நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் 17 – 1

தன் வீட்டுக் கிட்சனில் பம்பரமாய்ச் சுழன்றுகொண்டிருந்தாள் யாமினி! நேரம் மதியம் பன்னிரண்டைத் தாண்டிக் கொண்டிருந்தது. நேற்றுக் காலை கதைத்தபோது, அன்று மதிய உணவுக்குத் தன் நண்பர் வீட்டுக்கு வந்துவிடுவார் என்று சொல்லியிருந்தான் விக்ரம்.

அவரின் நம்பர் அவளிடம் இல்லை. புறப்பட்டுவிட்டாரா என்று கேட்கலாம் என்று விக்ரமுக்கு அழைத்தால் அவனது செல்லோ உயிர்ப்புடனேயே இல்லை! நேற்றிரவும் கதைக்கவில்லை. வேலை அதிகமானால் கதைக்கமாட்டான் தான். என்றாலும் இங்கே அவள் அவதி அவதியாகச் சமைத்துக்கொண்டு இருக்கிறாள், எப்போது வருவார் என்று தெரிந்தால் கொஞ்சம் நிதானமாக வேலைகளைச் செய்யலாமே என்பது அவளுக்கு!

கணவனின் நண்பர். அவனது மரியாதை குறைந்துவிடாமல் அவள் கவனித்து அனுப்ப வேண்டாமா?

கூல்ட்ரிங் கரைத்துப் பிரிட்ஜ்ஜில் வைத்துவிட்டாள். முதல் நாளே ஐஸ் கட்டிகளுக்கு அதற்கான தட்டில் நீர் ஊற்றி பிரீசரில் வைத்து, அதுவும் கட்டியாகி இருந்தது. வனிலா ஐஸ் வேறு வாங்கி வைத்துவிட்டாள். மதிய உணவுக்குப் பிறகான மாலைப் பொழுதில், கூல்ட்ரிங்க்குள் போட்டுக் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்குமே!

வடைக்கும் உளுந்து அடித்து வைத்துவிட்டாள். சுடச்சுட எண்ணையில் போட்டுக் கொடுப்பதுதான் வேலை!

மதிய உணவுக்கு, காரட், லீக்ஸ், பச்சைக் கடலை, வறுத்த கஜு, பிளம்ஸ் எல்லாம் போட்ட, கருவாப்பட்டை, கராம்பு ஏலக்காய் வாசத்தில் பசுமதி அரிசி ஒவ்வொரு சோறாக ஒட்டாமல் நின்று பிரைட்ரைஸ் உருவில் கமகமத்தது.

சந்திரன் மூலம் சொல்லிவைத்து அடித்த உயிர்கோழிக்கறி, அடுப்பில் முடியும் தறுவாயில் கொதித்துக் கொண்டிருந்தது. அதோடு, கத்தரிக்காய் பால்கறி, ஒரு கீரை, மெல்லிய புளிப்புக்கு மாங்காய் துருவல் சேர்த்த காரட் சம்பல், இதோடு அவித்த முட்டையும் கோழிக்கால் பொறியலும் என்று ஒரு விருந்தே செய்துகொண்டிருந்தாள் யாமினி.

ஆயாம்மா அவரின் மகன் வீட்டுக்குச் சென்றிருந்தபடியால் அவரும் இல்லை.

மகளை ஒருமுறை திரும்பிப் பார்த்தாள். டிவியில் மும்முரமாக மூழ்கி இருந்தாள். இன்றுமுழுக்க இவள் சமையலில் பிசி என்றால் அவள் டிவியில் பிசி. கூடாதுதான். என்றாலும் வேறு வழி இல்லையே! இல்லையோ இவளைச் சமைக்க விடவே மாட்டாள்.

மனதில் அது பட்டாலும், ‘நாளைக்கு ஆளை டிவி பக்கமே விடக் கூடாது!’ என்று முடிவு கட்டிக்கொண்டு வேலையைத் தொடர்ந்தாள்.

‘வாறவர நல்லா கவனிச்சு அனுப்போணும். என்ர மனுசனிட்ட எந்தக் குறையும் சொல்லக் கூடாது.’ என்று எண்ணியபடி அரிந்த காரட்டுக்குச் சாலட் சாஸினை கைகள் கலந்தாலும்,

‘இவர் நிண்டிருந்தா எவ்வளவு நல்லாருந்திருக்கும். என்ர கறி எண்டா ஒரு வெட்டு வெட்டுவார்.’ என்று எண்ணுகையில் மனதில் கவலையாயும் இருந்தது.

‘அங்கபோய் நல்லா சமைச்சு குடுக்கோணும். எங்கட சாப்பாட்டுக்கு ஏங்கிப்போய் இருக்கிறார்.’

விறுவிறு என்று வேலைகளை முடித்துப் பாவித்த பாத்திரங்களை எல்லாம் கழுவி வைத்தாள்.

காலையிலேயே வீட்டையெல்லாம் கூட்டித் துடைத்துவிட்டபடியால் கிச்சனை மட்டும் மீண்டுமொருமுறை கூட்டி மொப்பண்ணி விட்டாள்.

அதுவரை டிவியில் மூழ்கி இருந்த மகளைத் தூக்கிக்கொண்டுபோய் ஒருமுறை தண்ணீருக்குள் போட்டு எடுத்து, மஞ்சளில் சிவப்பு குட்டிக்குட்டி பூக்கள் போட்ட குடை போன்று விரிந்த பாவாடைக்குச் சிவப்பில் லேஸ் வைத்த கையில்லா சட்டையும் போட்டுவிட்டாள்.

தகப்பன் வாங்கிக் கொடுத்த செயின் அவள் கழுத்துக்குக் குடியேறியது. பாக்கிறவர்களின் கண்ணுக்கு எந்த விதத்திலும் கணவனின் தராதரம் குறைந்துவிடக் கூடாதல்லவா!

இரண்டு தென்னை மரங்களைத் தலையில் கட்டிவிட்டாள். முன் நெற்றியில் மட்டும் கொஞ்சமாய் முடிகளை நெற்றிக்கு வாரிவிட்டுக் கறுப்பில் பொட்டும் வைத்துவிட்டுப் பார்க்க, அச்சு அசல் பார்பி டாலாகவே தெரிந்தாள் பெண்!

‘இப்ப உன்ர அப்பா இருக்கோணும்! அவருண்ட செல்லம்மாவ கீழவே விடமாட்டார்’ என்று ஆசையோடு மகளைக் கொஞ்சிவிட்டு ஓடிப்போய்த் தானும் குளித்து ஒரு முழங்கால் வரையிலான பாவாடை சட்டையை அணிந்துகொண்டாள்.

அந்தப் பூக்கள் கொண்ட நெக்லஸ் அவள் கழுத்துக்குக் குடியேற, மகளின் உறக்கத்தைக் கெடுத்துவிடும் என்று கழட்டி வைத்திருந்த மணிகள் பொருத்திய கால் சலங்கையைக் கால்களுக்கு அணிந்துகொண்டாள். மிதமான அலங்காரத்தில் அவளும் தயார்!

எல்லா வேலையும் முடித்தாயிற்று! இனி வரவேண்டியவர் வருவது மட்டும் தான் நடக்கவேண்டியது!

மகளோடு சோபாவில் அமர்ந்து, விக்ரம் அழைத்திருக்கிறானா என்று தன் செல்லை எடுத்துப் பார்த்தாள். ம்ஹூம்! காணோம்!

அவளே மீண்டும் அழைத்தாள். இப்போது ரிங் போனது எடுக்கவில்லை.

‘என்னவோ கடும் வேலபோலதான் இருக்கு. இல்லாட்டி எடுக்காம இருக்கமாட்டார்.’ என்று எண்ணியபடி,

“அப்பா, சமையல் எல்லாம் முடிச்சிட்டன். ஒருக்கா அவர் எத்தனை மணிக்கு இங்க வருவார் எண்டு கேட்டுச் சொல்லுங்கோ.” என்று அவனுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு அவனது பதிலுக்காகக் காத்திருந்தாள்.

பதில் வரவே இல்லை. சரி என்று மகளோடு சேர்ந்து அவளின் பொம்மைகளை வைத்து விளையாடிக்கொண்டிருக்க, வீட்டு அழைப்புமணி ஒலித்தது.

சட்டென்று பரபரப்பாகிப் போனாள் யாமினி.

வேகமாக வாசலுக்கு விரைந்து கதவைத் திறந்தாள்.

திறந்தவள் அடுத்தக் கணமே, “அப்…பா!!” என்றாள் ஆனந்தமாய் அதிர்ந்து!

விருந்தினரை எதிர்பார்த்து அவள் திறக்க, அங்கே புன்னகை முகமாய் ஒரு கையில் பயணப் பெட்டி சகிதம் நின்றிருந்தான் விக்ரம்!

‘நிற்பது அவன் தானா?’ இதயம் சந்தோசத்தில் எம்பி எம்பித் துடிக்கத் தொடங்க, அப்படியே சிலையாகி நின்றுவிட்டாள்!

“அவ்வளவு தூரத்துல இருந்து வந்தவன வா எண்டு கூப்பிட மாட்டியா?” அவளின் ஆனந்த அதிர்வை ரசித்தபடி கேட்டான் விக்ரம்.

“இப்படித் திடீர் எண்டு வந்து நிண்டா? எனக்கு நம்பவே முடியேல்ல.” என்று இவள் சொல்லிக்கொண்டிருக்க,

அங்கே சோபாவில் இருந்த சந்தனா, தகப்பனின் குரலைக் கேட்டதுமே முகம் பூவாய் மலர்ந்து மின்ன, “ப்பா… பா… ப்பா.” என்று ஆரவாரக் கூச்சலிட்டபடி ஓடிவந்தாள்.

இரண்டெட்டில் விரைந்து வந்து அவளை அப்படியே தூக்கிக் கொண்டான் விக்ரம்!

சின்னவளோ அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு முகத்தோடு முகம் புதைத்துத் தன் சந்தோசத்தைக் காட்டினாள்.

“என்ர செல்லம்மாவ பாக்க அப்பா வந்திட்டேனே.” என்றவாறு, பெண்ணை அணைத்து முத்தமிட்டவனையே யாமினியின் விழிகள் வட்டமிட்டது!

மகளின் ஆர்ப்பரிப்புத்தான் இவள் மனதிலும்! அவள் செய்யும் அத்தனை அன்புப் பரிமாற்றங்களையும் தானும் செய்ய உள்ளம் உந்தியது!

தன் மீதே விழிகளைப் பதித்து அப்படியே நின்றவளை பார்த்தான் விக்ரம். கண்கள் நான்கும் கவ்விக்கொண்டன! விலகவேயில்லை! அவன் இதழ்களில் புன்னகை அரும்பியது. அவளை நெருங்கி, கன்னத்தில் தட்டி, “என்ன?” என்றான்.

ஒன்றுமில்லை என்று தலையசைத்தாள் புன்னகையோடு. கண்கள் மெலிதாகக் கலங்கிற்று! அவனை விட்டு விழிகளை அகற்றவே இல்லை!

மகளோடு சேர்த்து அவளையும் மெல்ல அணைத்தான்.

“என்னம்மா இது? சந்தோசப்படுவாய் எண்டு பாத்தா கண் கலங்கிற?” அவள் கேசத்தை ஒதுக்கியபடி அவன் கேட்க,

“இல்லையப்பா. இது சந்தோசத்துல வந்தது. ஆனா, இண்டைக்கு உங்கள பாப்பன் எண்டு கனவுலையும் நினைக்கேல்ல. சமைக்கேக்க கூடக் கவலையா இருந்தது. என்ர மனுசன் நிண்டா ஆசையா சாப்பிடுவாரே எண்டு.” என்றவள் அவன் கரங்களைப் பற்றினாள்.

அவளுக்கு அவனின் கதகதப்பை உணர்ந்து அவன் வந்து விட்டான்தான் என்பதை மனதால் உணரவேண்டி இருந்தது.

மனம் கனிய, மகளை விளையாட விட்டுவிட்டு மனைவியின் கன்னங்கள் இரண்டையும் பற்றி நெற்றியில் மென்மையாக இதழ்களைப் பதித்து மீட்டான் விக்ரம்!

“அதுதான் வந்திட்டேனே. பிறகென்ன?” என்றான் இதமாக.

“ம்ம்.” என்றபடி அவன் தோள் சாய்ந்துகொண்டாள் யாமினி. அவனும் ஒருகையால் அவளை அணைத்தபடி கன்னத்தை வருடிக்கொடுத்தான். அத்தனை பாரங்களும் கரைந்து நெஞ்சிலே இதம் படர்ந்தது!

“இரவு என்னோட கதைக்கேக்க கண்ணா கூடச் சொல்லேல்ல.” நிமிர்ந்து அவனைப் பார்த்துக் கேட்க,

“நான் தான் சொன்னனான் சொல்ல வேண்டாம் எண்டு.” என்றான் விக்ரம்.

“உங்கள! சொல்லி இருந்தா எயாபோட்டுக்கே வந்திருப்பன் தானே.” என்றாள் முறைப்போடு.

“சொல்லாம கொள்ளாம வந்தா என்ர மனுசி ஆசையா கவனிப்பாள் எண்டு பாத்தா… நீ முறைக்கிறாய்.” என்றான் சிரிப்போடு.

“முறைக்கிறேல்ல உங்களுக்கு முதுகுலேயே ரெண்டு போடோணும்.” என்றவள், “கண்ணாவையும் கூட்டிக்கொண்டு வந்திருக்கலாம் தானே. அவன் அங்க தனியா பாவம் எல்லோ.” என்றாள்.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock