இருவருமாக உணவை முடித்ததும், உண்ட களைக்குச் சுகமாகச் சோபாவில் அமர்ந்து டீவியை அவன் போட, டிவி சத்தம் கேட்டபிறகுதான் தன் அறையிலிருந்து வெளியே வந்தாள் சந்தனா. அவர்கள் சாப்பிடும்போது வந்தால் தாய் மீண்டும் உணவை நீட்டுவாள் என்பதை அந்தக் குட்டி நன்றாகவே அறிந்து வைத்திருந்தாள்.
யாமினியும் பாத்திரங்களை ஒதுக்கிவிட்டு வந்தாள்.
அவளும் அவனருகில் அமர, அதற்காகவே காத்திருந்தவன் அவள் மடியில் படுத்துக்கொண்டான். இது தெரிந்தே வேகவேகமாக வேலைகளை முடித்துக்கொண்டு வருவாள் யாமினி. அவன் மார்பில் சந்தனா. கொழும்பு கோல்பேஸ் பீச்சில் ஆரம்பித்த வழக்கம் இது. அவர்கள் ரசிக்கும் தருணங்களில் இதுவும் ஒன்று!
டிவியில் வடிவேலுவின் காமெடி ஓடிக்கொண்டிருந்தது. அதை ரசித்தார்களோ இல்லையோ அந்த அற்புதமான தருணத்தை மௌனமாக ரசித்தார்கள் கணவனும் மனைவியும்.
“கண்ணாவ இன்னும் காணேல்ல?” வாசலைப் பார்த்தபடி யாமினி சொல்ல, அதுவரை நேரமும் அவளின் மெல்லிய விரல்களின் வருடலை சுகமாக அனுபவித்தபடி கண்மூடிக் கிடந்தவன் கண்ணைத் திறந்து சுவர் மணிக்கூட்டில் நேரத்தை பார்த்தான். “இப்பதானே ரெண்டரை. இன்னும் கொஞ்சத்துல வருவான்.” என்றுவிட்டு மீண்டும் கண்களை மூடிக்கொண்டான்.
கைகளால் அவள் இடையை வேறு வளைக்க, அவன் கையிலேயே ஒன்றுபோட்டாள் யாமினி.
உடல் மௌனச் சிரிப்பில் குலுங்க, “கட்டின மனுசனுக்குக் கை நீட்டுறது எல்லாம் நல்ல பழக்கமில்ல.” என்று அவள் மடியிலிருந்து குரல் கொடுத்தான் அவன்.
“கையக்கால சும்மா வச்சுக்கொண்டு இருக்காட்டி அப்படித்தான் விழும்!”
“அதுக்குத்தான் என்ர மகள் எனக்கு உன்ன தேடித் தந்தவளாக்கும்!”
‘தொடங்கிட்டார்..!’ சிரிப்பு வந்தது அவளுக்கு.
இதுக்கு மேலயும் அவள் இங்க இருந்தா இன்னும் வம்பிழுப்பான் என்று தெரிந்து, “சரி விடுங்கோ என்னை. குடிக்க ஏதாவது கொண்டுவாறன்” என்று அவள் எழும்ப முயல.. எங்கே அவன் விட்டால் தானே எழும்புவது!
“அப்பா! உங்களுக்கும் நேரமாகுது. கண்ணாவும் வரப்போறான்.”
“கொஞ்சநேரம் சும்மா இரு. உன்ர மகன் வந்ததும் விடுறன்!” என்றான் அவன்.
அவனுக்குத் தெரியும், மகன் வந்துவிட்டால் மறந்தும் தன் அருகிலும் வரமாட்டாள் என்று. அதற்கிடையிலான நேரத்தை நழுவவிட அவன் தயாராயில்லை. அதை அவளும் உணர்ந்திருந்ததில் கேசத்தை வருடிக்கொடுத்தாள்.
சற்று நேரத்திலேயே ‘கினிங் கினிங்’ என்று சைக்கிளின் மணியோசை கேட்கவும் துள்ளிக்கொண்டு ஓடினாள் சந்தனா.
பின்னாலேயே தானும் விரைந்தாள் யாமினி.
சைக்கிளைத் தகப்பனின் காருக்குப் பக்கத்தில் நிறுத்திவிட்டு இறங்கியவனிடம், “வா கண்ணா..” என்றபடி அவனது பாக்கை யாமினி வாங்கிக்கொள்ள, அவனோ, “ஹேய் பார்பி!!” என்றபடி தன்னுடைய சைக்கிள் ஹெல்மெட்டை சந்தனாவுக்கு மாட்டிவிட்டான்.
அவளோ துள்ளிக்கொண்டு ஓடிப்போய்த் தன் மூண்டு சக்கரச் சைக்கிளோடு வந்தாள். தகப்பனின் கார் திறப்பினால் தன் சைக்கிளை ஸ்டார்ட் செய்து தமையனின் ஹெல்மெட் அணிந்து தானும் சைக்கிள் ஓடுகிறாளாம். ஹாலை சுற்றிச் சுற்றி வந்தவளை பார்க்க எல்லோருக்கும் சிரிப்பு.
“ஹாய் பாப்ஸ்..” என்றபடி விக்ரமின் அருகில் வந்து அமர்ந்தவனிடம் கிளாசில் ஜூஸினை வார்த்துக்கொண்டு வந்து நீட்டினாள் யாமினி.
“நீங்களும் முகத்தைக் கழுவிக்கொண்டு வாங்கோப்பா. தேத்தண்ணி போடுறன்” என்றுவிட்டு உள்ளே சென்றாள்.
“எப்படிப் போகுது உங்கட மாட்ச்? அடுத்தமுறையாவது கோப்பை வருமா?” வேண்டுமென்றே கேலியாகக் கேட்டான் விக்ரம்.
“பாப்ஸ்!!” என்று முறைத்தான் மகன். “நாங்க கப் வங்காட்டி உங்கட டீம் ட்ரைனிங் நல்லா இல்லை எண்டு அர்த்தம்.” என்றான் சளைக்காமல்.
“டேய்!” என்று சிரித்தான் விக்ரம். “பொறு ஷாஷாட்டா போட்டுக் கொடுக்கிறன்.” என்று மிரட்டினான்.
டெனிஷ் விளையாடும் டீமின் சீனியர் தான் விக்ரம். அவனது நண்பன் ஷாஷா தான் டெனிஷின் டீமுக்கு ட்ரைனர். விக்ரம், ஷாஷா எல்லோரும் இளைஞர்களாக இருந்த காலத்தில் இதே டீமில் விளையாடியவர்கள். இன்று ஒருவன் ட்ரைனராக இருக்க, விக்ரம் தான் அந்த டீமின் ஸ்பான்ஸர்.
இங்கே அப்பாவும் மகனும் வம்பளத்துக்கொண்டு இருக்க, அங்கே யாமினி சமையலறையில் இரண்டு பரோட்டாக்களை அடுப்பில் போட்டு எடுத்து, அதிலே ஏற்கனவே செய்து வைத்திருந்த உறைப்பில்லாத உருளைக்கிழங்கு பிரட்டலை வைத்து உருட்டிக்கொண்டு வந்து கொடுத்தாள்.
இன்னுமே சோற்றில் பெரிய நாட்டமில்லை டெனிக்கு. மெல்ல மெல்ல பழக்கவேண்டும் என்று எண்ணியிருந்தாள் யாமினி.
“இண்டைக்கு ஸ்கூல் எப்படிப் போனது கண்ணா?” என்று அவள் விசாரிக்க,
“சூப்பரா போனது. அடுத்த வாரம் நாங்க புட்பால் மாட்சுக்குப் போறம்” என்று உடனேயே தனக்குப் பிடித்ததற்குத் தாவியவன் தகப்பனிடம் கண்ணால் சிரித்தான்.
விக்ரமின் முகத்திலும் சிரிப்பு. “அவேண்ட டீம் தோத்தா அதுக்கு நாங்கதானாம் காரணம் யாமினி.” என்று அவளிடம் சொல்ல,
“அது உண்மைதானே. ஸ்பான்ஸரும் சரியில்ல, ட்ரைனரும் சரியில்ல.” என்று அவளும் சொல்ல, விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினான் டெனிஷ்.
“யாம்ஸ்!!” என்றழைத்து அவளோடு ஹைபை வேறு கொடுக்க, முறைக்க முயன்ற விக்ரம் முகத்திலும் அடங்காத சிரிப்பு!
“நீ சொல்லு கண்ணா, நாளைக்கு ஏதும் வீட்டுப்பாடம் இருக்கா?”
“இல்ல. தந்ததை எல்லாம் முடிச்சிட்டன்”
“சரி, அப்ப கொஞ்சநேரம் டிவி பார். நாலுமணிக்கு ஸ்விம்மிங் இருக்கு இண்டைக்கு.” என்று நினைவுபடுத்தினாள்.
இதையெல்லாம் பார்த்திருந்த விக்ரம், “பாத்தியா செல்லம்மா உன்ர அம்மாவ. இவ்வளவு நேரமும் மகன காணேல்ல எண்டு துடிச்சவா. அவன கண்டதும் எங்க ரெண்டுபேரையும் திரும்பியும் பாக்கேல்லை..” என்றான் சீண்டலாக.
அவனை முறைத்தாள் அவள். “பாரு கண்ணா கதைய! அவர் முதலே வந்து நல்லா சாப்பிட்டு ரெஸ்ட்டும் எடுத்துட்டு என்ன கதைக்கிறார் எண்டு. என்ர பிள்ள பள்ளிக்கூடம் போய்ப் படிச்சிட்டு களைச்சுப்போய் வந்திருக்கிறான்!” என்று அவன் கேசத்தைக் கோதிவிட்டாள்.
“நாங்க மட்டும் ஆபீஸ்ல சும்மாவா இருந்துட்டு வாறம்?”
“முதலாளி எண்ட பெயர்ல ஏசி ரூமுக்க சும்மா இருந்து எல்லாரையும் வேல வாங்கிட்டு வந்து இங்க சீனைப் போடுறத பாரு..” என்று விடாமல் நின்றாள் அவளும்.
மகன் இருக்கையில் வம்பு வளர்க்கமாட்டானே என்கிற தைரியம்!