நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் 27 – 1

கேர்மஸுக்கு மனைவி பிள்ளைகளோடு வந்திருந்தான் விக்ரம். கார் பார்க்கிங் சற்றே தூரத்தில் என்பதால், கேர்மஸ் வாசலில் காரை அவன் நிறுத்த யாமினியும் டெனிஷும் இறங்கிக்கொண்டனர்.

“சந்து, அம்மாட்ட வாங்கோ.” என்றபடி யாமினி தூக்கப் போக, அவளோ, “ம்ஹூம்..!” என்று மறுத்தாள்.

“அப்பா கார பார்க் செய்திட்டு வரட்டும். நீங்க வாங்கோ.” என்று இவள் சொல்லியும் அவள் மறுத்தாள்.

“இறங்கு சந்து! சும்மா சும்மா எல்லாத்துக்கும் அடம் பிடிக்கிறேல்ல!” என்றாள் அதட்டலாக.

அவள் உதடு பிதுக்கத் தொடங்கவும், அப்போதுதான் மலர்ந்துவிட்ட சின்ன மொட்டைப் போன்று அழகாக உடையுடுத்தி அமர்ந்திருந்த பெண்ணின் முகம் சிணுங்குவது தாங்காமல், “நீ விடு! நான் கூட்டிக்கொண்டு வாறன்.” என்றான் விக்ரம்.

அவனை நன்றாக முறைத்தாள் யாமினி. எத்தனையோ தடவை சொல்லிவிட்டாள், அவள் அதட்டும்போது தலையிடாதீர்கள் என்று. அப்போதெல்லாம் தலையைத் தலையை ஆட்டிவிட்டுப் பார்ப்பதெல்லாம் இதே வேலைதான்.

அவனோ பட்டென்று கண்ணடித்தான்.

ஒருகணம் திகைத்துவிட்டு, “அப்பா!” என்று அதட்டியவளுக்கோ சிரிப்புத்தான் பொத்துக்கொண்டு வந்தது. பிள்ளைகளை வைத்துக்கொண்டு செய்கிற வேலையா இது?

“நீ உன்ர அப்பாவோடையே வா!” என்றுவிட்டு கதவை அவள் மூட, காரை எடுத்தான் விக்ரம்.

கண்ணாடி வழியே பின்னால் பார்க்க, காரையே பார்த்தபடி நின்றிருந்தாள் யாமினி. அவள் முகத்தில் கணவனின் சேட்டைகளை ரசிக்கும் புன்னகை அரும்பிக் கிடந்தது. அதைக் கண்டு அவன் உதடுகளிலும் அழகான புன்சிரிப்பு அரும்பிற்று!

அவளும் அவளின் வெட்கங்களும், அந்த வெட்கம் காட்டும் போலிக் கோபமும், சின்னச் சீறல்களும் என்று அவளின் ஒவ்வொரு செய்கைகளும் அவள் மீதான ஆசையை அவனுக்குள் கிளறிவிட்டுக் கொண்டே இருந்தது!

வீதியையே பார்த்துக்கொண்டு நின்ற தாயை, “வாங்கம்மா நாங்க உள்ளுக்குப் போவம்.” என்று பரபரப்புத் தாங்காமல் இழுத்தான் டெனிஷ் .

“பொறு கண்ணா, அப்பாவும் தங்கச்சியும் வரட்டும்.” உள்ளே போனால் தவறிவிடுவோமோ என்கிற பயம் அவளுக்கு. அந்தளவுக்கு மக்கள் நிரம்பி வழிந்தனர்.

அதிக வெயில் என்றுமல்லாது குளிருமல்லாது அன்று காலநிலையும் நன்றாக அமைந்துவிட்டதில் மக்கள் வந்துகொண்டே இருந்தனர். வாரம் முழுவதும் வேலை வேலை என்று ஓடுவதால் வார இறுதிகளை மிகவுமே ஆவலோடு எதிர்பார்ப்பர். அந்த நாட்களில் காலநிலையும் நன்றாக அமைந்து இப்படி ஏதாவது ஒன்றும் வருமாக இருந்தால் வெளிநாட்டவர் அதனைத் தவற விடுவதே இல்லை.

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் கதைதான்!

எங்க இன்னும் காணேல்ல?

கணவனின் கார் சென்ற பக்கம் பார்க்க, அங்கே வந்துகொண்டிருந்தனர் அப்பாவும் மகளும்.

நீலக்கலர் ஷார்ட்ஸ்க்கு வெள்ளையில் நீலப் பூக்கள் பூத்த குட்டி சட்டை போட்டிருந்தாள் சந்தனா. தலைக்கு வெள்ளை நிறத்தில் வட்டத் தொப்பி. கண்களில் இரண்டு செர்ரிப் பழங்கள் கொண்ட கூலிங்கிளாஸ். குட்டி ஹாண்ட்பாக்கினை தோளில் குறுக்காக அணிந்து தகப்பனின் கையைப் பற்றிக்கொண்டு, பூப்பாதங்களை ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்து நடந்துவந்த அழகில் சொக்கியே போனாள் யாமினி.

அதைவிட, ஒரு டெனிம் ஷார்ட்ஸ்க்கு இலகுவான டீ-ஷர்ட் அணிந்து, கண்களில் கூலர், வலக்கையில் அகன்ற முகம் கொண்ட கருப்பு பார் மணிக்கூடு கட்டி, இடக்கையில் தன் செல்லப்பெண்ணைப் பிடித்தபடி வந்தவனிடமிருந்து யாமினியால் விழிகளை அகற்றவே முடியவில்லை.

முகத்தில் இளம் புன்னகை மலர்ந்திருக்க, காற்று வந்து கலைத்த கேசத்தைக் கண்டுகொள்ளாமல், கையை நீட்டி எதையோ காட்டி பெண்ணிடம் சொல்லிக்கொண்டு நிமிர்ந்தவன், மனைவியின் விழிகளைச் சந்தித்ததும் கூலருக்கு மேலால் ஒற்றைப் புருவத்தை மட்டுமே உயர்த்தினான். உதட்டோரம் அவளைக் கண்டுகொண்ட சிரிப்பில் துடிக்கவும், முகம் சூடாகிப் போனது யாமினிக்கு. சட்டென்று பார்வையைத் திருப்பிக்கொண்டவளாலும் உதட்டோரச் சிரிப்பை அடக்க முடியவில்லை.

முதல்நாள் அவள் கொடுத்துவிட்ட சம்மதத்திலிருந்து கண்ணாலேயே அவளைச் சீண்டிச் சிவக்க வைத்துக்கொண்டிருந்தான் அவன். பிள்ளைகளின் முன்னால் கண்களால் சேட்டை என்றால் தனிமையில் மாட்டினாலோ அவனின் அட்டகாசங்களுக்கு அளவே இல்லாமல் போனது! அவசர முத்தங்களும் வேக அணைப்புக்களும், சிற்றிடை சீண்டல்களும் என்று அவளைப் படாத பாடு படுத்திக்கொண்டிருந்தான்!

அவையெல்லாம் இன்றைய நாளில் நடக்கப்போகும் இனிய சங்கமத்துக்கான ஒத்திகையாக மாறிப்போனதில் இன்பத் தவிப்பில் தள்ளாடிக் கொண்டிருந்தாள் யாமினி!

அவர்களை நெருங்கியதும், கண்ணால் சிரித்து, அவளின் கரம் பற்றி, “வா..!” என்று அவன் அழைக்க, அந்தச் சின்னச் சீண்டல் அவளின் உயிர்வரை சென்று தாக்கியது. அந்தக் கணமே அவன் கையணைப்புக்குள் அடங்கிவிட மாட்டோமா என்று அவளின் உணர்வுகள் பேரலையெனப் பொங்கிக்கொண்டு வரவும், மிரண்டுபோய்ச் சட்டென்று தன் விரல்களை மீட்டுக்கொண்டாள் யாமினி.

அவன் சாதாரணமாகப் பற்றினால் கூட அவளால் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாத நிலை. இன்பக் கனவுகளும் இனிய கற்பனைகளும் சுற்றிச் சுற்றி வந்து அவளைச் சுழற்றி அடித்துக்கொண்டிருந்தது!

திரும்பி மனைவியைப் பார்த்தான் விக்ரம். யாமினியால் முகத்தை நிமிர்த்தவே முடியவில்லை. வெட்கமின்றி அவளுக்குள் ஓடும் கற்பனைகளைக் கண்கள் வழி கண்டுகொள்வானோ என்று படபடத்துப் போனாள்.

மனைவியின் நிலையை முற்றாக உணர்ந்துகொண்டவனின் முகத்தில் உல்லாசப் புன்னகை அரும்பிற்று! “அதெல்லாம் இரவுக்கு!” என்றான் அவளின் செவியோரம். குரலோ அவளைச் சீண்டிச் சிரித்தது!

‘அச்சோ..!’ என்றானது அவளுக்கு. அன்றைய இரவு வருவதற்குள் இரவுக்கு இரவுக்கு என்று சொல்லிச் சொல்லியே அவளை ஒருவழியாக்கிக்கொண்டிருந்தான் அவன். இதுக்கு அந்த விரல்களை அவனிடமே விட்டு வைத்திருக்கலாம்.

ஒன்றுமே நடவாதது போன்று தன்னைச் சாதாரணமாகக் காட்ட முயன்றபடி யாமினி நடக்க, நால்வருமாகக் கேர்மஸுக்குள் நுழைந்தனர். அங்கிருந்த பெரிய சறுக்கி, ஒரு கூரையின் கீழே சுழன்றுகொண்டிருந்த ஊஞ்சல்கள், அழகான தோட்டத்தில் சுற்றிச் சுற்றி ஓடிய குட்டிக்குட்டி கார்கள், காடுகளுக்குள் நுழைந்து நுழைந்து வந்த ட்ரெயின் என்று எல்லாவற்றையும் கண்டுவிட்டு, அதற்குள் ஓடிவிடத் துடித்தாள் சந்தனா.

“சந்து நில்லு!” என்று யாமினி அதட்டுவதற்குள் மகளை எட்டிப் பிடித்து ஒரே தூக்கலாகத் தூக்கிக்கொண்டான் விக்ரம்.

“செல்லம்மா ஓடுறேல்ல.”

அவளோ இப்போது தகப்பனின் சொல்லையும் கேட்காமல் இறக்கிவிடச் சொல்லி அழத்தொடங்கினாள்.

அவன் கைகளில் இருந்து நழுவி இறங்கிவிடத் துடித்த மகளைக் கண்டுவிட்டு, “எல்லாத்துக்கும் காரணம் நீங்க குடுக்கிற செல்லம். இப்ப பாருங்கோ சொல்வழி கேக்கிறாளே இல்ல!” என்று யாமினி கணவனைக் கடிந்தாள்.

“பாத்தியா! உன்னால அப்பாக்கு பேச்சு விழுகுது.” என்றான் அப்போதும் மகளிடம் கொஞ்சியபடி.

அவளோ இறக்கிவிடச்சொல்லி சிணுங்கிக்கொண்டே இருந்தாள்.

“கேளுடா தம்பி! அவளை அதட்டுவம் எண்டில்ல. அவளால தனக்குப் பேச்சு விழுகுதாம்.” என்று தன் கையைப் பிடித்துக்கொண்டு கூடவே வந்த மகனிடம் முறையிட்டாள் யாமினி.

தகப்பன் தாயின் பிடுங்குப்பாடில் அவனுக்கு ஒரே சிரிப்பு. “பாப்ஸ், இறக்கிவிடுங்கோ. நான் பாக்கிறன்.” என்றான் அந்தப் பெரியமனிதன்.

வெயிலுக்கு இதமாக ஷார்ட்ஸ் அணிந்து கையில்லாத டீ ஷர்ட் தொப்பிச் சகிதம் நின்ற மகனின் பொறுப்பில் உருகிப்போனாள் யாமினி.

“விடு கண்ணா! அவர்தானே செல்லம் குடுத்து கெடுக்கிறவர். அவரே பாக்கட்டும்!” என்று இவள் சொல்ல,

“பார்பியும் பாவம் தானேம்மா. நான் அவவை பாப்பன்.” என்றான் அவன்.

அவனது பார்பியும் அண்ணனிடம் போக நிற்க இறக்கிவிட்டான் விக்ரம்.

அவளோ எங்காவது ஓடுவதிலேயே குறியாக இருந்தாள். அத்தனை பரபரப்பு. எல்லாவற்றுக்குள்ளும் புகுந்துவிட ஆசை. அவள் ஓட, “ஹேய் பார்பி! நில்லு!” என்றபடி பின்னால் ஓடிப்போய்ப் பிடித்தான் டெனிஷ்.

அவனைச் சுற்றிவிட்டு ஓடுவதிலேயே அவள் குறியாக இருக்க இவனோ அவளைப் பிடிப்பதிலேயே குறியாக இருந்தான்.

கடைசியாக, “அண்ணான்ட கைய பிடிச்சுக்கொண்டு வா பார்பி!” என்று அவன் கொஞ்சம் அதட்ட, அந்தச் சிட்டும் முகத்தை ஒருமுறை சுருக்கிட்டு தமையனின் கையைப் பிடித்துக்கொண்டு நல்லபிள்ளையாக நடந்தாள்.

கணவனும் மனைவியும் ஆச்சரியமாகப் பார்வை பரிமாறிக்கொண்டனர்.

“பார்பி! அங்க பார் பலூன்..” என்று அவன் காட்டி என்னவோ சொல்லிக்கொண்டு நடக்க அவளும் என்னவோ அவனோடு கதைத்துக்கொண்டு ஓடாமல் நடக்கப் பார்த்திருந்த பெற்றவர்களுக்குச் சிரிப்புத்தான் வந்தது. தாங்கள் இருவருமே சொல்லிக்கூடக் கேட்காதவள் அண்ணனின் கையைப் பற்றி நடக்கிறாளே!

டெனிஷ் ஓடிவந்து, “அம்மா! நானும் நீங்களும் அதுல போவமா?” என்று, அங்கு மிக வேகமாகச் சுழன்றுகொண்டிருந்த இராட்சத ராட்டினத்தைக் காட்டிக் கேட்கவும் மிரண்டே போனாள் யாமினி.

“அம்மாடி நான் மாட்டன்! நீயும் போகாத!” என்றாள் நடுங்கிப்போய்.

“பாத்தியா உன்ர அம்மாக்கு இருக்கிற பயத்த!” என்று விக்ரம் கேலியில் இறங்க, “அப்ப நீங்க போறது!” என்றாள் அவள் சவாலாக.

“போகத்தான் போறம். என்ன டெனிஷ், போவமா?” என்றான் விக்ரம்.

“யா பாப்ஸ்!” என்று துள்ளினான் சின்னவன்.

“உண்மையாவே போகப் போறீங்களா?” கேட்டுக்கொண்டே பார்த்தவள், அதில் சுழன்றவர்களின் கூச்சலிலும் சிரிப்பிலும் பயந்து நடுங்கியே போனாள்.

அதைக் கீழிருந்து பார்க்கவே நடுங்கி, நாலாபக்கமும் பார்வையைச் சுழற்றினாள்.

எங்கிருந்தோ இசைக்கச்சேரி காதை நிறைக்க, ஒருசிலர் ஜெர்மனிய பாரம்பரிய உடைகளுடன் காட்சி தர, ஆங்காங்கே அந்தக் காலத்து கதைகளை விளக்கும் முகமாக உருவ பொம்மைகள் வைக்கப் பட்டிருக்க, பலவிதமான விளையாட்டுக்கள் மக்களை உற்சாகப்படுத்தும் விதமாக அமைக்கப் பட்டிருக்க, ஐஸ்கிரீமை ஆசையாசையாக ருசிபார்க்கும் குழந்தைகள், ஜெர்மனிய உணவுகளை ஒரு கைபார்க்கும் மனிதர்கள், கைகளில் பியர் கிளாசுகளும் சாம்பியனுமாக ஆண் பெண் பேதமின்றிப் பேசி, அழகாகச் சிரித்துத் தம் மகிழ்ச்சியை வெளிக்காட்டி மகிழ்ந்தவர்கள் என்று பார்க்கையில் அவள் மனதிலும் தானாகவே உற்சாகம் தொற்றிக்கொண்டது!

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock