எப்போதும்போல் அன்றும் மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்த விக்ரமின் புருவங்கள் சுருங்கின. அவனை நோக்கி ஓடிவரும் செல்லம்மாவைக் காணோம்!
‘இன்னும் நித்திரையோ?’
காரை பார்க் பண்ணிவிட்டு வாசலைப் பார்த்தான்.
‘யாமினியையும் காணேல்ல.. எங்க போய்ட்டா?’
ஜேர்மன் வந்த இத்தனை நாட்களில் இதுதான் முதல் தடவை, அவன் வரும்போது அவள் வரவேற்க வாசலில் இல்லாமல் இருப்பது.
என்னவோ என்று மனம் சொல்ல, வேகமாகக் காரைவிட்டு இறங்கி வீட்டுக்குள் வந்தவனின் நடை, அங்கே ஹாலில் சோபாவில் இருந்து எழும்பமுடியாமல் எழும்பிக் கொண்டிருந்த யாமினியைக் கண்டதும் ஒருகணம் நின்றது.
தலை கலைந்திருக்க, முகமெல்லாம் சோர்ந்து, சிவந்து, காய்ந்து போயிருந்தாள்.
பார்த்ததுமே பதறிப்போய், “என்னம்மா?” என்றுகொண்டே வேகமாக அவளை நெருங்கினான். அவள் சொல்ல முதலே உணர்ந்துகொண்டான் நல்ல காய்ச்சல் என்று. அந்தளவுக்கு அணல் அடித்தது.
மகள் இவளுக்குக் கொடுத்துவிட்டாள் என்று விளங்க, “எப்ப இருந்து?” என்றபடி, அவளருகில் அமர்ந்து அவளைத் தன் மீது சாய்த்துக்கொண்டான்.
“விடியவே லைட்டா சுட்டதுதான். பரசிட்டமோல் போட்டனான். இப்ப ரெண்டு போட்டும் அடங்குதில்ல.” சோர்வோடு அவன் தோளில் தலையைச் சாய்த்துக்கொண்டு சொன்னாள்.
“பிறகு ஏன் விடியவே என்னட்ட சொல்லேல்ல? சொல்லியிருக்க அப்பவே டொக்டரிட்ட காட்டியிருக்கலாம் எல்லோ?” என்றான் கோபத்தோடு.
ஆதரவாய் அணைத்திருந்த கணவனின் திடீர் கோபமும், உடலின் பலவீனமும் சேர்ந்துகொள்ளச் சட்டெனக் கண்ணைக் கரித்தது அவளுக்கு.
“சரிசரி அழாத. முதலே காட்டியிருக்க இந்தளவுக்கு வந்திருக்காது தானே. அதுக்குத்தான் சொன்னான். வா போவம்..” என்று அவன் எழும்ப,
“நீங்க இன்னும் சாப்பிடேல்ல.” என்றாள் அவள்.
“இதோட சமச்சனியா?” என்று முறைத்தான் அவன்.
“சோறும் ஒரு கறியும் தானப்பா வச்சனான்.” கணவன் கோபப்படப் போகிறான் என்று அறிந்ததில் குரல் உள்ளே போனது.
“உன்ன..!” ஆத்திரத்தில் என்ன செய்வது என்று தெரியாது அணைத்துக்கொண்டான் அவளை.
கலைந்திருந்த கேசத்தை ஒதுக்கிவிட்டான். “போன்லயாவது சொல்லி இருக்க, கடைல வாங்கிக்கொண்டு முதலே வந்திருப்பன்தானே. ஏன் இப்படி உன்ன நீயே நோகடிக்கிற?” ஆற்றாமையோடு கேட்டான்.
“என்ர கையால சாப்பிடத்தான உங்களுக்கு விருப்பம்.”
“அதுக்கு? இனி உன்ர கையாள சாப்பிடமாட்டன் போ!” என்றவனின் பேச்சில்,
அழுவாரைப்போல் அவனைப் பார்த்து விழித்தாள் யாமினி.
“என்ன பார்வை?” என்றவனுக்குச் சிரிப்புத்தான் வந்தது.
“ஒரு சின்னக் கோவத்த கூடத் தங்கமாட்ட. ஆனா செய்றது முழுக்கத் தேவையில்லாத வேல. வந்து சாப்பிடுறன், இப்ப வா. எங்க செல்லம்மா? இன்னும் நித்திரையா?” என்று கேட்டான்.
ஓமென்று அவள் சொல்ல அவளையும் கூட்டிக்கொண்டு கிளம்பினர்.
“தம்பி வருவானேப்பா..”
“அவன் வரமுதல் நாங்க வந்திடுவம், இல்லாட்டியும் அவனிட்டையும் வீட்டுத் திறப்பு ஒண்டு இருக்கு. நீ வா.” என்று கூட்டிக்கொண்டு போனான்.
அங்கே, அவளைப் பரிசோதித்த வைத்தியர் ‘நாடு மாற்றமும் சீதோஷ்ணமும்’ தான் காரணம் என்று மாத்திரைகள் கொடுத்து அனுப்பினார். காரில் வைத்தே அப்போது போடவேண்டியதுகளைக் கொடுத்தான்.
வீட்டுக்கு வந்து அவளைக் கையோடு கூட்டிக்கொண்டு வந்து படுக்க வைத்தான். “கொஞ்சநேரம் தனிய இருப்பியா, கீழபோய்ச் சாப்பிட எடுத்துக்கொண்டு வாறன்.” என்று கேட்டான் இதமாக.
“என்ன நீங்க? சும்மா காய்ச்சல் தானே. என்னவோ பெரிய வியாதி வந்த ரேஞ்சுக்கு நிக்குறீங்க.” என்றாள் கேலியாக.
சற்றுமுன் அப்படிச் சோர்ந்துபோய் இருந்தவள் இப்போது சற்று தெம்பாகப் பேசுவது நிம்மதியாக இருந்தது.
அவளின் மூக்கை பிடித்து ஆட்டி, “உள்ள போன மருந்து வேல செய்து போல..” என்று சிரித்துவிட்டுக் கீழே போனான் விக்ரம்.
கணவன் சொன்னது போலவே உட்கொண்ட மாத்திரைகளின் விளைவால் சற்றே தெம்பாக உணர்ந்தவள் தலையணையை முதுகுக்குக் கொடுத்துக் கால்களை நீட்டி அமர்ந்துகொண்டாள்.
சட் சட் என்று சத்தம் மெல்லியதாய் காதில் விழத் தொடங்கவும் ஜன்னலைப் பார்த்தாள். வெளியே மழை தூரத்தொடங்கியிருந்தது.
‘இப்ப நல்ல வெயில் எரிச்சது.. அதுக்கிடைல மழை வந்திட்டுது.. தம்பி வாற நேரம் வேற. இந்த ஊர்ல எந்த நிமிசம் இந்த வெதர் எப்படி மாறும் எண்டு சொல்லவே ஏலாது. பிள்ளை குடையும் கொண்டு போகேல்ல.’ தன்னிச்சையாய் எழுந்தவளுக்கு உடல் பலவீனத்தில் தலை சுற்றவும் சட்டென்று மீண்டும் அமர்ந்துகொண்டாள்.
‘இவரைத்தான் அனுப்போணும்.’ என்று நினைக்கையிலேயே தொம் தொம் என்று காலடிச் சத்தத்தோடு யாரோ படியேறுவது கேட்டது.
யாரிது? இவ்வளவு சத்தமா என்று எட்டிப்பார்க்க, வந்தது டெனிஷ். அதுவும் தலையில் நீர் சொட்டச் சொட்ட.
“அச்சோ கண்ணா..!” பதறிப்போய் யாமினி அழைக்க, அவனைக் கண்டுவிட்டு சந்தனாவும் அவனிடம் ஓட, அதையெல்லாம் பொருட்படுத்தாது விருட்டென்று தன் அறைக்குள் புகுந்து படார் என்று கதவை அடைத்துச் சாத்திக்கொண்டான் அவன்.
என்ன இது? ஒருகணம் அதிர்ந்து திகைத்துப்போனாள் யாமினி.
வேகமாக எழுந்து அவன் அறைக்குப் போகமுயல, உணவுத்தட்டோடு, “என்ன?” என்று கேட்டுக்கொண்டே வந்தான் விக்ரம்.
“கண்ணா அப்பா. கூப்பிட கேக்காத மாதிரி அறைக்கப் போய்க் கதவை மூடிட்டான்.” சொல்லும்போதே கலங்கிப்போனாள் யாமினி.
அப்படி மரியாதை இல்லாமல் நடக்கிற பிள்ளை அல்லவே அவன். அதைவிட, அவள் மீது மிகுந்த பாசம் கொண்டவனும் கூட!
மனைவியின் நிலை விளங்க, “நீ வா!” என்று கூட்டிக்கொண்டுபோய் அமர்த்தி, சாப்பாட்டைக் கையில் கொடுத்தான்.
“இப்ப இதா முக்கியம்? அங்க அவன் தனிய இருக்கிறான். முதல் வாங்கோ போய் என்ன எண்டு கேப்பம்.” என்று படபடத்தவளை அமைதிப்படுத்தினான் அவன்.
“கொஞ்சநேரம் அவன தனியா இருக்க விடு. நீ கூப்பிட்டும் வராம அறைக்குப் போயிருக்கிறான் எண்டா ஒண்டு அவனுக்குப் பிடிக்காத ஏதோ நடந்திருக்கு இல்ல என்னவோ பிழை செய்திருக்கிறான். அத யோசிச்சிட்டு தானே சரியாகி வருவான். அதுக்குப் பிறகு இனி இப்படிச் செய்யக் கூடாது எண்டு சொல்லிக்குடு.” என்று அவளுக்கு அவன் சொல்லிக்கொடுக்க,
“என்ன நீங்க.. அங்க தனிய கோவமா இருக்கிற பிள்ளையைச் சமாதானப் படுத்துவம் எண்டில்லாம எனக்கு விளக்கம் சொல்லிக்கொண்டு இருக்கிறீங்க. அவன் சின்னப்பிள்ள அப்பா.” என்றவளுக்குக் கணவன் மீது இப்போது பெரும் கோபமே வந்தது.