“ஓ..! அப்ப என்னட்ட வர கொஞ்ச நாளாகும் போல..” நகைக்கும் குரலில் கேட்டான்.
அந்தச் சிரிப்பே அவள் முகத்தில் செம்மையைப் பரப்பியது!
பதில் சொல்ல முடியாமல் அருகில் சந்தியா நிற்கிறாளே! அதுவும் குறும்போடு இவளையே பார்த்தவண்ணம்! இல்லாவிட்டாலும் என்னதான் சொல்ல முடியும் இந்தக் கேள்விக்கு.
“எங்க கண்ணா?” என்று பேச்சை மாற்றினாள்.
அதை உணர்ந்தவனின் ஓங்கி ஒலித்த சிரிப்புச் சத்தத்தில் முகத்தை எங்கேயாவது மறைத்துக்கொண்டால் என்ன என்றானது அவளுக்கு!
ஒரு சின்னச் சிரிப்பினாலேயே அவளைச் சிவக்க வைத்தான் விக்ரம்!
கண்களில் நாணம் மின்ன, சந்தியாவுக்கு முகத்தைக் காட்டாது சட்டெனத் திரும்பி நின்றுகொண்டாள்.
“நடக்கட்டும் நடக்கட்டும்..!!” என்றாள் சந்தியாவும் நடப்பதை ஊகித்து.
“உன்ர பிரெண்ட் பக்கத்துல நிக்கிறாவா?” சிரிப்பை அடக்கிக்கொண்டு கேட்டான் விக்ரம்.
“ம்ம்..” சந்தியாவிடமும் மாட்டாமல் விக்ரமுக்கு செய்தி அனுப்பினாள் யாமினி.
அவனோ, “என்னத்துக்கு இந்த ம்ம்? என்னட்ட வாரதுக்கா?” என்று குறும்போடு கேட்டான்.
“ஐ..யோ இல்ல.” அடக்கமுடியாத புன்னகை அவள் முகத்தில்.
“அப்ப வரமாட்டியா?” விடாமல் வம்பு வளர்த்தான்.
வருவேன் என்று சொல்வாளா இல்லை வரமாட்டேன் என்றுதான் சொல்வாளா?
வெட்கத்தில் உதட்டைக் கடித்தபடி நின்றாள் யாமினி.
“யாம்ஸ்…!” விளையாட்டை எல்லாம் விட்டுவிட்டு ஆழ்ந்த குரலில் நேசத்தோடு அழைத்தான் அவன்.
அந்த நிமிசமே அவன் கைகளுக்குள் புகுந்து கரைந்துவிட மாட்டோமா என்று ஏங்கிப்போனாள் யாமினி.
“ம்ம்…?” நெஞ்சம் அவனிடம் நழுவி ஓடச் சொன்னாள்.
“என்ர கைக்குள்ள நீ வந்து சேரப்போற அந்த நிமிஷத்துக்காக ஒவ்வொரு நிமிஷத்தையும் கஷ்டப்பட்டுக் கடத்திக்கொண்டு இருக்கிறன். இந்த வீடும் நானும் உன்ர வருகைக்காக எத்தனையோ நாளா காத்திருக்கிறம். சிலநேரம் என்ர நிலைய நினச்சா எனக்கே சிரிப்பா இருக்கு. இந்த வயதில போய் இப்படி இருக்கிறோமே எண்டு. ஆனா என்னை இப்படி மாத்தினது நீதான். அதுக்கு மருந்து போடவேண்டியவளும் நீதான்.” என்றான் ஆழ்ந்த குரலில் சன்னச் சிரிப்போடு.
உயிரை வருடும் அந்தக் குரல்.. அதில் தெரிந்த ஏக்கம்.. அதைச் சொல்லிவிட்டு சின்னதாய் சிந்திய அந்தச் சிரிப்பு.. அவனின் ஆவல் என்று செல்லின் ஊடாக அவன் அவளுக்குள் கடத்திவிட்ட உணர்வுகளுக்குள் சிக்கிக் கொண்டவள் அதைக் கையாளும் வகைத் தெரியாது நின்றாள்.
கண்ணோரங்கள் கசியத் தொடங்க, “அப்..பா ப்ளீ..ஸ்” என்றாள் தாளமாட்டாமல்! படபடவென்று இமைகளைக் கொட்டி தன்னை நிதானப் படுத்த முயன்றாள்.
யாமினிக்கு அந்த நேரத்திலும் அவன் சொன்ன ‘இந்த வயதில’ என்றது கருத்தில் நிற்க, “உங்களுக்கு ஒண்டும் கிழவன் வயசில்ல குமரன் வயசுதான்.” என்றாள் அவனிடம்.
“அந்த நம்பிக்கைலதான் இருக்கிறன்! நீ வேற ஏழு எட்டு வேணும் எண்டு கேட்டிருக்கிறாய்!” என்று சிரித்தான் அவன்.
‘அச்..சோ!’ என்று மனதிலேயே வெட்கம் கொண்டாள் யாமினி.
வரவர இவர் ஆக மோசம்! மனம் ஆசையாய் அலுத்துக்கொன்டாலும், அவனின் பேச்சிலேயே அவன் வழமையான வம்பிழுக்கும் நிலைக்கு வந்துவிட்டான் என்று உணர்த்த மனம் ஆறுதலானது அவளுக்கு!
“சரி கவனமா வா. ஹான்ட் லக்கேஜ் எண்டு ஒண்டும் கொண்டுவராத. செல்லம்மாவோட அது கஷ்டம். எல்லாத்தையும் லக்கேஜ்ல போடு. குட்டி கவனம். ரெண்டுபேருக்கும் முதல் பயணம்.. ஒண்டுக்கும் பயப்படாம சந்தோசமா என்ஜாய் பண்ணுங்கோ. ப்ளைட்ல ஏறி இருந்ததும் எனக்கு ஒருக்கா எடுத்துச் சொல்லு!!” என்றான்.
“சரியப்பா.” என்று அவள் கேட்டுக்கொள்ள,
“சந்திரன் எங்க? அவரிட்ட ஒருக்கா குடு:” என்றான்.
“அண்ணா! இவர் கதைக்கவாம்.” என்று அவரிடம் இவள் கொடுக்க,
“என்னடி ரொமான்ஸ் சீன் முடிஞ்சுதா” என்று சந்தியா இவளைச் சீண்டினாள்.
“சும்மா இரடி! அங்கால சந்திரன் அண்ணா காதுல விழப் போகுது.” என்று சிரிப்போடு ஒரு அடி போட்டாள் யாமினி.
அங்கு, “செய்த எல்லா உதவிக்கும் நன்றி சந்திரன்.” என்றான் விக்ரம் மனமார.
“என்ன விக்ரம் நீங்க, மனுசனும் மனுசியும் மாறி மாறி இதையே சொல்லுவீங்களா” என்று இலகுவாக அவர் பேச,
“பின்ன.. நீங்க எங்களுக்குச் செய்தது எவ்வளவு பெரிய விசயம்! தெரியாத ஊர்ல மனுசி பிள்ளைய விட்டுட்டு வாறது எண்டா சும்மாவா? உங்களத்தான் நம்பினான். என்ர நம்பிக்கக் கெடாம கடைசிவரைக்கும் நீங்க செய்ததுகள நான் மறக்கமாட்டன் சந்திரன். எந்த நேரத்தில என்ன உதவி எண்டாலும் யோசிக்காம கேளுங்கோ. கட்டாயம் செய்வன்! என்ர நம்பர் உங்களிட்ட இருக்கு தானே..” என்றான் உறுதியான குரலில்.
“இருக்கு. ஆனா நான் எதையும் எதிர்பார்த்து செயேல்ல. எண்டாலும் நன்றி விக்ரம்.” என்றார் சந்திரன் நெகிழ்ந்துபோய்.
அவன் வைத்ததும், எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு யாமினி கிளம்பினாள்.
லக்கேஜ் போட்டு, செக்கின் செய்து காத்திருப்போர் பகுதியில் காத்திருந்து ப்ளைட்டில் முதல் காலடி எடுத்து வைக்கையில் தேகம் சிலிர்த்தது யாமினிக்கு.
ஒருவழியாகத் தன் இருக்கையைக் கண்டுபிடித்துச் சென்று அமர்ந்துகொண்டாள். அதுவும் ஜன்னலோரம். மகளையும் அமர்த்தித் தானும் அமர்ந்ததும் ப்ளைட்டை கண்களால் சுற்றிப் பார்த்தாள்.
மகளும் அதையே செய்ய, சிரிப்போடு, “அம்மாவும் பிள்ளையும் ப்ளைட்ல அப்பாட்ட போகப்போறமே..” என்றாள் அவளிடம்.
அந்தச் சின்னவளும், கைகால்களை அடித்துத் தன் சந்தோசத்தைக் காட்ட, “அப்பாக்கு எடுத்துச் சொல்லுவம் சரியா..” என்று சொல்லி, அவனுக்கு அழைத்துச் சொல்லிவிட்டு வைத்தாள்.
சற்று நேரத்திலேயே விமானம் தன் பயணத்தைத் தொடங்க, இவளின் அடிவயிறு கலங்கத் தொடங்கியது. ‘கடவுளே நல்லபடியா அவரிட்ட போய்ச்சேர்ந்திடோணும்’ என்று மனமார வேண்டிக்கொண்டாள்.
வானில் தனக்கான சமநிலையை விமானம் அடைந்ததும், என்னவோ வீட்டுச் சோபாவில் இருப்பது போன்றிருந்தது. அதன்பிறகே இலகுவாகி, மகளை அணைத்தபடி மெல்லக் கண் மூடி சாய்ந்துகொண்டாள்.