நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் 22

ஒரு வழியாக ஃபிரங்புவர்ட் விமானநிலையத்தில் விமானம் நல்லபடியாகத் தரையிறங்கியது!

மீண்டும் ஒருமுறை தன் பொருட்கள் எல்லாம் ஹான்ட் பாக்கில் இருப்பதை உறுதிப் படுத்திக்கொண்டாள் யாமினி. தங்கள் தங்கள் உடமைகளுடன் எழுந்து வெளியே செல்ல நின்றவர்களைத் திரும்பிப் பார்த்தாள். இவர்களுக்குள் தானும் புகுந்து வெளியே செல்லவேண்டும். அதுவும் மகளையும் தூக்கிக்கொண்டு!

நல்லகாலம் ஹான்ட்பாக் தவிர வேற ஒண்டும் கொண்டுவரேல்ல என்று நினைக்கையிலேயே அதைச் சொன்னது விக்ரம் என்கிற நினைவும் சேர்ந்தே வந்தது!

மகளோடு ஹான்ட் லக்கேஜ்ஜூம் இருந்தால் கஷ்டப்படுவாள் என்று முன் கூட்டியே யோசித்திருக்கிறான்.

‘இப்ப வந்து இருப்பீனம் ரெண்டுபேரும். நாங்க வந்து இறங்கிட்டோம் எண்டு அவேக்கும்(அவர்களுக்கும்) தெரிஞ்சிருக்கும்..’ முகம் மலர எழுந்து முதலில் ஹான்ட்பாக்கினை மாட்டிக்கொண்டு மகளைக் கையில் தூக்கிக்கொண்டாள்.

ஒருவழியாக அங்கிருந்தவர்களுக்குள் கலந்து அவர்களோடு வெளியே வந்தவளுக்கு, எங்கே எப்படிப் போவது என்றே தெரியவில்லை. அவள் வந்த ஃப்ளைட்டில் வந்த ஒருசில தமிழர்கள் செல்லும் வழியைக் கவனித்து அவர்களைப் பின் தொடர்ந்தாள்.

செக்கிங் எல்லாம் முடிந்து லக்கேஜ் எடுக்கும் இடத்துக்கு வந்தவளுக்கு, ‘சந்துவை வச்சுக்கொண்டு என்னெண்டு லக்கேஜ் எடுக்கிறது?’ என்று யோசனை ஓடிற்று! அவளும் புது இடம் என்பதால் தாயின் கழுத்தை இறுக்கிக் கொண்டு தரையில் கால் பதிக்கவே மறுத்தாள்.

என்ன செய்யலாம் என்று பார்வையைச் சுழற்ற, சீருடை அணிந்த ஒரு வெள்ளையர் அவளை நோக்கி வருவது தெரிய மெல்லிய கலவரம் அவளுக்குள்.

‘போலீசா?’ அப்படியும் தெரியவில்லை.

‘என்னட்ட தான் வாறாரா?’ என்பதாக அவள் பார்க்க, அவரும் அவளை நெருங்கி என்னவோ கேட்டார்.

பதட்டத்தில் ஒன்றுமே விளங்கவில்லை. டொச் படித்தாள் தான் என்றாலும் அந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவர் மிக நாகரீகமான முறையில் சரளமாகப் பேசியதை விளங்கிக்கொள்ளச் சிரமப்பட்டாள்.

“ஷூல்டிகுங்! இஷ் ஹாப நிஷ்ட் பெர்ஷ்ட்டாண்டன்!” மெல்லிய தயக்கத்தோடு எனக்கு விளங்கவில்லை என்று அவள் சொல்ல, அவரோ மிகக் கனிவாகப் புன்னகைத்தார்.

“சின்ட் ஸி ஃபிறவ் விக்ரம்?” நிறுத்தி நிதானமாக நீங்கள் திருமதி விக்ரமா என்று கேட்க,

“யா!” என்று புன்னகையுடன் தலையசைத்தாள் யாமினி. கணவனின் பெயரைக் கேட்டதில் நிம்மதி.

“டன், கொமன் ஸி பிற்ற மிற் மிய!” என்னோடு வாருங்கள் என்றுவிட்டு அவர் நடக்க, அவரோடு நடந்தாள்.

முதலில் திடீரென்று அத்தனை பேரின் மத்தியிலும் தன்னை மட்டும் ஒருவர் தேடிவந்து விசாரிக்கிறாரே என்கிற பதட்டம் அகன்றதிலும், அவளை உணர்ந்தவராய் மெதுவாக அவர் கதைத்ததிலும் கொஞ்சம் கொஞ்சமாய் விளங்கியது அவளுக்கு. அதுவும் இது கணவனின் ஏற்பாடு என்று விளங்க, இன்னும் தான் வந்து இறங்கிவிட்டதை அவனுக்குத் தெரிவிக்கவில்லை என்பது அப்போதுதான் நினைவு வந்தது.

தன்னோடு வந்தவர்களைப் பின்தொடர்ந்து சென்று, எங்காவது மாறிப் போய்விடாமல் வெளியே சென்றுவிட வேண்டும் என்கிற பதட்டத்தில் ஃபோனை மறந்திருந்தாள்.

வேக வேகமாகத் தன் செல்லை எடுத்து ஆன் செய்தாள்.

இவள் உயிர்ப்பிப்பதற்காகவே காத்திருந்தது போன்று உடனேயே அழைத்தான் விக்ரம்.

“நல்லபடியா வந்து இறங்கியாச்சு. லக்கேஜ் எடுக்க நிக்கிறன்.” என்றாள் எடுத்ததுமே.

‘ஏன் வந்து இறங்கியதும் சொல்லவில்லை’ என்று கேட்கப் போகிறானோ என்று அவள் நினைக்க,

அவனோ, இவளின் குரலில் தெரிந்த பயத்தைக் கண்டு, “ஒண்டுக்கும் பயப்படாத. அங்க பார்.. ஒரு ஆள் வருவார். அவர நான்தான் அனுப்பினான். அவர் லக்கேஜ் எல்லாம் எடுப்பார். நீ அவரோட வா. நான் இங்க வெளில.. வாசல்லையே நிக்கிறன். பயப்படாத என்ன.” என்றான் கனிவோடு.

“சரியப்பா..” உள்ளம் நெகிழச் சொன்னாள் யாமினி.

அவன் சொன்னது போலவே, லக்கேஜ் எல்லாம் எடுத்து அவளை வெளியே அழைத்துச் சென்றார் அவர்.

எது வெளியே எது உள்ளே என்றே தெரியாமல் அவரோடு நடந்து வந்தவள், “ஹேய் பார்பி!! யாம்ஸ்..!!” என்ற குதூகலக் குரலில்தான் வெளியே வந்துவிட்டோம் என்பதையே உணர்ந்தாள்.

அந்தக் குரல் வந்த திசையில் ஆர்வத்தோடு இவள் வேகமாகப் பார்வையைத் திருப்ப, இவள் பெண்ணும் திடீரென்று கேட்ட தமையனின் குரலில், “ண்ணா.. ப்பா” என்று தலையை அங்கும் இங்கும் திருப்பி விழிகளைச் சுழற்றினாள்.

அங்கே சற்றுத் தூரத்தில், கையசைத்தபடி நின்றவர்களைக் கண்டு மலர புன்னகைத்தாள் யாமினி. ஏனோ கண்கள் மெல்லக் கலங்கிற்று! சொல்லத்தெரியாத உணர்வொன்று எழுந்துவந்து தொண்டையை அடைத்தது. கணவன் தன்னையே பார்ப்பது தெரிந்தது. பிள்ளைகளும் கூடவே இருந்ததில், கண்களால் அவளின் வருகையை ஒட்டிய தன் சந்தோசத்தை வெளிப்படுத்தியவனிடம் இருந்து விழிகளை அகற்றாமல் அவனை நோக்கி நடந்தாள்.

அவனும் பார்வையை விலக்காது அவளை நோக்கி வர, தன்னிடம் ஓடிவந்த டெனிஷை, “ஹேய் கண்ணா!! நல்லா வளந்திட்ட” என்றபடி ஒற்றைக்கையால் தன்னோடு அணைத்துக்கொண்டாள்.

“செல்லம்மா அப்பாட்ட வாங்கோ..!” என்று மகளைத் தான் வாங்கிக் கொண்டான் விக்ரம்.

தங்களுக்குள் ஒருவர் மாற்றி மற்றவர் பாசத்தைப் பரிமாறிக்கொண்ட அந்தக் குடும்பத்தை, எந்தத் தொந்தரவும் செய்யாமல் புன்னகையோடு பார்த்தபடி நின்றவரை கண்டுவிட்டு, “பார்பி அண்ணாட்ட வாங்க.” என்ற டெனியிடம் சந்தனாவைக் கொடுத்துவிட்டு, கை கொடுத்து நன்றி சொல்லி லக்கேஜை வாங்கிக்கொண்டு விடைகொடுத்தான் விக்ரம்.

அவர் சென்றதும், யாமினியின் அருகில் வந்து அவளின் தோளைச் சுற்றிக் கையைப்போட்டு, “என்ன மேடம்.. ஒரு வழியா என்னட்ட வந்திட்டீங்க போல.” என்றான் குறும்போடு.

உடனேயே, “இல்லயில்ல நீங்க இப்ப ஜேர்மன் தானே வந்து இருக்கிறீங்க..” என்றவனின் பேச்சில் முகத்தில் செம்மை படர்ந்தாலும், கண்ணால் டெனிசைக் காட்டி செல்லமாக முறைத்துவிட்டு மகன் அறியாமல் விக்ரமின் கைக்குள் இருந்து நழுவினாள் யாமினி.

விக்ரமின் முகத்தில் புன்னகை அரும்பியது.

மரகதம் அம்மா, சந்திரன், சந்தியா, அஜிதா என்று அனைவருக்கும் அவள் நல்லபடியாக வந்து சேர்ந்ததைத் தெரிவித்துவிட்டு லக்கேஜ்ஜுகளோடு கிளம்பியது அந்தக் குடும்பம்.

மகளையும் தூக்கி வண்டிலின் மேலே விக்ரம் இருத்திவிட, “பாப்ஸ் திறப்ப தாங்கோ நான் திறக்கிறன்.” என்று கார் திறப்பை வாங்கிக்கொண்டு முன்னே ஓடினான் டெனிஷ்.

அருகில் வந்துகொண்டு இருந்தவளிடம், “அப்ப எப்படிப் போச்சு பயணம்?” என்று விசாரித்தான் விக்ரம்.

“ம்ம்.. நல்லா போச்சு. என்ன அவ்வளவு நேரம் ஒரே இடத்துல இருக்க அலுப்பா இருந்தது.” என்றாள் யாமினி.

“அப்ப எழும்பிப்போய்ச் சமச்சிருக்கலாமே.. அங்க இருந்தவே எல்லாரும் உன்ர கையாள சாப்பிட்டு இருப்பீனம்.” என்றான் விக்ரம் சிரிப்போடு.

“என்னபாத்தா சமையல்காரி மாதிரி தெரியுதா உங்களுக்கு? மூண்டுநேர சாப்பாட்டையும் கட் பண்ணிடுவன் சொல்லீட்டன்!” என்று மிரட்டிவிட்டு,

“நான் சமச்சிருக்க, உறைப்பு சாப்பிட்டு அங்க இருந்த வெள்ளைக்காரர் எல்லாரும் யன்னலால கீழதான் குதிச்சிருப்பீனம்.” என்றாள் யாமினி.

“அம்மாடி! நல்லகாலம் நீ சமைக்கேல்ல. பல உயிர்கள காப்பாத்தின புண்ணியம் உனக்கே சேரட்டும்!” என்று அவன் சிரிக்க, இவள் பொய்யாக முறைக்கக் கார் நின்றிருந்த இடத்துக்கு வந்திருந்தனர்.

காரில் மகளை யன்னலோரமாக இருத்திவிட்டு டிக்கியில் லக்கேஜ்ஜுகளை ஏற்றினான் விக்ரம்.

டெனிஷ் பின்னால் ஏறிக்கொள்ள யாமினியும் அவர்கள் இருவருக்கும் நடுவில் அமர்ந்துகொண்டாள்.

டிரைவர் சீட்டில் ஏறி பெல்ட்டை மாட்டிக்கொண்டே, “உங்க மூண்டுபேருக்கும் நான் என்ன டிரைவரா?” என்றான் அவன்.

“ஏன்.. டிரைவரா இருந்தா என்ன? ஏன் கண்ணா, உங்கட அப்பா டிரைவர் வேல பாக்கமாட்டாராமா?” பிள்ளைகள் அருகில் இருக்கும் துணிவில் வாயைத் திறந்தாள் யாமினி.

“பாப்ஸ்க்குச் சமைக்கத்தான் தெரியாது யாம்ஸ். கார் நல்லா ஓட்டுவார்.” என்றான் மகன்.

“அப்ப பிறகென்ன. டிரைவர் காரை எடுங்கோ!” என்றாள் யாமினி, கண்களால் சிரித்துக்கொண்டே.

இதழ்களில் பூத்த முறுவலோடு, கண்ணாடி வழியே அவளைப் பார்த்தபடி அவனும் எடுத்தான். அந்தக் கண்களில் தெரிந்த சில்மிஷத்தில் இவள் முகத்தில் செம்மை படர்ந்தது.

இனிமையாகக் கழிந்த அரைமணி நேரப் பயணத்தின் பின், “ஒரு கஃபே குடிச்சிட்டு போவம்.” என்றபடி, ஒரு பார்க்கிங்கில் காரை நிறுத்தினான் விக்ரம்.

அங்கேயே மாக் டோனல்ஸ் இருந்ததில், சின்னவர்களுக்கு இரண்டு ‘காப்ரி சன்’ வாங்கிக் கொடுக்க, அதை உறிஞ்சியபடி தங்கையைக் கூட்டிக்கொண்டு விளையாடப் போனான் டெனிஷ்.

ஆளுக்கு ஒரு கப் கஃபேயுடன் ஒரு மேசையில் அமர்ந்துகொண்டனர் விக்ரமும் யாமினியும்.

அந்தத் தனிமைக்காகவே காத்திருந்து போன்று, “என்னப்பா நீங்க? தம்பியையும் பக்கத்தில வச்சிக்கொண்டு தோள்ள கைய போடுறீங்க?” என்று கேட்டாள் யாமினி.

“ஏன் போட்டா என்ன?” அவளைப் பார்வையால் வருடிக்கொண்டே கஃபேயை அருந்தியபடி கேட்டான் விக்ரம்.

ஒற்றைப் பின்னலாய் கிடந்த முடியை முன்னால் எடுத்துப் போட்டுக்கொண்டு, “அவன் வளந்த பிள்ளை எல்லோ. சந்துவாவது சின்னவள் ஒண்டும் தெரியாது எண்டு சொல்லலாம். அவனுக்கு முன்னால அப்படி எல்லாம் செய்யாதீங்கோ.” என்றாள் இவள்.

என்னவோ பெரிதாக எதுவோ நடந்துவிட்டது போன்று பேசியவளின் பேச்சில் புன்னகைத்தான் விக்ரம். அவர்களுக்கு அருகிலேயே ஒரு இளம் ஜோடி தங்களை மறந்து இதழ் முத்தத்தில் திளைத்திருப்பதைக் கண்டுவிட்டு, “அங்க பார்!” என்று அவளுக்குக் கண்ணால் காட்டினான்.

அவன் காட்டிய பக்கம் திரும்பிய யாமினியின் முகம் கணத்தில் செங்கொழுந்தாகிப் போனது.

“இங்க இதெல்லாம் சாதாரணம் யாமினி. நீ தோள்ல கைய போட்டதுக்கே இந்தப் பாடு படுற” என்றான் சிரிப்பை உதட்டுக்குள் மென்றபடி.

தன்னை வம்பிழுக்க ஆரம்பித்துவிட்டான் என்று தெரிந்தாலும், “இங்க இருக்கிற மனுசர் எப்படி எண்டாலும் நடக்கட்டும். நாங்க நாங்கதான் அப்பா. அதை மாத்தவும் கூடாது! மாத்தவும் ஏலாது! அதால இனி நீங்க அப்படி அவனுக்கு முன்னால நடக்கக் கூடாது!” என்றாள் அவள்.

“உத்தரவு மேடம்!” என்றான் அவன் பவ்யமாக. “அதுசரி பாம்பு மாதிரி இருக்கிற இந்த முடிய இன்னும் எவ்வளவு நீளத்துக்கு வளக்கப் போறாய்?” என்று அவள் முன்னால் போட்டிருந்த ஒற்றைப் பின்னலைக் கண்ணால் காட்டிக் கேட்டான் அவன்.

ஒருகையால் அதைத் தடவிக் கொடுத்துவிட்டு, “ஏன் நல்லா இல்லையா?” என்று கேட்டாள் அவள்.

“ச்சே ச்சே அதுதான் உனக்கு வடிவே. அதுவும் அத பின்னால போட்டுட்டு நீ நடக்கிற அழகப் பின்னுக்கு இருந்து பாக்கோணும்:” என்று அவன் ஆரம்பிக்க,

“வாங்கோ போவம்!” என்று எழுந்தே விட்டாள் யாமினி.

விட்டால் இன்னும் என்னென்னவோ சொல்வான்..!

அவனும் சிரிப்புடன் எழுந்து, “செல்லம்மா வாங்க..” என்று மகளை அழைக்க, பிள்ளைகள் இருவருமே ஓடி வந்தனர்.

அந்த அழகான குடும்பம் அவர்களின் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கியது.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock