இலங்கையின் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையம். அந்த அதிகாலை வேளையிலும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க, ஹயர் வான் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கினாள் யாமினி.
ஆஷ் கலர் பிட் ஜீன்ஸ்க்கு வெள்ளை நிறத்தில் சின்னச் சின்னதாய் கறுப்புப் புள்ளிகள் போட்ட சற்றே தொளதொளப்பான முழுக்கை ப்ளவுஸ் அணிந்திருந்தாள். கால்களில், மேல் ப்ளவுசுக்கு பொறுத்தமான சின்னதாய் ஹீல் வைத்த வெள்ளை நிற ஷூக்கள். நீண்ட முடியை ஒரே பின்னலாகப் பின்னி கீழே பான்ட் போட்டிருந்தாள். மொத்தத்தில் ஃபிளைட்டின் ஏசிக்கு ஏதுவாகவும், பதினான்கு மணிநேரப் பயணத்தில் கசகச என்று ஆகாமல் இருக்க ஏதுவாகவும் இருந்தது அவளின் ஆடை அலங்காரம்.
சந்தியாவின் தொணதொணப்பின் பெயரில் முதல்வாரம் செய்துகொண்ட ஃபேஷியலின் பலனால் முகத்தில் தனியாக ஒரு பொலிவு!
மகளைத் தூக்கிக்கொண்டு விழிகளைச் சுழற்றினாள். அங்கிருந்த எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்.
சிலர் முகத்தில் சந்தோசமும் துள்ளலும்! சிலர் முகத்தில் கண்ணீர் கோடுகளும் பிரிவுத் துயரும்! இடம் ஒன்றுதான்! உணர்வுகள் மட்டும் வெவ்வேறாக இருந்தது.
அவளுக்குள்ளும் கலவையான உணர்வுகள்!
முதல் விமானப்பயணம்! தாயகத்தை விட்டுப் போகிறோம் என்கிற சின்னக் கவலை. இனி கணவனோடுதான் தன் நாட்கள் நகரப் போகிறது என்பதில் மெல்லிய குறுகுறுப்பு! டெனிசை கவனமாகப் பார்த்துக்கொள்ளலாம் என்கிற சந்தோசம். சந்தனாவோடு பதின்நான்கு மணித்தியால விமானப் பயணத்தை நல்லபடியாகக் கடந்துவிட வேண்டும் என்கிற நினைப்பு வேறு!
“என்னப்பா.. இந்தப் பார்வை பாக்கிற?” கேட்டுக்கொண்டே இறங்கினாள் சந்தியா.
“சும்மாதான். யாரப் பாத்தாலும் பரபரப்பா ஓடிக்கொண்டு இருக்கீனம்.” என்று இவள் புன்னகைக்க,
“பின்ன! அவே போறது வெளிநாட்டுக்கு எல்லோ! இன்னும் எங்கட நாட்டுல வெளிநாட்டு மாயை அடங்கேல்ல தானே. அப்ப பரபரப்பா தான் போவீனம்..” என்றாள் கூடவே வந்த அஜிதா கேலியாக.
“மெல்லக் கதையடி! சனம் வந்து அடிக்கப் போகுது! அதுசரி.. என்னவோ நாங்க மட்டும் உள் நாட்டுக்கப் போற மாதிரி மற்றவைய சொல்ற?” என்றாள் யாமினி.
அப்போது, “நான் லக்கேஜ்ஜுகளைக் கொண்டுவாறன், நீங்க நடவுங்கோ..” என்றார் விக்ரமின் ஏற்பாட்டில் கூடவந்த சந்திரன்.
உள்ளே நடந்தவர்களின் விழிகள் ஒருவித ஆர்வத்தோடு விமான நிலையத்தைச் சுற்றி வந்தது!
யாமினி இதற்குமுதல் இரண்டு தடவைகள் வந்திருந்தாலும், கணவனின் பிரிவு எதையும் கவனிக்க விடவில்லை.
இன்றோ நன்றாகப் பார்த்தாள்.
லக்கேஜுகள், சொந்தங்கள் கூடிக் கூடி நின்று கடைசிநேரப் பிரியாவிடையில் மூழ்கி இருந்தனர். சிலர் விடைபெற்றுக் கொண்டிருந்தனர். அங்கே உள்ளுக்கு லைனில் நின்று லக்கேஜூகள் போடுவதும் கூடக் கண்ணில் பட்டது. மயிலிறகே ஆடையானதோ எனும்விதத்தில் ஆடை அணிந்த அழகிகள் கூட ஆங்காங்கே நடமாடிக் கொண்டிருந்தனர்!
சந்தனாவை வாங்கிக் கொஞ்சிவிட்டு, “கவனமா போடி. மனுசனிட்ட போனதும் எங்கள மறந்துடாத. நீ டெலிபோன் எடுக்கேல்லேயோ வாற கிழமை உன்ர வீட்டுக்கே வந்து சண்டை பிடிப்பன்!” என்று உற்சாகமாக மிரட்டிக் கொண்டிருந்தாள் சந்தியா.
ஆமாம்! டொச் பரீட்சையில் அவர்களின் குரூப்பில் அனைவருமே பாசாகி இருந்தனர். இன்று யாமினிக்கு ஃபிளைட். அடுத்தவாரம் சந்தியாவுக்கு. இன்றைக்கோ நாளைக்கோ என்று வரப்போகும் விசாவுக்காக அஜிதாவும் காத்திருந்தாள்.
“அப்படி எடுக்காம இருப்பனா? அதுக்காக நீ வீட்ட வராம இருந்திடாத.” என்று சொல்லும்போதே இவளின் கைபேசி அழைத்தது.
மரகதம் அம்மா!
“எல்லாம் கவனமா எடுத்து வச்சியா? லக்கேஜ் நிறை எல்லாம் சரியா வந்ததா?” அக்கறையாக விசாரித்தார்.
“ஓம் ஆன்ட்டி. இப்ப எயார்ப்போட்டுக்கு வந்திட்டன். கொஞ்சத்துல உள்ளுக்கப் போய்டுவன்.”
“கவனமா போய்ட்டுவாம்மா. சின்னவள் கவனம். அங்க போய்ச் சேந்ததும் எத்தின மணி எண்டாலும் பரவாயில்ல, ஒருக்கா எனக்கு எடுத்து சொல்லு. அப்பதான் நிம்மதியா இருக்கும். இல்லாட்டி என்னவோ ஏதோ எண்டு கண்டதையும் நினச்சுப் பயந்துகொண்டே இருப்பன்.” என்றவரின் குரலிலும் கரகரப்பு.
“சரி ஆன்ட்டி. போனதுமே எடுத்து சொல்லுறன். நீங்க ஒண்டுக்கும் கவலைப்படாம இருங்கோ. அசோக் அண்ணா கெதியா உங்களையும் கூப்பிட்டுடுவார். பிறகு எல்லாரும் ஒண்டா சந்தோசமா இருக்கலாம். அதுக்கு நீங்க உங்கட உடம்பைக் கவனமா பாருங்கோ..” என்று ஆறுதலாகக் கதைத்துவிட்டு வைத்தாள்.
விக்ரம் வந்திருந்தபோது, இவர்கள் யாழ்ப்பாணம் போனபோது நன்றாக உடைந்து போயிருந்தார் மரகதம் அம்மா. தனிமை அவரை நன்றாகவே வாட்டுவது தெரிந்திருந்ததில் தெம்பளிக்கும் விதமாகக் கதைத்தாள்.
நேற்றிலிருந்து பலமுறை அழைத்து அதை எடுத்துவை, இதை மறந்துவிடாதே என்று சொல்லிக்கொண்டே இருந்தார். நடக்கும்போதும் இருக்கும்போதும் படுக்கும்போதும் இவளைப் பற்றியே யோசித்துக்கொண்டு இருப்பார் போலும், ஏதாவது நினைவு வந்ததும் உடனே அழைத்துச் சொல்லிக்கொண்டே இருந்தார்.
அப்போது இவளின் லக்கேஜ்களுடன் வந்தார் சந்திரன்.
கூடப்பிறந்த சகோதரிக்குப் போன்று அனைத்தையும் கூடவே நின்று செய்யும் அவரிடம், “எல்லா உதவிக்கும் நன்றி அண்ணா.” என்றாள் பாசத்தோடு.
“இதுல என்னம்மா இருக்கு..” எனும்போதே மீண்டும் அவளின் செல் இசை பாடியது.
எடுக்கமுதலே மனம் சொன்னது விக்ரம்தான் என்று!
“சொல்லுங்கோ.” இதழ்களில் பூத்த புன்னகையோடு சொன்னாள்.
“என்ன மேடம்.. என்னட்ட வர ரெடியா?”
“ஜேர்மன் வர ரெடி.” என்றாள் இதழ்களில் மலர்ந்த புன்னகையை அடக்க முயன்றபடி.