ஒபீசிலிருந்து கிளம்பிக் கொண்டிந்தான் விக்ரம். காரினருகே வரவும், “எங்கடா போற?” என்று குரல் கொடுத்தான் அசோக்.
“வீட்டுக்குடா.” காரைத் திறந்தபடி சொன்னான் விக்ரம்.
“நில்லு மச்சி! ஏன் இவ்வளவு அவசரம்.”
‘என்ன’ என்று கேள்வியாக ஏறிட்டவனிடம், “வாவன், கான்டின்ல போய்ச் சாப்பிட்டு வருவம்?” என்று வினவினான் அசோக்.
“மனுசன் சாப்பிடுவானா அங்க.” என்று இவன் சொல்ல,
“பார்ரா.. இந்த நாலஞ்சு வருசமா எந்த மிருகம் இஞ்ச சாப்பிட்டதாம்?” என்றான் அசோக் கேலியாக.
“வயசுபோனதுகள் தான் பழச அசைபோடும். நாங்கல்லாம் ‘எனக்கு இருவது உனக்குப் பதினெட்டு’ ரேஞ்சுடா.” என்றான் விக்ரம் அசராமல்.
“மச்சி! எனக்கும் உனக்கும் ஒரே வயசுதான்டி..”
“இளமை மனசுல இருக்குடி..” என்றான் இவன்.
“பார்ரா.. கதைக்கப் பழகிட்டான்.” என்று அசோக் சொல்ல,
“நீ இங்கயே நிண்டு இப்படியே கதச்சிக்கொண்டு இரு. நான் போறன், யாமினி பாத்துக்கொண்டு இருப்பாள்.” என்றபடி காரில் ஏறி,
“நீயும் வாவன். சாப்பிடலாம்.” என்று அசோக்கையும் அழைத்தான்.
“நோ மச்சி! உனக்கொரு யாமினி மாதிரி எனக்கொரு காமினி என்ர வீட்டுல இருக்கிறாள். நான் அங்க போறன்!” என்றுவிட்டு அவனும் தன் காரை எடுத்துக்கொண்டு போனான்.
விக்ரமுக்கு நன்றாகவே தெரியும், அசோக்கும் அவனைப் போலவே மனைவி கைச் சமையலுக்கு அடிமை என்று. எனவே தன் வீட்டுக்காரியின் கைச் சாப்பாட்டுக்கு வாயும் வயிறும் ஏங்க காரை வீட்டுக்கு விட்டான்.
பெரிய காணி, அதில் பின்னுக்காக வீடு. வீட்டுக்கும் வெளி வாசலுக்குமிடையிலான தூரம் தாரினால் போட்டிருந்தான். நான்கு கார்களை ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்த கூடிய அளவிலான தூரம். அந்தப் பாதையின் இரு பக்கமும் பச்சைப்புல் வெளியும் ஆங்காங்கே தோட்டமும். குட்டிக் குட்டி மீன்களின் வசிப்பிடமாகச் செய்குளம் ஒன்று. அதிலே அல்லி மலர்ந்திருக்கத் தவளையும் கொக்கும் கரையில் நின்று தங்களின் வாயால் குளத்துக்கு நீரை பாய்ச்சிக் கொண்டிருந்தன.
இவன் காரை வீட்டுக்குள் திருப்பும்போதே மெல்லிய சாம்பிராணி வாசனை மூக்கை மோதியது.
ஐரோப்பாவின் நாடுகளில் ஒன்றான ஜேர்மனியின் முக்கிய நகரமான ஃபிரங்ஃபுவர்ட் நகர்பகுதியில் அமைந்திருக்கும் வீட்டில் சாம்பிராணி வாசனை. இது கூட நல்லாத்தான் இருக்கு என்று எண்ணியபடி அவன் காரைத் திருப்ப, “ப்பா..” என்றபடி ஓடிவந்தாள் சந்தனா.
அங்கே யாழ்ப்பாணத்தில் காரைத் துரத்திக்கொண்டு வந்தவள் ஒருகணம் நினைவுகளில் மின்னி மறைய, “செல்லக்குட்டி..!” என்றபடி, காரை அங்கேயே நிறுத்திவிட்டு இறங்கினான் விக்ரம். அதற்குள் மின்னல் வேகத்தில் அவனை நெருங்கியிருந்தாள் அவள்.
“அப்பா.. தூக்..குங்கோ..” என்றபடி.
அவனும் மிக வேகமாக அவளை அள்ளிக் காரில் இருத்திவிட்டு, அதே வேகத்தில் காரை ரிவர்ஸ்சிலேயே வீதிக்கு எடுத்தான். யாமினி வரமுதல் வெளியேறி ஆகவேண்டும்! அப்பாவும் மகளும் வெளியேறியும் இருந்தனர்.
“கிக்கிக்கீ” என்று சிரித்துத் தன் மகிழ்ச்சியைக் காட்டினாள் சின்னவள்.
“அப்பா எப்ப வருவார் எண்டு பாத்துக்கொண்டு இருந்தவளா செல்லம்?” காரைச் செலுத்திக்கொண்டே, மகளின் சந்தோசத்தை ரசித்தபடி அவளிடம் திரும்பிக் கேட்டான் விக்ரம்.
ஒரு நிமிட கார் ஓடும் தூரத்தில் இருந்தது ஒரு சூப்பர் மார்கெட். அங்கே சென்று அவளுக்கு மிகவுமே பிடித்த, ‘கிண்டர் ஜாய்’ ஒன்றை அவன் எடுக்க அவளோ இன்னுமொன்றையும் தூக்கினாள்.
“செல்லம்மா ஒண்டு போதும்டா.” என்ற அவனின் பேச்சுக்கு அவளிடம் மதிப்பே இல்லை.
அவளிடம் மட்டும் அவனின் பாட்சா பலிக்கவே பலிக்காது. சின்ன ரோஜா உதட்டைச் சுருக்கி, “ப்ளீஸ்ப்பா” என்று தலையைச் சரித்து அவள் கெஞ்சிவிட்டால் இல்லை என்கிற வார்த்தையே மறந்துபோகும்!
உண்மையிலேயே அவனின் மொத்தப் பலகீனமாகச் சந்தனா இருந்தாள்.
“நீ அம்மாட்ட அப்பாக்கு அடிவாங்கித் தராம விடமாட்ட போல.” என்றபடி மகள் ஆசைப்பட்டதை வாங்கிக் கொடுக்க, அவளோ தாயை அறிந்தவளாகக் கடையை விட்டு வெளியே வந்ததுமே பிரித்துத் தரும்படி கேட்டாள்.
அவளைத் தூக்கி காரின் மேலே இருத்திவிட்டு ஒன்றை பிரித்துக் கொடுத்தான். அதிலே இருந்த குட்டி உருண்டைகளில் ஒன்றை முதன் முதலாக எடுத்து விக்ரமுக்கு நீட்டினாள் சின்னவள்.
இது அவனுக்கும் அவளுக்குமான பாசப்பிணைப்பு! இங்கு வந்த நாளிலிருந்து நடப்பது. முதல் முறை அவன் வாங்கிக் கொடுத்தபோது, தானாகவே அவள் முதல் உருண்டையை நீட்டியதும், நெகிழ்ந்துபோய் வாயைத் திறந்து வாங்கிக் கொண்டவனால் அடுத்த முறைகளில் அவள் தருவாளா என்று எதிர்பார்க்காமல் இருக்க முடிவதில்லை. வாயால் கேட்கமாட்டானே தவிரப் பார்த்துக்கொண்டே இருப்பான், பெண் என்ன செய்கிறாள் என்று. எப்போதுமே அவனுக்குக் காரம் மீதுதான் நாட்டம். இனிப்பு வகைகளைத் திரும்பியும் பாரான். ஆனால் அவன் பெண் நீட்டும் அந்த உருண்டை மட்டும் அவனுக்கு வேண்டுமே வேண்டும்!
தனக்குத் தந்துவிட்டு மிகுதியை எங்கும் பிரட்டாமல் மிக அழகாக ரசித்து உண்ணும் மகளை ரசிக்காமல் இருக்கவே முடியவில்லை அவனால்.
கிண்டர் ஜாயில் பிசியாக இருந்தவள் திடீரென்று, “ப்பா…” என்றாள் மூக்கை சுருக்கி முகத்தைச் சற்றே மேலே தூக்கிப் பிடித்தபடி.
“இதோடா செல்லம்.” என்றபடி வேகவேகமாக ஒரு டிஷ்யு எடுத்து அவளின் மூக்கைத் துடைத்துவிட்டான் விக்ரம்.
பதினான்கு மணிநேர ஏசிப் பயணம், ஐரோப்பிய நாட்டின் குளிருடனான சீதோஷ்ணம் எல்லாமாகச் சேர்ந்து அவளுக்குச் சளி பிடித்திருந்தது.
ஆனால், சளி மூக்கைத் தாண்டும் முதலே அம்மாவிடமோ அப்பாவிடமோ இல்லை அண்ணாவிடமோ ஓடிவிடுவாள் மூக்கை நீட்டியபடி. அந்தளவு சுத்தபத்தம்!
அவனுக்கு அதிலெல்லாம் மனம் கொள்ளா பெருமை. என் பெண்ணைப்போல யார் இருப்பார் இந்த வயதில் என்று!
ஒன்றன் பின் ஒன்றாக இரண்டையும் அவள் சாப்பிட்டு முடித்ததும் அதோடு வந்த குட்டி விளையாட்டுப் பொருட்களைக் கேட்க, “ஒண்டு மட்டும் வச்சு விளையாடுங்கோ. மற்றதை இரவைக்கு அப்பா தாறன். இப்ப அம்மா கண்டாவோ ரெண்டுபேருக்கும் பேச்சுத்தான் விழும்.” என்று ஒன்றைத் தன் ஜீன்ஸ் பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டு மற்றதை மட்டும் அவளிடம் கொடுத்தான்.
அந்தச் சிட்டும் தலையாட்டி வாங்கிக்கொண்டாள். இருவருமாகப் பக்காவாக ப்ளான் பண்ணிக்கொண்டு வீட்டுக்குச் சென்றனர்.
அங்கே வாசலிலேயே கைகளை இடுப்பில் கொடுத்தபடி முறைத்துக்கொண்டு நின்ற யாமினி இருவரையும் வரவேற்றாள்.
“எங்க போயிட்டு வாறீங்க ரெண்டுபேரும்?” காரை விட்டு இறங்கியவர்களிடம் தன் விசாரணையை ஆரம்பித்தாள்.
“சும்மா ஒரு ரவுண்ட்.” மகளோடு வீட்டுக்குள் வந்தவாறே சொன்னான் அவன்.
“யாரு..? நீங்க ரெண்டுபேரும்..? சும்மா ஒரு ரவுண்ட் போற ஆக்கள்?” என்று முறைத்தவள், மகளிடம் திரும்பி, “அம்மாக்கு தெரியாம வெளில ஓடக்கூடாது எண்டெல்லோ சொல்லி இருக்கிறன்!” என்றாள் முறைப்போடு.
அந்த முறைப்பைச் சட்டையே செய்யவில்லை அவள்!
தகப்பன் தோளில் இருக்கிறோம் என்கிற துணிச்சலில், தன் பச்சரிசிப் பற்களைக் காட்டிச் சிரித்தபடி தாயின் கழுத்தை எட்டி வளைத்து அருகில் இழுத்துக் கன்னத்தில் தன் இதழ்களை அழுத்திப் பதித்தாள்.
‘அப்பாவும் மகளும் இது ஒண்ட நல்லா தெரிஞ்சு வச்சிருக்கீனம்..’ செல்லமாக அலுத்துக்கொண்டாலும், மனதுக்குள் இனித்துக்கொண்டு சென்றது மகள் தந்த முத்தம்.
மனம் கரைய அவளைத் தான் வாங்க யாமினி முயல, முடியவில்லை. பார்த்தால், விக்ரம் பெண்ணை விடாமல் பிடித்திருந்தான்.
என்ன என்று இவள் பார்க்க, அவன் முகம் வெகு வெகு அருகில். மகள் கழுத்தை வளைத்ததில் அவன் முகமருகே இவள் முகம் நெருங்கி இருந்தது.
கன்னங்களில் நாணப்பூக்கள் பூக்க அவனைப் பார்த்தாள். அவனோ கண்களில் சிரிப்போடு புருவத்தை இருமுறை உயர்த்தி இறக்கினான் குறும்போடு! யாமினிக்கு வெட்கச் சிரிப்பு இதழ்களில் தானாக அரும்பிற்று!
மகளை வாங்கி, அவளைப் பார்ப்பதுபோல் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
கடைக்கண் பார்வையில் அவன் குறும்பு நகையோடு அவளையே பார்ப்பது தெரிந்தாலும், “குட்டிம்மா, கடைல சாக்கி வாங்கிச் சாப்பிட்டீங்களா?” என்று இவள் கேட்க அவள் திருதிரு என்று தகப்பனைப் பார்த்தாள்.
அது போதாதா யாமனிக்கு!