நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் 16 – 1

அந்த யோசனையிலும், ‘கண்ணா வீட்ட வந்துட்டான்’ என்று விக்ரமுக்கு ஒரு மெசேஜை தட்டிவிட்டு, தானும் மகளருகில் சாய்ந்துகொண்டாள்.

சற்று நேரத்திலேயே அவன் பார்த்துவிட்டான் என்று தெரிந்தது. பதில் வரவில்லை. அதை அவளுமே எதிர்பார்க்கவில்லை.

இது தினமும் அவர்களுக்குள் நடப்பது. டெனிஷ் வீட்டுக்கு வந்துவிட்டானா, சாப்பிட்டானா என்று அறிந்ததும் அதை விக்ரமுக்குத் தெரியப்படுத்திவிடுவாள். ப்ரீயாக இருந்தால் எடுத்து இரண்டு வார்த்தைகள் கதைத்துவிட்டு வைப்பான் அவன். இல்லையானால் வேலை என்று இவள் விளங்கிக்கொள்வாள்.

“ஏன் எடுக்கேல்ல?” என்று சிறுபிள்ளையாக இவளும் கேட்டதில்லை.

“வேலை அதனால எடுக்க முடியேல்ல” என்று அவனும் விளக்கியதில்லை.

அந்தக் கேள்வி பதிலோ விளக்கங்களோ அவர்களுக்குள் அவசியமாகப் படவேயில்லை!

மகளைத் திரும்பிப் பார்த்தாள். நித்திரையாகி இருந்தாள். அவளின் செல்லம்மா மட்டும் இப்போது காலடியில் அநாதரவாய்க் கிடந்தது. சிரிப்போடு அதை எடுத்து மகளின் அந்தப் பக்கமாகப் படுக்க வைத்துவிட்டு, தானும் படுத்துக்கொண்டாள்.

‘இங்க சந்துக்கு நான் இருக்கிறன் அங்க தம்பி தனிய படுக்கிறானே. பாவம் பிள்ள. இவரிட்ட சொல்லோணும் கொஞ்சம் நேரத்துக்கு வீட்ட போகச் சொல்லி.’ என்று இவள் நினைக்கையிலேயே மெசேஜ் டோன் கேட்டது.

ஃபோனை எட்டி எடுத்துப் பார்த்தாள். விக்ரம் தான். “குட்நைட்” என்று அனுப்பி இருந்தான்.

“இன்னும் படுக்கேல்லையா?” இவள் பார்த்துவிட்டாள் என்று கண்டு கேட்டான்.

“ம்ஹூம். நித்திர வரேல்ல..” என்றபடி, மகளின் உறக்கம் கெடாதபடிக்கு மெல்ல எழுந்து வெளியே வந்து அவனுக்கு அழைத்தாள்.

எடுத்ததுமே, “வீடியோவ ஆன் பண்ணு!” என்றான் அவன்.

“இப்ப என்னத்துக்கு?” என்ன டிசைனில் இருக்கிறாள் என்றே தெரியாததில் சொன்னாள்.

அவனோ, “எனக்கு உன்ன பாக்கோணும்” என்றான் ஒரு வேகத்தோடு.

குரலில் அத்தனை ஏக்கம். அவன் வீடியோ தெரிந்ததில், அந்த விழிகளில் கூட எதிர்பார்ப்பு நிறைந்திருக்க, ஒரு நிமிஷம் என்றுவிட்டு ஓடிப்போய் ஒரு ஓவர்கோட்டினை மாட்டிக்கொண்டு, முடியை வேறு அவசரமாகக் காதோரமாக ஒதுக்கிக்கொண்டு வீடியோவை ஆன் பண்ணினாள்.

வாரப்படாத கூந்தல், கலைந்த குங்குமம், கசங்கிய உடை என்று கலைந்த ஓவியமாய் நின்று அவன் மனதுக்குச் சுகம் சேர்த்தாள் அவள்.

அவள் கோர்ட்டும் கருத்தில் பட, “இங்க வந்த பிறகும் இந்தக் கோர்ட்டோட தான் இருப்பியோ?” என்று கேட்டான்.

இவளுக்கு வெட்கச் சிரிப்பு வந்தது. “இல்ல அது குளிர்..” என்று தடுமாற,

“இலங்கைல குளிர்? எட்டிப்பார் ஸ்னோ கொட்டினாலும் கொட்டும்!” என்றான் இடக்காக.

‘இவரோட எதையாவது கதச்சிட்டாலும்!’

இந்தப் பேச்சிலும் அவன் முகத்தில் தெரிந்த களைப்பைக் கண்டுகொண்டாள் யாமினி. அன்று காலையில் பார்த்த அதே உடைதான். சற்றே நலுங்கி அவன் களைப்பை அதுவும் பறை சாற்றியது!

“இன்னும் வீட்ட போகாம என்ன செய்றீங்க? சாப்பிட்டீங்களா?” என்றாள் அக்கறையோடு.

“கொஞ்சம் வேல. அதுவும் முடிஞ்சுது. இனி வீட்ட போறதுதான் மிச்சம்.” என்றான்.

“என்ன நீங்க? வேல அது எப்பவும் இருக்கும். அதுக்காக இவ்வளவு நேரம் செய்ய வேணுமா? நல்லா களச்சுபோயிட்டீங்க எண்டு பாக்கவே தெரியுது. அங்க தம்பியும் தனியா இருக்கிறான். அவன் பாவமெல்லோ.” என்றாள் மனம் தாங்காமல்.

“அவன் இருப்பான். இங்க என்ன பயம்? பிள்ளைகள தைரியமா வளக்கோணும்.”

“அதுக்காகத் தனியா விடுறதா? இனி நீங்களும் ஏழுமணிக்கு வீட்ட நிக்கோணும். அதுக்கு ஏற்ற மாதிரி வேலைய ப்ளான் பண்ணுங்கோ!”

“அவனோடையும் இருந்திட்டுத்தான் வந்தனான். இலங்கைக்கு வந்ததுல வேல கொஞ்சம் தேங்கி நிக்குது. அதையெல்லாம் முடிச்சா ப்ரீ ஆகிடலாம். இல்லாட்டியும் இன்னும் கொஞ்ச நாள்தானே. நீ வந்திட்டுட்டா பிரச்சனை இல்லைத்தானே.”

சராமாரியாகக் கேள்விகளால் தன்னைத் தாக்கியவளை ரசித்துக்கொண்டே சொன்னான்.

“நான் வந்தா? சாமம் சாமமா வேல செய்யலாம் எண்டு பிளான் போல. அந்தக் கதையெல்லாம் இங்க சரிவராது. ஆறு மணிக்கே வீட்ட நிக்கோணும் சொல்லீட்டன். பிறகு வேலைக்குப் போறதெல்லாம் சரியா வராது. இல்லாட்டி வீட்டுக்கு வெளில தான். அது அப்பாவா இருந்தாலும் சரி மகனா இருந்தாலும் சரி!” முடிவாகச் சொன்னாள் யாமினி.

அவளின் அதிகாரத்தில் தன்னைத் தொலைத்துக்கொண்டிருந்தான் விக்ரம்!

“இப்ப என்ன உனக்கு? இரவுல நான் உன்னோட இருக்கோணும். அவ்வளவு தானே! எங்கயும் போகமாட்டன். உன்..னோடையே இருக்கிறன். இப்ப சரியா?” என்றான், என்னவோ அவள் அதற்காகத்தான் சொல்கிறாள் போன்ற பாவனையில்.

“உங்கள! நான் என்ன சொல்றன் நீங்க என்ன சொல்றீங்க?” எனும்போதே சிரிப்புப் பொத்துக்கொண்டு வந்துவிட்டது அவளுக்கு.

கலகலவென்று நகைத்தவள் சட்டென்று வாயை கையால் பொத்திக்கொண்டாள்.

“என்ன?” அவளின் ஒவ்வொரு அசைவையும் ரசித்துக்கொண்டே அவன் கேட்க,

“உங்கட செல்லம்மா நித்திர. எழும்பினாவோ பிறகு எனக்குச் சிவராத்திரிதான்.” என்றாள் யாமினி.

மகளின் நினைவில் அவன் முகம் கனிந்தது. “செல்லம்மாவ பாக்கோணும் மாதிரியே இருக்கு யாமினி.” என்றான் ஏக்கத்தோடு.

“சிலநேரம் இன்னும் மூண்டு மாதம் தானே. அது ஓடிடும் எண்டு இருக்கும். சில நேரம் இன்னும் மூண்..டு மாதம் இருக்கே உங்க ரெண்டுபேரையும் பாக்க எண்டு இருக்கும்.” என்றான் தன்னை மீறி.

அவளுக்கும் அப்படித்தானே. பதில் சொல்ல முடியாமல் தொண்டைக்குள் அடைத்துக் கொண்டது. எப்போதும் இப்படித் தவிப்பைக் கொட்டுவது அவள்தான். அவன் தேற்றுவான். அது சின்னக் கேலியாகவோ அதட்டலாகவோ இருக்கும்.

இன்று என்ன ஆகிற்று அவனுக்கு?

“என்னப்பா ஏதாவது பிரச்சனையா?” இதமாக விசாரித்தாள்.

“பிரச்சனை ஒண்டுமில்ல! ஆனா வீட்ட போகவே விருப்பம் இல்லாம இருக்கு. டெனியும் படுத்திருப்பான். அங்க போய் என்ன செய்ய எண்டு இருக்கு. எனக்கே இப்படி எண்டா டெனிக்கு.?”

அதனால் தானே அவன் வீட்டுக்கு வரும் நேரத்தில் அவள் எதையாவது அவனோடு கதைப்பதே! தான் வந்த பிறகும் அந்தப் பாலகன் தனிமையை உணர்ந்துவிடக் கூடாது என்பதை ஒரு உறுதியாகவே எடுத்திருந்தாள்.

எனக்காக.. என்னைப் பற்றி விசாரிக்க.. என் சந்தோசத்தை வருத்தத்தைப் பகிர்ந்துகொள்ள ஒருவர் இருக்கிறார் என்கிற நம்பிக்கையை, துணையை, தெம்பை அவனுக்கு அவள் கொடுக்க வேண்டாமா? அவள் கணவன் அவளுக்கு இருப்பது போல!

இப்போது கணவனைத் தேற்ற வேண்டிய கட்டாயத்தை உணர்ந்து, “இதுக்குத்தான் சொன்னனான் கொஞ்சம் நேரத்துக்கே வீட்ட போங்கோ எண்டு. அங்க டெனியோட நிக்கேக்க டெலிபோன் எடுத்தா நாலுபேரும் ஓண்டா கதைக்கலாம் எல்லோ. என்ன செய்வீங்க ஏது செய்வீங்க எண்டு எனக்குத் தெரியாது! நாளையில் இருந்து டெனியும் நீங்களுமா வீட்ட நிண்டு எனக்கு எடுக்கோணும். சரியா?” என்றாள் அவனிடம்.

அன்று மாலை அவனின் குழப்பமான பார்வையும் மனத்திரையில் வந்துபோக, இனி நால்வருமாகக் கதைத்து நாமொரு குடும்பம் என்கிற உணர்வை அவனுக்குள் விதைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டாள் யாமினி.

“ம்ம்..”

அப்போதும் அவன் முகம் முழுதாகத் தெளியாமல் இருக்க, “இன்னும் மூண்டு மாதம் தானேப்பா. அது கண்ண மூடி திறக்கமுதல் ஓடிடும். பிறகு நீங்களே தனியா இருக்கோணும் எண்டு ஆசப்பட்டாக் கூட நாங்க விடமாட்டம். அப்ப யோசிப்பீங்க அடடா தெரியாத்தனமா அவசரப்பட்டுடேனோ எண்டு..” என்றாள் கேலியாக.

இதுக்கு அவன் என்ன சொல்வான் என்கிற நினைவில் அவள் கன்னங்கள் மெல்லச் சூடேறத் தொடங்க, அதைக் கண்டவனின் கண்களில் சிரிப்பு!

உதட்டோரமாகக் குறுஞ்சிரிப்பைத் தவழ விட்டபடி, “விக்ரம் எண்டு சொல்லாம இதென்ன அந்தக் காலத்து ஆள் மாதிரி அப்பா எண்டு சொல்லுறாய்?” என்று வம்பிழுக்க ஆரம்பித்தான் அவன்.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock