நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் 14 – 1

அன்று டொச் வகுப்பு முடிந்ததுமே, அரக்கப்பரக்க தன் பொருட்களை அள்ளி எடுத்துக்கொண்டு கிளம்பினாள் யாமினி.

‘அவர் வேலைக்குப் போகமுதல் வீட்ட போய்டோணும்.’ மனம் பரபரத்தது.

“யாமி! கொஞ்சம் நில்லு! உன்ர மனுசன் இருக்கிற ஊர் அட்ரெஸ் தந்திட்டு போ!” என்று குரல் கொடுத்தாள், சந்தியா.

அவளும் இவளை போலவே திருமணமானவள். கணவன் ஜேர்மனில் வசிக்க, அவனிடம் போவதற்காக டொச் படிக்க வந்தவள். விக்ரமோடு தன் கணவனைச் சந்திக்கச் செய்து அவர்களையும் நண்பர்களாக்கினால் குடும்பமாகப் பழகலாம் என்கிற எதிர்பார்ப்பு!

“இப்ப நேரமில்ல. நாளைக்குத் தாறன்.”

குரலை மட்டும் கொடுத்துவிட்டு வேகமாக ஆட்டோவுக்கு விரைந்து,
“கொஞ்சம் வேகமா போங்கண்ணா.” என்று ஏறியதும் சொன்னாள்.

“வேகமா போகச்சொல்லி நீ சொல்ற. உன்ர மனுசன் கவனா ஓடுங்கோ எண்டு சொல்றார். யாருண்ட கதைய நான் கேக்கிறது?” கேலியாகச் சொன்னபடி ஆட்டோவை கொழும்பின் வாகன நெரிசல் மிகுந்த வீதிக்குள் விட்டார் சந்திரன். விக்ரம் கதைத்து ஏற்பாடு செய்த ஆட்டோக்காரர்.

சந்தோசப் புன்னகை அரும்பியது யாமினிக்கு!

இந்தக் கேலி கணவன் தன் மீது வைத்திருக்கும் அக்கறையின் வெளிப்பாடு!

பெரிய தூரமில்லை என்று ஒருநாள் நடந்துபோனாள் என்று சொன்னதுமே, அவனுக்குக் கோபமே வந்துவிட்டது.

“உன்னை யாரு நடந்து போகச் சொன்னது? ஆட்டோலதான் போய் வரோணும். நீ நடந்து திரியுறதுக்கா நான் இங்க இரவு பகலா உழைக்கிறன்.” என்று சத்தம் போட்டுவிட்டான் அவன்.

“சரிசரி! கோபப்படாதீங்கோ. இனி ஆட்டோவிலேயே போறன்” என்றவளின் சமாதானத்தைக் கேட்காமல் சந்திரனுக்கு அழைத்துத் தினமும் கூட்டிக்கொண்டுபோய்க் கூட்டிக்கொண்டு வரச்சொல்லி சொல்லியும் விட்டான்.

அப்படியானவனின் முகத்தை ஆசை தீர பார்த்துவிடத்தான் இந்த அவசரம்.

இதோ அவன் போய்க் கிட்டத்தட்ட மூன்று மாதமாகிவிட்டது! எப்படிப் போனது என்று கேட்டாள் அவளிடம் பதிலே இல்லை. ஆனால், ஒவ்வொரு நாட்களையும் பெரும் சிரமப்பட்டுத்தான் கடத்திக் கொண்டிருக்கிறாள். அவன் அழைக்கும் அந்தத் தருணங்கள் மட்டுமே அவளின் பொக்கிஷங்களாகச் சேமிக்கப் படுகின்றன.

காலையில் வகுப்புக்கு போவதும், முடிந்து வருகையில் அவனோடு கதைக்கப் போகிறோம் என்கிற ஆவலோடு ஓடி வருவதும், அதன் பிறகு அவன் கதைத்த விதம், கண் சிமிட்டிய அழகு, அவளை வெட்க வைக்கும் அவனின் பேச்சு, சின்னச் சின்னச் சீண்டல்கள் என்று அதையெல்லாம் நினைத்தபடி இதழோரம் பூத்தே கிடக்கும் புன்னகையோடு ஒருவகையான கனவுலகில் மிதப்பதும், மாலையானதும் திரும்ப எப்போ அழைப்பான் என்று காத்திருப்பதுமாக அவளின் நாட்கள் அவனைச் சுற்றியே சுழன்றுகொண்டு இருந்தது!

இவளுக்கு இலங்கை நேரம் மதியம் பன்னிரண்டுக்கு வகுப்பு முடியும். அப்போது அங்கே ஜேர்மனில் நேரம் காலை எட்டு மணி. விக்ரம் ஒன்பது ஒன்பதரைக்கு ஆபீஸ் கிளம்பி விடுவான். அதற்குள் இவள் போனால்தான் அவன் முகம் பார்த்துக் கதைக்கலாம்.

இல்லாவிட்டாலும் ஆபிசில் நின்று அழைப்பான் தான். அப்போதானால் அவனது குறும்புப் பேச்சுப் பெரிதாக இராது. அதோடு ஆற அமர இருந்து கதைக்க அவன் வேலையும் அவனை விடாது! யாராவது எதற்காவது குறுக்கிட்டுக் கொண்டே இருப்பார்கள்.

அவளுக்கு ஆற அமர இருந்து, இலகுவாகக் கேலி பேசி கதைக்கும் அவனது குரலையும் முகத்தையும் நெஞ்சில் நிரப்பவேண்டும். அப்போதுதான் இரவு திரும்பவும் அவன் அழைக்கும் வரையில் அவளால் தாக்குப் பிடிக்க இயலும்!

அதனால் பண்ணிரண்டரைக்குள் வீட்டுக்குள் இருந்துவிடத் தவியாய் தவிப்பாள்.

கையைத் திருப்பி நேரத்தை பார்த்தாள். பன்னிரண்டு பத்து.

‘கெதியா போகவேணும்!’ மனம் பரபரத்தது!

‘இப்ப அவரின்ட செல்லம்மாவோட கதைச்சுக்கொண்டு இருப்பார்.’ அந்த நினைவில் புன்னகைத்துக்கொண்டாள்.

என்ன கதைப்பார்களோ ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்! ஆனால் இருவரினதும் சிரிப்புச் சத்தம் பெரிதாகக் கேட்டுக்கொண்டே இருக்கும்!

இன்றும் அவளின் மனதை அறிந்தவராகச் சந்திரன் பன்னிரண்டு இருபதுக்கே வீட்டு வாசலில் ஆட்டோவை நிறுத்திவிட, நன்றி அண்ணாவோடு ஓடினாள் அவள்.

இவளை அறிந்தவராக, வாசலிலே ஒரு கண்ணையும் சந்தனாவிடம் மறு கண்ணையும் வைத்திருந்த ஆயாம்மா வந்து கதவை திறந்தார்.

“எடுத்தவரா?” காதை தீட்டிக்கொண்டே கேட்டாள். அவளை ஏமாற்றாமல் மகளின் மழலை சிரிப்பும் அவனின் கம்பீரச் சிரிப்பும் அவள் செவிகளை நிறைக்கச் சட்டென முகம் மலர்ந்தாள்.

மகளிடம் அவள் விரைய, “அப்ப நான் வரவாம்மா?” என்று கேட்டார் ஆயாம்மா.

“சரிம்மா. இப்ப போயிட்டுப் பின்னேரம்.. கொஞ்சம் நேரத்துக்கே வாறீங்களா? நான் கடைக்கு ஒருக்கா போகவேணும்.” என்றவளிடம் சரி என்றுவிட்டு அவர் கதவைப் பூட்டிக்கொண்டு வெளியேற, இவள் மகளிடம் விரைந்தாள்.

அங்கே விக்ரம் ஐபாடில் வைபர் வீடியோவில் மகளோடு கதைத்துக்கொண்டிருந்தான்.

இவளைக் கண்டதும், “அம்மா அப்பா..” என்று மகள் வீடியோவை காட்டி சொல்ல,

“குட்டி அப்பாவோட கதைக்கிறாங்களா?” என்று கேட்டவாறே, அவளைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு கட்டிலில் சாய்ந்து அமர்ந்துகொண்டாள்.

“என்னவாம் உங்கட அப்பா?” கடைக்கண்ணால் அவனைக் களவாடிக்கொண்டே மகளிடம் கேட்டாள்.

“ப்பா.. அந்தா” என்று மகள் மீண்டும் வைபரை காட்ட, “அப்பாக்கு அவளின்ர அம்மா பக்கத்துல வேணுமாம்.” என்று வம்பிழுத்தான் அவன் அங்கிருந்து.

‘கடவுளே..!! சந்துவையும் வச்சுக்கொண்டு..!!’ அவனை முறைத்தவளை பார்த்துச் சட்டெனக் கண்ணைச் சிமிட்டினான் அவன்.

பக்கென்று சிரித்துவிட்டாள் யாமினி.

“சாப்பிட்டீங்களா?” முதல் கேள்வியாக அவன் வயிற்றைக் கவனித்தவளின் விழிகள் அவனே அறியாமல் அவனை விழுங்கின.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock