அவனும் அவளைத்தான் ஆசையோடு பார்த்தான். மனதுக்குள் மெல்லிய சாரல் வீசினாலும் அவளால் அவனைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
டார்க் நீல நட்சத்திரங்கள் தெளித்திருந்த வெளிர் நீல முழுக்கை ஷர்ட்டுக்கு டார்க் நீலத்தில் ட்ரவுசர் அணிந்திருந்தான். அப்படியே மனதை அள்ளியது!
‘இவருக்கு எதைப் போட்டாலும் நல்லாத்தான் இருக்கு!’
அவள் மனதை படித்தவனாக, கண்களில் குறும்போடு, “நல்லாருக்கா?” என்று கேட்டான் விக்ரம்.
ஒருகணம் பதிலே சொல்லமுடியவில்லை அவளால். அந்த ஐபாட் முழுவதுமே அவன் முகம் நிறைந்திருக்க, அவளையே குறும்புடன் நோக்கிய விழிகளைக் கண்டு தடுமாறிப் போனாள். அடர்ந்த மீசை. அதன் கீழே கவர்ச்சியாய் புன்னகை சிந்திய உதடுகள்..
இங்கே வெயிலுக்குச் சற்றே மங்கியிருந்த அவன் நிறம் வேறு அங்குச் சென்றதும் பளிச்சென்று தெரிந்தது.
“இண்டைக்கும் மீட்டிங்கா?” என்று கேட்டாள்.
“கதைய மாத்தாத! இந்த உடுப்பு எனக்கு நல்லாருக்கா இல்லையா? நல்லா பாத்து சொல்லு.” என்று நின்றான் அவன்.
அவன் பிடிவாதம் அவள் அறியாததா என்ன?
“நல்ல வடிவா இருக்கு.” என்றாள் மெல்ல.
“நானா உடுப்பா?”
“உடுப்பத்தானே நீங்க கேட்டீங்க?”
‘எங்களுக்கும் கதைக்கத் தெரியும்!’ என்பதாகப் பார்த்தாள் அவள்.
“ஓ……!!” அந்த ஓவை யாழ்பாணத்திலிருந்து காலிவரைக்கும் இழுத்துவிட்டு கேட்டான். “அப்ப சொல்லு நான் எப்படி இருக்கிறன்?”
‘தேவையாடி யாமி உனக்கு இது? சும்மா இருந்தவர சொறிஞ்சு விட்டுட்டியே..’
“நீங்களும் நல்லாத்தான் இருக்கிறீங்க. ஆனா எங்க போகபோறீங்க எண்டு இன்னும் சொல்லவே இல்ல.”
“மீட்டிங் இல்ல யாமி. ஆனா நான் கம்பெனி ஆரம்பிச்ச நாள்ல இருந்து வேலை செய்த அங்கிள் ஓராள் இண்டையோட பென்ஷனுக்குப் போறார். அவர வழியனுப்ப கம்பெனி சார்பில முறையா ஒரு பார்ட்டி நடக்குது. அதுக்குத்தான் போறன்.”
“சரி சொல்லு. இண்டைக்கு வகுப்பு எப்படிப் போச்சு? என்ன படிச்ச?” என்று விசாரித்தான்.
“சின்னச் சின்ன வசனங்கள் சொல்லித் தந்தவா. அண்டைக்கு இருவது சொல் ஆர்டிக்கல் பாடமாக்க சொல்லி தந்தவா எண்டு சொன்னான் தானே. அத நாளைக்குப் பாடமாக்கிக்கொண்டு வர சொன்னவா. இனி வசனங்கள் படிப்பிக்கப் போறாவாம்.”
“அப்ப.. நான் உன்னைக் காதலிக்கிறேன் எப்படிச் சொல்றது எண்டும் கேட்டுக்கொண்டு வா.” என்றான் அவன்.
‘ஆரம்பிச்சிட்டார்!’ சிரிப்புத்தான் வந்தது அவளுக்கு.
அதை எப்படியோ அவள் வகுப்புக்கு போய் மூன்றாம் நாளே தெரிந்துகொண்டுவிட்டாள். ஆனால் காட்டிக்கொள்ளவில்லை.
அந்த வார்த்தைகளைச் சொல்லிப் பார்க்கையில் மனதுக்குள் சிரிப்பு பொங்கும்! ஆனால் ஏனோ அவனிடம் சொல்லிக்காட்ட முடிந்ததே இல்லை. அவன் இல்லாத தனிமையில் கூட அதை அவளால் சத்தமாக உச்சரிக்க முடிந்ததே இல்லை. எல்லாமே மனதுக்குள் மட்டும் தான்!
அவள் ரகசியமாகப் புன்னகைக்க, “உனக்குத் தெரியும் போல.” என்றான் அவன்.
அப்போதும் அதே சிரிப்புடன், “நாங்க இண்டைக்குக் கடைக்குப் போவம் எண்டு இருக்கிறம்.” என்று கதையை மாற்றினாள்.
“சரி.. கவனமா போயிட்டு வாங்கோ. செல்லம்மா கவனம். அப்ப நான் வைக்கவா?” என்று அவன் கேட்க,
“ம்ம்.. சரி. அப்படியே உங்கட போட்டோ ஒண்டும் என்ர போனுக்கு அனுப்பி விடுங்கோ.” என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டு வேகமாக வைபரை கட் பண்ணப் போக,
“ஹேய்!! பொறு பொறு. என்ர போட்டோ என்னத்துக்கு உனக்கு?” என்று ஆர்வமாகக் கேட்டான் அவன்.
“அது.. உங்கட மகள் தான் கேட்டவள்..” அவனைப் பாராமல் சொன்னவளின் இதழோரம் கள்ளச் சிரிப்பு!
“ஹாஹா…” வாய் விட்டுச் சிரித்தான் விக்ரம். “என்ர மகள் உன்னட்ட வந்து ‘அம்மா அம்மா எனக்கு அப்பாண்ட போட்டோ ஒண்டு வேணும்’ எண்டு கேட்டவளோ”? என்று கேட்டான் அவன்.
அவ்வளவு பெரிய வசனம் அவள் கதைப்பாள் என்றால் பிறகென்ன?
‘ஒரு போட்டோ கேட்டா அத அனுப்பிட்டு பாக்கிற வேலைய பாக்கிறத விட்டுட்டு யாருக்கு என்னத்துக்கு எண்டு விசாரணை என்ன வேண்டிக் கிடக்கு?’ என்று அவள் முறைக்க,
அவனோ, “என்ர மகளுக்கா இல்..ல அவளின்ர அம்மாக்கா?” என்று ஒற்றைக் கண்ணை மட்டும் சுருக்கி முகத்தைச் சற்றே சரித்துக் குறும்போடு கேட்டான்.
“எனக்கு என்னத்துக்கு?” பொய்க் கோபத்தை விழிகளில் காட்டிக் கேட்டாள் யாமினி.
“யாருக்கு தெரியும்? இரவிரவா பாக்கவா இருக்கலாம். இல்ல எனக்கே தெரியாம எனக்குக் கிஸ் பண்றதுக்கா இருக்கலாம். இல்ல இரவுல என்னைக் கட்டிப்பிடிச்சுக்கொண்டு படுக்கவா இருக்கலாம்.” என்று அவன் சொல்லிக்கொண்டே போக..
“ஐயோ சாமி உங்கட போட்டோவே வேண்டாம்! ஆள விடுங்கோ!!” என்று அவள் ஐபாடை அணைக்கப் போக,
“சரிசரி விடு! நீ வெக்கப்படாத. நான் அனுப்பி வைக்கிறன். நீ நல்லா என்ன கொஞ்சு!!” என்றுவிட்டே வைத்தான் அவன்.
அவன் வைத்தபிறகும் அவள் முகத்தில் பூத்திருந்த புன்னகை அடங்கவே இல்லை!
‘நல்லா தன்னைக் கொஞ்சட்டாம்!’
‘வெட்கமே இல்ல இந்தாளுக்கு!!’ மனம் செல்லமாகத் திட்டிக்கொண்டது!!
காரில் சென்றுகொண்டிருந்தான் விக்ரம். மனதிலோ உற்சாகம். யாமினியை எண்ணி எண்ணி சிரித்துக்கொண்டிருந்தான். இப்போதெல்லாம் அவளை மறக்கவே முடிவதில்லை. அவள் சிரித்தது.. மகளை ஊடாக வைத்து அவனிடம் வம்பு வளர்த்தது.. வெட்கத்துடன் அவனை முறைத்தது.. அவனிடம் வாயை விட்டுவிட்டு மாட்டிக்கொண்டு முழித்தது.. அதுவும் இன்று அவன் போட்டோவை கேட்டுவிட்டு அவள் பட்ட பாடு.. .ஹாஹா. இப்போதும் நினைத்து நினைத்துச் சிரித்தான்.
சிக்னலில் சிவப்பு லைட் மின்னவும் காரை நிறுத்திவிட்டு, காத்திருக்கையில் போனில் யாமினியின் போட்டோவை எடுத்துப் பார்த்தான். அவள் குரலை கேட்கவேண்டும் போல் ஓர் ஆசை..
‘கார கூட அவள மறந்து ஓட்ட முடியேல்ல..’ எண்ணியபடி அவளைப் பார்த்தவன்,
“என்ன மேடம் நிறையவே போட்டு படுத்தி எடுக்கிறனா?” என்று வாய்விட்டே கேட்டான். அது தெரிந்தாலும் இன்னுமே அவளைப் படுத்தி எடுக்கும் ஆசைதான் மேலோங்கியது!
‘ஒரு போன போடுவமா?’ மனதில் ஆவல் மின்ன, பச்சை விழுந்துவிட்டதா என்று பார்க்க நிமிர்ந்தவன், அங்கே மகளைக் கையில் பிடித்தபடி வீதியை கடந்துகொண்டிருந்த யாஸ்மினை கண்டான்.
விழிகள் உடனே அந்தக் குட்டிப் பெண்ணிடம் ஓடியது. வெயிலுக்கு இதமாக ஒரு குட்டிச் சட்டை, அதற்குப் பொருத்தமாக வட்ட தொப்பி. கண்களில் இரண்டு இதயங்கள் கொண்ட கூலிங்கிளாஸ், கால்களில் வண்ணத்துப் பூச்சிகள் மொய்த்திருக்கும் குட்டி சாண்டில்ஸ். தாயின் கையைப் பற்றியபடி தத்தக்கா பித்தக்கா என்று வீதியை கடந்துகொண்டிருந்தாள்.
அவளைப் பார்த்ததும், அன்றொருநாள் கடற்கரையில் தாயை கழட்டி விட்டுவிட்டு தன்னோடு கூட்டணி அமைத்துக்கொண்டு பந்து விளையாடிய செல்லம்மா தான், “ப்பா” என்றபடி அவனிடம் தாவி வந்தாள்.
மகளை அள்ளி அணைக்கும் ஆவல் மின்ன, போனில் அவளின் போட்டோவை எடுத்துப் பார்த்தான். கை அடுத்ததைத் தட்ட யாமினி வந்து நின்றாள்.
ஒற்றை விரலால் அவள் புருவங்கள் தொடங்கி, நாசியைத் தொட்டுக் கன்னத்தைத் தடவிக் கொடுத்துவிட்டு சிரிப்போடு நிமிர்ந்தவனின் விழிகள், போகிறவர்களையே பின் தொடர்ந்தாலும் மனதில் நிறைந்திருந்தவர்கள் யாமினியும் சந்தனாவுமே!
செல்லம்மாவுக்கும் இதே மாதிரி ஒரு தொப்பி வாங்கோணும்! மனதில் நினைத்துக்கொண்டு பச்சை விழ காரை எடுத்தான்!
அவன் வாழ்விலும் பச்சை விழுந்துவிட்டதை அவன் உணரவேயில்லை!