நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் 3 – 1

அசோக்கும் விக்ரமும் யாழ்ப்பாணம் வந்திருந்தனர்.

விக்ரம் இன்னோர் திருமணத்துக்குச் சம்மதம் சொல்லிவிட்டாலும் அவனை அங்கிருந்து கிளப்பிக்கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது அசோக்குக்கு.

“நீயும் நானும் இலங்கைக்குப் போனா யார் இதையெல்லாம் பாக்கிறது?” என்று வேலையைக் காரணம் காட்டியபோது, அதற்குப் பொறுப்பான ஆட்களை நியமித்து அவன் வாயை அடைத்தான்.

“டெனிஷ் வளந்திட்டான் மச்சான். இனிப்போய் இன்னொரு கல்யாணமா?” என்று தயங்கியபோது முறைத்துவிட்டு டெனிஷையே கூட்டி வந்து, “பாப்ஸ்! நீங்க கல்யாணம் கட்டுறதுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்? முதல் ஒரு கல்யாணத்தக் கட்டிக்கொண்டு வாங்கோ. உங்கட முகத்தையே பாத்து பாத்து போரடிக்குது!” என்று சொல்ல வைத்தான்.

“டேய்! என்னடா! போற போக்குல என்ர மகன என்னட்ட இருந்து பிரிச்சிடுவாய் போல. எனக்கெண்டு இருக்கிறது அவன் மட்டும் தான்டா.” என்றான் சிரித்துக்கொண்டு.

“நீ ஊருக்கு வராட்டி அதையும் செய்வன்!” என்று மிரட்டியே அழைத்து வந்திருந்தான் அசோக்.

வந்து ஒரு வாரமாயிற்று. விக்ரமுக்கு அங்கு யாருமில்லை. இருந்தாலும் தெரிய வாய்ப்பும் இல்லை. பெற்றவர்களோடு சிறு வயதிலேயே ஜேர்மன் வந்துவிட்டவனுக்குச் சொந்த பந்தங்களை நினைவும் இல்லை. எனவே அசோக்கின் தாயும் உறவுகளும்தான் பெண் பார்த்தனர்.

“யாரையாவது பாத்து வச்சிட்டுக் கூப்பிட்டு இருக்கலாமேடா. சும்மா நாள் போகுது.” என்று அதற்கும் சலித்தான் அவன்.

“ஏன் பிள்ளையையும் பெத்துப்போட்டுக் கூப்பிடுறன். அதுக்குப் பிறகு வாவன்!” என்று முறைத்துவிட்டுப் போனான் அவன்.

கல்யாணமாகாத இளம் பெண்களை இவனுக்கு மனமில்லை. வயது முப்பத்தியிரண்டு. ஒன்பது வயதாகப்போகும் மகன் வேறு. கணவனை இழந்த பெண்கள் பரவாயில்லை என்று பார்க்கச் சொன்னான்.

அப்படியானவர்களை அசோக்குக்குப் பிடிக்கவில்லை. கம்பீரமும் களையும் நிறமுமாகத் தோற்றமளிக்கும் நண்பனுக்குத் திருமணமான பெண் பொருத்தமாகவே படவில்லை.

“டேய் கல்யாணம் உனக்காடா? அவனுக்குத்தானே. அவன் சம்மதிச்சாலும் நீ விடமாட்டாய் போல.” என்று சொல்லியும் பார்த்தார் அவன் அன்னை மரகதம்.

“நாங்க வருசக்கணக்கில வெளிநாட்டுல குளிருக்க இருந்த ஆட்கள் மச்சி. கலராத்தான் தெரிவம். இங்க இருக்கிறதுகள் வெயிலுக்கக் காய்ஞ்சு கருவாடாப்போய் இருக்கிறதுகள். அங்க வந்து ஆறு மாதமானா எங்களைவிட நிறமா வந்துடுவினம். இல்லாட்டியும் பிரச்சனை இல்ல மச்சான். யாரையாவது பார். அழகெல்லாம் முக்கியமில்ல.” என்று விக்ரமும் சொல்லிப் பார்த்தான்.

அவனுக்கு அசோக்கின் தொல்லைக்கு யாரையாவது கட்டிக்கொண்டால் போதும் என்றிருந்தது. புது மாப்பிள்ளைக்குக் கூட இப்படித் தேடமாட்டார்கள். அந்தளவுக்கு ஊருக்குள் பெண்களைச் சலித்துக்கொண்டிருந்தான் அசோக்.

விக்ரமோ யாரைப் பார்த்தாலும் அங்கே யாஸ்மினின் முகத்தைத் தேடி மனம் சோர்ந்தான்.

அது தவறு என்று தெரியாமல் இல்லை! மனம் தானாக அவளைத் தேடினால் அவன் என்ன செய்வான்?

‘மறக்கோணும்! அவள மறக்கடிக்கிற மாதிரி ஒருத்தி கிடைக்கோணும்.’

ஆனால் நம்பிக்கையில்லை!

அந்தளவு தூரத்துக்கு யாஸ்மின் அவனுக்குள் ஊனும் உயிருமாக ஊடுரூவியிருந்தாள். இன்னொருவனுக்கு மனைவியாகி ஒரு குழந்தைக்கு அன்னையானவளின் நினைவுகளைத் தனக்குள் இருந்து பிடுங்கி எறியத்தான் அவனும் விரும்புகிறான். நடந்தால் அல்லவோ!

‘இந்தளவு தூரத்துக்கு நானும் அவளை நேசிச்சிருக்கக் கூடாதோ.’ என்றும் சில நேரங்களில் தோன்றும்.

இன்றும் நேசிக்கிறானா என்று கேட்டால் நிச்சயமாக இல்லைதான்! ஆனால், உருகி உருகிக் காதலித்த அன்றைய நாட்கள் நினைவில் நின்று, உயிரைக் குடையும் வலியைக் கொடுத்தன!

அவள் உண்டாக்கிவிட்ட காயமும் ஆறாமல் கிடந்தது.

மீண்டும் சொல்லிக்கொண்டான். “மறக்கோணும்! அவள மறக்கிற மாதிரி ஒருத்தி கிடைக்கோணும்!”

இதற்குமேலும் இப்படியே இருந்தால் இன்னுமின்னும் அவளைப் பற்றித்தான் நினைப்போம் என்று எண்ணி, “வாடா, கசூரினா பீச்சுக்குப் போவோம்.” என்று அசோக்கை அழைத்தான்.

இருவருமாகத் தயாராகிக் காரில் ஏறிக் கார் புறப்பட்டதும் விக்ரமின் பார்வை தானாகக் காருக்குப் பின்னால் பார்த்தது. அந்தக் குட்டிப்பெண் அவனை ஏமாற்றவில்லை.

இரண்டு அல்லது இரண்டரை வயதுதான் இருக்கும். இவர்களின் காரைத் துரத்திப் பிடிக்கிறவள் போல் குட்டிப் பாதங்களைக் குடுகுடு என்று வைத்துக் காரைத் துரத்திக்கொண்டு வந்தாள். முகத்தில் அரும்பிய புன்னகையோடு அவளையே பார்த்தான் விக்ரம்.

ஏனோ சாராவை நினைவூட்டினாள் அவள்.

அந்த வெயிலுக்கு இதமாக மேலே கையில்லா லேஸ் வைத்த ஒரு குட்டிச் சட்டை வயிறு வரை நின்றது. கீழே பாவாடையோ ஜீன்ஸோ எதுவுமில்லை. குட்டியாக ஒரு நிக்கர். அதுவும் கால்களில் லேஸ் வைத்தது. அவ்வளவுதான். அந்தப் பூப் பாதங்களில் மட்டும் அகன்ற காற்சலங்கை. நெற்றியில் பெரிய கறுப்புப் பொட்டு. கன்னத்திலும் குட்டியாகத் திருஷ்டிப் பொட்டு. கொளுத்தும் வெயிலிலிருந்து தப்பிக்க முடியை ஆண் குழந்தைகளைப் போன்று நல்ல குட்டையாக வெட்டி இருந்தாள்.

அவள் வெறுங் கால்களுடன் இவர்களைத் துரத்த, ‘ஐயோ செல்லத்துக்குக் கால்ல கல்லுக் குத்தப் போகுதே’ என்று விக்ரமின் மனம் தானாகத் துடிக்கும்போதே, அவளின் அன்னை ஓடிவந்து அவளைத் தூக்கிக்கொண்டாள்.

இது, அவன் வந்த முதல் நாளிலிருந்து நடக்கும் அழகிய காட்சி. முதல் நாள் அவள் ஓடி வரவும் எதேற்சையாகக் காரின் பின் கண்ணாடியால் பார்த்தவன், ஏன் இப்படி ஓடி வருகிறாள் என்று பார்த்தான். அடுத்தநாள் ஓடி வந்தபோது சின்னப் புன்னகையோடு அவளை ரசித்தான். அதற்கு அடுத்தநாள் காரை எடுத்ததுமே அந்தக் குட்டி வருகிறாளா என்று எதிர்பார்ப்புடன் இவன் தானாகவே திரும்பிப் பார்த்தான். அவளும் ஏமாற்றாமல் வந்தாள். இங்கே ஒரு காதை வைத்துக்கொண்டே இருப்பாள் போலும். கார் ஸ்டார்ட் செய்த சத்தம் கேட்டதுமே அவள் தத்தக்கா பித்தக்கா என்று ஓடிவரும் காட்சியைக் காணலாம்.

‘ஒரு நாளைக்கு அந்தக் குட்டியை ஏத்திக்கொண்டு ஒரு ரவுண்ட் வரோணும்.’ மனதில் முடிவெடுத்தான்.

“யாரடா அது?”

திடீரென்று விக்ரம் கேட்கவும், முன் பக்கம் விழிகளைச் சுழற்றிவிட்டு “யாரைக் கேக்கிறாய்?” என்று கேட்டான் அசோக்.

பின் பக்கம் கையால் காட்டினான் விக்ரம். திரும்பிப் பார்த்தான் அசோக். அவள் அவர்களின் பக்கத்து வீட்டுக் கேட்டைத் திறந்து போவது தெரியவும் முகத்தைச் சுளித்தான்.

“எங்கட ஊர்தான். நல்ல குடும்பத்துப் பிள்ளைதான். முந்தி எங்களுக்கு நல்ல பழக்கம். இப்ப யாரும் அதோட கதைக்கிறேல்ல.”

“ஏனடா?” அவனுக்கு அந்தக் குழந்தை பாவமே என்றிருந்தது.

“தெரியேல்ல மச்சான். அடிபாட்டுல அதுன்ர மொத்தக் குடும்பமும் போய்ச் சேந்திட்டினம். இது பிள்ளையோட வந்து நிக்குது. என்ன, எப்படி ஒண்டும் தெரியாது. புருசன் எங்க எண்டு கேட்டா செத்திட்டார் எண்டு மட்டும் சொல்லுமாம். அதுக்கு மேல அதைப் பற்றி ஒண்டும் சொல்லாதாம். மனுசன் செத்த பிள்ள மாதிரி இல்ல அதைப் பாக்க. அதால பெருசா யாரும் கதைக்கிறேல்ல. ஊரும் அந்தப் பிள்ளைய ஒண்டுக்கும் சேர்க்கிறேல்ல. அதுவும் சேராது.” என்றான்.

விக்ரமுக்கு ஏனோ அது நியாயமாகப் படவில்லை. அவள் வாழ்வில் நடந்த எல்லாவற்றையும் கடை பரப்பினால் மட்டும்தான் ஊர் அவளைச் சேர்க்குமா? சொல்லாவிட்டால் அவள் பிழையானவளா? இது என்னவிதமான கொள்கை? எவ்வளவுதான் முன்னேறினாலும் இப்படி அர்த்தமற்ற குணங்கள் மட்டும் நம்மவர்களிடமிருந்து மாறாது போல.

அன்று மாலை திரும்பி வரும்போது அந்த வீட்டைக் கடக்கையில் தன் பாட்டுக்குப் பார்வை அங்கே சென்றது. தகப்பனில்லாக் குழந்தை என்பது வேறு மனதில் நின்று வாட்டியது!

அவர்களின் வீட்டு வாசல் படியில் அமர்ந்திருந்தாள் அந்தப் பெண். குழந்தையோ தாயின் மடியில் வாகாக அமர்ந்துகொண்டு கால்கள் இரண்டையும் வெளியே தொங்கப் போட்டிருந்தாள். மகளைத் தன்னோடு அணைத்துப் பிடித்திருந்த கையில் குட்டிக் கிண்ணம் ஒன்றிருக்க, மறு கையால் அதிலிருந்து உணவை எடுத்துக் குழந்தைக்கு ஊட்டிக்கொண்டிருந்தாள் அவள்.

இவள் வேண்டமாட்டேன் என்று மறுக்க மறுக்க அன்னை ஊட்டுகிறாள் என்பதற்குச் சான்றாக, அவளின் வாய் மட்டுமல்ல கன்னங்கள் முழுவதுமே உணவு அப்பிக் கிடந்தது.

‘பெரிய சுட்டிதான்!!’ இதழ்களில் புன்னகை அரும்ப நினைத்துக்கொண்டான்.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock