“ஐயோ.. எனக்கே அவர் சொல்லாமத் தான்பா வந்தவர். வேணுமெண்டா நீ அவரையே கேள்!” என்றாள் கெஞ்சலாக.
“உண்மையா அண்ணா?”
“சேச்சே… என்னம்மா நீ? அப்படிச் செய்வனா நான்?” என்றான் விக்ரம் வெகு சீரியஸாக.
சந்தியா யாமினியை முறைக்க, “அவர் பொய் சொல்றார் சந்தி.” என்றவளின் பேச்சுச் சந்தியாவிடம் எடுபடாமலேயே போனது. முறைத்துக்கொண்டு போனாள்.
அவள் போனதும், “ஏன் பொய் சொன்னனீங்கள். இனி அவள் எல்லாத்துக்கும் இதையே சொல்லி படுத்தி எடுப்பாள்.” என்றாள் யாமினி கணவனிடம்.
“எனக்கு நீ ஒழுங்கா பிறந்தநாள் வாழ்த்து சொல்லேல்ல எல்லோ. அதுக்குத் தண்டனை இது.” என்று நகைத்தான் அவன்.
சிரிப்புத்தான் வந்தது யாமினிக்கு. “வரவர நீங்க ஆக மோசம்!” என்றவள், “போய்க் குளிச்சிட்டு வாங்கோப்பா. கோவிலுக்குப் போயிட்டு ஹோட்டலுக்குப் போவம்.” என்றாள் அவனிடம்!
“இனி அவள சமாளிக்கிறதுக்குள்ள எனக்குப் போதும் போதும் எண்டு ஆகப்போகுது.” என்றாள் தோழியின் நினைவில் முகம் கனிய.
அவனும் புன்னகையோடு போக, வேக வேகமாகக் கேக்கை மேசையில் வைத்து, மெழுகுதிரி ஏற்ற லைட்டர், கேக் வெட்ட கத்தி என்று எல்லாம் எடுத்து வைத்துவிட்டு, மகளின் பொம்மைகள் இரண்டை தூக்கி கேக்கின் அருகருகே வைத்துவிட்டு அறைக்குள் ஓடினாள் மோதிரத்தை எடுக்க.
அதை எடுத்து வருடியவளுக்கு, மீண்டும் ‘விக்ரமின் யாமினி’ தான் நினைவில் வந்து சுகம் சேர்த்தது!
அவனுக்கு அதைப் போட்டுவிடத்தான் உடலின் ஒவ்வொரு செல்லும் ஆசைப்பட்டது. ஆனால் அவள் எண்ணியது போல.. நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று சொல்லி அணிவித்துவிட அவளால் முடியுமா?
வெட்கமும் கூச்சமும் நீ முந்தி நான் முந்தி என்று போட்டிபோட்டுக்கொண்டு வந்து நின்று அவளை வதைத்தது!
‘போடுவமா.. விடுவமா..’
‘பிறந்தநாள் பரிசு கேட்டால்? கேட்டால் என்ன கேட்டால்.. கட்டாயம் கேட்பார்.’
‘அவர் ஆசைப்பட்டது போல ஒரு கிஸ் குடுத்துடலாமா?’
நினைவே அவளை வெட்கிச் சிவக்க வைத்தது! பிறகு எங்கே கொடுப்பது?!
ஏனோ ஆசை ஆசையாக வாங்கிய மோதிரத்தை பிறந்தநாள் பரிசாக மட்டுமே கொடுத்துவிடவும் முடியவில்லை.
என்ன செய்ய என்று நினைக்கையிலேயே அவன் குளியலறையில் இருந்து வெளியே வருவது தெரிய, மோதிரத்தை மறைத்து வைத்துவிட்டு வெளியே ஓடிவந்து மகளோடு அமர்ந்துகொண்டாள்.
சற்று நேரத்திலேயே அவள் வாங்கிக் கொடுத்த பிரவுன் நிற ‘பாடி பிட்’ ஜீன்ஸ்க்கு பீச் கலர் ஷர்ட் சகிதம் வந்தவனைக் கண்டு இமைக்கவும் மறந்தாள் யாமினி.
அவள் முன்னால் வந்து நின்று ‘எப்படி இருக்கு’ என்பதாகப் புருவங்களை வேறு அவன் உயர்த்தவும், சற்றுநேரம் ஒன்றுமே சொல்ல முடியவில்லை அவளால்.
இன்னொருமுறை விழிகளால் அவனது மொத்த உருவத்தையும் உள்வாங்கிக்கொண்டு, அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள் யாமினி. வாயைத் திறந்து சொல்லமுடியாத அளவில் அவன் தோற்றம் அவளைத் தாக்கியது!
அந்தப் புன்னகை மிகவும் நன்றாக இருக்கு என்பதாக அவனிடம் மொழிபெயர்க்கப்பட, “அதுசரி.. என்னெண்டு எனக்கெண்டே அளவெடுத்து தச்சமாதிரி வாங்கினி? அந்தளவுக்கு என்ர அளவு உனக்குத் தெரியுமா?” என்று வேண்டுமென்றே அவன் கேட்க, முகம் சூடாகிப் போயிற்று அவளுக்கு!
“உங்கட ஜீன்ஸ் ஒண்டு இங்க கிடந்தது!” என்றாள் வேகமாக.
“ஓ..!” அதை நம்பாத பார்வை பார்த்து அவளைச் சீண்டினான் விக்ரம்!
“ஐயோ.. உண்மையாவே..” என்று சொல்லிக்கொண்டு வந்தவள் அவன் பார்வையில் சிரித்துவிட்டாள்.
அதே சிரிப்போடு, “போவமா?” என்று அவன் கேட்க,
“ஓம்.. போவம். அதுக்கு முதல்..” என்று அவள் இழுக்க, ‘என்ன’ என்பதாக அவளை ஏறிட்டான் விக்ரம்.
“கேக் வெட்டேல்ல..” என்று மெல்ல அவள் சொல்லவும்,
“ஹேய்! நான் என்ன சின்னக் குழந்தையா.. கேக் எல்லாம் வெட்ட. புது உடுப்பே உன்ர ஆசைக்குப் போட்டதுதான்.” என்று சிரித்தான் அவன்.
“ஏன்.. நீங்க வெட்டினா போலீஸ் வந்து பிடிக்குமே?” என்றாள் யாமினி சற்றே சூடாக.
பின்னே.. அவள் அவனுக்குப் பிடிக்கும் என்று பிளாக் போரெஸ்ட் கேக் எல்லாம் வாங்கி வைத்தால் கேலி பேசுவானா?
சரியென்று அவளோடு சென்று கேக் வெட்டினான் விக்ரம். மகளுக்கும் ஊட்டிவிட்டு அவளுக்கும் கேக்கை கொடுத்தான்.
அவள் எதிர்பார்த்தது போலவே, “எனக்கு என்ன பரிசு?” என்று கேட்டான் அவன்.
“பரிசா…” என்றவள் கண்கள் அவன் அணிந்திருந்த உடைகளிடம் ஒடிவிட்டு வந்தது.
“இது எனக்கு ஏற்கனவே தெரியும். அதால பரிசு எண்டு எடுக்கமுடியாது. எனக்குத் தெரியாத ஏதாவது வேணும்:” என்றான் அவன்.
‘அவனுக்குத் தெரியாமலா?’ முழித்தாள் யாமினி.
‘மோதிரம் தான் இருக்கு.. அத கொண்டுவந்து கொடுக்கிறதா.’ என்று அவள் யோசிக்க, “மிஸ்ஸான அந்தக் கிஸ்ஸ தரலாமே.” என்றான் மெல்ல.
“ஐயோ.. நான் மாட்டன்!” என்று அவள் வேகமாக மறுக்க,
“எனக்கு அதுதான் வேணும்!” என்று நின்றான் அவன்.
“சந்து நிக்கிறா..” கிடைத்த சாட்டை அவள் சொல்ல,
மகளைத் திரும்பிப் பார்த்துவிட்டு, “அவா கேக்ல பிசி. நீ சத்தமே இல்லாம தா!” என்றான் அவன் அவள் காதோரமாய்!
நாணப்புன்னகை அரும்ப, “கண்ண மூடுங்கோ” என்றாள் இவள் ரகசியமாய்.
“நோ..!” என்றான் அவன் உதட்டசைவாய்!
‘எல்லாத்திலையும் பிடிவாதம்!’ பொய்யாக அவனை முறைத்தபடி எம்பியவளால், அவன் கண்களைச் சந்தித்துக்கொண்டே அந்த முத்தத்தைப் பதிக்கவே முடியவில்லை.
ஆவலோடு பார்த்தவனின் கண்களை ஒருகை கொண்டு மறைத்தபடி, அவனின் பளபளக்கும் கன்னத்தில் தன் இதழ்களை மென்மையாக ஒற்றியவள், வெட்கம் தாங்காமல் அவன் தோளிலேயே தன் முகத்தை மறைத்துக்கொண்டாள்!!
அந்தச் சின்ன இதழ்கள் சில்லென்று தாக்கியதில், விக்ரமின் ஒரு கரம் சட்டென்று யாமினியின் இடையை அழுத்தமாய் வளைத்தது!
அவளின் காதோரமாகக் குனிந்து, “தேங்க்ஸ்” என்றவனின் உதடுகளும் அவளின் கன்னத்தைத் தொட்டுவிட்டு மீண்டது!!
சற்று நேரத்திலேயே டெனிஷ் அழைத்தான், “அளஸ் கூட்ட சும் கெபுர்ட்ஸ்டாக் பாப்ஸ்..!” என்றபடி.
“டங்க டெனிஷ்!!”
அவன் சொன்ன பிறந்தநாள் வாழ்த்துக்கு இவன் நன்றி சொல்ல, “என்ன பாப்ஸ் கேக் எல்லாம் வெட்டி இருக்கிறீங்க போல..” என்றான் அவன் கேலியாக.
“உனக்கு எப்படித் தெரியும்?” ஒருகணம் ஆச்சரியப்பட்டுப்போய்க் கேட்டாலும், அவனுக்குத் தெரியாதா யார் சொல்லியிருப்பார் என்று.
அம்மாவும் மகனும்தான் ஒருவருக்கொருவர் நல்ல ஒட்டாயிற்றே! எப்போ பார்த்தாலும் அங்கு நடந்தவற்றை அவனும் இங்கு நடந்தவற்றை இவளும் மற்றவரிடம் ஒப்பிப்பதுதானே அவர்களின் முழுநேரத் தொழிலே!
“நான்தான் போட்டோ அனுப்பினான்.” என்றாள் அவளும்.
“டேய் கண்ணா!! அத பேஸ்புக்ல போட்டுடாத!” விழுந்தடித்துக்கொண்டு சொன்னான் விக்ரம்.
திருமணப் போட்டோக்களைப் போட்டு அசோக் அவனைப் படுத்தி எடுத்ததே போதும்! இதையும் அறிந்தால் சரிதான்!
“அதெல்லாம் ஏற்கனவே போட்டாச்சு!” என்று அவன் வெடியை கொழுத்திப் போட, “என்னடா சொல்ற?” என்று இவன் அதிர்ந்துபோனான்.
அவனைப் பார்த்த யாமினிக்கோ சிரிப்பு. அதைக் காட்டாது, “ஃபோன தாங்கோ!” என்று வாங்கித் தான் கதைக்கத் தொடங்கினாள்.
கடவுளே..! போட்டுட்டானா! பார்க்கலாம் என்றால் ஃபோன் மனைவியிடமே!
வேகமாக யாமினியின் ஃபோனை எடுத்துக் பார்த்தான்.
அங்கே அப்படி எந்த ஃபோட்டோவும் இல்லை. அதன் பிறகே மூச்சு வந்தது. மகன் மிரட்டி இருக்கிறான் என்றதும் ஆறுதலும் சிரிப்பும் சேர்ந்தே வந்தது! அதற்கு யாமினி சப்போர்ட்!
தாயும் மகனுமாகச் சேர்ந்து அவனைப் படுத்தும் பாடு!
அங்கோ யாமினி மகனோடு ஐக்கியமாகி இருந்தாள்.
“நீயும் வந்திருந்தா எல்லாருமா சேர்ந்து கொண்டாடி இருக்கலாம் எல்லோ கண்ணா.”
“பரவாயில்ல யாம்ஸ். அடுத்த வருசம் கொண்டாடுவம். நான் இங்க பண்ணைல இருக்கிறன். ஒவ்வொரு நாளும் குதிரைச் சவாரி போவோம் தெரியுமா.” என்றான் அவன் ஆரவாரமாக.
“கவனமப்பு! விழுந்து கையக்கால உடைச்சிடாத!” என்றாள் கவலையோடு.
“போங்க யாம்ஸ். விழுந்து எழும்ப நான் என்ன சின்னப்பிள்ளையா?” என்று சிரித்தான் அவன்.
“அச்சு அப்பாவை மாதிரியே நல்லா கதைக்கப்பழகி இருக்கிறாய் கண்ணா. ஒன்பது வயசுப்பிள்ளை என்ன பெரிய மனுசனா?” என்று அவள் கேட்க, அவனுக்கோ ஒரே சிரிப்பு.
“என்ன விளையாட்டு எண்டாலும் கவனமா இருக்கோணும். சரியா? நல்லா சாப்பிடு. இரவில முழிச்சிருந்து டிவி பாக்கிறேல்ல. அப்பா கெதியா வந்திடுவார்.” என்று பரிவோடு அவள் கதைப்பதை கேட்டிருந்த விக்ரமின் இதழ்களில் புன்னகை.