அதுவும், நாயை கூடக் கூட்டிக்கொண்டு உலா வந்தவர்கள், அங்கவீனர்களை வண்டியில் அமர்த்திக் கூட்டி வந்தவர்கள் என்று எல்லோருமே இருந்தனர்.
அதிலும் வயோதிபர்கள் மிக மிக அழகாக ஆடைகளை அணிந்துகொண்டு கணவனும் மனைவியுமாகக் கை கோர்த்து நடந்து செல்வதைப் பார்த்தபோது அவளால் அவர்களிடமிருந்து பார்வையை அகற்றவே முடியவில்லை. நம் தேசத்தில் இப்படி ஒரு காட்சியைக் கண்டுவிட முடியுமா என்ன?
அத்தனை அழகாக, நம் மனதை அப்படியே ஈர்ப்பவர்களாக, உண்மையைச் சொல்லப்போனால் இளையவர்களைக் காட்டிலும் முதியவர்கள் மிக அழகாக நேர்த்தியாக உடை அணிந்து வந்திருந்தனர். அதுவும் அவர்களின் கோர்த்திருந்த கைகளும் தங்களுக்குள் எதையோ கதைத்துப் பேசிக்கொண்டு மெதுவாக நடந்து செல்லும் அழகும்.. ஒருசில தம்பதியர் கையில் மது கிளாஸுடன் அங்கே ஒலித்துக்கொண்டிருந்த பாடலின் இசைக்கு ஏற்ப ஆடிய மெல்லிய நடனமும் என்று.. யாமினியின் விரல்கள் தானாக விக்ரமின் விரல்களைத் தேடிக் கோர்த்துக்கொண்டன!
ஆச்சரியப்பட்டுப் போனான் விக்ரம். பொதுவெளியில் அவனை நெருங்கி நடக்கவே வெட்குவாள். அதுவும் பிள்ளைகள் அருகில் இருந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். இப்போதோ கையோடு கை உரச, கரத்தோடு கரத்தை கோர்த்துக்கொள்கிறாளே!
“நாங்களும் கடைசிவரைக்கும் அவைய மாதிரியே வாழவேணும் அப்பா!” என்றாள் கனவுகளைச் சுமந்த விழிகளோடு.
அந்த விழிகளில் சொட்டிய நேசத்தில், அது பறைசாற்றிய அன்பில் ஒருகணம் தொலைந்துபோனான் விக்ரம்!
கோர்த்திருந்த விரல்களைப் பாசத்தோடு அழுத்திவிட்டு, “அவே மாதிரி என்ன.. அவைய விட ஆயிரம் மடங்கு சந்தோசமா நாங்க வாழுவோம்! அதுக்கு நான் பொறுப்பு!” என்றான் நேசத்தோடு.
“ப்பா.. அங்க.. போவம்..” என்று ஒரு தோட்டத்துக்குள் ஓடிக்கொண்டிருந்த கார்களைக் காட்டியபடி ஓடிவந்தாள் சந்தனா.
“செல்லத்துக்குக் கார் ஓடோணுமா?” என்று கேட்டு பிள்ளைகளை அழைத்துப்போய் ஏற்றிவிட்டான் விக்ரம்.
அண்ணனையும் தங்கையையும் ஒரு காரில் ஏற்றி விட்டதும் அவர்களின் சந்தோஷத்துக்கு அளவே இல்லை. ஒரு ரவுண்ட் போய் வந்து கார்கள் நின்றதும் இருவருமே இறங்க மறுக்க, சிரிப்புடன் போய் மீண்டும் சிப் வாங்கிவந்து போட்டுவிட்டான்.
கார்கள் மீண்டும் புறப்பட்டதும், “இப்போதைக்கு ரெண்டுபேரும் இறங்க மாட்டீனம்.” என்றான் விக்ரம் சிரித்துக்கொண்டு.
“அதுவும் உங்கட மகள இங்க இருந்து கூட்டிக்கொண்டு போறதுக்குள்ள படாத பாடுபடப் போறீங்க, பாருங்க.” என்றாள் யாமினி. செல்லம் கொடுத்தாய்தானே பட்டுப்பார் என்றது அவளின் குறும்பு மின்னிய விழிகள்.
சிரிக்கும் அந்தக் கண்களையும் அது சொன்ன செய்தியையும் சிறிதுநேரம் ரசித்து உள்வாங்கிவிட்டு, “இதுக்கெல்லாம் பயந்தா முடியுமா? இன்னும் எவ்வளவோ இருக்கே. அதுக்கெல்லாம் ட்ரைனிங் வேண்டாமா?” என்றான் அவன்.
சட்டென்று சூடாக்கிச் சிவந்துபோனாள் யாமினி. ‘கடவுளே.. இவரின்ர குணம் தெரிஞ்சும் வாயக் குடுத்த என்னை என்ன செய்ய’ விழிகளை அவன் புறம் திருப்பவே முடியவில்லை அவளால்.
“நான் இப்ப எடுக்கிறது ட்ரைனிங்.” என்று வேறு அவள் புறமாகக் குனிந்து அவன் சொல்ல, “அப்பா!” என்று ஒரு அடியை அவன் கையில் போட்டே விட்டாள் யாமினி.
அதற்கிடையில் பிள்ளைகள் அடுத்த ரவுண்ட்டும் போய்வந்துவிட அவர்கள் எதிர்பார்த்ததுபோலவே இன்னொரு சிப் போடும்படி நிற்கவும் போட்டுவிட்டான் விக்ரம்.
பிள்ளைகள் மீண்டும் புறப்பட்டதும், “சாப்பிட ஏதாவது வாங்கித் தரட்டா?” என்றான் அவளிடம்.
“பிறகு எல்லாருமா சாப்பிடுவம். இப்ப..” என்று அவள் விழிகளைச் சுழற்ற, “பொறு வாறன்” என்றுவிட்டு போய் ஒரு சுருள் போன்று ஒன்றை வாங்கிவந்தான்.
அதனைப் பிரித்துக் கச்சான் போன்றிருந்ததை எடுத்துக் கொடுத்தான். “சாப்பிட்டுப்பார்!”
எடுத்து வாயில் போட்டவளின் விழிகள், அதன் சுவையில் அகன்றது. “நல்லாருக்கப்பா.. கச்சானா?”
“ஓம்! ஆனா, பாத்தியா எவ்வளவு டேஸ்ட் எண்டு.. சீனி, கராம்பு, கறுவா எல்லாம் போட்டு வித்தியாசமா செய்றது..” என்று இருவருமாக உண்டனர்.
ஒருவழியாகப் பிள்ளைகளை அங்கிருந்து கூட்டிக்கொண்டு போனால், ட்ரெயினைக் கண்டுவிட்டு அதிலும் ஏறினர். அதன் பிறகு சறுக்கி, ஊஞ்சல் என்று குழந்தைகள் ஆசைப்பட்டது எல்லாவற்றிலும் ஏற்றி இறக்கினான் விக்ரம். டெனிஷ் ஆசைப்பட்டது போன்று, மகளை மனைவியோடு விட்டுவிட்டு அந்த இராட்சத ராட்டினத்திலும் மகனோடு ஏறினான்.
“அப்பா கவனம். தம்பிய பிடிச்சுக்கொள்ளுங்கோ.. நீங்களும் கவனம். தம்பி அப்பாவை விட்டுடாத.” என்று இவள் படபடக்க, “யாம்ஸ்! ஒரு பயமும் இல்ல. முதல் நீ சும்மா இரு!” என்றுவிட்டுச் சென்றான் விக்ரம்.
இவளோ அது சுழலச் சுழல வேண்டாத தெய்வமில்லை. அவர்கள் இருவரும் இறங்கி வந்த பின்னரே.. அதுவும் சிரித்துக்கொண்டு வந்தவர்களைக் கண்ட பின்னரே அவளுக்கு உயிரே வந்தது.
குடும்பமாகச் செல்லக் கூடியவற்றுக்கும் சென்று வந்தார்கள். இருளும் கவியத் தொடங்க, பிள்ளைகளும் ஓடியாடி விளையாடி என்று களைத்தே போயினர். பசியும் எடுக்க, அங்கேயே ஆளாளுக்குப் பிடித்ததை வாங்கிக்கொண்டு ஒரு மேசையில் அமர்ந்து உண்டனர்.
“உங்களுக்கு ஒரு கஃபே வாங்குங்கோ அப்பா..” உணவு முடியும் தறுவாயில் கணவனின் தேவை அறிந்தவளாகச் சொன்னாள் யாமினி.
“பிள்ளையளுக்கு ஆளுக்கொரு ‘காப்ரி சொன’.”
“உனக்கு?” என்றான் விக்ரம்.
“ஏதாவது ஒரு ஜூஸ்.” என்று சொல்ல, வாங்கிக்கொண்டு வந்தான்.
அவரவருக்கானதை கொடுத்துவிட்டு தன் கஃபேயை சில மிடறு அருந்தியவன், “இத குடிச்சுப் பார் யாமினி. ஐஸ்கஃபே நல்லாருக்கு.” என்றான் அவளிடம்.
“உங்களுக்கு எந்த நேரம் எண்டில்லாம கஃபே வேணுமெண்டா என்னையும் குடிக்கச் சொல்லுவீங்களா?” சின்னச் சிரிப்போடு அவள் கேட்க,
“ஒருக்கா டேஸ்ட் பண்ணித்தான் பாரேன்.” என்று அவன் வலியுறுத்த, அவனுக்காக வாங்கி ஒருவாய் அருந்தினாள் யாமினி.
கிட்டத்தட்ட மில்க் ஷேக் போன்று தொண்டைக்குள் சில்லிட்டுக்கொண்டு இறங்கியது அந்தக் கஃபே. சூடு இல்லை. அருமையான சுவையில் நாவை நனைக்கவும், “சூப்பரா இருக்கேப்பா.” என்றாள் அதன் சுவையில் சொக்கி.
“இதுக்குத்தான் குடிச்சுப்பார் எண்டானான். கஃபே மாதிரியே இல்லதானே.”
“ஓமப்பா என்ன..” என்று இன்னோர் வாய் பருகினாள் யாமினி.
அவள் ரசித்துக் குடிப்பதை கண்டுவிட்டு, “இன்னொண்டு வாங்கிக்கொண்டு வாறன்.” என்று அவன் எழும்பவும் தடுத்தாள் யாமினி.
அந்தக் கடையில் நின்றிருந்த பெரிய வரிசை வேறு அவன் போனால் இப்போதைக்கு வரமாட்டான் என்று சொல்லிற்று!
“இல்லையப்பா. இதுவே காணும் எனக்கு. இந்தாங்கோ.” என்று அவனிடம் கொடுத்தாள்.
“எனக்குக் காணும் நீ குடி..” என்றான் அவன்.
“நீங்க குடிங்கோ..” என்று அவள் சொல்ல,
“சரி விடு, ரெண்டுபேரும் மாறி மாறிக் குடிப்பம்.” என்றான் அவன்.
அவனது பிடிவாதம் அவள் அறியாததா என்ன!
அவன் சற்று பருகிவிட்டு தரவும் யாமினி வாங்கிப் பருகினாள்.
திடீரென்று, “அண்ணா.. இண்டா..” என்று சந்தனா தமையனுக்குத் தன் ஜூஸை நீட்ட, அவனோ வேண்டாம் என்றான்.
“இல்ல.. இண்டா குடிங்க..” என்றாள் அவள் மீண்டும், அதுவும் தாயை போலவே பாவனைச் செய்து.
அதைப் பார்த்த விக்ரமோ யாமினியை பார்த்து அடக்கமாட்டாமல் வாய்விட்டே சிரிக்கத் தொடங்கினான்.
யாமினியாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. என்றாலும் கணவனின் சிரிப்பு அவளைக் கேலி செய்ய, “சிரிக்காதீங்கப்பா!” என்றாள் அதட்டலாக.
“எல்லாம் உங்களால.. இந்த வாண்டு கூட என்ன பகிடி பண்ணுது பாருங்கோ..”
அன்றய நாளை மிகுந்த சந்தோசமாகவே கழித்துவிட்டு வீடு திரும்புகையில் சின்னவர்கள் இருவரும் காரிலேயே உறங்கி வழிந்தனர்.
வீட்டுக்கு வந்ததும் வேக வேகமாக மகளுக்கு உடம்பு கழுவி, தானும் குளித்துவிட்டு வர அங்கே விக்ரமும் டெனிஷும் குளித்து முடித்திருந்தனர்.
கட்டிலில் மகனை அந்தப் பக்கமும் மகளை நடுவிலும் போட்டு, அவளருகில் படுத்து யாமினி தட்டிக்கொடுக்க, ஐந்து நிமிடங்கள் கூட இல்லை. இருவருமே உறங்கிப் போயிருந்தனர். அந்தளவுக்குக் களைப்பு! ஒன்றாக உறங்கும் இருவரையும் பார்க்கப் பார்க்க பாசம் நெஞ்சில் பொங்கித் தளும்பியது.
அவர்களின் இன்றய சந்தோசமும் துள்ளலும், ‘அப்பா அப்பா’ என்று அவனுக்குப் பின்னால் வால் பிடித்ததும், தான் எதற்காவது மறுத்தால் அதை அவனிடம் கெஞ்சி சாதித்துக் கொண்டதும் என்று குழந்தைகளின் செயல்கள் ஒவ்வொன்றுமே மனதுக்குச் சந்தோசத்தைச் சேர்த்தது.
அவள் மறுக்க அவனிடம் சாதித்துக்கொள்வது என்பது கூடாதுதான் என்றாலும் குழந்தைகள் அனுபவிக்க வேண்டிய சலுகையும் கூடத்தானே அது! ஒருவர் இறுக்கிப் பிடிப்பதும் மற்றவர் இளகி நிற்பதும் வழமைதானே.
அதுவும் சின்னவள், தானும் அவனுமாக அந்தக் கஃபேயை அருந்தியது போலவே தமையனுக்குத் தன்னதைக் கொடுத்ததை நினைக்கையில் இப்போதும் சிரிப்பை அடக்க முடியவில்லை அவளால்.
“சரியான வால்! அச்சு அசல் அப்பா மாதிரியே..!” வாய்விட்டே சொன்னவள் சின்னவள் நெற்றியில் முத்தமொன்றை பதித்துவிட்டு எழுந்தாள். விழுந்துவிடாமலிருக்க அணைவாகத் தலையணைகளை அடுக்கிவிட்டாள்.
அந்தப் பக்கம் பெட்சீட் எங்கோ கிடக்க, கால்களைத் திசைக்கு ஒரு பக்கமாகத் தூக்கிப் போட்டுக்கொண்டு தூங்கிய மகனருகே சென்று பெட்சீட்டை போர்த்திவிட்டாள்.
பாசத்தோடு அவன் நெற்றியில் இதழ் பதித்தவளின் மனக்கண்ணில், அவள் முதன் முதலாகப் பார்த்த டெனிஷ் வந்து நின்றான்.
ஒன்பது வயது பாலகனாக இருந்தாலும் பெரிய மனித தோரணை என்று தான் நினைத்ததும், இன்று சந்தனாவுக்குச் சமமாக எல்லாத்துக்கும் ‘அம்மா அம்மா’ என்று அவன் தன்னிடம் ஓடி வருவதும், ஆசையோடு ஒவ்வொன்றுக்கும் அவளை எதிர்பார்ப்பதும் என்று.. நினைக்கையில் மனம் கனிந்துபோக, கேசத்தைக் கோதிக் கொடுத்துவிட்டு மெல்ல அறையை விட்டு வெளியே வந்தாள் யாமினி.