நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் 18 – 1

அடுத்தநாள் காலையில் நேரத்துக்கே முழிப்பு வந்துவிட்டது யாமினிக்கு. அன்று விக்ரமுக்கு பிறந்தநாள்!

மெல்ல எழுந்துபோய்த் தலைக்குக் குளித்துவிட்டு வந்து அன்று வாங்கிய சுடிதாரை அணிந்துகொண்டாள்.

முதல்நாள் விக்ரம் சந்தனாவோடு விளையாடிக்கொண்டிருந்த வேளையில் சந்திரனுக்கு அழைத்துக் கேக்குக்குச் சொல்லியிருந்தாள். அவரும் விக்ரமைப் பார்க்க வந்தேன் என்று சொல்லிக்கொண்டு வந்து இவளிடம் அதைக் கொடுத்துவிட்டுப் போனார். அதை எடுத்து, கிட்சனில் வைத்து கலரிங்கால் அவன் பெயரை எழுதி, பிரிட்ஜ்ஜில் மறைத்து வைத்தாள்.

மகளுக்குப் பாலையும், அவர்கள் இருவருக்கும் காலைத் தேநீருக்காய் தண்ணீரையும் அவள் கொதிக்க வைக்க, விக்ரம் வருவது அவனது காலடி ஓசையில் கேட்டது.

முகம் மலரத் திரும்பி, “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!” என்று வாழ்த்தினாள் யாமினி.

அவனோ அவளருகில் வந்து புருவங்களைத் தூக்கியபடி நின்றான்.

என்ன பார்வை இது என்று உள்ளே ஓடினாலும், “வாழ்த்து சொன்னா நன்றி சொல்லோணும்! அதுதான் முறை!” என்றாள் யாமினி.

“வாழ்த்த முறையாச் சொன்னா நானும் நன்றி சொல்லுவன்.” அமைதியாகச் சொன்னான் விக்ரம். கண்களில் மட்டும் விசமம்.

இந்த அமைதி நல்லதுக்கு இல்லையே.!

“இதவிட முறையா.. வேற எப்படி?” என்று அவள் யோசிக்கையிலேயே அவளை நெருங்கினான் அவன்.

“இப்படிக் கிட்ட வந்து..” கிட்ட வந்தான்.

“கட்டிப் பிடிச்சு..” அவளைத் தன் கையணைப்புக்குள் கொண்டுவந்தான்.

“ஆசையா நெற்றியில கிஸ் பண்ணி” அதையும் செய்தான்.

இதையெல்லாம் எதிர்பாராதவளோ விழிகளை விரிக்க, “கண்ணோட கண் கலந்து..” என்றபடி அவள் விழிகளோடு விழிகளைக் கலந்தான்.

“இப்ப சொல்லோணும் பிறந்தநாள் வாழ்த்து.” என்றான் அவள் விழி வழியே இதயத்துக்குள் நுழைந்தபடி.

“ம்.. சொல்லு!”

என்ன சொல்வாள்? அவளின் அனைத்துப் புலன்களையும்தான் அவன் தன் வசமாக்கி இருந்தானே..!

அவனிடமிருந்து விழிகளைப் பிரிக்கமுடியாமல் அவள் அப்படியே இருக்க, “சொல்லு யாமி!” என்றான் அவளின் காதோரம் கிசுகிசுப்பாக.

சட்டென்று தேகம் சிலிர்க்க, அவனிடமிருந்து அவள் விடுபட முயல, தோள்களை அழுத்தமாக பற்றி, “சொல்லீட்டுப் போ!” என்றான் அவன்.

அங்கே சந்தனாவும் சிணுங்கிக் கேட்க, “ஐயோ விடுங்கோ.. சந்து எழும்பீட்டா” என்று அங்கிருந்து ஓடத் துடித்தாள் யாமினி.

“சொல்லீட்டு ஓடு!” அவன் தன் பிடியிலேயே நின்றான்.

“பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று அவன் கண்களைப் பாராது சொல்லிவிட்டு அவள் ஓட,

“கிஸ் மிஸ் தான். பரவாயில்ல. அத பிறகு வாங்குறன்.” என்று சொல்லிச் சிரிக்கும் அவன் குரல் அவளை இன்னும் வேகமாகத் துரத்தியது!

அறைக்குள் நுழைந்து மகளைத் தூக்கிக்கொண்டாலும், நெஞ்சின் படபடப்பு அடங்குவேனா என்றிருந்தது அவளுக்கு!

‘சந்து அழுததுல தப்பீட்டன்!’

மனதால் நெருக்கம் அவர்களுக்குள் எப்போதோ உருவாகிவிட்டதுதான். அதே நேரம் அவர்களுக்கிடையிலான அவனின் சின்னச் சீண்டல்களையும், செல்லக் கேலிகளையும் அவளும் ரசிப்பாள்தான்! இன்னும் சொல்லப்போனால் அதை அவள் நெஞ்சம் கள்ளத்தனமாக விரும்பும்!

ஆயினும் அதெல்லாம் தொலைபேசி வாயிலாகத்தான். அதே நெருக்கத்துடன் நேரிலும் அவன் நெருங்க.. இவளுக்குள் ரயில் தடதடத்தது. அவன் முன் நிற்கவே முடியாமல் தடுமாறினாள்.

என்னவிதமாய்ப் பிரதிபலிப்பது என்றுகூடத் தெரியவில்லை. இதழோரத்தில் மட்டும் அவனின் வம்பை ரசிக்கும் கள்ளப் புன்னகை ஒன்று களவாகப் பூத்துக் கிடந்தது!

சந்தனாவைக் குளிக்கவைத்து, அவளுக்கும் புது ஆடை அணிவித்துவிட்டு, தலை வாரி பொட்டு வைத்து தயாராக்கினாள்.

அவனுக்கு என்று அவள் ஆசையாசையாக எடுத்த உடைகளைக் கட்டிலில் எடுத்து வைத்துவிட்டு சந்துவை இடுப்பில் தூக்கியபடி வெளியே வந்தவள் அவனை நிமிர்ந்தே பார்க்கவில்லை.

அதை உணர்ந்தவனின் விழிகளில் சிரிப்பு.

கிச்சனுக்குள் சென்றால், அங்கே சந்துவுக்கான பால் தயாராக இருந்தது.

‘இதெல்லாம் செய்யத் தெரியுமா’ என்று எண்ணியபடி பெண்ணுக்கு கொடுக்க, அவளும் கிட்சனிலேயே போடப்பட்டிருந்த அவளுக்கான குட்டிக் கதிரையில் அமர்ந்து சமத்தாக வாங்கி இரண்டு கரங்களாலும் பற்றிக் குடித்தாள்.

‘சந்து வளந்திட்டா.. தானே பிடிச்சு குடிக்கிறா..’ என்று எண்ணியபடி நின்றவளின் முன்னால் ஒரு கப்பை நீட்டினான் அவன்.

கேள்வியாக நிமிர்ந்து பார்க்க, “தேத்தண்ணி(தேநீர்)” என்றான் கண்ணால் சிரித்தபடி.

கைகள் அதை வாங்க, “நீங்க ஏன் போட்டனீங்க?” என்றாள் முணுமுணுப்பாக.

கப்பை வாயருகே கொண்டுபோனவளுக்கு, அன்று, டெனிஷ் ‘அப்பா சமைச்சா யாரு சாப்பிடறது’ என்று கேட்டது நினைவில் வர, “நம்பிக் குடிக்கலாமா?” என்று அவனைப்பார்த்து கேட்டாள்.

அவளின் கப்பை வாங்கித் தான் அருந்தினான். “ம்ம்.. நல்லாருக்கு. இனி நீ நம்பிக் குடிக்கலாம்” என்று அவளிடம் நீட்டினான்.

‘தேவையாடி உனக்கு இது?’ மனமார திட்டிக்கொண்டவளுக்குப் பெரும் வெட்கமாய்ப் போய்விட்டது.

அவனோ தன் கண்களை அவள் முகத்திலேயே பசை போட்டு ஒட்டி விட்டிருந்தான்.

இப்போது குடிக்காமலும் விடமுடியாது. அவன் முன்னால் குடிக்கவும் முடியாமல் அப்படியே நிற்க, அந்தக் கப்பை அவளின் கரத்தோடு சேர்த்து பற்றி அவளின் உதட்டருகே கொண்டுபோனான்.

குங்குமமாய்ச் சிவந்துவிட்ட முகத்தோடு பருகினாள் யாமினி. விக்ரமால் அவளிடமிருந்து விழிகளை அகற்றவே முடியவில்லை!

தன்னை மறந்து அப்படியே நின்றான்!

அப்போது,அவர்கள் வீட்டு அழைப்புமணி ஒலிக்க, அவனிடமிருந்து தப்பித்தால் போதுமென்று வாசலுக்கு ஓடினாள் யாமினி.

“ப்பா..” மகளின் அழைப்பில்,

“என்னடா செல்லம்?” என்று அவளிடம் திரும்பினான் விக்ரம்.

குடித்து முடித்து நீட்டிய பால் கப்பை வாங்கி வைத்துவிட்டுப் பெண்ணைத் தூக்கிக்கொண்டான் அவன்.

சின்னவள் வாயை இவன் துடைத்துவிட, “என்ன ஆளடி நீ? கட்டின மனுசனுக்குப் பிறந்தநாள். பிரெண்ட்ஸ கூப்பிட்டு பார்ட்டி தராம வீட்டுக்க ஒளிஞ்சு கிடக்கிறாய் என்ன? ஆனா விடமாட்டம் நாங்க..” என்று குரல் கேட்க, மகளோடு ஹாலுக்கு வந்தான் விக்ரம்.

“நேற்று முழுக்க உனக்கு எடுத்தா நீ ஃபோன தூக்கவே இல்ல. காசு செலவழிக்க அவ்வளவு கஞ்சமாடி?” என்றபடி திரும்பிய சந்தியா மகளைத் தூக்கியபடி வந்த விக்ரமைக் கண்டு ஒருகணம் அதிர்ந்தாள்.

சட்டென அவள் விழிகளில் குறும்பு மின்னியது. “இப்ப விளங்குது.. நீ ஏன் ஃபோன தூக்கேல்ல எண்டு..” என்றாள் யாமினியிடம் கண்ணடித்து.

அவள் என்னென்னவோ இடக்கு முடக்காக நினைத்துக்கொண்டு சொல்ல, ‘ஐயோ.. சும்மாவே இவர் என்னைப் போட்டு படுத்தி எடுப்பார். இவள் சொன்னத வேற கேட்டா..’ வேகமாகத் திரும்பிப் பின்னால் பார்க்க, விக்ரமும் புன்னகையோடு அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

படக்கென்று சந்தியாவிடம் திரும்பி, “ஏய் லூசு! சும்மா இரு. அவர் எனக்கே தெரியாம திடீர் என்று வந்து நிக்கிறார். இதுல நீ வேற..” என்றாள்

“ஓ..! சப்ரைஸ் வரவு! அது இன்..னும் கிக்கா இருக்குமே!” என்றவளைக் கண்டு தலையில் அடித்துக் கொள்ளலாம் போலிருந்தது யாமினிக்கு.

அவளோ விக்ரமிடம் வந்து, “ஹாய் அண்ணா. நான்தான் சந்தியா. என்ர மனுசன் சேகர் உங்களோட கதைச்சவர். ஞாபகம் இருக்கா?” என்று விசாரித்தாள்.

“ஓமோம்! சேகர் என்ன வந்து பாத்தவர்.” என்றான் புன்னகைத்து.

“எனக்கும் உங்கள நேர்ல பாத்ததுல பெரிய சந்தோசம் அண்ணா. உங்கட ‘டெனிஷ் மொபைல்’ தான் இவர் பாவிக்கிறவர். இலங்கைக்கு நல்ல மலிவாம் எண்டு சொல்றவர். இவர் மட்டுமில்ல அங்க இருக்கிற எங்கட ஆக்கள் எல்லாருமே அதுதானாம் பாவிக்கிறதாம் எண்டு இவர் உங்கள பற்றி ஒரே புகழ்ச்சி. ஆனா அதுக்காக எல்லாம் உங்க ரெண்டுபேரையும் இப்படியே விட ஏலாது. முதல் கைய தாங்கோ.” என்று அவன் கையைப் பற்றி,

“இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா!” என்று அவள் வாழ்த்த,

“நன்றிம்மா!” என்றவன் அவள் அறியாமல் மனைவியிடம் குறும்பாகக் கண் சிமிட்டினான்.

பொய்யாக முறைத்த யாமினியின் கண்களில் அவனை அப்படியே சுழற்றிப்போடும் அழகான நாணம்!

“சரி சொல்லுங்கோ. எனக்குப் பார்ட்டி வேணும். எனக்கு மட்டுமில்ல அஜிதா நிர்மலா எல்லாரும் வருவம். இண்டைக்கு உங்களுக்கு ஒரு செலவு வைக்காம விடமாட்டம். எங்க போகலாம்?” என்று கலகலத்தவளிடம்,

“எங்க போவம் எண்டு நீயே சொல்லம்மா. அங்கயே போவம்.” என்றான் அவன்.

“அப்ப சரி. நான் போய் அஜிய கூட்டிக்கொண்டு வாறன். திரும்ப இங்கேயே வாறதா?” என்று கேட்டாள்.

“ஏன் வீண் அலைச்சல். நீங்க எல்லாரும் எங்க சாப்பிட ஆசப்படுறீங்களோ அங்க போய்நின்று எங்களுக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கோ. நாங்க அங்க வாறம்.” என்றான் விக்ரம்.

“ஓகே அண்ணா. அப்ப பை! குட்டிம்மா பை!” என்றவள் யாமினியை முறைத்துக்கொண்டே சென்று செருப்பை மாட்ட,

“ஏய் நில்லடி. ஒரு தேத்தண்ணி கூடக் குடிக்காம போறாய்?” என்று மறித்தாள் யாமினி.

“நீ கதைக்காத சொல்லிப்போட்டன்! அண்ணா வந்தத கூட மறைச்சவள் தானே நீ!”

error: Alert: Content selection is disabled!!