நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் 2 – 2

அன்று மட்டுமல்ல, அடுத்து வந்த வாரம் முழுவதுமே அவள் வயிற்று வலியால் துவண்டதும், அவளைத் தன் குழந்தையைப் போல் தாங்கிப் பேணியதும், காதலில் அவள் உருகியதும் என்று எத்தனை அழகான நாட்கள்!

அப்படி அவனோடு வாழ்ந்தவள் எப்படி இன்னொருவனை மனதில் நினைத்தாள்? ஆசையாகப் பெற்ற பிள்ளையை எப்படி மறந்தாள்? என்னதான் தனிமை கொடுமை என்றாலும் அவளின் செயலில் ஏதாவது நியாயம் இருக்கிறதா?

கேள்வி நெஞ்சில் எழ அவளைத் திரும்பிப் பார்த்தான். சேமித்து வைத்திருந்த மழை நீரை அவர்களின் குட்டித் தோட்டத்துக்கு அள்ளி ஊற்றிக்கொண்டிருந்தாள் யாஸ்மின். அவளுக்குப் பின்னால் தானும் தோட்டத்துக்கு நீர் விடுகிறேன் என்கிற பெயரில் தன்னை நனைத்துக் கொண்டிருந்தாள் சாரா.

இவன் பார்க்கவும், “என்ன பாக்கிறாய்?” என்று கேட்டாள் யாஸ்மின்.

மனதில் இருப்பதைச் சொல்ல முடியாமல், “இது சொந்த வீடா யாஸ்? தோட்டம் எல்லாம் வச்சிருக்கிறாய்.” என்று விசாரித்தான்.

“இல்ல. வாடகை வீடுதான். ஆனால், உரிமையாளர் நல்ல மனுசன். அதால சொந்த வீடு மாதிரித்தான் எங்களுக்கு.”

“வாழ்க்கை எப்படிப் போகுது யாஸ்? நான் ஏதாவது உதவி செய்யவா? எது எண்டாலும் யோசிக்காம கேளு! கட்டாயம் செய்றன்.”

அவள் புருவங்களைச் சுருக்கவும், “பிழையாக் கேக்கேல்ல யாஸ். என்னட்ட தேவைக்கு அதிகமாகவே இருக்கு. அது உனக்குத் தேவைப்பட்டா எனக்கு அதுல சந்தோசம். அதால மட்டும்தான் கேக்கிறன்.” என்றான் அவன்.

“எனக்கு உன்னத் தெரியாதா விக்கி? ஆனா, மெய்யாகவே தேவை எண்டு எதுவுமே இல்லை. என்னில உயிரையே வச்சிருக்கிற அன்பான கணவன், அழகான குட்டி சாரா, சின்ன வீடு, போதுமான சம்பாத்தியம், போதாக்குறைக்கு நம் மகன் டெனிஷ். இதவிட வேற என்ன வேணும் சொல்லு?”

அவளையே பார்த்தான் விக்ரம்.

என்னைத் தெரியும், என் மனதைத் தெரியும், என் எண்ணங்களைத் தெரியும். இப்படி என்னைப் பற்றி எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருந்தவள் ஏனடி என்னை விட்டுப் போனாய் என்று கத்த வேண்டும் போலிருந்தது.

அடக்கிக்கொண்டான்!

அவள் கட்டாயப்படுத்தித் தந்த மதிய உணவையும் முடித்துக்கொண்டு அவன் விடைபெற்றபோது, மனதில் எந்தளவு தூரத்துக்கு வலி இருந்ததோ அந்தளவு தூரத்துக்கு நிறைவாகவும் உணர்ந்தான்!

அவன் நேசித்த பெண், அவளாவது சந்தோமாக வாழ்கிறாளே!
சாராவோ அதற்கிடையில் அவனோடு நன்றாக ஒட்டிவிட்டிருந்தாள். தன் மகனைப் போன்ற சாயலில், தான் நேசித்த பெண்ணின் வடிவில் இருந்த குழந்தையைக் கையிலிருந்து இறக்கவே முடியவில்லை அவனால்.

அவனது முன்னாள் மனைவியின் இந்நாள் கணவனின் குழந்தை என்று தெரிந்தாலும் முடியவில்லை. பாசம் உள்ளே பொங்கிற்று!

“இவள எனக்கே எனக்கென்று தந்துவிடேன் யாஸ். என்னால் இவள விட்டுவிட்டுப் போக முடியும் போலத் தெரியேல்ல.” என்றான் கைகளில் இருந்தவளை இறக்க மனமற்று.

யாஸ்மினின் கண்களிலிருந்து பொலபொலவென்று கண்ணீர் கொட்டியது. “டெனிஷை பிரிஞ்சு இருக்கிறதையே என்னால இண்டைக்கு வரைக்கும் தாங்க முடியேல்ல விக்கி. என்ன இருந்தாலும் உனக்கு நான் செய்தது பெரிய துரோகம். இதுல அவனையும் உன்னட்ட இருந்து பிரிச்சா நீ தாங்கமாட்டாய் எண்டுதான் அவன உன்னட்டையே விட்டுட்டு வந்தேன். இவளையும் தந்துவிட்டு என்னை என்ன செய்யச் சொல்றாய் விக்கி?” என்று அவள் கேட்டபோது, அவன் கண்களும் பனித்துவிட்டன.

சட்டென்று அங்கிருந்து நகர்ந்து வீதிக்கு வந்தான். சாரா வீதியை வேடிக்கை பார்க்க, அவன் நெஞ்சமோ பூகம்பத்தின் பிறப்பிடமாகிப் போனது.

அழகாக அவன் பார்த்துப் பார்த்துக் கட்டிய குருவிக்கூடு சிதைந்தே போயிற்று! இனி சீரமைக்கவே முடியாது!

தன் உணர்வுகளை அடக்கிக்கொள்ளப் பெரும் சிரமப்பட்டான் விக்ரம்.

தாயைத் தேடியோ என்னவோ அவன் தோளுக்குப் பின்னால் பார்க்க முற்பட்ட சாராவின் செப்பு இதழ்கள் அதன்பாட்டுக்கு இவன் கன்னத்தை உரசிச் செல்ல, சிலிர்த்துப்போய்த் திரும்பி, பனித்த விழிகளால் அந்தக் குட்டியைப் பார்த்தான்.

அவள் தாயைத் தேடுவது கண்ணில் பட்டது. உண்மை உறைக்க, நிகழ்காலமும் நினைவுக்கு வந்தது.

மனம் கனத்தாலும் யாஸ்மினின் சந்தோசமான வாழ்க்கை ஒருவித நிறைவைத்தான் கொடுத்தது அவனுக்கு.

சாராவை அவளிடம் கொடுத்துவிட்டு விடைபெற்றான்.

“விக்கி…” தயக்கத்தோடு அழைத்தாள் யாஸ்மின்.

கதவைத் திறந்து காருக்குள் ஏறப் போனவன் நின்று பார்த்தான்.

“இன்னொரு திருமணத்தைப் பற்றி யோசிக்கலாமே.” மெல்லச் சொன்னாள்.

அவளையே பார்த்தான் விக்ரம். நெடிய மூச்சொன்றை இழுத்துவிட்டான். பின், “யோசிக்கிறன்.” என்றுவிட்டுக் காரிலேறிச் சென்றான்.

நாட்கள் அதன்பாட்டுக்கு நகர்ந்தன.

அவ்வப்போது இன்னோர் திருமணம்பற்றி யோசனை வரும். யாரை என்று நினைத்ததும் யாஸ்மினின் முகம் மட்டுமே மனக்கண்ணில் மின்னும். சில நேரங்களில் நான் இவ்வளவு ஆழத்துக்கு அவளை நேசித்திருக்கக் கூடாதோ என்றும் நினைத்துக்கொள்வான்.

அன்று அசோக், “ஒரு இடத்துக்குப் போவம் வா.” என்று இவனை இழுத்துக்கொண்டு வந்திருந்தான்.

அது ஒரு சிவப்பு விளக்குப் பகுதி!

அந்த இடத்தைப் பார்த்ததும், “என்னடா இங்க வந்திருக்கிற?“ என்று கேட்டான் விக்ரம்.

“இங்கதான்! நீ போய்ட்டு வாடா.”

நண்பனை வியப்போடு திரும்பிப் பார்த்தான். “நான் நல்லவனா இருக்கிறதுல உனக்கு என்னடா கஷ்டம்?” இலகுவாகவே கேட்டான்.

அவனோ தீவிரமாக இருந்தான். “இங்கே வாறவே எல்லாரும் கெட்ட மனுசர் இல்ல விக்கி. நீயும் எண்டைக்குமே நல்லவன்தான். அதால எதப்பற்றியும் யோசிக்காம போ.”

அதுவரை இருந்த இலகுத்தன்மை அகன்றது.

“திடீரெண்டு ஏன்டா இந்த முடிவுக்கு வந்த?”

“நீ படுற கஷ்டத்த பாத்துத்தான்! நானும் ஒரு ஆம்பிள. உன்ர கஷ்டம் எனக்கு விளங்காதா? போ மச்சான்.” என்றான் அவன் தோளில் தட்டி.

“என்னடா என் நிலை?”

“தனியா இருக்கிறியேடா. மனுசி எண்டு ஒருத்தி இல்ல. அண்டைக்கு எடுத்து ஃபோன்ல கத்தினாயே. பிறகும் என்னடா?”

“உண்மைதான். பக்கத்துல ஒருத்தி இருந்தா எவ்வளவோ நல்லம் எண்டு இப்பவும் நினைக்கிறன்தான். அது வெறும் உடம்பு தேவைக்கு மட்டுமில்ல. அதுவும் தேவைதான். அதவிட முக்கியமாக மனதுக்குத்தான்டா ஒரு துணை தேவ. என்னோட கதைக்க, என்னோட சேர்ந்து சிரிக்க, என்னோட சேர்ந்து ஒரு கப் கஃபே குடிக்க, என்னோட சேர்ந்து நடக்க, இரவில தூங்கும்போது அருகில் துணையாக உறங்க, எனக்குச் சமைத்துத் தர, என்னோட சேர்ந்து சாப்பிட, என்னோட சண்டை பிடிக்க, எனக்கு எதையாவது வாங்கித்தா எண்டு அடம்பிடிக்க, அவளுக்காக எண்டு ஒண்டை நான் செய்ய எண்டு இப்படிப் பலதுக்காக எனக்கு ஒரு துணை வேணும்தான். ஆனா, இதுக்காக மட்டும் ஒரு பொம்பிளைட்ட வாறது… ப்ச் அது கேவலமடா! அந்தக் கேவலத்தை என்னைச் செய்யச் சொல்றியா?” சின்னக் கோபம் எட்டிப் பார்த்தது அவன் பேச்சில்.

“லூசன் மாதிரி பேசாத! உன்ன நானே அப்படிச் சொல்லுவனா? நீ சொல்ற மாதிரி ஒருத்தி எண்டா அது மனுசியாத்தான் இருக்கவேணும். நல்லவளா ஒருத்திய நானே பார்க்கிறன். அது பிறகு. இப்ப நீ இங்க போய்ட்டு வா.” என்றான் அசோக்.

“நோ மச்சான். இங்க வாறதா இருந்தா எண்டைக்கு யாஸ்மின் என்னை விட்டுப் போகக் காரணம் என்ன எண்டு உணர்ந்தேனோ, எண்டைக்கு எனக்கு ஒரு துணை வேணும் என்று யோசிச்சனோ அண்டைக்கு வந்திருப்பேன்டா.”

எதற்கும் வளைந்து கொடுக்காத நண்பனை முறைத்தான் அசோக்.

“எல்லாத்திலையும் பிடிவாதம்! ஆரம்பத்தில யாஸ்மினத்தான் கட்டுவன் எண்டு பிடிவாதம். பிறகு வாழ்க்கையில முன்னேற வேணும் எண்டு பிடிவாதம். இப்ப இதுக்கும் பிடிவாதம். இந்தப் பிடிவாதத்தால எவ்வளவு பெற்றியோ அதேயளவு இழந்தும் இருக்கிறாய்.” சலித்துக்கொண்டான் அசோக்.

அவன் பேச்சில் இருந்த உண்மையில் ஒன்றும் சொல்லவில்லை விக்ரம். ஆனால், அந்தப் பிடிவாதம்தான் விக்ரம். அதுதான் அவன் இயல்பு. ஒன்றையே பற்றி அதிலேயே நின்று வென்று காட்டுகிறவன்! அந்த இயல்பை மாற்ற முடியாதே!

“உன்ன இப்பிடியே விட்டா சரியா வராது. உனக்குப் பொம்பிள பாக்க நாங்க நாளைக்கே இலங்கைக்குப் போறம்!” என்றான் முடிவாக.

நேரெதிரே பார்வையைப் பதித்துச் சற்று யோசித்தான் விக்ரம். பிறகு, “நாளைக்குக் கஷ்டம். வேலையெல்லாம் கொஞ்சம் ஒதுக்கிக்கொண்டு போகலாம்.” என்றான்.

அந்தப் பதிலை அவனிடமிருந்து சற்றும் எதிர் பாராததில், “ஹேய்! சூப்பர் மச்சி.” என்று சந்தோசப்பட்டான் அசோக்.

“வாறவளும் என்ன விட்டுட்டுப் போகாம இருந்தா சரிதான்.” என்று சின்னச் சிரிப்போடு சொன்னான் விக்ரம்.

விரக்தி கலந்த அந்தச் சிரிப்பில் இருந்த வேதனையை உணர்ந்தான் அசோக். அவனுக்கு ஒரு நல்லதைச் செய்தே ஆக வேண்டும் என்கிற உறுதியோடு நண்பனின் தோளில் நம்பிக்கையோடு தட்டிக் கொடுத்தான்!

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock