‘இவே ரெண்டுபேரையும் இங்க விட்டுட்டு எப்படி இருக்கப் போறன்?’
மனப்பாரம் தாங்காமல் கண்களைத் திறந்தான்.
அவளும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘நீங்க இல்லாம என்ன செய்யப்போறன் நான்?’ கேள்வி கேட்ட கண்களையே பார்த்திருந்தான் விக்ரம்.
இந்தப் பிரிவு தற்காலிகமானதுதான்! ஆனால் தவிர்க்கமுடியாததும் ஆயிற்றே! பெருமூச்சொன்று கிளம்பிற்று!
சுற்றுப்புறத்தில் மெல்லிய இருள் கவியத் தொடங்கவும், “வா போவம்!” என்றபடி எழுந்துகொண்டான்.
இருவர் மனதிலும் பாரம்! வெளியே சொல்லிக்கொள்ளவில்லை. அமைதியாகவே வீட்டுக்கு நடந்தனர்.
அடுத்தடுத்த நாட்கள் ஒருவித அமைதியோடு கழிந்தது. காலையில் நான்கு மணித்தியாலங்கள் அவள் வகுப்புக்குச் சென்றுவர, இவனும் கிடைத்த நேரங்களில் தானும் சொல்லிக்கொடுத்தான். மாலை உலாவல் என்கிற பெயரில் முடிந்தவரை அந்த ஊரை அவளுக்குப் பழக்கியும் ஆயிற்று! சூப்பர் மார்கெட் போகும் வழி, டொச் வகுப்புக்குப் போகும் பாதை, கோவிலுக்கு, பார்க்குக்கு, கடற்கரைக்கு என்று அவள் செல்லவேண்டி வரக்கூடிய இடங்கள் என்று சிலதை அனுமானித்துப் போய்வந்து பாதையைப் பழக்கினான்.
“பஸ்சிலையோ, நடந்தோ எங்கயும் போகாத. வெயிலுக்கத் திரியாத. ஆட்டோவிலேயே போ!” என்றவன், அந்தத் தெருவிலேயே வசிக்கும் சந்திரன் என்கிற ஆட்டோகாரரை அறிமுகப்படுத்தி அவரிடமும் சொன்னான், அவளைப் போகும் இடங்களுக்குக் கூட்டிப் போகச் சொல்லி. அவரின் கைபேசி எண்ணைத் தானும் வாங்கிக் கொண்டான்.
எல்லாம் செய்தாயிற்று என்றதும் மனம் பாரமாகத் தொடங்கிற்று. நாளை அவர்களை விட்டுவிட்டு அவன் போகவேண்டுமே!
அவளுக்கும் மனதில் சொல்ல முடியாத கனம்தான்! அதைச் சுமந்துகொண்டு எதையும் காட்டாமல் நடமாடிக் கொண்டிருந்தாள். அவளையே பார்த்திருந்தான் விக்ரம்.
‘நான் போனபிறகு என்ன செய்வா? சமாளிப்பாளா? ஊரும் புதுசு.. சிங்களமும் தெரியாது.. டொச் வேற புதுசா படிக்கோணும்.. என்ன செய்யப் போறா?’
அவனாலும் இதற்குமேலே இங்கே இருக்க முடியவில்லை. அசோக்கோடுதான் டெனிஷ் இருக்கிறான் என்றாலும் மகனை அப்படி விட விருப்பமில்லை. போயே ஆகவேண்டிய கட்டாயம் தொழிலும் உருவாகிக்கொண்டே வந்தது.
“யாமி இங்க வா..!” அவளைத் தன்னருகில் இருத்தி, கையைப் பற்றி, “இருப்ப தானே.?” என்று கேட்டதுமே கண்ணில் மளுக்கென்று நீர் கோர்த்துக் கொண்டது அவளுக்கு.
இவ்வளவு நாட்களும் தனியாகத்தான் இருந்தாள். ஆனால் இப்போது.. எதைப் பற்றியும் சிந்திக்காது, அவன் பார்த்துக்கொள்வான் என்கிற நினைப்போடு இந்த நாட்களைக் கடத்தியபிறகு, பார்த்துப் பார்த்துக் கவனித்துக்கொண்டவன் தந்த சுகத்தை அனுபவித்து விட்டவளுக்கு, அவன் இல்லாத நாட்களை நினைக்கவே மருட்சியாக இருந்தது. தனியாக இருக்கப் போகிறோம் என்கிற நினைவே வந்து அச்சுறுத்தியது.
‘எப்படி.. இந்தப் பரந்த உலகில்.. அருகில் அவன் இல்லாமல்.. நினைவே இப்படிக் கனக்குதே.. அப்போ நான் எப்படி..’ கன்னங்களை நனைத்துக்கொண்டு கண்ணீர் ஓடிக்கொண்டே இருந்தது. வாய்விட்டுச் சொல்ல ஏனோ முடியவில்லை.
மனம் தாங்காமல் அவளைத் தன் மார்பில் சாய்த்துக்கொண்டான் விக்ரம். “சும்மா எல்லாத்துக்கும் அழக்கூடாது!” கண்களைத் துடைத்துவிட்டான்.
“ஆறுமாதம் தானே. அது கண் மூடித் திறக்கிறதுக்குள்ள ஓடிப் போய்டும். துணைக்கு ஆயாம்மா இருப்பா. ஒண்டுக்கும் பயப்படாத என்ன!” என்று தனக்கும் சேர்த்து ஆறுதல் சொன்னான்.
“கவனமாப் படி. இடைல லீவு கிடைச்சா கட்டாயம் ஒருக்கா வரப் பாக்கிறன். வீட்ட ஒதுக்கிறன் சமைக்கிறன் எண்டு நேரத்த ஓட்டாம ஒழுங்கா படிச்சு ஒரே தரத்திலேயே பாசாகிடோணும். அதுக்கு மேலயும் உன்னையும் பிள்ளையையும் விட்டுட்டு இருக்க என்னால ஏலாது.” என்று தன் மனதைச் சொன்னான்.
அவள் ஒன்றுமே கதைக்கவில்லை. அவன் மார்பில் சாய்ந்து கண்ணீர் உகுத்துக்கொண்டிருந்தாள். விக்ரமுக்கும் அதற்குமேல் முடியவில்லை. அப்படியே அவளை அணைத்தபடி அமர்ந்திருந்தான்!
அருகருகே கழியும் நொடிகளை விட மற்றவர் அருகிலில்லாமல் கழிக்கப்போகும் நொடிகளை எண்ணி மௌனமாகிப் போயினர்!
அழுகையில் குலுங்கியவளின் முதுகை வருடிக்கொடுத்தான். “என்னாலையும் போகாம இருக்க முடியேல்லமா. இடைல எப்படியும் வருவன்.. ஆனா இப்ப போயே ஆகோணும்.” மனம் பொறுக்காமல் புலம்பினான்.
வரப்போகின்ற பிரிவு.. அவர்களுக்குள் ஒருவித நெருக்கத்தை உருவாக்கிக்கொண்டே இருந்தது.
அடுத்தநாள், விமான நிலையத்தில், நேரம் இன்னுமே இருந்ததில் அவளோடு சென்று கதிரையில்(நாற்காலி) அமர்ந்துகொண்டான். அன்று அதிகாலையிலேயே ப்ளைட் என்றதில் முழித்த சந்தனா திரும்பவும் உறங்கி இருந்தாள். அவளைத் தானே மடியில் வைத்திருந்தான் விக்ரம்.
அவளைப் பார்க்கப் பார்க்க மனம் கனத்தது. ‘நான் இல்லாம எப்படி இருப்பா? தத்தக்கா பித்தக்கா எண்டு என்னையே சுத்துவா. இனி என்ன செய்வா?’
மனைவியைத் திரும்பிப் பார்த்தான். தலையைக் குனிந்து கைகள் இரண்டையும் ஒன்றோடு ஒன்று பிணைந்து கொண்டிருந்தாள்.
சில நாட்களாக அவளிடம் தெரிந்த அந்த உற்சாகம், துள்ளல், விளையாட்டு எல்லாம் அடங்கிப் பழைய யாமினியின் சாயல் அடித்தது!
“ஊர்ல நிம்மதியா இருந்தவள கல்யாணம் எண்டுற பெயர்ல புது ஊர்ல தெரியாத மனுசருக்கு மத்தியில கொண்டுவந்து விட்டுப்போட்டுப் போறான் எண்டிருக்கா?” என்று கேட்டான்.
“ஐயோ.. அப்படியெல்லாம் இல்லை.” என்றாள் மனதின் கலக்கத்தைக் கண்களில் காட்டாதிருக்க முயன்றபடி.
“நீங்க எவ்வளவு தூரம் போனாலும் உங்கட பாதுகாப்புல நாங்க இருக்கிறோம் எண்டுற நினைப்பே எனக்குப் போதும்.” கசிந்த விழிகளோடு அவனையே பார்த்துச் சொன்னாள்.
பிரியப்போகும் அந்த நொடிகளில் ஒருவர் மீதான மற்றவரின் பாசம் வளர்ந்துகொண்டே போனது.
இருவருக்குமே பேச்சு வரவில்லை. மனம் கனத்துத் தொண்டை அடைத்துக் கொண்டது.
இனியும் தாமதிக்க முடியாத நிலை வந்தபோது, எழுந்து மகளைக் கிண்டர் வண்டிலில் கிடத்திவிட்டு, அவளின் நெற்றியில் தன் இதழ்களைப் பதித்தான் விக்ரம். வெண்பஞ்சுக் கன்னங்களைத் தடவிவிட்டு நிமிர்ந்தபோது அவன் விழிகள் கசிந்தே போயிற்று!
“சரிம்மா.. நான் வரவா?” மனதில் பாரத்தோடு கேட்டான்.
கண்களில் நீர் கோர்க்க தலையை மட்டும் அசைத்தவளைப் பார்க்கப் பார்க்க நெஞ்சுக்குள் அடைத்தது விக்ரமுக்கு.
“ஒண்டுக்கும் யோசிக்காத.. காசு ஏதும் தேவை எண்டாலும் என்னட்ட சொல்லோணும். பிள்ளைய கவனமா பாத்துக்கொள்.”
இதையெல்லாம் பலதடவைகள் சொல்லிவிட்டான்தான். ஆனாலும் மனம் கேட்கவில்லை.
எல்லாத்துக்கும் தலையை மட்டுமே அசைத்தாள்.
முடியவில்லை அவனால்.
“என்னடா? இருந்திடுவியா?”
மளுக் என்று கண்ணீர் வழிந்தது.
அவள் தலையைத் தன் மார்போடு அணைத்துக்கொண்டான் விக்ரம். “என்னம்மா நீ. இப்படி அழுதா நான் எப்படிப் போறது?”
“இல்லையில்ல! நான் அழேல்ல!” என்றபடி வேகமாகக் கண்ணீரை துடைத்தாள் யாமினி.
தாங்கமாட்டாமல் அவள் பூமுகத்தைப் பற்றி நெற்றியில் உதடுகளைப் பதித்தான் விக்ரம்.
“செல்லம்மா கார் சத்தம் கேட்டாலே ஓடுவா. பால்கனில தனியா விடாத.. நீயும் கவனமா இரு!” இதோடு பல தடவைகள் சொல்லிவிட்டான்.
இனியும் தாமதிக்க முடியாது. போகவே மனமில்லை. இருவரையும் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி மனதையும் நினைப்பையும் முற்றிலுமாக அவளிடமும் குழந்தையிடமும் விட்டுவிட்டு உயிர்ப்பே இல்லாமல் கிளம்பினான் விக்ரம்!