“நான் கூப்பிட்டனான். அவன் தான் வரமாட்டானாம். இங்க சரியான வெயிலாம்.”
“ம்ம். போனமுற இங்க நிக்கேக்க சரியா கஷ்டப்பட்டவன்தானே.” என்றவளுக்கு, அவன் இங்கு நின்றபோது இரவில் காற்றாடி வேலைசெய்தாலும் புழுக்கம் தாங்காமல் அவன் உறக்கமின்றித் தடுமாறியதும் விக்ரம் இரவிரவாக மகனுக்கு அருகே அமர்ந்து விசிறியதும், அடுத்தநாளே ஓடிப்போய் ஒரு ஏசி வாங்கி வந்ததும் நினைவில் வந்தது.
“சரி வாங்கோ சாப்பிட. பசியா இருக்கும்.” என்று அழைத்தாள்.
அவளுக்குத் தெரியும், அவள் கைச்சமையலைச் சாப்பிட என்றே வயிற்றை வெறுமையாகக் கொணர்ந்திருப்பான் என்று!
“செல்லம்மா சாப்பிட்டாவா?”
“இல்ல… வாறதா சொன்ன அண்ணா வரட்டும் எண்டு.” என்று சொல்லிக்கொண்டு வந்தவள் நின்று திரும்பி, “அது பொய்தானே?” என்று கேட்டாள்.
அவன் சிரிக்க, “அப்ப எப்பவோ ப்ளான் பண்ணீட்டீங்க இங்க வாறதுக்கு. எங்களிட்ட சொல்லேல என்ன? உங்கள என்ன செய்யலாம் சொல்லுங்கோ?” என்றாள் கோபமாக.
“என்ன வேணுமெண்டாலும் செய். இப்ப செல்லம்மாவுக்குச் சாப்பாட்ட கொண்டுவா.”
“நான் அவவுக்குக் குடுக்கிறன். நீங்க குளிச்சிட்டு வாங்கோ.” என்றபடி அவள் கிட்சனுக்குப் போக,
“நானே குடுக்கிறன். தா” என்றான் அவன்.
மகள் மீதான அவனின் ஏக்கமும் பாசமும் தெரிய, ஒன்றும் சொல்லாமல் மனம் நிறையப் போட்டுக் கொடுத்தாள்.
‘பிறகு நானும் அவரும் ஓண்டா சாப்பிடலாமே..’ ரகசியமாக எண்ணம் ஓடியது!
அவன் உணவைக் கொடுக்க அவளும் தகப்பனின் மடியில் இருந்தே வாங்கிக்கொண்டாள்.
அதன்பிறகும் சந்தனா தகப்பனின் மடியை விட்டு அகலவே இல்லை!
“செல்லம்மா இருக்கிறீங்களா. அப்பா ஓடிப்போய்க் குளிச்சிட்டு வாறன்?” என்று மனைவியிடம் பிள்ளையைக் கொடுத்துவிட்டு அவள் எடுத்து வைத்திருந்த பைஜாமா, துவாய் சகிதம் குளியலறைக்குள் புகுந்துகொண்டான் விக்ரம்.
அவன் குளித்து முடித்த சத்தம் கேட்கவும்,
“குட்டிம்மா பொம்மையோட இருந்து விளையாடுங்கோ. அம்மா அப்பாக்கு சாப்பாட்ட போட்டுக் குடுத்திட்டு வாறன். அப்பாக்கும் பசிக்கும் எல்லோ.” என்று மகளைச் சோபாவில் விட்டுவிட்டு அவள் போய்த் தேசிக்காயை(லெமன்) இரண்டாகப் பிளந்து கறிகளுக்குப் பார்த்துப் பார்த்துத் தேசிப்புளி பிழிந்து விட்டாள்.
கறிகளை ஒருமுறை கிளறிவிட்டு, தட்டில் இவள் சோற்றை இட, அங்கே இவள் மகளோ, “ப்பா… ப்பா!” என்று அவனை ஏலம் விட்டுக்கொண்டிருந்தாள்.
“இந்தா வாறன் செல்லம்.” என்று விக்ரம் சொல்வதும் கேட்டது.
இதழோரம் புன்னகை அரும்பிற்று யாமினிக்கு.
‘இனி இதுதான் நடக்கும்! அப்பாவ மகளும் மகள அப்பாவும் வால் பிடிச்சுக்கொண்டு திரிவீனம்.’
வேக வேகமாகக் குளித்து உடையை மாற்றிக்கொண்டு கதவைத் திறந்த விக்ரம், அவன் கொடுத்த பார்பியை அணைத்தபடி நிலத்தில் அமர்ந்திருந்து குளியலறைக் கதவிலேயே சாய்ந்து தனக்காகக் காத்திருந்த பெண்ணைக் கண்டு உருகியே போனான்.
இதில் அவன் கதவைத் திறந்ததில், அதை எதிர்பாராதவள் பின்னால் சரியவும் வேகமாகக் குனிந்து தூக்கிக் கொண்டான்.
“என்ர செல்லம் அப்பா இல்லாம ஏங்கிப் போனவளே..” என்று கேட்டபடி யாமினியை தேடி சமையலறைக்கு வந்தான்.
அவள் தட்டில் உணவிடுவதைக் கண்டுவிட்டு கறிகளை ஆராய்ந்தான்.
“பெரிய விருந்துதான் போல..”
“பின்ன? உங்கட பிரெண்ட் வாறார் எண்டா வடிவா கவனிக்க வேண்டாமா? சமைக்கேக்க எனக்குச் சரியான கவலை. பாத்து பாத்து செய்றன் சாப்பிட நீங்க இல்லையே எண்டு பாத்தா சொல்லாம கொள்ளாம வந்து நிக்குறீங்க.”
“அப்ப நான் திரும்பப் போயிட்டு சொல்லீட்டு இன்னொருக்கா வரட்டா?” என்று கேட்டபடி, மகளோடு கிச்சன் பலகையில் ஏறி அமர்ந்துகொண்டான் விக்ரம்.
“அவள தந்திட்டு நீங்க சாப்பிடுங்கோ.” என்று கைகளை நீட்ட, அவளோ இவளிடம் வர மறுத்தாள்.
“பாருங்கோவன் இவளின்ர சேட்டைய! இவ்வளவு நாளும் எல்லாத்துக்கும் நான் வேணும். உங்கள கண்டதும் என்னட்ட வரமாட்டாவாம்!” அவனிடம் செல்லமாக முறையிட்டாள்.
அவனோ தன் பெண்ணைச் சின்னச் சிரிப்போடு ரசித்துக்கொண்டிருந்தான். “குட்டி அப்பான்ர செல்லம், என்னம்மா?” என்றான் மகளிடம். அவளும் ஆமென்று தலையசைத்துத் தகப்பனைக் கட்டிக்கொண்டாள்.
“குட்டி வாங்கோ. அப்பா சாப்பிடட்டும்!” என்று கூப்பிட்டும் அவள் வர மறுக்க,
“விடு! அவள் இருக்கட்டும். எனக்கு இப்ப பசியில்ல.” என்றான் அவன்.
கண்களில் பசி தெரிந்தாலும் மகளுக்காக அதை மறைத்தவனிடம், “இனி ரெண்டுபேரும் நான் சொல்றத கேக்கமாட்டீங்க.” என்றுவிட்டு ஒரு ஸ்பூனை எடுத்து உணவைக் குழைத்து, அள்ளி, “ஆவெண்டுங்கோ.” என்றபடி அவன் வாய் அருகே கொண்டுபோனாள் யாமினி.
அவள் இப்படிச் செய்வாள் என்று கொஞ்சமும் எதிர்பாராத விக்ரம் யாமினியையே பார்த்தான்.
“சந்துவ விட நீங்க மோசமா இருப்பீங்க போல. ஆ காட்டுங்கோப்பா.”
அவளையே பார்த்தபடி விக்ரம் வாயைத் திறக்க, உணவை அவனுக்குக் கொடுத்தாள் யாமினி.
மகள் அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்க்க, “குட்டிக்கும் வேணுமா?” என்று கேட்டு ஒரு வாய் அவள் அருகே கொண்டு செல்ல, முகத்தைத் திருப்பிக்கொண்டு தகப்பனிடமிருந்து நழுவி ஓடினாள் சின்னவள்.
சின்னவளின் கள்ளத்தனத்தில் பெரியவர்கள் இருவரும் ரசித்துச் சிரித்தனர். “எங்கட பேச்சைக் கூடக் கேக்காதவள ஒருவாய் சோறு கேக்கவைக்குது.” என்றவள்,
“இந்தாங்கோ.” என்று தட்டை நீட்ட அவனோ அதை வாங்காமல் அவளையே பார்த்தான்.
“என்ன? இனியாவது பசியாற சாப்பிடுங்கோவன்.”
“நீயே தா!” என்றான் அவன்.
இதென்ன என்று பார்த்தாள் யாமினி.
பசியோடு இருக்கிறானே என்றுதான் அவள் கொடுத்ததே!
“ஏன் தரமாட்டியா?” என்று கேட்டவன் அவளை இரண்டு கைகளாலும் வளைத்துத் தனக்குள் கொண்டுவந்தான். கரங்கள் இரண்டையும் அவளின் பின்னால் கொண்டுபோய் ஒன்றோடு ஒன்றை கோர்த்துக்கொண்டான்.
அவனின் கைகளுக்குள் அவள்!
தேகமெல்லாம் சிலிர்ப்போடியது யாமினிக்கு!
அப்போதுதான் குளித்துவிட்டு பிரெஷ்சாக வந்தவனிடம் இருந்துவந்த வாசனை வேறு அவளைத் திக்குமுக்காட வைத்தது!
“சந்து வந்தாலும். விடுங்கோ!” என்று அவள் தடுமாற,
“செல்லம்மா இப்போதைக்கு வரமாட்டா. நீ சாப்பாட்ட தா.” என்றான் அவன்.
“இல்லாட்டியும் பரவாயில்ல. பிள்ளைகளுக்குத் தெரியோணும் அம்மாவும் அப்பாவும் ஒருத்தருக்கு ஒருத்தர் எவ்வளவு பாசமா இருக்கீனம் எண்டு.”
அதற்குமேல் ஒன்றுமே சொல்லாமல், அவனிடம் சொல்வதில் பிரயோசனமும் இல்லை என்று தெரிந்து உணவைக் கொடுக்க, “ம், சொல்லு! நானில்லாம இந்த மூண்டு மாதமும் எப்படிப் போச்சு?” என்று விசாரித்தான் விக்ரம்.
“ஏதோ போச்சு. பள்ளிக்கூடமும் பிள்ளையும் எண்டு.” தன் வேதனையை மறைத்துக்கொண்டு அவள் சொல்ல, சற்றுநேரம் அவளையே பார்த்தான் விக்ரம்.
அவன் கண்களைச் சந்தியாது உணவைக் கொடுத்தாள் யாமினி.
“கஷ்டமா இருந்ததா?” என்று மென்குரலில் அவன் கேட்கையிலேயே இவள் கண்கள் மெலிதாகக் கலங்கிற்று!
அதை மறைக்கும் சிரிப்போடு, “முதல் அப்படித்தான். பிறகு பழகீட்டுது.” என்றாள்.
“ம்ம்..” என்றபடி அவளின் முடிக்கற்றைகளைக் காதோரம் ஒதுக்கிவிட்டான் விக்ரம்.
கண்களில் நாணம் படர அவள் பார்க்க, “நீயும் சாப்பிடு!” என்றான் பாசத்தோடு.
“இல்ல. முதல் நீங்க சாப்பிடுங்கோ.” எனவும்,
ஸ்பூனை வாங்கி அவளுக்குத் தான் கொடுத்தான் விக்ரம்.
“இன்னும் கொஞ்ச நாள்தானே..” என்றான் ஆறுதலாக.
“இப்பவே உன்ன கூப்பிடுறதுக்குத் தேவையான வேலை எல்லாம் அங்க பாக்கத் தொடங்கீட்டன். நீ பாசானதும் அந்தச் செர்டிப்பிக்கேட்ட இங்க காட்டினதும் அங்க வரலாம்.” என்றான் ஆறுதலாக.
“படிப்பு எப்படிப் போகுது?” என்று கேட்டான்.
“நல்லா போகுது. எனக்கு இப்ப டொச் படிக்க விருப்பம்.” என்றாள் அவள்.
“ஓ.. அப்ப நான் கேட்டதுக்கும் உனக்குப் பதில் தெரியும்.”
“தெரிஞ்சா என்னவாம்?” என்றாள் அவள் சிரிப்போடு.
“வரவர நீயும் மோசமாத்தான் வாறாய்.” என்று என்னென்னவோ கதைத்தபடி அவர்களின் உணவு வேளை மிக அழகாகவே கழிந்தது.