நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் 20 – 1

மூடிய கண்களுக்குள் வந்து நின்று குறும்போடு சிரித்தான் விக்ரம்! மனக்கண்ணில் கூட நேராகப் பார்க்கமுடியாமல் அவன் விழிகள் அவளை வீழ்த்தியது!

அன்று, ‘இப்பவெல்லாம் நினைவு முழுக்க நீதான் நிறைஞ்சிருக்கிற யாமினி’ என்று அவன் சொன்னதுபோல, அவளின் நினைவுகளிலும் அவன்தான் கலந்து போயிருந்தான். அவன் இல்லாத ஒரு நினைவு கூட அவளிடமில்லை.

அவன் பிறந்தநாள் அன்று பார்ட்டிக்காக ஹோட்டல் போனபோது நடந்தவைகளை எண்ணியவளின் இதழ்களில் புன்னகை மலர்ந்தது.

இவர்கள் ஹோட்டலுக்குள் நுழைய, “வாங்கோ வாங்கோ!” என்று வரவேற்றனர் அஜிதாவும் சந்தியாவும்.

அவர்கள் இருவரும் ஒருபக்கம் இருக்க, மற்ற பக்கம் மனைவியை மகளோடு உள்ளே அமர்த்தித் தானும் அமர்ந்துகொண்டான் விக்ரம்.

“பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா!” என்று அஜிதா வாழ்த்த, “நன்றிம்மா” என்று ஏற்றுக்கொண்டான்.

“முதல் கேக் வெட்டுவம். பிறகு சாப்பாடு..” என்று அஜிதா சொல்ல,

“திரும்பவுமா?” என்றவனின் கையில் மேசைக்குக் கீழே படக்கென்று கிள்ளினாள் யாமினி.

‘அம..மா!’ வாய்க்குள் முனகிக்கொண்டே அதிர்ந்துபோய் விக்ரம் திரும்பிப் பார்க்க, ‘மூச்!’ என்றாள் கண்ணாலேயே.

அவன் கண்களில் சிரிப்பு மலர்ந்தது!

“அவர் என்ன சின்னப்பிள்ளையா? கேக் எல்லாம் வெட்ட. அதெல்லாம் வேண்டாம்.” என்றாள் தோழிகளிடம்.

‘அடிப்பாவி! நான் சொன்னதையே திருப்பிப் படிக்கிறாளே..’ வாயைப் பிளக்காத குறையாக அவளைப் பார்த்தான் விக்ரம்.

“ஏன் சின்னப்பிள்ளைகள் மட்டும் தான் கேக் வெட்டோணுமா? அண்ணா வெட்டினா வெட்டுப் படாதா? ஏன் அண்ணா இப்ப இந்த இடத்துல கேக் கொண்டுவந்து வச்சா வெட்ட மாட்டீங்களா?” என்று சந்தியா மல்லுக்கு நிற்க,

“அதுக்கென்ன.. வெட்டினா போ..” என்று சொல்லி முடிக்க முதலே படார் என்று கையில் ஒரு அடி விழ, முகம் கொள்ளா சிரிப்புடன் மனைவியைப் பார்த்தான் விக்ரம்!

நம்பவே முடியவில்லை அவனால்! அவளா இப்படியெல்லாம் நடப்பது?

‘என்ன சிரிப்பு?’ என்று முறைத்தவளை ரசனையாகப் பார்த்தான்.

‘என்னைத் தொடாதீங்கோ’ என்று அன்றொருநாள் அழுதவள் இன்று அவனுக்கு அடிக்கிறாள்! மனம் இனிமையாய் அவளின் மாற்றத்தை உள்வாங்க, தோழிகளிடம் மல்லுக் கட்டிக்கொண்டிருந்தவளை ரசித்துக்கொண்டிருந்தான் அவன்.

“நீ கேக்க கொண்டுவா. எல்லாரும் சாப்பிடுவம். ஆனா அவர் வெட்ட மாட்டார்.” என்றாள் யாமினி தோழியிடம்.

அவளுக்கு ஏனோ அவன் இரண்டாவது தடவையாகக் கேக் வெட்டுவதில் விருப்பமில்லை. அதைவிட அது அவர்களுக்குள் நடந்த மிக மிக அழகான தருணம்! முதன் முதலாக முத்தமொன்றைப் பரிசாக அவள் வழங்கிய இனிமையான நிகழ்வை பொத்தாம் பொதுவில் கொண்டாடி, அதன் இனிமையைக் குறைக்க அவள் தயாரில்லை. எனவே வந்த கேக்கை பொதுவில் அவளே வெட்டி எல்லோருக்கும் கொடுத்தாள்.

“வர வர இவளுக்குப் பிடிவாதம் கூடுது அண்ணா.” என்று தோழியை அவனிடம் போட்டுக் கொடுத்துவிட்டு, “இந்தாங்கோ, இது எங்கட கிஃட்!” என்று ஒரு பார்சலை அவனிடம் நீட்டினர் இருவரும்.

“இதெல்லாம் எதுக்கம்மா?” என்றபடி அவன் வாங்க,

“அது எங்கட சந்தோசத்துக்கு அண்ணா.” என்றவள், “நீ என்னடி குடுத்தனி?” என்று யாமினியிடம் கேட்டாள்.

“இவர் போட்டிருக்கிற உடுப்பு. நல்லாருக்குதானே?!” என்று கேட்டாள்.

“அண்ணாக்கு சூப்பரா இருக்கு!”

“இன்னுமொண்டும் தந்தவள்.” என்று கோர்த்துவிட்டான் விக்ரம்.

அது போதாதா சந்தியாவுக்கு!

“என்னடி அது? சொல்லு சொல்லு!” என்று நின்றாள்.

“அவர் சும்மாடி! இது மட்டும்தான்.” என்றவள், கணவனை முறைக்க அவனோ குறுஞ்சிரிப்புடன் அவளின் இதழ்களைப் பார்த்துவிட்டு அவளைப் பார்த்தான்.

அவனின் பார்வையில் தடுமாறினாலும் அவளின் கண்களோ அவனது கன்னத்துக்கு ஓடியது.

ஆசையும் நாணமும் மின்னக் கொடுத்த முத்தம் இன்னோர் முறை கொடுக்கலாமா என்கிற ஆசையைத் தூண்ட, தன் மனம் போகும் போக்கை எண்ணி அதிர்ந்துபோனாள் யாமினி.

தன்னைக் கண்டுகொள்வானோ என்றஞ்சி பார்க்க, அவனும் அதைத்தான் அவளிடம் கேட்டுக்கொண்டிருந்தான், கண்கள் வழியாக.

ஒருகணம் மூச்சடைக்கச் சட்டென்று விழிகளைத் திருப்பிக் கொண்டாள். நெஞ்சு படபட என்று இனிமையாக அடித்துக்கொள்ளத் தொடங்கிற்று!

“நீ பொய் சொல்லாம சொல்லு! என்ன அது?” என்று அப்போதும் கேட்டுக் கொண்டிருந்தாள் அஜிதா.

இப்படியே அவர்களின் உணவு வேளை கழிய அங்கிருந்தே விடை பெற்றனர் தோழியர். இவர்கள் மூவரும் கடற்கரைக்கு வந்தனர். மதிய நேரமாகையால் பெரிதாகக் கூட்டமில்லை. அன்று அளவான வெய்யில் வேறு கடல்காற்றுக்குத் தோதாக அமைந்துவிட, சற்றுநேரம் கால் நனைத்து மகளோடு நீரில் விளையாடினார்கள்.

சந்தனா மண் அள்ளி விளையாடத் தொடங்க, அவளோடு சேர்ந்து மணல் வீடு கட்டினான் விக்ரம். சந்தனாவுக்கோ, பெரும் குதூகலம். அதைத் தொட்டுத் தொட்டு அவள் விளையாட, அவளின் அருகிலேயே அமர்ந்துகொண்டாள் யாமினி.

அதற்காகவே காத்திருந்தவன் அவள் மடியில் தலையை வைத்துப் படுத்துக்கொண்டான். புன்னகையோடு அவன் கேசத்துக்குள் கைகளை நுழைத்து அவள் கோதிக் கொடுக்க, அந்தச் சுகம் அனுபவிப்பதற்காகவே கடல் கடந்து வந்தவன் கண்களை மூடிக்கொண்டான்.

தாய்மடியின் சுகம் அவன் நினைவிலில்லை. தாரத்தின் சுகம் உடலின் ஒவ்வோர் அணுவிலும் கலந்துகிடந்து பரவசத்தைச் சேர்த்துக் கொண்டிருந்தது. அவளின் மடி தரும் சுகமே போதும் போலிருக்க, அப்படியே கிடந்தான்.

அவனின் செல்லப் பெண்ணோ ஓடிவந்து அவன் மார்பின் மீது அமர்ந்துகொண்டாள். அவன் கைகள் பாசத்தோடு அவளை அணைக்க, சற்றுநேரம் அவனோடு கிடந்தவள் திரும்பவும் போய் அந்த வீட்டோடு விளையாடினாள். மறுபடியும் ஓடிவந்து தகப்பனின் நெஞ்சில் அமர்ந்துகொண்டு அந்த வீட்டைப் பார்ப்பதும், பிறகு போய் அதோடு விளையாடுவதும், திரும்ப வந்து அவன் மார்பில் இருப்பதுமாக இருந்தாள்.

மகளைக் கவனித்துவிட்டு, “நீங்க இங்க வந்திட்டீங்க, கண்ணா அங்க தனியா இருப்பானா?” என்று கேட்டாள் யாமினி.

சந்தனாவே தகப்பனை இவ்வளவு நாடும்போது, டெனிஷ்?

நண்பர்களோடு விளையாடுகையில் சந்தோசமாக இருந்தாலும், ஒருநேரமாவது அப்பா இல்லையே என்று அவன் நினைத்துவிட்டால்?

“இப்ப அங்க ஸ்கூல் லீவுதானே யாமினி. அவனையும் கூட்டிக்கொண்டு வருவம் எண்டுதான் லீவுக்க ப்ளான் பண்ணினான். இங்க வெயிலாம், அதால தான் தன்ர பெஸ்ட் பிரெண்டோட அவேன்ர பண்ணை வீட்டுக்கு போறன் எண்டான். அங்க போறது எண்டா அவனுக்கு நல்ல விருப்பம். குதிரைகள் இருக்கு. ஆடு கோழி மாடு எண்டு எல்லாம் இருக்கு. இன்னும் இயற்கையைக் கைவிடாத ஒரு அழகான கிராமம். அங்க பிரெண்ட்ஸ் எல்லாருமா சேர்ந்து சைக்கிள் ஓடுறது, ஸ்விம் பண்றது, மலை ஏறுறது, கிரில் போட்டுச் சாப்பிடுறது எண்டு அவேக்குச் சந்தோசமா போகும்.”

“ஆனா.. பயமில்லையாப்பா? குதிரைச்சவாரி எல்லாம் போறானாம். தம்பி சின்னப்பிள்ளை எல்லோ.. நீங்களும் பக்கத்தில இல்ல..”

“நீ கற்பனைலேயே கண்டதையும் நினச்சு கவலைப்படாத. அப்படி என்ன ஏது எண்டு தெரியாம அனுப்புவனா? அவே எங்கட வீட்டுக்கு பக்கத்துல தான் இருக்கீனம். பத்துவருஷ பழக்கம். ஒவ்வொரு வருசமும், நான் அங்க இருந்தாலுமே இவன் அங்க போய்டுவான். அங்க கிராமத்துல ஒரு ஓமா, ஓப்பா(அம்மம்மா, தாத்தா) வேற இருக்கீனம். அவே நல்ல கவனம்.” என்று அவன் விளக்கிய பிறகுதான் சமாதானமானாள் யாமினி.

“யாழ்ப்பாணம் போய் மரகதம் அம்மாவையும் பாத்துக்கொண்டு வருவமா? பாவம் அவா.. தனியாவே இருக்கிறா. ஒருக்கா நாங்க போய்வந்தா சந்தோசமா இருக்கும்.” என்றாள் யாமினி.

“ம்ம்.. போவம். போய்ப் பாத்துக்கொண்டு வாடா எண்டு அசோக்கும் சொன்னவன்.”

“அப்ப, அவவுக்கு எடுத்து சொல்லவா?” என்று செல்லை அவள் எடுக்க,

தடுத்து ஃபோனை வாங்கியபடி, “வேண்டாம், சொல்லாத.” என்றான் விக்ரம்.

கேள்வியாக அவள் ஏறிட, “நாங்க வாறது தெரிஞ்சா எங்களுக்காகக் கஷ்டப்பட்டுச் சமைப்பா. பாவம் எல்லோ. வயசான காலத்துல ஏன் கஷ்டத்த குடுப்பான்.” என்றான் அவன்.

அதுவும் உண்மைதான் என்று அவளும் இருந்துவிட, கையிலிருந்த போனை சாதாரணமாக ஆன் பண்ணினான் விக்ரம். உடனேயே வந்தது அவனது ஃபோட்டோ! அதுவும் அன்று அவன் அனுப்பிய அதே போட்டோ!

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock