‘என்னைத் தனியாக விடு’ என்பதோ தனிமையை விரும்புவதோ வளர்ந்தவர்கள் செய்வது. குழந்தைகளுமா?
“சின்னப்பிள்ளதான். எண்டாலும் கொஞ்ச நேரம் விடு. எதையும் மற்றவே சொல்லி விளங்குறத விட அவையா யோசிச்சு விளங்குறதுக்குப் பலன் அதிகம். அத இங்க பள்ளிக்கூடத்திலேயே சின்ன வயசுல இருந்து பழக்குவீனம். நீ சும்மா கண்டதையும் யோசிக்காத.” என்றவனின் பேச்சை அவள் செவிமடுக்கவே இல்லை.
“இப்ப நீங்க போய்க் கேக்கவேணும் இல்லாட்டி நான் போறன். நனைஞ்சு வேற வந்திருக்கிறான். அப்படியே விட்டா அவனுக்கும் வருத்தம் வந்திடும்.” தவித்துப்போய்ச் சொன்னாள் யாமினி.
விட்டால் அழுதுவிடுவாள் போலிருந்தவளை, “சரி சரி. நான் பாக்கிறன். நீ சாப்பிடு.” என்று சமாதானப் படுத்திவிட்டு எழுந்து சென்றான் விக்ரம்.
“டெனிஷ்!!” என்று அழைத்துக்கொண்டு அறைக்குள் செல்ல, அங்கு யாமினி சொன்னது போலவே நனைந்த கோலம் மாறாமல் அப்படியே அமர்ந்திருந்தான். பள்ளிக்கூடப் பாக் ஒருபக்கம், தூக்கிப் போடப்பட்டுக் கிடந்தது.
ஒற்றைப் பார்வையால் அனைத்தையும் அளந்துவிட்டு, டவலை எடுத்து, “தலைய துடை.” என்று இவனே துவட்டப் போகத் தட்டிவிட்டான்.
“ஈரத்தோட இருந்தா வருத்தம் வந்திடும் மேன். பிறகு உன் புட்பாலுக்குத்தான் போகமுடியாது.” என்றபடி மீண்டும் துவட்டப் போக, வேகமாக வாங்கித் தானே தலையைத் துடைத்தான் அவன்.
மகனின் ரோசத்தை சின்னச் சிரிப்போடு ரசித்தவன், இன்னோர் நாற்காலியை இழுத்து அவன் முன்னால் போட்டுக்கொண்டு அமர்ந்தான்.
சற்று நேரம் அவன் முகத்தையே பார்க்க அவனோ பிடிவாதமாக இவன் முகம் பார்க்க மறுத்தான்.
“என்ன டெனிஷ் என்ன விசயம்? எது நடந்தாலும் அப்பா உனக்காக இருக்கிறன் எண்டு சொல்லி இருக்கிறன் தானே..” என்றான் இதமாக.
ஒருமுறை இவன் முகம் பார்த்துவிட்டு, “ஒண்டும் இல்ல. என்னைக் கொஞ்சம் தனிய விடுங்கோ!” என்றான் அப்பனுக்குத் தப்பாமல் பிறந்தவன்.
இதழ்களில் புன்னகை அரும்ப இன்னும் நெருக்கமாக மகனுக்கு முன்னாலேயே கதிரையை இழுத்துப் போட்டான் விக்ரம். அவன் கைகள் இரண்டையும் பற்றி, “ஏதாவது பிழை செய்திட்டியா?” என்று மெல்ல விசாரித்தான்.
மறுத்துத் தலையசைத்தான் மகன்.
“உனக்குப் பிடிக்காத எதுவும் நடந்ததா?”
சற்று நேரம் பேசாமல் இருந்துவிட்டு மெல்லத் தலையாட்டினான் ஆம் என்பதாக.
“என்னது?”
“ஒண்டுமில்ல!” என்றான் மிக வேகமாக.
அந்த வேகத்தில், எதையோ தன்னிடம் சொல்ல விரும்பவில்லை என்பதை விளங்கிக்கொண்டான் விக்ரம். என்னவாக இருக்கும் என்று சிந்தனை உள்ளே ஓடினாலும்,
“பிரெண்ட்ஸ்க்குள்ள அப்பப்ப சண்டை வாறதும் பிறகு சேருறதும் நடக்கிறதுதான். அதையெல்லாம் பெருசா எடுக்கக் கூடாது.” என்றான் பொதுவாக.
“என்ர பிரெண்ட்ஸோட எனக்கு ஒரு சண்டையும் இல்ல”
“ஓ.. அப்ப.. பாப்ஸ், யாம்ஸ்ஸோட ஏதாவது கோபமா?”
அதற்கும் இல்லை.
“உன்ர பார்பியோட?” வேண்டுமென்றே அவன் கேட்க,
“பா..ப்ஸ்!” என்று இழுத்தவனுக்குச் சிரிப்புத்தான் வந்தது.
அவனுடைய குட்டி பார்ப்பியோடு அவனுக்கு என்ன சண்டை வர இருக்கிறது?
“பிறகு என்ன டெனிஷ். எதுக்காகவும் நீ இப்படி இருக்கக் கூடாது. ஓகே! எழும்பு! எழும்பு! எழும்பி உடுப்பை மாத்திட்டு விளையாடப்போ. எங்கட பவர்புல் டெனிஷ மட்டும்தான் நாங்க பாக்கோணும். ஓடு ஓடு!!” என்று அவன் தோளில் தட்டி உற்சாகம் கொடுக்க, அவனது முகம் சற்றே தெளிந்தது.
ஆனாலும், “நோ பாப்ஸ்! இண்டைக்கு நான் வீட்ட இருந்து கேம் விளையாடப் போறன்.” என்றான் அவன்.
மகன் மனதில் என்னவோ இருக்கிறது என்பது தெளிவானது விக்ரமுக்கு! ஆனால் கேட்டும் சொல்லாதவனை என்ன செய்ய முடியும்? எதையும் கட்டாயப்படுத்திச் செய்விப்பதில் அவனுக்கும் விருப்பமில்லை. மகனுக்கும் பிடிக்காது. எனவே பொறுத்துப் பார்க்கலாம் என்று எண்ணியவன், “நாளைக்குக் கேர்மஸ் இருக்கு. போவமா?” என்றான் அவனை உற்சாகப்படுத்தும் விதமாக.
அது கொஞ்சம் வேலை செய்தது. “ஓகே பாப்ஸ்!” என்றான் முகம் மலர.
அதன்பிறகே அங்கிருந்து வெளியே வந்தான் விக்ரம். அவன் மனதை என்ன வாட்டுகிறது என்கிற யோசனை உள்ளே ஓடிக்கொண்டே இருந்தது.
“என்னவாம் அப்பா தம்பி? இங்க கூட்டிக்கொண்டு வந்திருக்கலாமே.” இவன் வருகைக்காகவே காத்திருந்த யாமினி கேட்டாள்.
அவளுக்குக் கூப்பிட்டும் கதைக்காமல் போனானே என்று மனதில் உறுத்திக்கொண்டே இருந்தது. சற்றே கவலையும் கூட!
“இண்டைக்கு ஆளுக்கு என்னவோ மூட் சரியில்ல. அவ்வளவுதான். இனி நீ அங்கபோய் அவன என்ன என்ன எண்டு கேட்டு தூண்டித் துருவாத. அவனை அவன் பாட்டுக்கு விடு! சரியா?” என்றான் சற்றே அழுத்தமாக.
அவனை முறைத்தாலும் சரி என்றாள் யாமினி. வேறு வழி? அப்பாவும் மகனும் ஒருவரை ஒருவர் வென்றவர்கள் ஆயிற்றே!
அன்று மாலை மட்டும் ஆபீஸ் சென்றுவந்தான் விக்ரம். டெனிஷ் சந்தனாவை தன் அறைக்கு அழைத்துச் சென்று விளையாடினானே தவிர யாமினியிடம் தனியாக மாட்டவே இல்லை. அவளாக அவன் அறைக்குப் போகலாம் என்றாலோ விக்ரமின் முறைப்பு விரட்டிக்கொண்டு இருந்தது!
அன்று இரவு எல்லோரும் நல்ல உறக்கம். மெல்ல எழுந்த விக்ரம் யாமினியின் நெற்றியில் கையை வைத்துப் பார்த்தான். அதில் கண்ணை விழித்து அவள் பார்க்க, “படுக்கேல்லையா?” என்றான்.
“வேர்த்து வழியுது. நித்திரை வரேல்லப்பா..”
“ம்ம்.. காய்ச்சல் விட்டுட்டுது. அதான்.” என்றவன், அவள் எழுந்து அமரவும், துடைக்கத் துண்டு கொண்டுவந்து கொடுத்தான். அந்தளவுக்கு வியர்த்துக் கொட்டியிருந்தது அவளுக்கு.
டெனிஷின் அறைக்கும் சென்றான்.
சற்றே கதவை திறந்து பார்க்க, டெனிஷ் திரும்பி யார் என்று பார்த்தான்.
அவனும் முழிப்பு என்று கண்டதும் விக்ரமின் புருவங்கள் சுருங்கின. அதைவிட அவன் முகத்தில் நித்திரைக்கான சோம்பலே இல்லை. நேரம் பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. அந்தளவுக்கு என்னதான் அவன் மனதிலிருக்கிறது?
அவனருகில் செல்ல, தகப்பனையே விழியாகற்றாது பார்த்தான் மகன்.
“என்ன டெனிஷ்? என்ன பிரச்சனை? அப்பாட்ட சொல்லு!” என்றான் சற்றே அழுத்தி.
“அம்மாட்ட போகோணும் பாப்ஸ்..”
அலுங்காமல் குலுங்காமல் குண்டைத் தலையில் தூக்கிப் போட்டான் அவன்.
ஒருகணம் திகைத்து நின்றுவிட்டான் விக்ரம். ஆனால் மகனின் கண்களில் தாயின் அருகாமைக்கான ஏக்கத்தைக் கண்டதும் நெஞ்சில் கவலை அப்பிக்கொண்டது. என்ன சொல்லித் தேற்றுவான்?
திரும்பவும் படாத பாடுபட்டு ஓரு கூட்டைக் கட்டிவிட்டதாக அவன் நினைக்க, மகனின் மனதில் இப்படி ஒரு ஏக்கம் இருந்ததை உணராமல் போனோமே என்றாயிற்று அவனுக்கு.
மனதின் வேதனையை மறைத்து, “இந்த நேரத்துல எப்படிப்பா?” என்றவனுக்குக் காலையில் மட்டும் எப்படி முடியும் என்றிருந்தது.
“அம்மா வேணும்..” தகப்பனின் தவிப்பை உணராமல் அவன் அதையே சொல்ல, “சரி. நாளைக்குப் போவம். இப்ப ஒண்டையும் யோசிக்காம படு.” என்றான் சமாதானமாக.
“நோ பாப்ஸ்! இப்ப அம்மா வேணும்!”
இதென்ன புதுப் பிடிவாதம்? இப்ப எப்படி முடியும் என்று அவன் திகைக்கையிலேயே விருட்டென்று எழுந்து ஓடினான் டெனிஷ்.
“டெனிஷ் நில்லு!” என்று விக்ரம் பின்னால் வர, அவனோ அவர்களின் அறைக்குள் ஓடிப்போய், கட்டிலில் தாவி ஏறி யாமினியின் இடுப்பை கட்டிக்கொண்டு படுத்துக்கொண்டான்.
அதைக்கண்ட விக்ரமின் நடை வாசலிலேயே நின்றுபோனது! அவளிடமும் தன்னிடம் சொன்னதையே சொன்னால் தாங்க மாட்டாளே!