப்ப தாறன்.” பேரம் பேசினான் அவன்.
‘என்ன?’ ஒருகணம் அதிர்ந்து அசைவுகள் அற்று நின்றுவிட்டாள் யாமினி!
இப்போ ஒரு வாரமாகத்தான் வகுப்புக்கே போகிறாள். இதில் நான் உன்னைக் காதலிக்கிறேனா?
‘நான் உன்ன கொல்லப்போறன்’னுக்கு டொச்சு தெரியாம போச்சே!
“மரியாதையா பந்த தாங்கோ. வாங்காம விடமாட்டன் இண்டைக்கு!” மீண்டும் மிரட்டலில் இறங்கினாள்.
“மரியாதையா எல்லாம் தரமாட்டன். முடிஞ்சா என்னட்ட இருந்து வாங்கிக்கொள்.” என்றவன் பந்தை மேலே போட்டுப் போட்டுப் பிடித்தான்.
அவனைச் சவாலாக நோக்கிவிட்டு அவளும் மேலே பாய்ந்து பிடிக்க முனைந்தபோது, பந்தை மேலே போட்டுவிட்டு அப்படியே அவளையும் ஒரே தூக்காகத் தூக்கிப் பிடித்தான் விக்ரம்.
பந்திலேயே குறியாக இருந்தவள் அது தன் கைகளில் வந்து விழுந்ததும், “ஹே…ய்ய்ய்! பிடிச்சிட்டேனே.. பந்த பிடிச்சி..” என்றபடி குனிந்தவள் அப்போதுதான் உணர்ந்தாள் தான் அவன் கைகளில் இருப்பதை.
சட்டென முகம் சூடாவதை அவளே உணர, கைகளில் இருந்து பந்து நழுவியது. வெட்கமும் கூச்சமுமாக அவனிடமிருந்து இறங்க முயல, அவன் அவளையே பார்த்தான்.
என்ன இது?
குழப்பமும் படபடப்புமாக நின்றவளையே பார்த்துச் சின்னச் சிரிப்பொன்றை சிந்திவிட்டு, ஒருமுறை அணைத்து விடுவித்தான் விக்ரம்!
உடலெங்கும் பனிக்கட்டிகள் சூழ்ந்ததுபோல் சில்லிட்டு நின்றுவிட்டாள் யாமினி.
குறும்புடன் விக்ரம் கண்ணடிக்க, சட்டென்று அவனிடமிருந்து விழிகளை விலக்கியவள் ,‘குட்டிம்மா எங்க..?’ என்று மகளைத் தேடி விழிகளைச் சுழற்றினாள்.
‘என்னை விளையாட கூட்டிக்கொண்டு வந்திட்டு நீங்க ரெண்டுபேரும் என்ன செய்றீங்க?’ என்பதாக முறைத்துக்கொண்டிருந்தாள் அவள்! கையிலோ செல்!
‘இதை எப்ப குடுத்தான்? என்னோடதானே விளையாடிக் கொண்டிருந்தான்.’ கணவனின் குறும்புத்தனத்தில் சிரிப்பு வர மகளிடம் ஓடினாள் யாமினி.
“செல்லக்குட்டி என்ன செய்றீங்க?” அவளையே பின்தொடர்ந்த கணவனின் குறும்புப் பார்வையிலிருந்து தப்பிக்க எண்ணி மகளிடம் பேச்சுக்கொடுத்தாள்.
“ப்பா.. போன்..” என்று அதைத் தூக்கிக் காட்டிவிட்டு, அவள் மடியில் வாகாக ஏறி அமர்ந்துகொண்டு தன் விளையாட்டை அவள் தொடர,
‘பாருங்க! எப்ப பாத்தாலும் போன்ல விளையாட நல்லா பழக்கி இருக்கிறீங்க!’ என்று கண்ணாலேயே அவனை முறைத்தாள் யாமினி!
அவனோ அவளருகில் வந்து அப்படியே சரிந்தான்! கைகளைத் தலைக்குக் கொடுத்து மல்லாந்து படுத்தவனை யாமினி பார்க்க, “நிறைய நாளாச்சு யாமி நான் இப்பிடிச் சந்தோசமா இருந்து!” என்றான் உள்ளத்தில் இருந்து.
‘நானும் தான்!’ வாய்விட்டுச் சொல்லவில்லை அவள். ஆனால் உள்ளுக்குள் ஆச்சர்யமாகத் தன்னைத் தானே உணர்ந்துகொண்டிருந்தாள்.
‘இப்படிக் குழந்தைபோல் விளையாடுவதும் சிரிப்பதும் நானா? அதுவும் ஒரு ஆணோடு!’
கணவன்தான்! என்றாலும் முழுமையாக அவன் கணவனாக மனதில் வந்துவிட்ட மாதிரியும் காணோம்! ஒருவித ஈர்ப்பு அவளுக்குள் உருவாகிக்கொண்டுதான் இருக்கிறது. என்றாலும்.. மனதில் குழம்பிக் கொண்டிருந்தாள்.
தகப்பனை அருகில் கண்டதும் சும்மா இருப்பாளா சின்னவள்?
அவன் வயிற்றில் அவள் ஏற, “செல்லம்மா.. அப்பாட்ட வாறாங்களா..” என்றபடி மகளை அவன் கைகளால் தூக்கினான்.
தலை மண்ணில் சாயப்போக, “மண்ணில தலைய வைக்காதிங்கோ..” என்றாள் யாமினி அவசரமாக.
திரும்பி அவளைப் பார்த்துவிட்டு, சட்டென்று அவள் மடியில் தலையைத் தூக்கி வைத்துவிட்டான் விக்ரம்.
அப்படியே உறைந்தாள் யாமினி!
விக்ரமோ மகளோடு விளையாடத் தொடங்கினான். மனைவியின் அசைவற்ற தன்மையை உணராமலில்லை! அவனே அவனின் செய்கையை எதிர்பாராதபோது, அவள்?
இதழ்களுக்குள் பூத்துவிட்ட சிரிப்போடு, “கொஞ்சம் தலைய கோதிவிடேன்.” என்றான் கெஞ்சலாக.
‘என்ன?’ சின்ன அதிர்வோடு அவனைக் குனிந்து பார்த்தாள்.
அவனும் அப்போது அவளைத்தான் பார்த்தான். கண்கள் கண்களை மட்டுமே பார்க்கையில், அவன் விழிகள் அவள் மனதோடு என்னவோ பேச முயல்வது போலிருக்க, சட்டென விழிகளை விலக்க முனைந்தாள்.
முடியாமல் அவன் விழிகள் அவளைக் கட்டிப்போட்டதில் மனம் அவனிடம் சிக்குவது போலிருந்தது!
சுவாசம் சீரற்றுப்போக, தடுமாறியவளை ‘என்ன’ என்று புருவங்களை மட்டும் உயர்த்திக் கேட்டான் விக்ரம்.
ஒன்றுமில்லை என்று அவள் தலை மட்டும் ஆடியது.
‘அப்ப கோதிவிடன்’ ஆசையோடு கண்ணால் கேட்க, கைகள் நடுங்க அவன் கேசத்துக்குள் மெல்லக் கைகளை நுழைத்தாள் யாமினி.
அடர்ந்த கேசம் அவள் விரல்களைத் தனக்குள் வாங்கிக்கொள்ள, சிலிர்த்தது யாமினிக்கு! தன்னை மீறியே கோதிக்கொடுத்தது யாமினியின் விரல்கள்.
அவளின் முதல் ஸ்பரிசம்! தேகமெங்கும் சுகம் சேர்க்க மெல்ல மெல்ல கண்களை மூடிக்கொண்டான் விக்ரம்!
அவள் மடியில் அவன்! அவன் மார்பில் மகள்! நிறைந்துபோனது விக்ரமின் நெஞ்சம்!
இதுதான் அவன் தேடிய சொந்தம்!
இந்தச் சொந்தத்தைக் கூட இன்னும் மூன்று நாட்களில் பிரியப் போகிறான்! தற்காலிகப் பிரிவுதான் என்றாலும் நெஞ்சை அரித்தது வேதனை!