நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் 13 – 2

‘குட் நைட்’ என்று டைப் செய்தவன், ‘ஓ..! இப்ப அங்க குட் மோர்னிங்’ என்று எண்ணிக்கொண்டு அதை டிலீட் செய்தான்.

கடைசியாகச் சந்தனா கட்டிலில் அமர்ந்து சிரித்துக்கொண்டிருக்கும் ஒரு போட்டோ அனுப்பியிருந்தாள். புன்னகை விரிய அந்தப் போட்டோவை தொட்டான் விக்ரம். அவனின் செல்லம்மா மட்டுமே செல்லில் நிறைந்து நின்று அவனையே பார்க்க, “என்ர செல்லம்!” என்றபடி மகளுக்கு ஒரு பாச முத்தத்தை வழங்கியவனுக்கு இருந்த சோர்வெல்லாம் எங்கே போனது என்றே தெரியவில்லை.

புது வேகத்தோடு எழுந்தவன் நேரே மகனின் அறைக்குச் சென்றான். அங்கே தனக்குத் தானே பார்த்துப் பார்த்து செய்த அறையில் ‘மக் குயீன்’ கார் பெட்டில், ‘எல்இ டி’ லைட் மின்ன ஆழ்ந்த துயிலில் இருந்தான் டெனிஷ்.

போர்த்தியிருந்த பெட்ஷீட்டுக்கு மேலே ஏதோ ஒரு புத்தகம் அவன் மார்பில் திறந்தபடி உறங்கிக் கொண்டிருந்தது. அருகில் இருந்த மேசையில் ‘கூட்ட நஹ்ட் பாப்ஸ்..!’ என்கிற வாசகம் ஒரு போர்டில் மின்னி மின்னி ஒளிர்ந்துகொண்டிருந்தது.

‘கூட்ட நஹ்ட் டெனிஷ்!’ என்று வாயசைத்தவனுக்கு மகனின் பாசத்தில் மனம் கரைந்தது!

அவன் மார்பில் கிடந்த புத்தகத்தை மூடி எடுத்து வைத்தான். அந்தப் போர்டில், காலையில் எழுந்ததும் டெனிஷ் பார்ப்பதற்காக, ‘கூட்டன் மோர்கன்’ என்று மாற்றிவிட்டான். அதோடு, இரவில் எப்போதாவது முழிப்பு வந்து பார்க்கையில், அப்பா வீட்டுக்கு வந்துவிட்டார் என்று அவனுக்கு உணர்த்துவதும் அதுதான். இது அவர்களுக்குள் தினமும் நடக்கும் ஒன்று!

சத்தமில்லாமல் வெளியே வந்தவனின் மனம் மனைவி பிள்ளைகளின் அன்பில் கனிந்திருந்தது. ‘இன்னும் கொஞ்சநாள்தான்.. பிறகு இந்த வீடு நான் ஆசைப்பட்ட மாதிரியே பேச்சும் சிரிப்பும் சந்தோசமா இருக்கும்.’ என்று எண்ணிக்கொண்டு தன் அறைக் கதவை திறந்தான்.

திறந்ததும் கண்ணில் பட்டது அங்கே சுவரில் தொங்கிக் கொண்டிருந்த போட்டோ.

யாஸ்மினும் அவனும்! அதுவும் அவள் தாய்மை அடைந்திருந்தபோது எடுத்தது! சரியாக ஆறாவது மாதம்.. ஆண் பிள்ளைதான் என்று தெரிந்ததும், தான் ஆசைப்பட்டது போலவே அவனைப் போன்ற ஒரு மகன் வரப்போகிறான் என்கிற சந்தோசத்தைக் கொண்டாடவேண்டும் என்று அவளின் விருப்பின் பெயரில் ஸ்டூடியோ ஒன்றுக்கு சென்று எடுத்துக்கொண்ட போட்டோ அது!

இத்தனை துல்லியமாக நினைவு வைத்திருக்கிறோமா என்று நினைக்கையிலேயே அவளோடான வாழ்வின் ஒவ்வொரு அசைவும் அவன் நெஞ்சில் பசுமரத்தாணியாகத்தானே பதிந்து கிடக்கிறது என்கிற எண்ணம் கசந்து வழிந்தது!

“மறக்கோணும்! எல்லாத்தையும் மறக்கோணும்! முதல் அவள மறக்கோணும்!” வாய்விட்டுச் சொல்லிக்கொண்டான்!

அவள் நினைப்பை கொண்டுவந்தது அந்தப் போட்டோ! விவாகரத்தாகியும், ஏன் இன்னோர் கல்யாணம் ஆகியும் இத்தனை நாட்களாய் அங்கிருந்து நகராமல் இருந்த போட்டோவை கழட்டி மேசையில் மூடி வைத்தான். ‘நாளைக்கு முதல் வேலையா வீட்டுல இருக்கிற எல்லா போட்டோவையும் கழட்டோணும்!’ என்கிற முடிவோடு.

யாஸ்மின், யாமினி, பிள்ளைகள் என்று எல்லோர் நினைவும் கலந்து வந்ததில் குளித்துவிட்டு வந்தாலும் உறக்கம் வருவேனா என்றது.

யாமினியோடு கதைக்கவேண்டும் போல் ஓர் ஆவல்! அவளின் அருகில் இருந்த நாட்களில் இந்தத் தேவையில்லாத நினைவுகள் எதுவும் அவனை அண்டியதில்லை! அண்ட அவளின் அருகாமை விட்டதில்லை! அவள் குரலை கேட்டாலாவது மனதுக்கு ஆறுதலாக இருக்கும் என்று பார்த்தால் அங்கு அவள் நல்ல உறக்கத்தில் இருப்பாளே!

செல்லை எடுத்து அவளோடான சாட்டிங்கை பார்த்தான். மெல்ல மெல்ல இதழ்களில் மெல்லிய புன்னகை மலர, அப்போதுதான் கண்டான் அவளும் ஆன்லைனில் இருப்பதை!

‘படுக்காம என்ன செய்றா?’ நேரத்தை பார்த்தால் இங்கே இரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது நேரம்.

‘அப்ப அங்க காலை ஆறு. மேடம் எழும்பி இருப்பா.’ சட்டென்று உற்சாகம் துள்ள ‘குட்மோர்னிங்’ என்று அனுப்பினான்.

‘குட்மோர்னிங்! இன்னும் முழிச்சிருந்து என்ன செய்றீங்க?’ என்று உடனேயே பதில் வர, அவளுக்கு அழைத்தான்.

“என்னப்பா?” மெல்லிய குரலில் கேட்டாள் யாமினி.

“சும்மாதான் எடுத்தனான். செல்லம்மா நித்திரையா?”

“ஓம். நீங்க படுக்கேல்லையா?”

“நித்திர வரேல்ல யாமினி.” என்றான் ஆறுதல் தேடும் குழந்தையாக.

அப்போதுதான் அவனிடம் தெரிந்த சோர்வை கவனித்தாள் அவள்.

“ஏன்? உடம்பு ஏதும் சரியில்லையா?” கவலையோடு விசாரிக்க,

“மனம் தான் சரியில்ல. என்னென்னவோ ஞாபகம்..” என்றான் வேதனையோடு.

“ஓ..!” என்ன கதைப்பது, சொல்வது என்று ஒன்றும் தெரியவில்லை அவளுக்கு.

“அவவ மிஸ் பண்றீங்களா?” மெல்லக் கேட்டாள்.

“உன்னத்தான் மிஸ் பண்றன். அண்டைக்கு மாதிரி உன்ர மடில படுக்கோணும் போல இருக்கு. உன்ர குரலையாவது கேப்பம் எண்டுதான் எடுத்தனான்.” என்றான் ஏக்கத்தோடு!

கம்பீரமாக மட்டுமே பார்த்துவிட்ட விக்ரம்.. இன்று சிறுவனைப்போன்று கலங்கிப்போய்க் கதைக்கத் தவித்துப்போனாள் யாமினி. அதோடு, அவனுக்கு உடனடித்தேவை அவளின் ஆறுதல் அல்லவா. அவன் மனைவியாகக் கதைக்கத் தொடங்கினாள்.

“இப்பவும் உங்களோடதான் நான் இருக்கிறன். உங்கட மனதில! அதால சும்மா கண்டதையும் யோசிக்காம கண்ண மூடி நிம்மதியா படுங்கோ.” காதோரமாக, மென்மையான குரலில் குழந்தை ஒன்றை சமாதானப் படுத்துவது போன்று சொன்னவளின் பாசம் நெஞ்சை வருடிக்கொன்று சென்றது. அருகில் அவள் அமர்ந்திருந்து பாசத்தோடு தலை கோதிவிடுவது போலிருக்கக் கண்களை மூடிக்கொண்டான் விக்ரம்.

“எவ்வளவு தூரத்துல இருந்தாலும் உங்களுக்கு நான் இருக்கிறன். கண்ணா இருக்கிறான். உங்கட செல்லம்மா இருக்கிறா. இன்னும் யார் வேணும் உங்களுக்கு?”

“இன்னொரு செல்லம்மா.” என்றான் அவன்.

“என்ன?” முதலில் ஒன்றும் விளங்கவில்லை அவளுக்கு.

‘இன்னொரு செல்லம்மாக்கு நான் எங்க போக?’ என்று யோசித்தவள், அதன் அர்த்தம் விளங்க, “அச்சோ!” என்று உதட்டைக் கடித்தாள்.

“என்ன அச்சோ? பெத்துத் தருவியா?” இதைக் கேட்டதும் அவள் எப்படித் தன்னை முறைப்பாள் என்று மனக்கண்ணில் கண்டவனின் இதழ்களில் மெல்லியதாய் புன்னகை ஒன்று மலர்ந்தது.

பதில் சொல்லமுடியாமல் நின்றாள் யாமினி.

“சொல்லு.. தருவியா மாட்டியா?”

“பிறகு ரெண்டு பொம்பிளைப்பிள்ளைகளுக்குச் சீதனம் குடுத்து கட்டிவைக்கோணும் நீங்க. அது ஒண்டும் அவ்வளவு ஈசி இல்ல. உங்கள மாதிரி சீதனம் வாங்காம ஒருத்தனும் கட்டமாட்டான்.” என்றாள் அவளும் விளையாட்டாக.

அவன் தன் கவலையை மறந்து கேலியில் இறங்கியதில் அவளுக்கும் நிம்மதியாகிப் போயிற்று!

“அதப்பற்றி நீ கவலைப்படாத. எத்தனை பிள்ள பிறந்தாலும் அத்தனபேருக்கும் ஒரு குறை இல்லாம சமமா குடுத்து நான் கட்டிக் குடுப்பன். அது ஆம்பிள பிள்ளையா இருந்தாலும் சரிதான்! நீ பெத்து தருவியா? அத மட்டும் சொல்லு!” என்று நின்றான் அவன்.

‘இவன் என்ன இப்படிக் கேக்கிறான்?’ என்று உள்ளே வெட்கினாலும், பழைய விக்ரமாக மாறி அவளை வம்பிழுப்பதே போதும் என்றாக, “உங்களுக்கே பிரச்சனை இல்லை எண்டா எனக்கும் ஓகே தான்.” என்றாள் அவள்.

“அப்ப ஏழெட்டு பிள்ளைகள வளக்க ரெடியா இருங்க மேடம்!” என்று ஒரு குண்டை எறிந்துவிட்டு வைத்தான் அவன்.

‘என்னது??? ஏழு எட்டா? ஒண்டுதானே கேட்டவர்’ என்று அதிர்ந்து நின்றாள் யாமினி.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock