நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் 13 – 1

ஒரு பதுமை போன்று வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் யாமினி. கதவைத் திறந்ததுமே சோ என்று வெறிச்சோடிப்போய்கிடந்தது வீடு. அவனில்லாமல் அதற்குள் நுழையப் பிடிக்கவே இல்லை.

சின்னவள் வேறு, “ப்பா ப்பா” என்று சிணுங்கியபடி அவனைத் தேடத் தொடங்கியிருந்தாள்.

வீட்டுக்குள் எங்குப் பார்த்தாலும் அவன் நிற்பது போலவே தோன்றிற்று!

அவன் நின்றது.. நடந்தது..இருந்தது.. மகளோடு விளையாடியது என்று எங்குப் பார்த்தாலும் அவன் பிம்பம் தான். கத்தி அழவேண்டும்போல் ஒரு உத்வேகம் வந்து தாக்க, கதவை உட்புறமாகப் பூட்டிவிட்டு அதன் மேலேயே சாய்ந்துகொண்டாள்.

அதுநாள் வரை அவளே யோசித்து நல்லது கெட்டதை ஆராய்ந்து, மகளையும் பார்த்து, வேலை, சமையல் என்று ஓடிக்கொண்டிருந்தவளுக்குத் திடீரென்று அவனும் அவனது கவனிப்பும் கிடைத்தபோது அதை அனுபவிக்கத்தான் மனம் சொன்னது.

கடந்தகாலமே மறந்தகாலம் போன்ற ஒரு மாயை. எந்த நினைவுகளும் சிந்தனைகளும் இல்லாமல் மனதையும் மூளையையும் அவனிடமே ஒப்படைத்திருந்தாள், உனக்குப் பிடித்தவிதமாக என்னவேண்டுமானாலும் செய்துகொள் என்று! அப்படித்தான் இத்தனை நாட்களும் ஓடிற்று!

இப்போ அவன் அருகில் இல்லை என்கிற நிஜத்தையே ஜீரணிக்க முடியவில்லை. இதில் இனி வரும் நாட்களை அவன் இல்லாமல் எப்படிக் கடத்துவது?

இந்தப் பிரிவு இத்தனை ஆழமான துன்பத்தைத் தரும் என்று நினைத்தே பார்த்ததில்லை. அதேபோல் இந்தப் பிரிவுதான் அவனது அருமையை இன்னுமே உணர்த்திற்று!

கட்டிலில் விழுந்து அழவேண்டும் போலிருந்தது! ஆனால் மகள் இருக்கிறாளே! அவளுக்கு உணவை கொடுத்து, குடிக்கவும் கொடுத்தாள்.

அவள் வயிற்றுக்குப் பச்சை தண்ணீர் கூட இறங்க மறுத்தது! அதை அவன் முதலே உணர்ந்திருக்கிறான். அதனால் தான் அங்கே விமானநிலையத்தில் வைத்து, கட்டாயப்படுத்தி அவளைச் சாப்பிட வைத்தான்.

அந்த நினைவு வந்து கண்களை மீண்டும் கசிய வைக்க மகளோடு சென்று கட்டிலில் படுத்துக்கொண்டாள்.

‘ப்ச்! அவர் கல்யாணத்துக்குக் கேட்ட நேரமே ஓம் எண்டு சொல்லியிருக்க இன்னும் கொஞ்சநாள் அவரோட இருந்திருக்கலாம். இனி எப்ப வருவாரோ.. எப்ப பாப்பேனோ..’ இப்படியே யோசித்தபடி எப்போது என்று தெரியாது உறங்கிப்போனாள் யாமினி.

எழுந்ததும் மீண்டும் கணவன் நினைவுதான் வந்தது. ஆனால் கொஞ்சம் மனம் தெளிந்தும் இருந்தது!

‘பதினாலு மணித்தியால பயணம் எண்டு சொன்னவர். என்ன செய்றாரோ தெரியேல்ல. அவருக்கும் எங்கள விட்டுட்டு போக விருப்பம் இல்ல’ அவன் நினைவுகளைச் சுமந்தபடி மகளைக் கவனித்தாள்.

அவளோ, “அப்பாட்ட போவம்.. ப்பா.. அம்மா அப்பா” என்று சிணுங்கிக்கொண்டே இருந்தாள்.

அவளைச் சமாளித்துக்கொண்டு கஷ்டப்பட்டு நேரத்தை கடத்த, அழைத்தான் விக்ரம்.

“நல்லபடியா போய்ச் சேந்திட்டீங்களா? ஒரு பிரச்சனையும் இல்லையே..” கரகரத்த கண்ணீர் குரலில் கேட்டாள்.

“ஒரு பிரச்சனையும் இல்ல. செல்லம்மா என்ன செய்றா? என்னைத் தேடினவாவா?”

எடுத்ததும் மகளைத் தேடியவனின் பாசம் மனதை வருடிச் சென்றது!

“இப்ப வரைக்கும் உங்களைத்தான் கேட்டுக்கொண்டு இருக்கிறா..” என்றவளுக்குக் குரல் அடைத்தது. ‘நானும்தான்’ என்று சொல்ல முடியாமல் நின்றாள்.

“அப்பா ஊருக்கு போய்ட்டார், வருவார் எண்டு சமாதானப் படுத்து. அழவிடாத.” என்றவன் சற்றுத் தாமதித்து,

“நீ எப்படி இருக்கிற?” என்று மென்குரலில் கேட்டான்.

நெஞ்சை தொட்டுச் சென்ற மென்மையில் கண்ணைக் கரித்தது. மகளைப் பற்றி விசாரிக்கையில் பாசத்தில் நெகிழ்ந்த குரல் அவளைப் பற்றிக் கேட்கையில் பிரிவில் துடித்தது!

“ம்ம்.. இருக்கிறன்.” பொங்கிய அழுகையை உதட்டைக் கடித்து மறைத்தாள்.

“இன்னும் அழுறியா என்ன? என்ர யாமினி எவ்வளவு தைரியமானவள் எண்டு நான் நினைச்சுக்கொண்டு இருக்கிறன். நீ என்னடா எண்டா குழந்தை மாதிரி இப்படி அழுகிறாய்?” என்றான் கேலிபோல.

“சந்துக்குச் செய்ற மாதிரி எனக்கும் எல்லாத்தையும் பாத்து பாத்துச் செய்து என்னையும் குழந்தைப்பிள்ள மாதிரி மாத்தினது நீங்க! இப்ப இப்படிக் கேட்டா?” என்று சொல்லிக்கொண்டு வந்தவள் என்ன முயன்றும் முடியாமல் சட்டென்று உடைந்தாள்.

“என்னால முடியேல்லப்பா. நீங்க இல்லாம இந்தக் கொஞ்ச நேரத்தையே கடக்க முடியேல்ல. இன்னும் ஆ..று மாதம் இருக்கு.” என்று அழவும் விக்ரம் தான் தவித்துப் போனான்.

என்ன சொல்வான்? அவ்வளவு தூரத்தில் இருந்து கதறுகிறவளை என்ன சொல்லி ஆற்றுவான்? அடுத்த ப்ளைட்டை பிடித்துத் திரும்பவும் அங்கே போவமா என்றுதான் வந்தது!

“அதென்ன ஆ..று மாதம்? வெறும் ஆறே மாதம். இந்தா இந்தா எண்டு ஓடிப்போய்டும். அதுக்குப்போய் யாராவது இப்படி அழுவங்களா?” என்றான் கேலிபோல்.

என்னதான் கேலி செய்தாலும் அந்தக் குரலில் மறைந்துகிடந்த தவிப்பை உணர்ந்தவளுக்கு, அவ்வளவு தூரத்தில் இருக்கிறவனையும் சேர்த்து வருத்துகிறோம் என்று விளங்க ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டுத் தன்னை ஆசுவாசப் படுத்தினாள்.

“இல்ல.. நான் அழேல்ல. நீங்க கவலைபடாதீங்கோ. கொஞ்சநாள் தானே நான் சமாளிப்பன்.” தன் கண்களைத் துடைத்தபடி சொன்னாள்.

“ஆனா லீவு கிடச்சா டெனிசையும் கூட்டிக்கொண்டு கட்டாயம் வரோணும்.”

அவன் சரி என்று சொன்னபிறகே கொஞ்சமேனும் சமாதானமானாள்.
அதன்பிறகு மகளோடும் கதைத்துவிட்டு வைத்தான் விக்ரம்.

ஆயாம்மாவிடம் மகளை விட்டுவிட்டு அடுத்த நாளிலிருந்தே வகுப்புக்கும் போகத் தொடங்கினாள் யாமினி. ஏனோ மனம் வேகமாகப் படிக்கத் தூண்டியது. பள்ளிக் காலத்தில் கூட அவள் ஒன்றும் கெட்டிக்காரி அல்ல. சராசரி மாணவிதான். ஆனால் இங்கே.. எந்தப் பிழையும் விட்டுவிடக் கூடாது என்று மனம் உந்தியது.

ஒரே தடவையில் பாசாகி அவனிடம் போய்விடவேண்டும் என்கிற நினைவே நன்றாகப் படிக்கத் தூண்டியது.

போய்ச் சேர்ந்ததுமே விக்ரமை அவன் வேலைகள் சுற்றி வளைத்துக் கொண்டன! அசோக் எவ்வளவோ மறுத்தும் அவனுக்கு ஒருவார லீவை கொடுத்து மனைவி பிள்ளையோடு சந்தோசமாக இரு என்று அனுப்பிவைத்தான். சாப்பிடக்கூட நேரமில்லாமல் இரவு பகலாக வேலைகளைப் பார்த்தாலும் முடியவே மாட்டேன் என்றது!

அன்று இரவு ஒரு பார்ட்டி என்பதால் சற்று நேரத்துக்கே வீடுவந்து மகனோடு சைக்கிள் ஓடப்போனான். இத்தனை நாட்கள் அவன் இலங்கையிலும் டெனிஷ் ஜெர்மனிலும் என்று போனதில், எவ்வளவுதான் வேலைப்பளு அழுத்தினாலும் முன்னர்ப் போலவே மகனுக்கும் நேரத்தை ஒதுக்கி அவனோடு இருப்பதை விடவேயில்லை அவன்.

ஒருநாள் ஸ்விம்மிங் போனார்கள். இன்னோர் நாள் எங்காவது சாப்பிட போனார்கள். புட்பால் விளையாடினார்கள், இல்லையோ டெனிக்கு பிடித்த ஏதாவது டொச் படத்தை வீட்டில் ப்ரொஜெக்டரில் போட்டுப் பார்த்தார்கள்.

சைக்கிள் ஒட்டிவிட்டு வந்ததும் மகனுக்குப் பிடித்த பிட்சா வருவித்துக் கொடுத்தான். அதன் பின்னர் பார்ட்டிக்கு போய்விட்டு விக்ரம் வீடு திரும்ப இரவு பண்ணிரண்டாகி இருந்தது.

மனைவி பிள்ளைகளின் நினைவில் உள்ளம் உழன்றதில் அதை மறைத்து மற்றவர் முன்னிலையில் பொய்யாகச் சிரித்து உற்சாகமாகக் காட்டிக்கொண்டது மனதை துவளச் செய்ய, முற்றிலுமாகச் சோர்ந்துபோய் வந்தவனை மயான அமைதியுடன் இருந்த வீடே வரவேற்றது.

“ப்ச்!” மனமும் உடலும் சலிக்கச் சோபாவில் தொப் என்று விழுந்தான்! கண்களை மூடிக்கொண்டு தலையைச் சாய்த்தவனுக்கு, ஆதரவாய் ஒருகரம் தோள் தொடாதா என்றிருந்தது.

ஒரு ஆறுதலான பேச்சு? இன்றைய நாள் எப்படிப் போனது என்று கேட்க ஒரு ஆள்? ஏன் லேட் என்று கோபப்படக் கூட ஒருவர் இல்லையே! என்று நினைக்கையிலேயே சாப்பிட்டீங்களா என்று கேட்டு யாமினி அனுப்பிய மெசேஜ் நினைவு வரவும் சட்டென்று செல்லை எடுத்துப் பார்த்தான்.

‘ஹாய்’ என்றபடி முதலில் ஒரு ஸ்மைலி நின்றது. அவளே சிரித்துக்கொண்டு கையாட்டி ஹாய் சொல்வது போலிருக்க மெல்லச் சிரித்துக்கொண்டான்.

அடுத்து, ‘சாப்பிட்டீங்களா?’ என்று கேட்டிருந்தாள்.

மீட்டிங்கில் இருந்ததில் ஒரு ‘எஸ்’ ஐ மட்டும் ஆம் என்பதாக அனுப்பி இருந்தான் விக்ரம்.

அதற்குக் கீழே ஒருமணி நேரத்தின் பின்னே கைகளின் மேலே தலை வைத்து படுக்கும் ஒரு ஸ்மைலியோடு ‘குட் நைட்’ என்று அனுப்பி இருந்தாள். அன்று அவள் தன்னருகில் நிம்மதியாக உறங்கியது கண்முன்னே வந்து நிற்க, சற்றுநேரம் அதையே பார்த்திருந்தான், அன்றைய அவளின் நினைவுகளோடு!

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock