நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் 15 – 1

கொழும்பு நகரின் பிரபலமான அந்த ஆடையகத்தில் ஆண்களுக்கான பிரிவில் நின்றிருந்தாள் யாமினி. விக்ரமுக்காகக் கிட்டத்தட்ட அந்தத் தளத்தையே உருட்டிப் பிரட்டிவிட்டாள் என்றுதான் சொல்லவேண்டும்! பீச் கலரில் ஒரு முழுக்கை டி- ஷர்ட்டும் டார்க் பிரவுனில் ஜீன்ஸ்ஸும் எடுத்துவிட்டாள்.

இன்னும் இரண்டு டி- ஷர்ட்டுக்கள் எடுக்கலாம் என்றால் எங்கே ஒன்றையுமே அவனுக்குப் பொருத்தமாய்க் காணோம்!

மீண்டும் ஹாங்கரில் தொங்கிக்கொண்டிருந்த ஆடைகளை நோக்கி விழிகளைத் திருப்பினாள். அங்கே ஒன்று ஆரேஞ் மற்றும் வெள்ளையில் கோடு கோடுகளாய் காலர் வைத்த டி- ஷர்ட் கண்களைப் பறித்தது. மனக்கண்ணில் அவனுக்கு அணிவித்துப் பார்த்தாள். அவனுடைய நிறத்துக்கும் கட்டுக் குழையாத தேகத்துக்கும் அம்சமாய்ப் பொருந்தியது.

அதைப்போட்டுக்கொண்டு, ‘நல்லாருக்கா?’ என்று அவன் கேட்பது போலவே இருக்க, இதழ்களில் புன்னகை அரும்பியது!

அன்றைய மதிய நாளின் அவனின் சேட்டைகள் அப்படியே நினைவில் வர, ‘நல்லாத்தான் இருக்கு!’ என்று மனதில் சொல்லியபடி அதையும் எடுத்துக்கொண்டாள்.

அங்கே தொங்கிக் கொண்டிருந்த ஷர்ட்டுக்களைக் கண்டதும், ‘இங்க நிக்கேக்க எப்பவும் டி-ஷர்ட் தானே போட்டவர். அங்க ஆபீசுக்கு மட்டும் முழுக்கை ஷர்ட் போடுறவர். அரைக்கை ஷர்ட் நல்லாருக்காதா?’ சிந்தனை அதன்பாட்டுக்கு ஓட விழிகள் அவனுக்குப் பொருத்தமாய் ஒரு ஷர்ட்டை தேடிக் கண்டு பிடித்தது.

எடுத்து சற்றே தூர நீட்டிப் பார்த்தாள். ‘இதுவும் நல்லாருக்கும்.’

‘இதையெல்லாம் அவரிண்ட பிறந்தநாளுக்கு முதல் போய்க் கிடைக்கிறமாதிரி அனுப்பி வைக்கோணும்.’ ஆசையாக எண்ணியபடி அனைத்தையும் எடுத்துக்கொண்டாள்.

இன்னும் இரண்டு வாரங்கள் இருந்தது பிறந்தநாளுக்கு. ‘பெரும்பாலும் மூன்று நாட்களில் போய்விடும். இல்லையானாலும் ஒரு வாரத்தில் கிடைத்துவிடும்’ என்றிருந்தார்கள் போஸ்ட் ஆபீசில். எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு வாரத்துக்கு முதலே அனுப்ப ப்ளான் பண்ணியிருந்தாள் யாமினி. அதுவும் அவனுக்குத் தெரியாமல்!

திடீரென்று ஒருநாள் பார்சல் வந்தால் எப்படி இருக்கும்?!

அதன்பிறகு குழந்தைகளுக்கான தளத்துக்குச் சென்று மகளுக்கும், டீன் ஏஜ்ஜினருக்கான பகுதிக்குச் சென்று டெனிசுக்கும் உடைகளைத் தெரிவு செய்துகொண்டவள், பெண்களுக்கான பகுதிக்குச் சென்றாள்.

அங்கே அவளுக்காக முழு நீள பாவாடை சட்டை ஒன்றும் ஒரு சுடிதார் செட் ஒன்றும் எடுத்துக்கொண்டாள். போட்டுப்பார்த்தாள். மிகவுமே பிடித்துப் போயிற்று! தனக்கு மிகவுமே அழகாய் இருப்பதாய் மனம் சொல்ல சந்தோசமாயிருந்தது.

‘எனக்கு அழகாயிருக்கிறதா? பொருத்தமாய் இருக்கிறதா’ என்று மட்டுமே பார்த்து ஆடைகளைத் தேர்வு செய்வதில்தான் எத்தனை சுகம்?

என்ன விலை என்று யாருக்கும் தெரியாமல் பார்த்து, கையிலிருக்கும் பணத்தைச் சரியாகத்தான் எண்ணிக்கொண்டு வந்தோமா என்று பயந்து, இருக்கிற பணத்துக்குத் தகுந்ததாக உடைகளைத் தெரிவு செய்வதைப் போன்ற கொடுமை எதுவுமில்லை!

அப்படி எந்த யோசனைகளும் இல்லாமல் கணவனுக்கு, குழந்தைகளுக்கு, தனக்கு என்று தேர்வு செய்தது மனதுக்கு இதமாயிருந்தது!

இப்போதெல்லாம் அவள் அனுபவிக்கும் உணர்வு சந்தோசம் மட்டுமே! அவனைப் பிரிந்திருப்பது வேதனைதான். ஆனாலும், அந்தச் சோகத்திலும் ஒரு சுகமிருந்தது! மனதால் நொடிப்பொழுதும் அவனோடு கதைத்தபடி, வம்பளந்தபடி தனக்கும் அவனுக்குமான கனவுலகில் சஞ்சரிப்பது அத்தனை இன்பமாயிருந்தது!

என்ன வேலை செய்தாலும், படித்தாலும் மனதின் ஒரு ஓரத்தில் அவன் அழைக்கும் நேரத்துக்கு இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு என்று கணக்குப் பார்த்துக்கொண்டே கழிக்கும் நாட்களை அனுபவித்து வாழ்ந்தாள்.

அவன் அழைக்கையில் மனதில் துள்ளிக் குதிப்பதும், வைக்கவா என்று கேட்கையில் உள்ளே ஏங்கினாலும் சரி என்று சொல்வதும் கூடச் சுகமாகத்தான் இருந்தது.

இதோ.. இப்போதும் அவன் நினைவுகளோடே தேர்வு செய்த எல்லாவற்றுக்கும் பணத்தைச் செலுத்திவிட்டு, அருகிலிருந்த நகைக்கடையில் ஏற்கனவே ஆர்டர் கொடுத்திருந்த அவனுக்கான மோதிரத்தையும் வாங்கிக்கொண்டாள்.

அதில், ஆங்கில ‘வி’ என்ற எழுத்துக்குள் ‘வை’ என்கிற எழுத்து பிணைந்து கிடப்பது போன்று அமைக்கப் பட்டிருந்தது. அவர்கள் இருவர் பெயரினதும் முதல் எழுத்துத்தான் என்றாலும் அவளுக்கு என்னவோ அது ‘விக்ரமின் யாமினி’ என்று சொல்வது போலவே இருந்தது!

ஆமாம். அவள் ‘விக்ரமின் யாமினி’ தான்! மெல்ல அந்த எழுத்துக்களின் மீது தடவிக் கொடுத்தாள். அதுவும் ‘வை’யை தாங்கி நிற்கும் அந்த ‘வி’ அவனாகவே தெரிந்தான். அதிலேயே விழிகள் தங்கின! விரலால் மெல்ல வருடினாள். அவன் கன்னத்தை வருடும் சுகம்! அதைப் பார்க்கப் பார்க்க அவனை உடனேயே பார்த்துவிட வேண்டும் போலிருந்தது. தனக்குள் சிரித்துக்கொண்டாள்!

தன் மனம் அவனிடம் சாய்ந்துகொண்டிருப்பதை உணராமலில்லை அவள்! ஆனால், அதில் பெரிய ஆச்சரியமும் இல்லை அவளுக்கு! அவனைப் போன்ற அற்புதமான மனிதன் கணவனாக வாய்த்தபிறகு மனம் சாயாமல் இருந்தால் தான் அதிசயம்!

மிகவும் கவனமாகத் தன் ஹன்ட்பாக்கினுள் அதைப் பத்திரப்படுத்திக்கொண்டு சந்திரனின் ஆட்டோவிலேயே வீடு வந்து சேர்ந்தாள்.

வீட்டுக்கு வந்து இன்னொருமுறை வாங்கிய உடைகளை எல்லாம் திரும்பவும் எடுத்துப் பார்த்தாள். மிகவுமே பிடித்திருந்தது. ஜேர்மனுக்கு அனுப்ப வாங்கியவற்றைத் தனியாக எடுத்து வைத்தாள்.

மோதிரத்தையும் ஒரு ஆசையில் வாங்கிவிட்டாள் தான். ஆனால், அனுப்ப வெட்கமாக இருந்தது. தன்னோடு வைத்துக்கொண்டாள். என்றாவது ஒருநாள் ஆசையாக அவளே அவனுக்குப் போட்டுவிட வேண்டும்!

மத்தியானத்தில் உறங்குவதால் இரவு பத்தான போதும் அவளின் மகள் கொட்டக் கொட்ட விழித்திருந்தாள்.

மத்தியான நித்திரையை நிப்பாட்டலாம் என்றால் எங்கே.. அப்படி எதுவும் நடந்தால் சிணுங்கிச் சிணுங்கியே அன்றைய மாலைப் பொழுதை ஒருவழியாக்கிவிடுவாள்!

நேரம் பதினொன்றை நெருங்கியது. அப்போதும் ஒரு பொம்மையை வைத்து அதோடு என்னவோ கதைத்துக் கதைத்து விளையாடிக்கொண்டு இருந்தவளை மெல்ல கட்டிலுக்குக் கொண்டுசென்றாள்.

“குட்டிம்மா படுத்திருந்து விளையாடுவாவாம்..” என்று சொல்லி அவளைக் கட்டிலில் சரித்தாள்.

“இல்ல.. ம்மா..” என்று அவள் சிணுங்க ஆரம்பிக்க,

“இப்ப படுத்திருக்கிறது அப்பாவாம்..” அவளின் பொம்மையை அவள் மார்பில் போட்டு.. “இது அப்பான்ர செல்லம்மாவாம்.. இப்ப அப்பாவும் செல்லம்மாவும் படுக்கிறாங்களாம்.” என்றதும் அந்த வாண்டும் தன் தகப்பனைப் போலவே அந்தப் பொம்மையை மார்பில் தாங்கித் தட்டிக் கொடுத்தாள்.

தினமும் நடக்கும் காட்சிதான்! ஆனாலும் அன்பான கணவன் ஒருகணம் கண்முன்னே வந்து நின்றான்!

எந்தளவு தூரத்துக்குத் தகப்பனாக அவன் அந்தப் பிஞ்சு நெஞ்சுக்குள் நுழைந்திருந்தால் இப்படி அவனைப் போலவே செய்வாள்?

மனம் கசிய மகளின் நெற்றி முடிகளைப் பின்னே தள்ளி ஒரு முத்தத்தைப் பதித்துவிட்டு, தானும் அருகில் சரிந்து,

“ஹாய் கண்ணா! வீட்டுக்கு போயிட்டியா?” என்று டெனிக்கு மெசேஜ் தட்டிவிட்டாள்.

அவன் பார்த்துவிட்டான் என்று காட்டியது. ஆனாலும் பதில் வரவில்லை.

‘அப்ப இன்னும் வீட்டுக்கு போகேல்ல. என்ன சாட்டுச் சொல்லலாம் எண்டு யோசிக்கிறான். அச்சு அந்த மாயக்கண்ணனேதான்!’ இதழ்களில் பூத்த புன்னகையோடு அவள் நினைக்கையிலேயே,

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock