அவளுக்கும் சிரிப்புத்தான் வந்தது. அது ஒன்றும் சொல்லவேண்டும் என்று எண்ணி அவள் வாயில் வரவில்லை. காலம் காலமாய் நம்மூர் பெண்கள் கணவரை அழைக்கும் அற்புதமான உணர்வை கொடுக்கும் அழைப்பது! அவளின் அம்மா அப்பாவை அப்படித்தான் அழைப்பார். அவளின் அம்மம்மா கூட ‘இஞ்சருங்கோப்போ’ என்றுதான் அழைப்பார். அப்படியே அவளுக்கும் தானாய் வந்தது.
“உங்கட பெயர யார் வேணுமெண்டாலும் சொல்லிக் கூப்பிடுவீனம். அப்பா எண்டு என்னைத்தவிர வேற யாராவது கூப்பிட ஏலுமா?” என்று சவாலாக எதிர் கேள்வி கேட்டாள் யாமினி.
“பிள்ளையள்?” சிரிப்போடு சொன்னான் அவன்.
“நான் வளந்த ஆக்கள சொல்றன். மாமா எண்டு உங்கட மருமகளும் கூப்பிடலாம். அத்தான் எண்டு எனக்கு ஒரு தங்கச்சி இருந்தாலும் கூப்பிடலாம். அப்பா எண்டு என்ன தவிர வேற யாரும் கூப்பிட ஏலாது. எனக்கு மட்டுமே சொந்தமான அழைப்பு அது.” என்றாள் அவள்.
சொல்கையில் சின்ன வெட்கம் வந்து தாக்கினாலும் சொன்னாள்.
“ஓ..!” உள்ளூர ஆச்சரியத்தோடு கேட்டுக்கொண்டான் அவன். அந்த அழைப்புக்குள் பொதிந்துகிடந்த ரகசியத்தை, அதன் சுகத்தை அதுநாள் வரை அவன் அறிந்ததில்லை. அதைவிட, அவளின் அந்த உரிமைக்கொடி அவனுக்கு மிகவுமே பிடித்தது.
“சரி சொல்லு. இண்டைக்குக் கடைக்குப்போய் உன்ர ‘அப்பா’ க்கு என்ன வாங்கின?”
‘இவருக்கு இனி இது காணும் என்ன ஓட்ட!’ உள்ளுக்குள் சுகமாய் அலுத்துக்கொண்டாள்.
“உங்களுக்கு என்ன வாங்க இருக்கு? நான் எனக்கும் பிள்ளையளுக்கும் தான் வாங்கினான்.” மிடுக்கோடு சொன்னாள்.
நம்பாத பார்வை பார்த்தான் அவன். “சரி. முதல் உனக்கு வாங்கினதைக் காட்டு.”
அவள் எடுத்துவந்து காட்ட, “நல்லாருக்கே. அப்படியே போட்டு காட்டினா இன்னும் நல்லாருக்கும்.” என்றான் ஆவலோடு.
அவளுக்கும் போட்டுக்காட்ட ஆசைதான். ஆனாலும் சின்னக் கூச்சம் வந்து தடுத்தது.
“நானெல்லாம் உன்னை மாதிரியில்ல. கட்டாயம் எப்படி இருக்கு எண்டு சொல்லுவன். அதால போட்டுக்கொண்டு வா!” என்றான் காலையில் அவன் திரும்பத் திரும்பக் கேட்டும் அவள் பதில் சொல்லாததை மனதில் வைத்து!
அவளுக்கும் அது விளங்காமலில்லை.
என்றாலும், “பிறகு.. போடேக்க காட்டுறேனே..” என்றாள்.
அவனது பிறந்தநாள் அன்று கோவிலுக்குப் போடலாம் என்றுதான் வாங்கினாள்.
அதை மனதில் வைத்துச் சொல்ல, “நான் பாத்து நல்லாருக்கு எண்டு சொல்லாம நீ எப்படிப் போடுவாய்?” என்று சண்டைக்கு வந்தான் அவன்.
அதை எடுத்துக்கொண்டு எழுந்து, “சரி. அப்ப நீங்க கட் பண்ணுங்கோ. நான் போட்டுட்டு எடுக்கிறன்.” என்று அவள் சொல்ல,
“நான் லைன்லையே நிக்கிறன், நீ இங்கேயே போடு” என்றான் அவன்.
‘கடவுளே..!!’ இவள் முறைக்க அவன் சிரித்தான்.
“ஓகே ஓகே! போட்டுட்டு கூப்பிடு!” என்றுவிட்டு வைத்தான் விக்ரம்.
நேரம் நடுச் சாமத்தையும் கடந்துகொண்டிருந்தாலும் இருவரும் அதைக் கண்டே கொள்ளவில்லை.
இவள் உடையை மாற்றி, அவனுக்குத் தெரியாதபடிக்கு தலையையும் மெல்ல வாரிக்கொண்டாள்.
சின்னத் தயக்கமும் ஆர்வமுமாய் அழைக்க, உடனேயே எடுத்தான் விக்ரம்.
இவள் ஆர்வமும் படபடப்புமாய் அவனையே பார்க்க, சற்று நேரத்துக்கு அவனிடம் அசைவேயில்லை. அவளிடமிருந்து விழிகளை அகற்றவும் இல்லை.
தன்னையே குனிந்து பார்த்தாள்.
‘பிடிக்கேல்லையோ… இல்ல நல்லா இல்லையோ.. இப்ப கண்ணாடில கூட வடிவா இருக்கிற மாதிரித்தானே தெரிஞ்சது..’ குழப்பமும் கேள்வியுமாக அவனை ஏறிட, அவள் விழிகளில் தெரிந்த வினாவைப் படித்துவிட்டு, “நல்லாருக்கு! உனக்கே அளவெடுத்து தச்ச மாதிரி!” என்றான் அவன்.
அந்தக் குரலில் என்னவோ வித்தியாசம்! இவளுக்குப் பிடிபடவில்லை.
“உண்மையாவா? இல்ல மாத்தவா?” சந்தேகம் வந்துவிட்டது அவளுக்கு.
“இல்லையில்ல மாத்தாத! இது உனக்கு நல்லாவே பொருந்துது. அதுசரி என்ன விசேசம்?”
“உங்கட பிறந்தநாளுக்குக் கோவிலுக்குப் போட வாங்கினான்.”
அவனுக்குப் பிடிக்கவில்லையோ என்று மனதில் ஓடிக்கொண்டு இருந்ததில் தன் ரகசியத்தை உளறிவிட்டாள் யாமினி.
“அப்ப எனக்கு?”
“உங்களுக்கும் ஒரு ஜீன்சும் நாலு…” என்று சொல்லிக்கொண்டு வந்தவள், தன் ரகசியத்தைத் தன் வாயாலேயே பிடுங்கிவிட்டவனை நன்றாகவே முறைத்தாள்.
“உங்கள என்ன செய்தா தகும்?” ஆத்திரமும் சிரிப்புமாக அவள் கேட்க,
“என்ன வேணுமெண்டாலும் செய்!” என்றான் அவன் அசராமல்.
கோபம்கொள்ள முடியாமல் சிரிப்புத்தான் வந்தது!
“எங்க எனக்கு எடுத்தத காட்டு பாப்பம்?” என்று அவன் கேட்க,
“போங்க! மாட்டன்!” முறுக்கிக்கொண்டாள் அவள்!
“என்ர செல்லம் தானே.. காட்டுங்கடி..” என்று அவன் கெஞ்ச,
‘விடவா போறார்?’ என்று சலித்தபடி கொண்டுவந்து காட்டினாள்.
எல்லாவற்றையும் பார்த்துவிட்டு மிகவும் நன்றாக இருப்பதாகச் சொன்னவன், “இது எப்படி என்ர கைக்கு வரும்?” என்று கேட்டான்.
“உங்களுக்கே தெரியாம பார்சல் போடுவம் எண்டு இருந்தனான். இப்பதான் தெரிஞ்சு போச்சே..” சோகமாகச் சொன்னாள் யாமினி.
‘நல்லகாலம் மோதிரமாவது இருக்கு!’
“தெரிஞ்சா என்ன? இந்தப் பிறந்தநாளுக்கு நீ வாங்கினதத்தான் நான் போடுவன். ஆனா, அனுப்பாத, எனக்குத் தெரிஞ்ச ஒராள் அங்க இலங்கைல தான் நிக்கிறார். அவரிட்ட சொல்லி விடுறன், வருவார் குடுத்துவிடு.” என்றான்.
“சரியப்பா. நீங்க வீட்ட போங்கோ. நேரமாகுது!” என்று அவள் சொல்ல, “வீட்டுக்கு முன்னாலதான் நிக்கிறன்.” என்றான் அவன்.
“உங்களுக்குத் தெரியாதோ போன் கதைச்சுக்கொண்டு கார் ஓடக்கூடாது எண்டு?” சின்னக் கோபத்தோடு கேட்டாள் யாமினி.
“நானும் அப்படிச் செய்யமாட்டன் யாமினி. எனக்கும் என்ர உயிர் முக்கியம். அதுவும் உன்னோட இன்னும் நிறையக் காலம் திகட்டத் திகட்ட நான் வாழோணும்.” என்றான் மென்மையாக அவளையே பார்த்து!
நெஞ்சை வருடிய நேசத்தில் அவள் அவனையே பார்க்க, “நீ உடுப்பு மாத்தேக்க தான் வீட்ட வந்தனான். இவ்வளவு நேரமும் கராஜுக்குள்ள கார்ல இருந்து கதைச்சனான்.” என்றபடி காரை விட்டு இறங்கினான் விக்ரம்.
“சரிம்மா. நீயும் போய்ப்படு. நாளைக்குச் சனி எண்டபடியா நிம்மதியா படு.” என்றுவிட்டு செல்லை அவன் அணைக்க,
மனதின் திக்குத் திசையெங்கும் நிறைந்துகிடந்த நேசத்தின் சுகத்தை அனுபவித்துக்கொண்டே உடையை மாற்றிவிட்டுக் கண்ணுறங்கினாள் யாமினி!
வீட்டுக்குள் நுழைந்த விக்ரமின் மனம் நிறைந்து கிடந்தது. உற்சாகமாய் மகனின் அறைக்குப்போய் அவனையும் பார்த்துக்கொண்டு அறைக்கு வந்தவன், அங்கே சின்ன ஃபோட்டோ ஒன்றில் அவனைப் பார்த்துப் புன்னகைத்த மனைவியின் கன்னத்தில் ஆசையாகத் தட்டிவிட்டு குளியலறைக்குள் புகுந்துகொண்டான்.
இன்றும் அந்த வீடு அவன் வருகையில் மயான அமைதியோடுதான் இருந்தது. ஆனால் மனமெங்கும் யாமினியின் வெட்கமும், சிரிப்பும், செல்ல முறைப்பும் நிறைந்து கிடந்ததால் தனிமையை அவன் உணரவே இல்லை. காதுக்குள் அவள் கலகல என்று சிரித்தத்தே ரீங்காரமிட்டது!
நீரினால் அவன் தேகம் நனைய யாமினியின் நினைவுகளால் மனம் நனைந்தது!
அவனது நினைவுகள் அத்தனையிலும் மெல்ல மெல்ல நிறைந்துகொண்டிருந்தாள் யாமினி!