“இண்டைக்கு மாட்ச்..”
“அதான் லேட்..”
“இதோ.. போய்க்கொண்டே இருக்கிறன்.” என்று வேகவேகமாக மெசேஜ் வந்து விழுந்துகொண்டிருந்தது.
போதாக்குறைக்கு ‘நான் பாவம்’ என்பது போன்ற ஸ்மைலி ஒன்று சோகமாய் வந்து நின்று அவளைப் பார்த்துக் கெஞ்சியது!
என்னவோ அவனே தலையைச் சரித்து, அந்த நீல நிறக் கண்களால் கெஞ்சுவது போலவே இருக்க, பெறாமகனிடம் மனம் கரைந்துதான் போனது யாமினிக்கு!
“ஏழு மணிக்குள்ள வீட்டுல இருக்கோணும் எண்டு சொல்லி இருக்கிறேன் எல்லோ!” கண்டிப்போடு அனுப்பினாள்.
முகம் பாராமல் உரையாடுவதில் இது ஒரு வசதி!
மனதில் நஞ்சிருந்தாலும் நல்லவராய் வேசம் போடலாம். பாசம் இருந்தாலும் இலகுவாய் மறைக்கலாம். இல்லாத கோபத்தைக் கூட இருப்பதாய் காட்டலாம். இப்போது மருந்துக்கும் இல்லாத கண்டிப்பை எழுத்தில் காட்டி யாமினி கேட்கவில்லையா? அப்படி!
“இனி இல்ல யாம்ஸ். இந்தா வீட்ட வந்திட்டன்.” என்றவன் சட்டென்று அவர்களின் ஹாலில் நின்று ஒரு செல்பியைக் கிளுக்கி அனுப்பினான்.
“சாப்பிட்டியா?”
“ம்ம்.. பெர்கர் கிங் ல..”
லாங் சிக்கனின் படம் வந்தது.
‘இதுல என்ன இருக்கெண்டு சாப்பிடுறான். ஒரு சத்தும் இல்ல. வளர்ற பிள்ளைக்கு இது எந்த மூலைக்கு?’ தாயாய் மனம் தவிக்க,
“அப்பாவ சமைக்கச் சொல்லு கண்ணா.” என்று அனுப்பினாள்.
“பாப்ஸ்ஸா?”
உருண்டு பிரண்டு சிரிக்கும் ஸ்மைலி விழுந்து கிடந்து சிரித்தது. அவளுக்கும் சிரிப்பு மூட்டியது அது.
‘அப்பாவுக்கும் மகனுக்கும் இந்த வாய்க்கொழுப்புக்கு குறைவில்ல!’ மனதில் சுகமாய் அலுத்துக்கொண்டாள்.
“அவர் சமைக்கிறத யார் சாப்பிடறது?” என்று அனுப்பினான் அவன்.
‘நல்லா வாயாடுவார்.. சமைக்கத் தெரியாதா?’
பிரெஷ்சாகி வீட்டுடை மாற்றியதும் வைபரில் அழைத்தான் டெனிஷ். துள்ளிக்கொண்டுபோய் ஐபாடை ஆன் செய்தாள் சந்தனா.
“ண்ணா.. இந்தா.. ம்மா..” என்று மழலையில் சந்தோசக் கூச்சல் இட்டாள் அவள். கைகளால் வேறு ஐபேடில் தெரிந்தவனைத் தொட்டு என்னவோ நிறையக் கதைத்தாள்.
அவனும், “பார்பி இண்டைக்குக் கடைக்குப் போனீங்களா?” என்று கேட்க,
“ம்ம்.. போனா.. சட்ட.. சூசு” என்று சட்டை வாங்கியதை, ஜூஸ் குடித்ததை அவள் பாசையில் சொல்ல, தமையனும் தங்கையும் அவர்களுக்கான உலகுக்கே சென்றிருந்தனர்.
அவனும் என்னவோ நிறையக் கேட்டான். இவளும் என்னவெல்லாமோ சொன்னாள். வீடு முழுக்க ஐபாடை கொண்டு ஓடிஓடிக் கதைத்தாள். வாங்கிவந்த பைகளை வேறு இழுத்துக் காட்டினாள்.
பார்த்திருந்த யாமினியின் மனம் கரைந்தே போயிற்று! அவளுக்கும் மகளுக்கும் கிடைத்திருப்பது எத்தனை அற்புதமான உறவுகள்?
ஆரம்பத்தில் தினமும் இவள் அவனுக்கு அழைக்கையில் அவன் இலகுவாகக் கதைக்கக் கொஞ்சம் திணறுவதை யாமினி உணர்ந்திருந்தாள். ஆயினும், பெற்றவள் இல்லாமல் போனால் என்ன அம்மாவாக, அனைத்துமாக உனக்கு நானிருக்கிறேன் என்று தாய்ப்பாசத்தை அவனிடம் காட்ட அவள் தயங்கியதேயில்லை. இப்போதெல்லாம் அவனும் அவளின் அழைப்புக்கு, அவனின் பார்பியோடான கதையளப்புக்கு ஆவலாகவே இருக்குமளவுக்கு வந்திருந்தான்.
மகள் இன்று கதைத்து முடிக்கமாட்டாள் என்று அறிந்து, “குட்டிம்மா, அண்ணா நாளைக்குப் பள்ளிக்கூடம் போகவேணும். அண்ணாக்குக் குட்நைட் சொல்லீட்டு அம்மாட்ட தாங்கோ..” என்று சொல்ல,
அவளும் சமத்தாக ஒரு குட்நைட்டை தன் பாஷையில் சொல்லி, ஒரு முத்தத்தை வேறு ஐபாடிலேயே தமையனுக்குக் கொடுத்துவிட்டுத் தந்தாள்.
“இனி நீங்க படுங்கோ! அங்க பாருங்கோ உங்கட செல்லம்மாவுக்கு நித்திரை வந்திட்டுதாம்.” என்று கட்டிலில் கிடந்த பொம்மையைக் காட்டிச் சொல்ல, அவளும் உடனேயே அவளின் அப்பாவாக மாறி பொம்மையோடு சேர்ந்து தானும் உறங்கச் சென்றாள்.
“இன்றைக்கு ஸ்கூல் எப்படிப் போச்சு டெனிஷ்?”
அன்றைய நாளை பற்றி அவனிடம் விசாரித்தாள்.
“நல்லா போச்சு. வாற புதன் மாத்ஸ் டெஸ்ட் இருக்கு. லீட்டர் மில்லிலீட்டர்.. கிலோகிராம், கிராம், மில்லிகிராம் டெஸ்ட்டுக்கு வரும்.” என்றான் அவன்.
“ஓ.. அப்ப இப்பவே என்னென்ன படிக்கோணும் எண்டு ஒரு லிஸ்ட் எடு. அதுல உனக்கு எது கஷ்டம் எண்டு நீ நினைக்கிறியோ அத ரெட் பென்னால நோட் பண்ணு. என்னென்ன பயிற்சி செய்யோணும் எண்டும் புத்தகப் பேஜ் எல்லாம் ஒரு பேப்பர்ல எழுதி உன்ர படிக்கிற மேசைக்கு முன்னால ஒட்டு. வார புதனுக்கு இன்னும் நாலு நாள் இருக்குத்தானே. அப்ப நீ படிக்கோணும் எண்டு நினைக்கிறதை நாலு பகுதியா பிரிச்சு, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியா படி. படிச்சிட்டு படிச்சத பென்னால அந்த லிஸ்ட் ல மார்க் பண்ணிவிடு. அப்ப அடுத்தநாள் உனக்குத் தெரியும் என்ன படிக்கோணும் எண்டு. எது கஷ்டமானது எண்டு ரெட் பென்னால மார்க் பண்ணி வச்சியோ அத ஒவ்வொருநாளும் செய்துபார். படிக்கேக்க ஏதாவது விளங்காட்டி, அத நோட் பண்ணி அடுத்தநாள் போகேக்க உன்ர பிரெண்ட்ஸ் ட்ட கேள். இல்ல டீச்சரிட்ட கேள். இல்லாட்டி அப்பாட்டையாவது கேள். சொல்லித்தருவார்.” என்றாள்.
“வாவ்..!! சூப்பர் ஐடியாவா இருக்கே யாம்ஸ். நான் எப்பவும் டெஸ்ட்டுக்கு முதல் நாள் தான் கஷ்டப்பட்டுப் படிப்பன்.” என்றான் அவன்.
“அப்படி முதல்நாள் படிச்சால் ஏதாவது தெரியாம இருந்தா யாரிட்ட கேட்டு விளங்கிக்கொள்ளுவாய்? டைமும் இருக்காது. கொஞ்சம் கொஞ்சமா படிச்சா ஈசியா விளங்கும், கஷ்டமாவும் இருக்காது. பயப்படாம போய் எழுதலாம்.”
அன்னையாய் கனிவாகச் சொல்லிக் கொடுத்தவளிடம், “தேங்க்ஸ் யாம்ஸ்!” என்றான் டெனிஷ் மெல்ல.
“ஹேய் கண்ணா! அம்மாட்ட யாராவது தேங்க்ஸ் சொல்வாங்களா? ம்? இன்னும் கொஞ்ச நாள்தானே. பிறகு அம்மா அங்க வந்திடுவன் தானே. அதுக்குப் பிறகு என்ர மகன் ஒண்டுக்கும் யோசிக்கத் தேவையில்ல.” என்றாள் பாசத்தில் மனம் கனிய.
ஒன்றுமே சொல்லாமல் ஒருவிதமான அதிர்ச்சியோடு அவளையே பார்த்தான் டெனிஷ்.
அவனின் அப்பா என்றுமே கைப்பிடித்து வழிகாட்டுகிறவன் அல்ல. வாழ்க்கை என்பது நாமாகத் தேடிக் கற்பது என்பதில் அசையா நம்பிக்கை கொண்டவன்! ‘நீயே உன் வழியைக் கண்டுபிடித்துப் போ. எங்கு நீ சென்றாலும், விழுந்தால் தூக்கி விடவும் முன்னேறினால் கைதட்டி உற்சாகமூட்டவும் உன் பின்னால் அப்பா நானிருக்கிறேன், நடப்பது மட்டும் நீயே உன் காலால் நடக்கவேண்டும்!’ என்கிற அசையாத தைரியத்தை மகனுக்குக் கொடுத்து, துணையாக நிற்பவன்!
அம்மா என்கிற உறவு அவனுக்கு இல்லாமல் போனதாகத்தான் அவன் முடிவு செய்திருந்தான். ஆனால் இன்று? பாப்ஸின் மனைவியாக வந்த யாமினி, நான்தான் உன் அம்மா எனவும் சின்னமனம் குழம்பிப் போனது! ஏற்கமுடியாமல் தத்தளித்தது!
“என்ன கண்ணா?” அந்தப் பார்வையின் பொருள் விளங்காமல் கேட்டாள் யாமினி.
“இல்ல.. அது.. என்னென்ன படிக்கோணும் எண்டு யோசிச்சனான்..” என்றுமில்லாத தடுமாற்றம் அவனிடம்.
நேரத்தைத் திரும்பிப் பார்த்தாள். அங்கே இரவு எட்டாகிக் கொண்டிருந்தது.
“இனி நாளைக்கு யோசிக்கலாம். இப்ப பேசாம படு. அப்ப நான் வைக்கவா?”
“ம்ம்.. ஓகே யாம்ஸ்.”
“சரி கண்ணா. குட்நைட். ஒண்டுக்கும் யோசிக்காம சந்தோசமா படு, என்ன! இந்தமுறை டெஸ்ட் நல்லா எழுதலாம் சரியா.” என்று கனிவாகச் சொல்லிவிட்டு லைனை கட் பண்ணினாள்.
ஆனாலும் மனதில் ஏன் அப்படிப் பாத்தான் என்று ஓடிக்கொண்டே இருந்தது.