நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் 2 – 1

இவனைக் கண்டதும் அதிர்ந்துபோய் அப்படியே நின்றுவிட்டாள் யாஸ்மின்.

அவளையே பார்த்து, “உள்ள வரலாமா?” என்று கேட்டான் விக்ரம்.

“வாவா… உள்ளுக்கு வா விக்கி!” மலர்ந்த முகத்தோடு வரவேற்றாள் யாஸ்மின்.

“எப்படி இருக்கிற விக்கி? என்ன திடீரென்று வந்திருக்கிறாய்? டெனிஷ் எப்படி இருக்கிறான்?” என்று அவள் கேள்விகளை அடுக்க, அன்றிலிருந்து இன்றுவரை இயல்பு மாறாமல் படபடக்கும் அவளை அவன் விழிகள் ஆராய்ந்தன.

தோளைத் தொட்டுக்கொண்டிருந்த முடியை ஆண்களைப் போன்று வெட்டி விட்டிருந்தாள். கன்ன உச்சி பிரித்து இழுத்திருந்தவளின் முடி, ஒற்றைப் பக்கப் புருவத்தில் வந்து மோத, அதை நளினமாக ஒதுக்கிவிட்டு, “என்ன குடிக்கிறாய் விக்கி? கபே தரவா?” என்று அவனை அறிந்தவளாகக் கேட்டாள்.

“ம். கொண்டுவா!”

அவள் சமையலறைக்குள் சென்றதும் வீட்டை ஆராய்ந்தான். பெரிய வசதி இல்லை என்பது பார்த்தாலே தெரிந்தது. ஒரு குட்டி ஹோல். தமிழ் எழுத்து ‘ட’ ஷேப்பில் அமைந்த சிறு சோபா. அதுவும் பழையது. அதற்கு முன்னால் சின்னதாக ஒரு டிவி. அவ்வளவுதான்.

சொல்லாமல் கொள்ளாமலே அவள் ஆசைப்பட்டு வாங்கிய அவர்கள் வீட்டு சோபாவும், ஒரு பக்கச் சுவரையே பிடித்திருந்த தொலைக்காட்சியும் மனக்கண்ணில் வந்தன.

அவள் கொண்டுவந்த கபேயை அருந்தியபடி, “எப்படி இருக்கிறாய்?” என்று விசாரித்தான்.

“நானும் டிம்மும் நல்ல சந்தோசமா இருக்கிறம் விக்கி. எங்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். சாராவுக்கு ஒரு வயசுதான். அதால வீட்டுலேயே இருந்து அவளைப் பாக்கிறன்.”

உற்சாகப்பந்தாய் அவள் சொல்லும்போதே, “மம்மா…” என்றபடி கண்ணைக் கசக்கிக்கொண்டு எழுந்து வந்தாள் ஒரு குட்டி தேவதை.

தேவதையேதான்!

இவனைக் கண்டதும் விழிகளை உருட்டிப் பார்த்தாள். இவனும் அவளையே பார்க்க, உருண்டைக் கண்களில் குழப்பமும் பயமும் தோன்ற ரோஜா இதழ்கள் பிதுங்கத் தொடங்கின.

“சாரா, இங்கே வா!” என்று அழைத்தாள் யாஸ்மின்.

ஓடிப்போய்த் தாயின் மடியில் அமர்ந்துகொண்டாள் குழந்தை. அவனால் அந்தக் குழந்தையிடமிருந்து விழிகளை அகற்றவே முடியவில்லை. டெனிஷை சிறு வயதில் பார்த்தது போலவேயிருந்தாள்.

“நீ சந்தோசமாக இருக்கிறாயா யாஸ்… யாஸ்மின்?” என்றவனின் விழிகள், அவர்களின் வசதிக்குறைவைச் சுட்டுவது போல அந்த வீட்டைச் சுற்றிச் சுழன்றன.

அதைக் கவனித்துவிட்டுப் புன்னகைத்தாள் யாஸ்மின். “சந்தோசம் எண்டு நீ எத நினைக்கிறாய் விக்கி? வீட்டில இருக்கிற பொருளையும் காசையுமா? அது தப்பு விக்கி. சந்தோசமும் மகிழ்ச்சியும் மனதிலதான் இருக்கு. அப்படிப் பாத்தா நானும் டிம்மும் நல்ல சந்தோசமா இருக்கிறம். என்னை விட்டுட்டு ஒரு நாள் இருக்கமாட்டான் அவன். வருவாய் கொஞ்சம் குறைவுதான். அதுக்கென்ன? என்றைக்குமே காசுக்கு நான் ஆசைப்பட்டது இல்லையே. நானும் வேலைக்குப் போனா இன்னும் நல்லா வாழலாம்தான். ஆனா, சாராவுக்கு மூண்டு வயசாகி, அவள் கிண்டர்கார்டனுக்குப் போன பிறகுதான் வேலைக்குப் போவன். காசு எப்பவும் உழைக்கலாம். ஆனா, சாரா வளந்த பிறகு அவளின்ர சின்ன வயசுச் சந்தோசத்த எங்களால அனுபவிக்க முடியுமா சொல்லு? அத மாதிரித்தான் இளமையும். இருக்கேக்க சந்தோசமா வாழோணும். அத இழந்து கிடைக்கிற எதிலையும் நிறைவும் இல்ல, திருப்தியும் இல்ல.”

“இந்த சாரா மாதிரித்தானே டெனிஷும்?” அவள் சொல்லி முடிக்க முதலே சட்டெனப் பற்றிக்கொண்ட சூட்டோடு கேட்டுவிட்டான் விக்ரம்.

இந்தக் கேள்வியால் இனி எதுவும் மாறிவிடப் போவதில்லைதான். ஆனாலும் பொறுக்க முடியவில்லை. பேச்சற்றுப் போனாள் யாஸ்மின். முகம் கன்றிச் சிவக்க மடியிலிருந்த மகளைத் தன்னோடு அணைத்துக்கொண்டு இவன் முகம் பாராமல் அமர்ந்திருந்தாள்.

என்றைக்குமே மகனுக்கு ஒரு தாயாக அவள் இழைத்த அநீதியை அவளால் நியாயப்படுத்தவே முடியாது என்பதை அவனறிவான்! ஆனால், அவனுக்கும் அவளுக்குமான வாழ்வில், இன்று அவன் உணர்ந்ததை அன்று அவள் உணர்ந்திருக்கிறாள். அன்று அவளைத் தனிமையில் அவன் வாட விட்டிருக்கிறான். என் மனைவியை நெஞ்சில் சுமக்கிறேன், அவளை உயிராக நேசிக்கிறேன் என்று அவனாக அவனுக்குள் ஒரு கற்பிதம் வைத்திருந்திருக்கிறானே தவிர, அவளின் நிலையை உணர மறந்து விட்டிருந்தான்.

“நீ சொல்றது ஒருவிதத்தில சரிதான் யாஸ். இத அண்டைக்கு நான் யோசிக்க மறந்திட்டன். என்னவோ உன்னையும் டெனிஷையும் நல்லா வச்சிருக்கோணும் எண்டு நினைச்சன். அதுக்குக் காசு வேணும். அப்ப எல்லாம் என்ர மனதில நிறையக் கற்பனை. உன்னையும் அவனையும் கூட்டிக்கொண்டு இந்த உலகத்தையே சுத்தோணும். யாரும் வாழாத வாழ்க்கையை உனக்குத் தரோணும் எண்டு நிறைய. புறவாழ்க்கையப் பற்றி யோசிச்ச நான் மனத யோசிக்க மறந்துதான் போனன்.” என்றான் அவன்.

அவள் விழிகள் லேசாகக் கலங்கின. “நீ நல்லவன் விக்கி. என்னை விளங்கிக்கொள்ளுவாய் எண்டு நினைச்சன். அதேமாதிரி விளங்கிக்கொண்டாய்.” தழுதழுத்துச் சொன்னாள்.

“ஆனா ஒண்ட மறந்திட்ட நீ. உன்னக் காதலிச்சுக் கைப்பிடிக்கேக்க நீ சாதாரண விக்கிதான். அந்த விக்கிய, ஏழ்மையிலும் அன்பை மட்டுமே அள்ளியள்ளிக் கொட்டின அந்த விக்கியத்தான் நான் உயிராகக் காதலிச்சனான். அதுக்குப் பிறகு நீ காசுக்குப் பின்னால ஓடத் தொடங்கிட்தாய். இளைப்பாற மட்டுந்தான் என்னட்ட வந்தாய். எனக்கோ நீ பக்கத்தில இருந்து, உன் அன்ப மட்டுமே தரோணும் போல இருந்தது. எண்டைக்குமே காசு பணத்துக்கு நான் ஆசைப்பட்டதில்ல. கையிலிருக்கிற காச வச்சு வீட்டை வாங்கலாம். காரை வாங்கலாம். சந்தோசத்தை? உன்ர அன்ப, உன்னோட கழிக்க ஆசைப்படுற ஒவ்வொரு நிமிசத்த எதக் குடுத்து வாங்க?”

அன்று கேட்க மறுத்ததை இன்றாவது கேட்கிறானே என்கிற நிம்மதி அவளிடம்! மனதில் இருந்தது எல்லாம் கொட்டினாள்.

ஆனால், அவன் முகத்தில் உணர்ச்சிகளே இல்லை.

எங்கோ வெறித்துக்கொண்டு, “உன்ர மனதை நீயாவது சொல்லியிருக்கலாம் யாஸ். வேறொரு வாழ்க்கையத் தேடமுதல் உன்ர விருப்பத்த, ஆசைய, ஏக்கத்த என்னட்ட ஏன் சொல்லேல்ல? சாராவப் பற்றி இண்டைக்கு இவ்வளவு யோசிக்கிறவள் அண்டைக்கு டெனிஷ் பற்றி ஏன் யோசிக்கேல்ல?” என்று கேட்டான் அவன்.

பதிலின்றித் தலை குனிந்து அமர்ந்திருந்தாள் யாஸ்மின். கணவன் அவர்களுக்காகத்தான் கஷ்டப்படுகிறான் என்று தெரிந்து, மனதின் ஆசைகளையும் இளமையின் தேவைகளையும் அடக்கிக்கொண்டுதான் அவளும் வாழ்ந்தாள். அந்த நேரத்தில்தான் டிம்மின் நட்பு அவளுக்குக் கிடைத்தது.

அவன் என்னவோ சாதாரண நண்பனாகத்தான் அறிமுகமானான். நாட்கள் செல்லச் செல்ல, அவனது அன்பும், நிதானமும், பழகும் விதமும் அவளைக் கவர்ந்து அவள் அறியாமலேயே மனதில் அவன் வந்திருந்தான். அதை அவள் உணர்ந்தபோதோ அவன் முற்றிலுமாக அவள் மனதை ஆக்கரமித்திருந்தான்.

பிறகு எங்கே கணவனிடம் அதைப் பற்றிக் கதைப்பது? அவன்தான் மனதுக்குள் வந்து விட்டிருந்தானே!

ஏற்கனவே நொந்துபோய் இருக்கிறவனிடம் இதை எப்படிச் சொல்வது?

அவள் அமைதியாக இருக்க புதியவனை வேடிக்கை பார்த்து முடித்துவிட்ட சாரா, வீட்டுக்குப் பின்னால் விளையாடப் போனாள். கபே கப்பை எடுத்துக்கொண்டு தானும் அவளோடு நடந்தான் விக்ரம்.

அங்கேயே அமர்ந்திருந்தால் இன்னும் கேள்விகளால் அவளைச் சுட்டுப் பொசுக்கிவிடுவோமோ என்று அஞ்சினான். அந்தளவுக்கு மனம் கொந்தளித்துக் கொண்டிருந்தது!

சின்னத் தோட்டம் வைத்திருந்தார்கள். நான்கு தக்காளி, நான்கு கத்தரி, கொஞ்சமாகக் காரட், மிளகாய்க் கன்று கூட ஒன்று நின்றது. அதை அவன் பார்க்கவும், “உன்னோட இருக்கேக்க பழகினது. எப்பயாவது மிளகா சாப்பிடுவன்.” என்றாள் அவனோடு கூட வந்த யாஸ்மின்.

இலகுவாக அவள் கதைக்க முயற்சிக்கிறாள் என்று விளங்க, “நீ எப்படிச் சாப்பிடுவாய் எண்டு எனக்குத் தெரியாதா? ஒரு மிளகாய நாளா வெட்டி, அத நாலு நாளுக்கு வச்சு சாப்பிடுவாய்.” என்று சொல்லிச் சிரித்தான் விக்ரம்.

“விக்கி! கேலி செய்யாத! நீ சாதாரணமாக நாளு மிளகாயை ஒரே நேரத்தில உள்ள தள்ளுவாய். நான் டிம்மிட்ட கூடச் சொல்லியிருக்கிறன். அவன் வாயப் பிளந்தான்.” என்று சொல்லிச் சிரித்தாள் அவள்.

அந்த நாட்கள் மனக்கண்ணில் ஓட உள்ளே வலி எழுந்தது அவனுக்கு.

அவன் மிளகாயைச் சாப்பிடுவதைப் பார்த்து, “இது அவ்வளவு ருசியாவா இருக்கும் விக்கி?” என்று கேட்டவளின் வாய்க்குள் அன்று அவன் ஒரு மிளகாயைத் திணித்ததும், விவகாரம் தெரியாமல் அவள் அதைச் சப்பியதும், உறைப்புத் தாங்காமல் அவள் பட்ட பாடும், அதைத் தடுக்க அவன் வழங்கிய இதழ் முத்தமும் என்று அவன் நினைவுகள் அந்த நாட்களுக்கு ஓடின. மனமோ இழந்துவிட்ட சொர்க்கத்தை மீட்க வழியின்றிப் போனதில் துடித்துத் துவண்டது.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock